August 10, 2026
அரசியல் கட்டுரைகள்

ஆறு தமிழ் கட்சிகள்-ஜனாதிபதி சந்திப்பும் சிறுபான்மைத் தேசியங்களின் பிரச்சினைக்கான தீர்வும்?

இலங்கையில் வரலாற்றில் சிறுபான்மை தேசியங்களின் பிரச்சனைக்குரிய தீர்வு அடையப்பட முடியாததென்ற கேள்வி நீண்ட காலமாக உள்ளது. தற்போது அத்தகைய இலக்கை அடையப்போவதாக ஆறு கட்சிகளின் மேடை இலங்கையின் ஜனாதிபதி அநுரா குமாரதிஸாநாயக்காவை சந்தித்துள்ளனர். தமிழர்கள் நீண்ட காலம் அகிம்சை மற்றும் ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்தி இரண்டிலுமே நெருக்கடி மிக்க சூழலை சந்தித்திருக்கும் தறுவாயில் தமிழ் பேசும் ஆறு காட்சிகள் ஒன்று சேர்ந்து அரசாங்கம் மீது அழுத்தம் கொடுத்து தீர்வினை அடையலாம் எனக்கருதுகின்றனர். இலங்கை முழுவதும் காணப்படும் சிறுபான்மை தேசியங்களுக்குள்ள பிரச்சினைக்குரிய தீர்வினை எட்டுவதற்;கான கோரிக்கைகளை ஜனாதிபதி முன்னிலையில் முன்வைத்து உரையாடியுள்ளனர். இக் கட்டுரையும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆறு தமிழ் கட்சிகளின் மேடை எட்டியுள்ள அடைவுகளை தேட முயலுகிறது.
ஆறு தமிழ் கட்சிகளின் மேடை ஜனாதிபதியுடன் சந்திப்பை சுமூகமாக மேற்கொண்டதாக ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியும் ஆறு கட்சிகளின் சந்திப்பை வரவேற்றுள்ளதுடன் தீர்வுகளுக்கான உரையாடல்களை முன் கொண்டு செல்ல முயல்வதாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அடிப்படையில் ஜனாதிபதி ஆறு தமிழ் கட்சிகள் உடனான உரையாடலில் முன்வைத்த விடயங்கள் அதிக குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் தருவதாக உள்ளது. அத்தகைய அம்சங்களை ஆழமாக அவதானிப்பது அவசியம்.

முதலாவது ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் ஆளும் கட்சியான ஜே. வி. பி இன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். ஆறு கட்சிகளின் மேடை முன்வைத்த புதிய அரசியல் யாப்பு உருவாக்கம், மாகாண சபை தேர்தல், காணி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி பதிலளிக்கின்ற போது முதன்மையானதாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது பற்றி தெரிவித்துள்ளார். ரணசிங்ஹ பிறேமதாசாவின் ஜனாதிபதி ஆட்சிக்காலத்திலிருந்து இலங்கை தீவில் அதிகம் முதன்மைப்படுத்தப்பட்ட ஒரு விடயமாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை பற்றிய உரையாடல் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதைய ஜனாதிபதியும் அதனை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் கொண்டவராக காட்டிக் கொண்டாலும் நடைமுறையில் அதனை செயல்படுத்துபவராக தெரியவில்லை. நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இலங்கை தீவின் அதிகார சக்திகளின் நவீன முடி ஆட்சிக்குரிய வடிவமாகவே விளங்கியது. அது மட்டுமின்றி வடகிழக்கு மீதான போர் ஜனாதிபதியின் அதிகாரத்தை அவசியமானதாக்கியது. இதனால் ஜனாதிபதி அதிகாரத்தை சுவையானதாகவும் நிறைவேற்று தன்மையை தனித்துவமான அடையாளமாகவும் ஆட்சியில் இருந்த ஒவ்வொருவரும் முன்னுறுத்திக் கொண்டனர். இது ஜே.வி.பி. ஆட்சியிலும் வெளிப்படுத்துகிறதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனாலும் புதிய அரசியலமைப்பு ஒன்றின் வரைவு ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வது பற்றிய எண்ணத்தை அதிகம் பிரதிபலிக்கக் கூடியதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது இலங்கை தீவில் சிறுபான்மை தேசியங்களில் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தும் என ஆறு தமிழ் கட்சிகளின் மேடை ஏற்றுக்கொண்டது போல் ஊடக சந்திப்பில் அதன் வெளிப்பாடு அமைந்திருந்தது. ஜனாதிபதி முறையை ஒழிப்பது இலங்கையின் சிறுபான்மை தேசியங்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமைந்து விடுமா என்ற கேள்வி ஆறு தமிழ் கட்சிகளின் மேடை நோக்கியதாக காணப்படுகிறது.

இரண்டாவது ஜனாதிபதியுடன் சந்திப்பில் மாகாண சபை தேர்தல் தொடரில் உரையாடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படாமையும் அதனை உடனடியாக நடத்துவதற்கு எல்லை நிர்ணய சபையின் நடவடிக்கையிலே தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆறு தமிழ் கட்சிகளின் மேடையிடம் இருக்கும் மிகப் பிரதானமான முரண்பாடும் குழப்பமும் புதிய அரசியல் அமைப்பும் மாகாண சபைக்கான தேர்தலும் முற்றிலுமே முரண்பட்ட எண்ணத்தைக் கொண்ட விடயமாக அமைந்திருக்கின்றது. புதிய அரசியலமைப்பை கோருவது என்பது சிறுபான்மை தேசியங்களின் பிரச்சினைக்குரிய தீர்வை எட்டுவதற்கானதொன்று மேடை கருதுமாக இருந்தால் அதற்கு அமைவான வரைபுகளையும் கோரிக்கைகளையும் முன்வைப்பதில் கவனம் கொண்டிருக்க வேண்டும். ஆனால் புதிய அரசியலமைப்பை கோரிக்கொண்டு மாகாண சபை தேர்தலை நடத்துமாறு விண்ணப்பிப்பது எந்த அடிப்படையில் தர்க்க ரீதியானதாக அமையும் என்பது கேள்வியாகும். ஆறு தமிழ் கட்சிகளின் மேடை அமையப்போகும் புதிய அரசியல் அமைப்பிலும் இத்தகைய அதிகாரமற்ற மாகாண சபை முறைமைக்குள் இயங்குவது பற்றிய உரையாடலை தான் முன்னிறுத்த முயலுகின்றர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது. தவிர்க்க முடியாமல் ஜனாதிபதி மாகாண சபைக்கான தேர்தலை மேற்கொள்வது பற்றி பேசத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அனைத்து சமூகங்களை இணைக்கும் புதிய மக்கள் இணக்கப்பாடு அவசியம் என்பதையும் அது உடனடி அரசியலமைப்பு மாற்றம் அல்ல என்பதை அடையாளப்படுத்தியுள்ளார். மாகாண சபை தேர்தலும் நிகழ்த்துவது என்ற முடிவுக்கு ஜனாதிபதி ஆறு தமிழ் கட்சிகளின் மேடை முன் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் முடிபைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் சாத்தியமற்றதென்பதை வெளிப்படுத்துவதாக தெரிகிறது.

மூன்றாவது இலங்கையின் சிறுபான்மை தேசியங்களின் காணி தொடர்பான பிரச்சனைகளுக்குரிய தீர்வு வழமையான பதிலாகவே வெளிவந்துள்ளது. மாகாண சபைக்கு உரிய அதிகாரத்தில் ஒன்றான காணி அதிகாரத்தை வழங்காமல் தேசிய மட்டத்தில் இயங்கும் அமைப்புகளிடமும் நிறுவனங்களிடமும் அரசாங்கம் ஒப்படைத்துள்ளது என்பது ஆறு கட்சிகளுக்கும் தெரியாத விடயம் கிடையாது. ஆனால் அது தொடர்பில் ஜனாதிபதியின் பதில் கவனத்திற்குரியது. வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளின் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், காணி மக்களுக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். தொல்பொருள் திணைக்களம், வன பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபை போன்ற நிறுவனங்கள் காலாவதியான கொள்கைகளின் கீழ் செயல்படுவதால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காணிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பது இலங்கை இராணுவம். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நிலங்களை கைப்பற்றி வைத்துக் கொண்டு விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் நிகழ்ந்துவருகிறது. தமது நிலங்களின் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்கள் நிலமின்றி தொழிலின்றி வேலைவாய்ப்பின்றி ஆரோக்கியமான வசிப்பிடம் இன்றி துயரப்படுகின்ற சூழலிலும் ஜனாதிபதியின் பதில் அதிக குழப்பகரமானதாக உள்ளது. இவ்வாறான உரையாடலை ஆறு கட்சிகளின் மேடை அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தது மட்டுமன்றி உரையாடல் சுமூகமான அமைந்ததென ஊடகங்கள் முன் தோன்றி தகவலை பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேட்பாப்பிலவிலும் மக்கள் தொடர்ச்சியாக நிலமீட்புப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற சூழலில் கூட அது பற்றிய எந்த உரையாடலையும் ஆறு கட்சிகளின் மேடை வெளிப்படுத்தவில்லை.

நான்காவது ஜனாதிபதியுடன் சந்திப்பில் இரண்டு விடயங்கள் வெளி தோன்றியுள்ளன. ஒன்று தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் எத்தகைய மாற்றங்களையும் கொண்டிருப்பவர்கள் இல்லை என்பதை ஜனாதிபதியின் பதிலில் வெளிப்படுத்தியிருந்து தெளிவாகிறது. கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று ஆறு கட்சிகளின் முன் தமது ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதற்கான பதில்களே தரப்பட்டுள்ளது. இது தென் இலங்கை தீவிரவாத சக்திகளின் விருப்புக்களை நிறைவேற்றும் விதத்தில் ஆறு தமிழ் கட்சிகளின் மேடையை ஜனாதிபதி பயன்படுத்தியுள்ளார். இரண்டு, ஆறு தமிழ் கட்சிகளின் இலக்கு எப்படியாவது ஜனாதிபதியை சந்தித்து உரையாடி விட வேண்டும் என்ற எண்ணமாகத் தெரிகிறது. காரணம் ஜனாதிபதி முன்வைத்த நிறைவேற்ற அதிகாரத்தையும் புதிய அரசியல் அமைப்பையும் மாகாண சபை தேர்தலையும் காணி பிரச்சனையையும் அப்படியே ஏற்றுக்கொண்டு தாம் முன்வைத்த கோரிக்கைகளில் இவை முரண்பாடு உடையவை என்பதை கூட கண்டுகொள்ளாது உரையாடியுள்ளனர். இதன் மூலம் ஜனாதிபதிக்கும் ஆறு கட்சிகளின் மேடைக்கும் இடையில் ஒரு உறவை பலப்படுத்துவது மற்றும் எதிர்காலத்தில் தொடர்ச்சியாக ஜனாதிபதியோடு உரையாடுவது அவ்வாறு உரையாடுவதன் மூலம் தமக்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகளை வெற்றிகரமாக கையாளுவது என்ற அடிப்படையிலே அத்தகைய பயனற்ற உரையாடலை நிகழ்த்திவிட்டு ஊடகங்களும் காட்சி அளித்துள்ளனர்.

எனவே மீண்டும் ஒரு ஏமாற்றுவதற்கு தயாராகும் ஆட்சியாளர்களையும் அதன் பங்காளிகளாகும் ஆறு தமிழ் பேசும் கட்சிகளின் மேடையையும் கண்டுகொள்ள முடிகிறது. இலங்கை முழுவதும் உள்ள சிறுபான்மை தேசியங்களை கையாளுவதற்கான உத்தியோடு சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதன் விளைவு எதுவுமில்லை என்பதாகவே தெரிகின்றது. இத்தகைய எதுவுமற்ற செயலுக்கு ஆறு கட்சிகளின் மேடையையும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி சந்திப்பும் தேவைதானா என்ற கேள்வி காணப்படுகிறது. இத்தகைய சந்திப்பு நெருக்கடிமிக்க வடக்கு கிழக்கு தமிழர்களின் பிரச்சினையை பொதுநிலைப்படுத்தி தேசிய இன பிரச்சினை ஒன்று இல்லை என்பதை அடையாளப்படுத்துவதில் ஆறு கட்சிகளின் மேடை அரசாங்கத்திற்கு உதவப் போகிறதா என்ற சந்தேகத்தை தந்துள்ளது.அவ்வாறாயின் இது ஆளும் தரப்பிற்கு வெற்றிகரமான நகர்வாக அமையும். மாறாக சிறுபான்மைத் தேசியங்களின் பிரச்சினையை தெளிவான வரைபுகளுக்குள்ளால் முன்வைத்து அவற்றுக்கான தீர்வுகளை ஒரு காலவரையறையுடன் மேற்கொள்ள ஆறு தமிழ் கட்சிகளும் திட்டமிட்டு சந்திப்புக்களை நிகழ்துவது அவசியமானது. அது ஆரோக்கியமான அரசியலுக்கு முதலீடாக மாறும்.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி:தினக்குரல்)