இலங்கை இந்தியா உறவு இரட்டைப் பரிமாணங்களுக்குள்ளால் நகருகின்றது. பிரதானமாக நட்பு முரண்பாடும், பகை முரண்பாடும் தொடர்ச்சியான மாற்றங்களுக்குள்ளால் கடந்த கால வரலாறு முழுவதும் இரு நாட்டு உறவு காணப்படுகிறது. பகைமுரண்பாடு நட்புமுரண்பாட்டை விட கூர்மையாக இருந்தாலும் தென் இலங்கையின் ஆட்சியாளர்கள் நட்பு முரண்பாட்டையே அதிகம் இந்தியாவுடன் பின்பற்ற விளைந்தனர். ஜே.வி.பி இன் பொதுச் செயலாளர் ரின்வின் சில்வா இந்தியாவுக்கு மேற்கொண்ட அரசமுறை பயணத்தை அடுத்து ஊடகங்களுக்கு நீண்ட உரையாடல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். இக்கட்டுரையும் அத்தகைய உரையாடலின் உள்ளடக்கத்தின் சாராம்சத்தையும் யதார்த்தத்தையும் தேட முயலுகிறது.
ரின்வின் தனது கட்சி உறுப்பினர்களுடன் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயம் இலங்கை- இந்திய உறவில் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. பிரதானமாக இலங்கைத் தீவில் இந்திய எதிர்ப்புவாதத்தை அதிகம் கொண்ட தரப்பான ஜே.வி.பி. இந்தியாவுடன் சுமுகமான உறவை ஆட்சிக்கு வந்த பிற்பாடு போணுவதில் கரிசனை கொள்கிறமை தெளிவாக தெரிகிறது. அதற்கு அடிப்படையில் கலாச்சார-பண்பாட்டு உறவை கடந்து பொருளாதார ஒத்துழைப்பையும் கடந்து புவிசார் அரசியல் முக்கியத்துவம் பிரதான அம்சம் என்று விவாதிக்கப்படுகிறது. அத்தகைய விவாதத்தின் நீட்சியை தெளிவாகவே ஊடகங்களுக்கு முன் ரின்வின் தெரியப்படுத்தியுள்ளார். இலங்கை தீவின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டு இந்திய அரசாங்கத்துடன் நட்பு ரீதியாக செயல்பட முடியும் என அவர் குறிப்பிட்டதுடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் உண்மையான நண்பன் என ஜே.வி.பி. கருதுகிறது என குறிப்பிட்டுள்ளார். ஒருபோதும் இந்திய நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் ஜே.வி.பி.இனர் எதிரானவர்களாக இருக்கவில்லை என்றும் ஜே.வி.பி. ஒருபோதும் இந்தியாவை எதிர்க்கவில்லை என்றும் ராஜீவ் காந்தி அரசாங்கத்தையே ஜே.வி.பி.எதிர்த்ததாகவும் அதன் கொள்கைகளையே ஜே.வி.பி. நிராகரித்ததாகவும் ராஜிக் காந்திக்கும்-ஜே.ஆர்.ஜெயாவத்தனாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை தான் ஜே.வி.பி. எதிர்த்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனை அவதானிக்கின்ற போது இது ஒரு ஒப்புதல் வாக்கு மூலமாக தெரிகின்றது.
கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகளை அல்லது பிழைகளை சரி செய்து கொள்வதற்கான மார்க்கம் ஒன்றை ஜே.வி.பி. வெளிப்படுத்தி உள்ளது. இதனை தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமானது.
ஒன்று, இலங்கையின் ஆட்சி என்பது இந்தியாவுக்குட்பட்டது என்றும் இந்தியாவுடன் நட்பு உறவின் அடிப்படையில் நிகழக் கூடியது என்பதையும் ஜே.வி.பி. அடையாளம் கண்டிருக்கின்றது. இந்திய எதிர்ப்பவாதத்தை அதிகம் கொண்டிருந்த இலங்கையின் அரசியல் கட்சியான ஜே.வி.பி. இந்திய நட்புறவை முதன்மையானதாக கருத முனைகின்றது. அதன் மூலம் ஜே.வி.பி. ஆட்சியை இலங்கைத் தீவில் பாதுகாத்துக் கொள்வதே அதன் பிரதான நோக்கமாக தெரிகிறது. இந்தியாவை பகைத்துக் கொண்டு இலங்கை தீவில் ஆட்சி எதனையும் நிகழ்த்த முடியாது என்பதை ஜே.வி.பி. உணர்ந்திருக்கின்றது. அதன் பிரதிபலிப்பே ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ஒப்புவித்திருக்கின்றார். அவரது எண்ணம் ஜே.வி.பி. ஆட்சியை இந்தியாவிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இந்தியாவிடம் சரணடைவதை விட வேறு வழிமுறை எதுவும் இல்லை என்பதை காட்டுகின்றது. அதே நேரம் அத்தகைய சரணடைவை தந்துரூபமாய் கையாளுவதிலும் வெற்றிகரமாக அணுகுவதிலும் ஜே.வி.பி. இன் நகர்வு சாதுரியமானதாக விளங்குகிறது. முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளும் உத்திகளை ஜே.வி.பி. தனக்குள் ஏற்படுத்தியுள்ளது. இந்திய தரப்பு இதனை சரணடைவு என்று கருதினாலும் ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் இலங்கை தீவில் இருப்பை அதிலும் குறிப்பாக பொருளாதார இருப்பை நிலைப்படுத்திக் கொள்ளவும் இந்தியாவின் அரவணைப்பு அவசியமானதாக காணப்படுகிறது என்பதை தெளிவாக உணர்ந்துள்ளது. இதுவே இந்திய தரப்பின் நோக்கிய ஜே.வி.பிஇ இன் அணுகுமுறை மாற்றமாகும். இதனால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் திருப்திகரமான மனேநிலையை அடைய முடியாது. காரணம் தனது ஆட்சியை தக்க வைப்பதற்கு இந்தியாவோடு கூட்டுச் சேர்க்கின்ற மரபை இலங்கை தீவின் ஆட்சியாளர்கள் கொண்டிருப்பது வழமையான அரசியலாகும். கடந்த காலத்தில் அதனை கடைப்பிடித்தே ஆட்சியை தக்கவைத்தனர். இதனால் ஜே.வி.பி. இன் அணுகுமுறை இந்திய தரப்புக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமையப்போவதில்லை. அதற்கு அடிப்படையில் சமகாலத்தில் காணப்படும் பிரதான அம்சமாக இந்திய இலங்கை தரைபாதை அமைப்புகட்டுவதற்கான நடவடிக்கை பற்றிய விவாதம் உணர்த்துகின்றது. இந்திய தரப்பு பல தடவை கேட்ட போதும் இலங்கை அதற்கு பதிலையும் இதுவரையில் வழங்காமல் இருத்தல் அதன் தந்திரேபாய நகர்வைக் காட்டுகிறது.
இரண்டு, ஜே.வி.பி. இன் பொதுச் செயலாளர் குறிப்பிடுவது போல் இலங்கை தீவின் அரசியலில் 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை-இந்தியா உடன்படிக்கை தனி ஒரு ஆட்சியாளரின் உடன்படிக்கை கிடையாது. ஜே.வி.பி.எதிர்ப்பதாக குறிப்பிடும் பொதுச்செயலாளர் இந்தியா இலங்கை உடன்படிக்கையை இரண்டு நாடுகளும் இசைந்து மேற்கொண்டது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார். ராஜீவ் காந்தி ஒரு தனி மனிதனாக உடன்படிக்கையை மேற்கொள்ளவில்லை. மாறாக உடன்படிக்கை இந்தியாவின் நலன்கள் சார்ந்த முன்வைக்கப்பட்டதென்றே. பனிப்போர் காலத்தில் இலங்கை தீவின் மீது மேற்குலக நாடுகளின் ஆதிக்கம் வளர்ச்சி அடைந்த சூழலில் அதனை கட்டுப்படுத்தவும் எதிர்கொள்ளவும் அவ்வகையான உடன்படிக்கை இந்திய நோக்கு நிலையில் இருந்து அவசியமானதாக காணப்பட்டது. அதே நேரம் இலங்கை நோக்கு நிலையில் தென்னிலங்கையில் ஜே.வி.பி. இனரின் கிளர்ச்சியையும் வடக்குக்-கிழக்கின் ஆயுதப்போராட்டத்தின் வளர்ச்சியையும் ஒரே நேரத்தில் தோற்கடிக்கும் உத்தியோடு அவ் உடன்படிக்கை ஜே.ஆரால்; இலங்கை சார்பாக கையெழுத்திட்டது. இது ஒன்றும் ரரஜீவ்- ஜே.ஆர் என்ற இரு தனி மனிதர்களால் மேற்கொள்ளப்பட்டது கிடையாது. இரண்டு அரசுகளின் நலன்களுக்குள்ளால் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ராஜீவ் காந்தியை நிராகரிப்பது என்பது பொதுச் செயலாளர் இந்திய எதிர்ப்பு வாதத்தை கையாளுவதற்கு பிரயோகிக்கும் உரையாடலாகவே தெரிகின்றது. அடிப்படையில் ஜே.வி.பி. எப்போதும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தை கொண்டிருக்கக் கூடியது என்பதை அவரது உரையாடல் வெளிப்படுத்தியுள்ளது.
மூன்று, நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தோடு நட்பு ரீதியில் செயல்பட முடியும் என ஜே.வி.பி. பொதுச் செயலாளர் குறிப்பிடுவது இந்திய நலன்களுக்கும் இலங்கை தீவு தன்னை விட்டுக் கொடுப்பதற்கு ஒப்பானதாகவே தெரிகின்றது. இந்தியாவின் கொள்கை மாற்றமும் உலக அரசியலின் ஏற்பட்டு வரும் மாற்றமும் ஒன்று சேர்ந்து இந்தியாவின் அண்டை நாடுகளுடன் நட்புறவை முதன்மையானதாக கருதுகின்ற சூழலில் இத்தகைய உரையாடல் முன் வைக்கப்பட்டுள்ளது. தற்போது கூட சீனா இந்தியாவுக்கு எதிரான அணுகுமுறையினூடாக இலங்கை தீவை கையாளுகிறது என்பதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால் பனிப்போர் காலத்தைப் போல் அல்லாது சமகாலத்தில் இந்தியாவின் அயல் நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படைகளுக்குள்ளால் ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் விட்டுக் கொடுப்பையும் அதிகப்படுத்திக் கொண்டு நட்ப்பு ரீதியாக அல்லது இராஜதந்திர ரீதியாக அயல்நாடுகளை இந்தியா கையாள முனைகிறது. அத்தகைய சூழலுக்குள்ளேயே ஜேவிபிக்கும் இந்தியாவுக்குமான நட்புறவு பலமானதாக மாறுகிறது. ஜே.வி.பி.யும் இந்தியாவும் பகைமை பாராட்ட முடியாத சூழலுக்குள் ஒன்றுக்கொன்று தங்கி இருக்கிற களம் இணங்கி போதலும் தவிர்க்க முடியாத அரசியல் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இலங்கைத் தீவின் ஆட்சியாளர்களும் இந்திய ஆட்சியாளர்களும் ஒரே கோர்ட்டில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஒன்று சமகாலத்தில் எட்டப்பட்டுள்ளது. உலக அரசியலும் புவிசார் அரசியலும் அதற்கான களத்தை உருவாக்கியுள்ளது. தவிர்க்க முடியாமல் ஜே.வி.பி. இந்தியாவுடன் கைகோர்த்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இந்தியா அயல் நாடுகளை அரவணைப்பதன் ஊடாக அந்நிய சக்திகளை பிராந்தியத்திலிருந்து அகற்ற முடியும் என்ற அல்லது எதிர்கொள்ள முடியும் என்ற விவாதமும் ஒன்றானதாகவே தெரிகின்றது. இதில் ஈழத்தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய அனுபவம் முதன்மையானதாக விளங்குகிறது. ஜே.வி.பி. வரலாறு முழுவதும் இந்திய எதிர்ப்பு வாதத்தைக் கொண்டிருந்த நிலையிலிருந்து மாறி நட்பு முரண்பாட்டுக்குள் பயணிக்க வேண்டிய நிர்பந்தத்தை அது அடைந்துள்ளதுடன் வெற்றிகரமாக எதிர்கொள்கிறது. ஜே.வி.பி. எப்போதும் அல்லது இலங்கையின் ஆட்சியாளர்கள் எப்போதும் இந்திய எதிர்ப்பு வாதத்தை கொண்டிருக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாது. அதுவே அவர்களின் நட்பு முரண்பாட்டின் இருப்பும் யதார்த்தமுமாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
