November 8, 2026
அரசியல் கட்டுரைகள்

இலங்கைத் தீவில் மேட்டுக்கடி அரசியலும் ஜே.வி.பி.இன் இடதுசாரிக் கொள்கையும்?

இலங்கையில் ஜே.வி.பி. இன் அரசியல் 1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சண்முகதாசனின் (General Secretary of the Ceylon Communist Party -Maoist)தலைமையில் இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் இருந்து பிரிந்து தீவிர போக்குடனும் ஆயுதப் போராட்ட மனோநிலையோடும் ரோகண விஜயவீரா (Founder, Rohana Wijeweera)தலைமையில் ஜே.வி.பி. என்ற அமைப்பு (Janatha Vimukthi Peramuna) ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை தீவின் அரசியல் 1935 ஆம் ஆண்டு முதல் இடதுசாரி கட்சியான லங்கா சமசமாச கட்சி (LSSP) தோற்றுவிக்கப்பட்ட போதும் ஏ.ஈ.குணசிங்காவின் தலைமையில் தொழில் கட்சி ஒன்றிற்கான எண்ணப்பாங்கு இலங்கையில் காணப்பட்டது. அதற்கான பின்னணியை தேடுகின்ற போது இலங்கைத் தீவின் காலனித்துவ எதிர்ப்புவாதம் சுதேசிகளின் எழுச்சிக்கான பின்புலம் முதலாவது கட்டத்தில் தொழில் கட்சி என்ற அடிப்படைக்குள் பிரவேசிக்கும் நிலையை ஏற்படுத்தியது. இரண்டாவது கட்டம் இந்திய தோட்டத் தொழிலாளர்களுடைய வருகையும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட மக்களின் வடிவமும் பிரதானமானதாக அமைந்தது. அதற்கு தலைமை தாங்கியவர்கள் இலங்கையில் காணப்பட்ட மேல்தட்டு வர்க்கம் (Upper Class) மற்றும் மத்தியதர வர்க்கத்தின் (Middle Class) ஒரு பிரிவினர் இடதுசாரி சிந்தனையில் கவரப்பட்ட நிலையில் குடியேற்ற நாடுகளில் ஆங்கிலக் கல்வியை கற்றதுடன் ஐரோப்பாவில் நிலவிய மார்க்கிஸ சிந்தனையை உள்வாங்கியதன் பயனாக இடதுசாரித்துவத்தை பிரதிபலிப்பவர்களாக காணப்பட்டனர். அவை இரண்டுமே ஏறக்குறைய குடியேற்றவாதத்திற்கு எதிரான சிந்தனையும் குடியேற்றவாத சிந்தனையின் மனோநிலையும் இந்தியதுணை கண்டத்திலும் உலகளாவிய ரீதியிலும் ஏற்பட்டதன் விளைவுகளால் எழுச்சி பெற்றது.

அத்தகைய இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஒன்றிணைந்த ஆட்சி உரிமையில் பங்கெடுத்த வரலாற்றை இலங்கை தீவின் அரசியலில் சுதந்திரத்திற்கு பின்னர் கண்டுகொள்ள முடிந்தது. ஜே.வி. பி. இன் தோற்றத்துக்கு பின்னால் 1956 ஆம் ஆண்டு பண்டரநாயக்கா அரசாங்கம் முன்மொழிந்த தனிச்சிங்கள மொழிச் சட்டம் பிரதானமாக பங்கெடுத்தது. இதனை இலங்கையின் பொருளாதார வரலாற்றை ஆராய்ந்த பேராசிரியர் நித்தியானந்தன் தனது நூலொன்றில் விபரணப்படுத்துகின்றார். ஒரு பக்கம் இனரீதியான பாகுபாட்டை மொழியின் அடிப்படையில் தோற்றுவித்த போது மறுபக்கத்தில் சுதேச மொழியில் பல்கலைகழகங்களில் கல்வி பயில முடியும் என்ற நிலையும் தென்னிலங்கையில் இளைஞர்களை தீவிர அரசியலில் ஈடுபடுத்த முனைந்தது. அது ஜே.வி.பி யினர் எழுச்சி பெறுவதற்கு காரணமாக அமைந்தது. உயர்கல்வியை கற்றுவிட்டு பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறியவர்கள் வேலையின்றி; சமூகத்தோடும் குடும்பங்க்ளோடும் முரண்படுகின்ற போது ஜே.வி.பி. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான களத்தை தோற்றுவித்தது. இன ரீதியான பாகுபாடு வடக்கு கிழக்கு இளைஞர்களை எழுச்சிகரமான ஆயுதப் போராட்டத்திற்குள் தென்னிலங்கை போன்று தோற்றுவிக்க வழிவகுத்தது. வடக்கு கிழக்கு ஆயுதப்போரும் தென்னிலங்கையின் ஆயுதப் போராட்டமும் ஒரே வித்திலிருந்து தோற்றுவிக்கப்பட்ட இரு பரிமாணங்களாகவே புரிந்து கொள்ளப்படுதல் அவசியமானது. இதற்குப் பின்னால் இடதுசாரி மேல்தட்டு வர்க்க அரசியலும் வலதுசாரி மேல்தட்டு வர்க்க அரசியலும் பங்கெடுத்துக் கொண்டது. 1972 ஆம் ஆண்டு இடதுசாரி பாரம்பரியத்தைக் கொண்ட கொல்வின் ஆர்.டி.சில்வா .என்.எம்.பெரேரா போன்ற இடதுசாரிகளால் சிரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய ஆலோசனையினதும் வழிகாட்டியினதும் பேரிலே முதலாவது அரசியல் அமைப்பு இலங்கையின் குடியரசுக்கான அரசியலமைப்பாக உருவாக்கப்பட்டது. அதுவே இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் 1956 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் நீட்ச்சிக்கான அங்கமாகும். சுpங்கள-பௌத்த அரசின் வடிவமாக மாறியதற்கு அடிப்படையில் இடதுசாரிகள் காரணமானார்கள்.

உலக வரலாற்றில் வலதுசாரிகள் மட்டும் மேட்டுக்குடிகளாக இனம் காணப்படவில்லை. அதனை இலங்கை தீவிலும் அவதானிக்க முடிந்ததுள்ளது. இடதுசாரிகளும் மேட்டுக்குடி அரசியலின் வரைபுக்குள்ளால் எழுச்சி பெற்றவர்கள் என்பதை இனம் காண்பது முக்கியமானது. இலங்கை தீவின் இன முரண்பாட்டுக்கு அதனுடைய தோற்றத்திற்கு தம்மதீபக் கோட்பாடு எவ்வளவு முதன்மையானது என்பதோ அதனை கட்டி காத்து பாதுகாத்த ஆட்சியாளர்களும் அதன் அரசியல் கலாச்சாரத்தை பின் தொடர்ந்த ஆட்சியாளர்களும் அதோ அளவு காரணமானவர்களாக இருந்தனர். அவர்கள் இன மதம் மொழி என்ற மூன்று மரபுக்குள் நாட்டையும் அரசையும் அரசாங்கத்தையும் வடிவமைத்தார்கள். இத்தகைய வடிவமைப்பின் பங்கெடுத்தவர்கள் இலங்கைத் தீவின் வலதுசாரிகள் மட்டுமல்ல இடதுசாரிகளுக்கும் அத்தகைய பங்கு காணப்பட்டது.

இலங்கை தீவில் மேட்டுக்குடி அரசியல் Elite Politics)என்பது உலக வரைவுகளோடு இணைத்துப் பார்க்கக் கூடியது என்பதை முழுமையாக புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. உலகளாவிய ரீதியில் மிக சிறிய பகுதியினரே அத்தகைய மரபுக்கள் உள்ளவர்கள். அவர்களின் அரசியல் ரீதியான பங்கெடுப்பை வலுப்படுத்தும் விதத்திலேயே குடியேற்ற நாடுகள் இலங்கை போன்ற கீழைத்தேச நாடுகளில் ஏற்படுத்தியிருந்தனர். அத்தகைய பிரிவினால் இலங்கத்தீவின் முடியாட்சியின் மரபையும் அதன் மூலமான ஆதிக்க தன்மையும் மேட்டுக்குடி அரசியலுக்கான அடிப்படையை தோற்றுவித்திருந்தது. நிலம் சொத்து சாதியம் என்பனவற்றோடு குடியேற்ற நாடுகளின் மத பாரம்பரியத்தையும் ஆங்கில கல்வியையும் அடையாளமாக அவர்கள் சேர்த்துக் கொண்டனர். இத்தகைய படிமுறையான வளர்ச்சிக்குள்ளால் மேட்டுக்குடி பிரிவினர் அடையாளம் காணப்பட்டனர். இலங்கை தீவின் மேட்டுக்குடி அரசியலின் ஆரம்பம் நிலத்தின் மீதான ஆதிக்கவும் சொத்தின் அளவீடாகவும் காணப்பட்டிருந்தது. அது படிப்படியாக சாதியம், ஆங்கிலக்கல்வி போன்ற விடயங்களை இணைத்துக் கொண்டது. இலங்கை தீவின் ஆட்சியாளர்கள் எல்லோரையும் மேட்டுக்குடிகள் என்றோ ஆதிக்கம் செய்தவர்கள் அனைவரும் வலதுசாரி மேட்டு குடிகள் என்றோ அடையாளப்படுத்தி விட முடியாது. சாமானியர்களும் இலங்கை தீவு ஆட்சியில் பங்கெடுத்துள்ளனர். இதில் ஜே.வி.பி. இன் பங்கு 1965 க்கு பின்னர் இடதுசாரி மரப்புக்குள்ளால் எழுச்சி பெற்ற போதும் மேற்குறித்தவற்றின் தொடர்ச்சியை பேணுவதில் ஜே.வி.பி. அரசியல் இடம் கொடுத்தது.

இலங்கைத்தீவின் வர்க்க கட்டமைப்பு என்பது மதத்தின் அடிப்படையில் அவதானிக்கப்பட வேண்டும் என்பதே இன வர்க்க அரசியல் உணர்த்துகிறது. அதற்கான அடிப்படை இடதுசாரிகள் அல்லது சோசியலிஸ்ட்கள் அல்லது மார்க்ஸிஸ்ட்கள் முன்வைப்பது போன்று வர்க்கப் பரிமாணத்தை இலங்கை தீவில் இனம்காண்பது கடினமானது. அதனாலேயே இலங்கை தீவின் ஆட்சியை இதுவரை கைப்பற்றிய எவரும் பூரணமான மார்க்சிஸ்ட்களோ, சோஸலிஸ்ட்டுக்களோ இடதுசாரிகளோ கிடையாது. ஜே.வி.பி.யை பொறுத்தவரையில் அது தன்னை ஒரு இடதுசாரியாக அடையாளப்படுத்துகிறதே அன்றி மதத்தையோ மொழியையும் சாதிய மரபுகளையோ கடந்து அரசியலை மேற்கொள்ளுகின்ற ஒரு தீவிர இயக்கமாக காணப்படவில்லை. இன எதிர்ப்பு உணர்வுகளையும் மதவாத எண்ணங்களையும் பின்பற்றிக் கொண்டு இடதுசாரி கொள்கைகளில் சிலவற்றை முன்னிறுத்திக் கொண்டு ஆட்சியை வடிவமைத்ததே அன்றி முழுமையான சோஸலிச கம்யூனிச மாஸ்சிய மரபில் அதிகாரத்திற்கு வரவில்லை. அதற்கான அமைப்பு முறையோ அரசியல் கலாசாரமோ இலங்கை தீவில் கிடையாது. இலங்கை தீவின் வர்க்க வடிவம் என்பது சாதிய ஒடுக்கு முறையின் பிரதிபலிப்புக்குள்ளால் எழுந்தது என்ற விவாதத்தை ஒரு சாரார் முன் வைத்தாலும் அவர்களிடமும் அத்தகைய மனோநிலை ஆழமானதாகவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 21ம் நூற்றாண்டின் இலங்கை தீவின் சமூகங்களின் நிலை பிரித்தானிய குடியேற்ற மரபு இலங்கை தீவுக்குள் நுழைகின்ற போது இருந்ததை விட பல மடங்கு மாறுபட்டுள்ளது. எனவே தான் வர்க்கமும் மேட்டுக்குடி அரசியலும் இலங்கைத் தீவில் அரைகுறையானது என்பதை அரசறிவியல் பேராசிரியர் குமாரி ஜெயவர்த்தனாவின் தேசியவாதம் என்ற நூல் உணர்த்துகின்றது. இலங்கைத் தீவு பூரணத்துவமான முதலாளித்து மரபுக்குள் இல்லை என்பதையும் அதற்கான பரிமாணங்கள் எதனையும் அது கொண்டிருக்கவில்லை என்றும் விவாதிக்கின்றர். அவ்வாறே தாராண்மை வாத பிரயோகத்துக்குள் இலங்கை இல்லை என்பதை பேராசிரியர் ஜெயதேவ உயாங்கெட தனது ஆய்வுகளில் அடையாளப்படுத்தி இருக்கின்றனர். இதனாலேயே இலங்கை தீவின் மார்க்சியம் கம்யூனிஸம் சோஸலிசம் இடதுசாரித்துவம் முதலாளித்துவம் தாராண்மை வாதம் என்பன அனைத்துமே கருத்துருவாக்க மனோநிலையோடு உச்சரிக்கப்பட்ட வார்த்தைகளே அன்றி அவற்றின் உண்மையான அர்த்தங்களை பிரதிபலிக்கக் கூடிய விதத்தில் ஆட்சியாளர்களோ ஆட்சிகளோ அடையாளப்படுத்த முடியாதுள்ளது.

எனவே தான் மேட்டுக்குடி அரசியலின் பக்கங்களை இலங்கையில் அடையாளப்படுத்தும் முயற்சிக்கின்ற போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் பல காணப்படுகின்றன. அவற்றை ஆழமாக ஆராய்ந்து அதிலிருந்து எடுக்கப்பட்ட முடிவுகளையே புலமை தளத்தில் விவாதிப்பது அவசியமானது. ஜே.வி.பி.யின் புலமையாளர் மகாநாடு அத்தகைய அம்சங்களில் மீண்டும் தவறுகளை முனகொண்டுவர முயற்சிப்பதாகவே தோன்றுகிறது. இதன் விளைவு ஆபத்தானது. அதற்குள் மீண்டும் இலங்கைத் தீவு நுழைகிறதா என்ற குழப்பத்தை தருகிறது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினக்குரல்)