இலங்கையின்வெளியுறவுக் கொள்கை அணிசேராமை என்றும் நடுநிலைமை கொள்கை என்றும் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் முன்வைத்து செயல்படுவதாக தெரிவித்து வருகின்றனர். இடதுசாரிகள்-வலதுசாரிகள் என்ற இரு அணிகள் காணப்பட்ட காலத்தில் (1945-1991) வரையறுக்கப்பட்டதே அணிசேராமைக் கொள்கையாகும். பாண்டுங் மகாநாட்டில் அத்தகைய கொள்கையை ஆசிய-ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் முதன்மைப்படுத்திக் கொண்ட கொள்கையாக இருந்தது. அத்தகைய கொள்கைக்கான மூலாதாரம் சோவியத் யூனியனின் சரிவுடன் முடிபுக்கு வந்து ஒற்றைமைய உலக ஒழுங்கு காணப்பட்டது. ஆனால் அமெரிக்கா தலைமையிலான ஒற்றைமைய உலக ஒழுங்கிலும் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களும் ஆட்சியாளரும் அணிசேராமையே இலங்கையின் கொள்கை எனக்குறிப்பிட்டனர். தற்போதும் அணிகள் இல்லாத உலக ஒழுங்கில் அதனையே குறிப்பிட முயலுகின்றனர். ஜே.வி.பி. அரசாங்கமும் ஈரான் மீதான அமெரிக்க- இஸ்ரேலியா கூட்டுத்தாக்குதலில் இலங்கை அரசாங்கம் நடுநிலைமையை கடைப்பிடிப்பதாக அரசாங்க தரப்பினர் குறிப்பிடுகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் இலங்கையின் ஜனாதிபதி 20.03.2026 அன்று பாராளுமன்றத்தில் ஈரான்-அமெரிக்க போர் தொடர்பில் இலங்கையின் கொள்கையை அறிவித்துள்ளார். இக்கட்டுரையும் அத்தகைய அறிவிப்பின் உண்மை தன்மையை தேடுவதாக வடிவமைக்கப்படுகிறது.
மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலில் இலங்கை எந்தவொரு தரப்புடனும் பக்கச்சார்பாக நடந்து கொள்ளாது இலங்கையின் நிலைப்பாடு நடுநிலமையேயாகும்.அமெரிக்காவுக்கோ, ஈரானுக்கோ ஆதரவான நிலைப்பாடு எதுவும் இலங்கை அரசாங்கத்திடம் இல்லை. எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் நடுநிலமையை கைவிடமாட்டாது அரசாங்கம் என ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்ற போது தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி இலங்கை அரசாங்கமானது நீதி மற்றும் நியாயத்தை முன்னிறுத்தி சர்வதேச அரங்கில் செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மாத்தள விமான நிலையத்தில் தமது இரு விமானங்களை நிறுத்துவதற்கும், ஈரான் தனது மூன்று கடற்படைக் கப்பல்களை இலங்கைத் துறைமுகத்திற்கு வருகை தருவதற்கும் அனுமதி கோரப்பட்டிருந்ததை தொடர்பிலே ஜனாதிபதி மேற்குறித்த விடயத்தை முன்வைத்திருந்தார். அவரது உரையாடலில் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வது அவசியமானது.
நடுநிலைமை அல்லது அணிசேரமே என்பது தத்துவார்த்த அடிப்படையில் புரிதலற்ற அம்சமாகவே எல்லோராலும் பார்க்கப்படுகிறது. உலகில் உள்ள தேசங்களும் அவற்றில் வாழுகின்ற உயிரினங்களும் ஏதோ ஒரு அடிப்படையில் ஒன்றை சார்ந்து தோன்றுவதும் நிலை பெறுவதும் வளர்ச்சி அடைவதுமாக உள்ளது. அதுவே இயற்கையின் நியதியாக காணப்படுகிறது. அத்தகைய நியதிகளில் அரசியல் விதிவிலக்கானது கிடையாது. அணி சேராமை என்பது நலன்கள் பொறுத்து தேவைகள் பொறுத்து வாய்ப்புகள் பொறுத்து ஒரு அணியோடு சேர்ந்து பயணிப்பதைக் குறிப்பதாகும். இன்னொரு அணியினை நிராகரிப்பது என்பது அதற்கு எதிரான அணியுடன் சேருதல் என்ற பொருளைத்தரும். இது இயல்பான உளவியல் பிரஞ்ஞை ஆகும். அதனை பக்கச் சார்பின்மை என்றும் நடுநிலை என்றும் விவாதிக்க முயலுகின்றனர். அரசியலில் நடுநிலைமை என்பது ஒன்று கிடையாது. ஓர் அணிக்கு ஆதரவாக செயல்படுவது என்பதே நடுநிலைமையாக கொள்ளப்படுகிறது.
இன்று உலக அரங்கில் ஈரான்-அமெரிக்க மோதல் காணப்பட்டாலும் அடிப்படையில் சீன-அமெரிக்க மோதலாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. உலக ஆதிக்கத்திற்கான போட்டியின் விளிம்பில் நிகழும் போர் சீனா எதிர் அமெரிக்கா என்பதாகவே நோக்கப்படுவதுடன் பொருளாதார ரீதியான போரின் அடிப்படையாகவே இது புரிந்து கொள்ளப்படுகிறது. அவ்வாறெனில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் பங்களிப்பு செய்வது என்பது சீனாவை விலக்கி விட்டு சாத்தியப்படுத்த முடியாது. அவ்வாறு சாத்தியப்படுத்துவது என்பது வெளிப்படையாக கூறாவிட்டாலும் சீனாவுக்கான சார்பு நிலையில் இருந்து கொண்டே அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ள முடியும். மாத்தள விமான நிலையமும் ஹம்பாந்தோட்டை துறைமுகமும் அமைந்திருக்கும் பிரதேசம் அதிக நெருக்கத்தை கொண்டுள்ளது. ஏறக்குறைய 18 கி.மீ-25 கி.மீ. இடைவெளிக்குள் அமைந்துள்ளது. பிரதேச அடிப்படையில் ஒரே வலையதுக்குள் அமைந்திருக்கும் கடல் படை விமானப்படை நிலையங்களாகும்.
மாத்தளனன் விமான நிலையத்தை அமெரிக்காவுக்கு வழங்க மறுப்பது என்பது சீனாவின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பாதுகாப்பதற்கான செயற்பாட்டாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு இலங்கை செயல்படுகிறது என்றால் சீனாவுக்கு சார்பாக அமெரிக்காவுக்கு எதிராக இயங்குகிறது என்பது இதன் அடிப்படையாகும். சீனாவுக்கு ஆதரவான அணியில் இலங்கையும் இலங்கையின் ஆட்சியாளர்களும் காணப்படுகிறார்கள் என்பது தெரிந்த ஒரு விடயம். ஈரான் மீதான போர் என்பது சீனாவுக்கு எதிரான போராக புரிந்து கொள்ளப்படுகிறது. அப்படியாயின் இங்கு நடுநிலை என்பது சீன சார்பு நிலைக்கு உள்ளாள் எடுக்கப்படுகின்ற முடிவாகவே தெரிகின்றது. வெளிப்படையாக கூறாது விட்டாலும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஈரான் ஒரு ஆரோக்கியமான துரும்பாக காணப்படுகிறது. ஈரானின் கப்பல்களுக்கான மனிதாபிமான நடவடிக்கை என்ற போர்வையில் ஈரானையும் அமெரிக்காவையும் சமவலுவுடைய சக்திகளாக நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என இலங்கை ஆட்சியாளர்கள் இலங்கை மக்களுக்கும் உலகத்துக்கும் சொல்ல முனைகிறார்கள். ஆனால் அடிப்படையில் அமெரிக்காவின் அழுத்தங்களும் சீனாவின் அழுத்தங்களுக்கும் இடையிலே இங்கு ஒரு இழுபறி நிலை ஒன்றை கண்டு கொள்ள முடிகிறது. எத்தகைய அழுத்தத்துக்கும் அடிபணியாத இலங்கை அரசாங்கம் சீனாவின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பாதுகாப்பதற்கான அழுத்தத்தை அங்கீகரித்துள்ளது. அதனை முன்னிறுத்தியே தனது நிலைப்பாடாக முன்வைத்துக் கொண்டு நடுநிலமை பற்றி உரையாடுகிறது.
அமெரிக்காவையும் ஈரானையும் சம தூரத்தில் வைத்துக் கொள்ளக் கூடிய சக்திகளாக அளவீடு செய்ய முடியுமா என்பதும் இரு நாடுகளையும் ஒரு மேசையில் வைத்து அளந்து கொள்ள முடியுமா என்பதும் பிரதான கேள்வியாகும். இதனால் இலங்கை ஆட்சியாளர்கள் வெளிப்படுத்தும் நடுநிலையானது தத்துவார்த்தபூர்வமாக சீன சார்பு நிலைக்குள் இருந்து கொண்டு எடுக்கப்படும் தீர்மானமாக தெரிகின்றது. ஈரானின் அமெரிக்க-இஸ்ரேல் மீதான தாக்குதல் வெற்றிகரமாக நகர்வதற்கு சீனாவின் இராணுவ தொழில்நுட்பம் பிரதான காரணமாக புரிந்து கொள்ளப்படுகிறது. உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் பலவீனம் சீனாவின் எழுச்சி உலக அதிகாரத்தின் மையமாக மாறிவருவது இலங்கையினால் அளவிடப்படுகின்றது. அதனால் இலங்கை ஒரு பாதுகாப்பான வலையத்துக்குள் இருந்து கொண்டு நடுநிலைமை பற்றி உரையாட முயலுகிறது. அத்தகைய உரையாடலின் உண்மை தன்மை புரிந்து கொள்ளப்பட வேண்டியதும் தத்துவார்த்த ரீதியில் விளங்கிக் கொள்ளக்கூடியதாகவும் அமைவது அவசியம்.
எனவே இலங்கையின் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் முன்வைத்த நடுநிலைமை என்பது தத்துவார்த்த ரீதியில் சீனா சார்பகானதே. சர்வதேச விவகாரங்களில் நீதியையும் நியாயத்தையும் முன்னிறுத்தும் ஜே.வி.பி. அரசாங்கம் காணாமல் போனோர் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு இடமில்லை என்று இதே பாராளுமன்றத்தில் ஒரே காலப்பகுதியில் நீதி அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய முரணியத்தின் நடுநிலைமையும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: யாழ் தினக்குரல்)
