April 26, 2026
அரசியல் கட்டுரைகள்

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போரின் வாய்ப்புக்களும் தேக்கநிலையடைந்துள்ள ஈழத்தமிழர் அரசியலும்?

இலங்கைத் தீவின் அரசியலில் ஈழத்தமிழர்கள் தனியான அடையாளம் என்பதை வலியுறுத்தும் வரலாற்று நூலொன்றை தென்னிலங்கை அண்மையில் (11.04.2026) சினமன் கிரான்ட் ஹொட்டலில் வெளியிடப்பட்டுள்ளது. அது முன்வைக்கும் விவாதங்கள் அனைத்து ஈழத்தமிழரின் அடையாளத்தை குறிப்பதாக அமைந்திருந்தது. அதாவது யாழ்ப்பாணத்தின் (ஈழத்தமிழரின்) பண்டைய நாகரீகம் சமுதாயம் மற்றும் கலாசாரம் குறித்த பார்வை கி.மு.300 முதல் கி.பி.500 வரை என்பதாக அமைந்திருந்தது. அதுவே ஈழத்தமிழரின் அரசியல் கட்டமைக்கப்பிற்கான வடிவமாகும். சமகாலத்தில் ஈழத்தமிழர் அரசியல் தேக்கநிலைக்குள் தள்ளப்பட்டு இருக்கின்ற காலப்பகுதியில் இந்நூல் வெளியாகியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல் அதிகமான கோட்பாட்டு ரீதியான மாற்றங்களை முன் வைத்திருக்கும் அதே நேரம் உலக ஒழுங்கில் பாரியமாற்றங்களை நோக்கிய குழப்பத்தை அடைந்திருக்கின்றது. இது ஈழத்தமிழருக்கு ஆதரவானது எனவும் வாய்ப்பு கொடுக்கப்படுகின்ற சூழல் எனவும் விவாதங்கள் காணப்படுகின்றன. இதன் நடைமுறை சாத்தியப்பாட்டை விளங்கிக் கொள்ளவே இக் கட்டுரை முயலுகிறது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு தாக்குதல் முழு நீளப் போராக பரிமாணம் பெற்றுள்ளது. அதே நேரம் முன்னைய உலகத்தின் வடிவங்கள் அதாவது இரண்டாம் உலக யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட உலகளாவிய நிறுவனங்கள் அவற்றின் வடிவங்கள் அனைத்தின் மீதும் அதிக விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்திருக்கிறன. அவை பெருமளவுக்கு முடிவுக்கு வந்ததாகவோ அல்லது வருவதற்கான வாய்ப்பைக் கொண்டிருப்பதாகவே கூறப்படுகிறது. உலகம் ஒழுங்கிலும் சீனாவின் மேலாதிக்கும் எழுச்சி அடைவதற்குரிய சூழலும் அமெரிக்கா அத்தகைய முதலிடத்தை தக்க வைப்பதற்கான போராட்டமும் தொடர்ச்சியான ஒன்றாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இத்தகைய குழப்பமான சூழல் ஈழத்தமிழருடைய அரசியலை மேலொளச் செய்யக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறதா? என்பது முதன்மையான கேள்வியாகும். அதனை ஆழமாக அவதானிப்பது அவசியமானது.

முதலாவது நாடுகளுக்கான இறமையும் இறைமைக் கோட்பாடும் பெரும் அளவுக்கு காணாமல் போகின்ற நிலை ஒன்றை அமெரிக்க ஆளும் வர்க்கம் ஏற்படுத்தி வருகிறது. 1648 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட வெஸ்பாலியா உடன்படிக்கை (Peace of Westphalia) முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகிறது. அவ்வாறான சூழலில் இலங்கை அரசும் அதன் இறைமை சார்ந்த உரையாடல்களும் ஈழத்தமிழர் பொறுத்து அதிக வாய்ப்பை கொடுக்கக்கூடியது என்ற விவாதம் எழுந்துள்ளது. ஆனாலும் ஈழத்தமிழருடைய இருப்பின் யதார்த்தம் அதன் புவிசார் அமைவிடம் இந்திய–தமிழக நெருக்கத்தையும் முக்கியத்துவதையும் அதிகம் கொண்டிருக்கின்றது. இந்தியா இந்த போரில் வழமை போன்றே முன்பின் முரணான அல்லது நடுநிலைமை என்ற வார்த்தைகளுக்குள் தனக்கேற்ற வகையிலான சார்பு தன்மைகளை கட்டமைக்க முயற்சிக்கிறது. அதனை கட்டமைக்கின்ற போது எழக்கூடிய விளைவுகளில் ஈழத்தமிழர்களின் இருப்பும் அமைவிடமும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சூழலினால் தனித்துவமானதாக அடையாளப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இலங்கை தீவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது பற்றிய உரையாடலை சர்வதேச சமூகம் பிராந்திய அரசான இந்தியாவோ முதன்மைப்படுத்துவதற்கான சூழலை ஈழத்தமிழர் தரப்பிலிருந்து முன்வைக்க வேண்டிய அவசியப்பாடு ஒன்றை இக்கால பகுதி தந்துள்ளது. அரசுகளின் இறைமை கேள்விக்கு உட்படுத்தப்படுகிற போது அதன் இருப்புக்குள் ஈழத்தமிழர்களின் கோரிக்கைகள் அடங்கிய அகிம்சை ரீதியான போராட்டங்களை மட்டுமல்ல தீவிர ஜனநாயக முறைக்கு உட்பட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியப்பாட்டை அதிகம் உணர்த்துகிறது.

இரண்டாவது இலங்கை ஒரு பாரிய பொருளாதாரம் நெருக்கடிக்குள் தள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக விவாதங்கள் அதிகம் உண்டு. ஆனால் அவ்வகையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் எழும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தக்க வைத்துக் கொள்ள இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு பாதுகாப்பதில் கரிசனை கொள்ளுகின்ற சூழலொன்றை கண்டு கொள்ள முடிகிறது. இந்நிலை தென்னிலங்கையில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை தென்னிலங்கை எதிர்கொள்ள முன்னர் இந்தியா-சீனா போன்ற சக்திகள் பாதுகாக்க முயலுகின்ற புறச்சூழலை அவதானிக்க முடிகிறது. அதனால் ஈழத்தமிழர்கள் இந்தியா சார்ந்து தமது வெளியுறவு சார்ந்து நாடுகளுடன் உறவை பேணுவதில் அதிகமான கரிசனை கொள்ள வேண்டிய தேவைப்பாடு எழுந்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தேர்தல் களம் அதற்கான வாய்ப்புகளை அதிகம் தந்திருக்கின்றதன்றே கருதப்படுகிறது. இந்த சூழலில் இந்தியாவுடன் உறவு நிலையை தமிழகத்துடனான பரிபாசைக்கூடாக கையாளும் வாய்பொன்று உள்ளது. அதுவே ஈழத்தமிழர்கள் முன்னுள்ள தேவைப்பாடாக எழுந்திருக்கின்றது. அதற்காக சீனாவை கைவிடுதல் என்பதாகாது. முhறாக சீனா ஈழத்தமிழர் அரசியலில் எதிர் நிலையைக் கொண்டுள்ள நாடு என்ற அடிப்படையில் அதனை அணுகுதல் வேண்டும். உலக நாடுகளின் மக்களைப் போன்று ஈழத்தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளில் அதற்கான போராட்டங்களை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க வேண்டும். இரண்டாம் உலக போரின் போது யூதர்கள் தாம் வாழ்ந்த நாடுகளில் அந்தந்த அரசுகளுடன் இணைந்து போராடியதாகவும் சில சந்தர்ப்பத்தில் எதிர்-எதிரே யூதர்கள் பேராடியதாகவும் வரலாற்று தகவல்கள் உண்டு. அதனால் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் அந்த நாடுகளில் காணப்படும் நட்பு சக்திகளோடு இணைந்து ஜனநாயக ரீதியில் போராட வேண்டிய தேவைப்பாடு அதிகம் பிரதிபலிக்கிறது. இதனை நோக்கிய ஈழத்தமிழர்களின் அரசியல் ரீதியான தீர்வுக்கான வாய்ப்புகளை நகர்த்த வேண்டிய தேவைப்பாடு எழுந்திருக்கின்றது.

மூன்றாவது ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகளும் அதன் பிரதிநிதிகளும் ஏறக்குறைய ஈழத்தமிழருடைய அரசியலை தேக்க நிலையில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர். தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் தந்தை செல்வநாயகம் இறுதிக் காலத்தில் குறிப்பிட்டது போல் தமிழரசு கட்சியினர் மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள்; கடவுளை பிரார்த்திக்கின்ற நிலை ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. அதாவது நிரந்தர அரசியல் தீர்வுக்கான வழியை கடவுளிடம் கேட்கின்ற துயரமான ஒரு நிலைக்குள் ஈழத்தமிழர்களை அரசியல் பிரதிநிதிகள் கொண்டு வந்த நிறுத்தி உள்ளனர். இத்துயரம் ஈழத்தமிழருடைய அரசியலின் கையறுநிலையை பிரதிபலிக்கிறது. இது ஈழத்தமிழரின் அரசியல் பக்கத்தை இல்லாமல் செய்தமையின் செயல்பாட்டின் வடிவமாகவே தெரிகின்றது. ஈழத்தமிழ் அரசியலை உயர் வர்க்கம் தனது நலனுக்கும் தன்னுடைய அபிலாசைக்கும் ஏற்ற வகையில் முன்னெடுத்துகின்ற சூழலினால் ஏற்பட்டதாகவே உணரப்படுகிறது. இதனையே ஆழும் ஜே.வி.பி.அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டு சாமானியனிடமிருந்து அரசியலை முதன்மைப்படுத்துகின்றது. இந்நிலை ஏற்பட்டதன் விளைவாகவே அண்மைய பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய சக்திகளின் தோல்விக்கான அடிப்படையாகும். இதுவே ஈழத்தமிழருடைய அரசியலில் ஏற்பட்டிருக்கும் பாரிய வெற்றிடமாகவும் தோல்விக்கான காரணியாகவும் தெரிகின்றது. இதிலிருந்து மாற்றங்களை அடைவதற்கான ஒரு சூழலை தற்போதைய காலம் வழங்கி இருக்கின்றது. புலத்திலும் புலத்துக்கு வெளியேயும் இத்தகைய மாற்றங்கள் சாத்தியப்பட வேண்டும் என்பதே இந்த சூழலை மாற்றுவதற்கான அடிப்படையாகும்.

எனவே புலத்திலும் புலத்துக்கு வெளியேயும் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் ஈழத்தமிழரின் அரசியலில் வாய்ப்பான காலங்களை அடையாளப்படுத்த தொடங்கியிருக்கின்றது. அதனை நோக்கி தமிழரசியல் தரப்புகள் கட்சி அரசியல் தரப்புகள் நகர்வது அவசியமானது. இதில் சிவில் அமைப்புகளும் சிவில் அமைப்புகளின் முதன்மையான சக்திகளும் இத்தகைய அரசியல் களத்தை கட்டமைத்து தொழிற்பட வேண்டிய தேவைப்பாடு எழுந்திருக்கின்றது. தமிழகத்தை நோக்கி ஈழத்தமிழர்களின் அரசியல் சக்திகளின் நகர்வு ஒரு புறம் அமைய மறுபக்கத்தில் தமிழகத்தில் இருக்கும்; ஈழத்தமிழர்கள் தமிழகத்திலும் இந்தியாவின் மத்திய அரசின் மையத்திலும் ஜனநாயக வழிமுறைக்குட்பட்ட போராட்டங்களை முன் நகர்த்துவது இக்காலப்பகுதி அவசியப்பாடாக தெரிகின்றது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)