இலங்கை அரசியலில் ஆளுங்கட்சியை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் பல்வேறு உத்திகளை வகுத்து செயல்படுகின்றன. ஏற்கனவே தென்னிலங்கையில் பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் எதிர்க்கட்சிக்கு நிகராக பல கட்சிகளின் கூட்டு உருவாக்கப்பட்டது. அதே போன்று இலங்கை முழுவதுமான தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பில் ஒரு சந்திப்பினை நிகழ்த்தியுள்ளனர். இச்சந்திப்பு சார்ந்து கட்சியின் தலைமைகள் விடுத்த அறிக்கைகள் அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கான மேடையாக தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைகின்றன என்றும் அவை மூன்று பிரதான கோரிக்கைகளை முன் வைத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதனை அக்கட்சிகளின் பத்திரிகையாளர் மகாநாட்டில் கட்சிகளின் தலைவர்கள் தெரியப்படுத்திருந்தனர். இக் கட்டுரையும் இத்தகைய ஆறு கட்சிகளின் மேடை முன்வைத்துள்ள கோரிக்கைகளும் அது தொடர்பில் எழுந்திருக்கும் விவாதங்களையும் நோக்குவதாக உள்ளது.
முதலில் ஆறு அரசியல் கட்சிகளின் மேடை முன் வைத்திருக்கும் பிரதான கோரிக்கைகளை அவதானிப்பது அவசியமானது.
ஒன்று, புதிய அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை முதன்மையானதாக உள்ளது. அதாவது ஜே.வி.பி. அரசாங்கம் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த புதிய அரசியல் அமைப்பு ஒன்றிற்கான உருவாக்கம் பற்றிய உரையாடலை இரண்டு வருடங்கள் ஆட்சி நெருங்குகின்ற போதும் எந்தவித நகர்வுகளும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது. இதில் ஜே.வி.பி. முன்மொழியவுள்ள அரசியல் அமைப்பு ஏக்கய ராஜ்ஜியத்தை பிரதிபலிக்கும் என்ற விவாதம் வடக்கு கிழக்கில் அதிகம் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளால் உரையாடப்படுகின்ற போது ஆறு கட்சிகளின் மேடை புதிய அரசியல் அமைப்புப் பற்றிய கோரிக்கையை முன்வைத்துள்ளது. ஒற்றையாட்சிக்குள் வடிவமைக்கும் அரசியலமைப்புக்கு எதிராக தமிழ் தேசியக் கட்சிகள் விவாதிக்கின்றன. ஆனால் ஆறு அரசியல் கட்சிகளின் மேடை அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே முதன்மைப்படுத்தி இருககிறதே அன்றி எத்தகைய அரசியல் அமைப்பு இலங்கைக்கு பொருத்தமானது என்பது பற்றிய விபரணம் எதனையும் வெளிப்படுத்தவில்லை என்பது கவனத்திற்குரியது.
இரண்டு, மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துதல் வேண்டும் என்பதாகும். குறிப்பாக ஜே.வி.பி. அரசாங்கம் ஒன்றாக இருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரித்தது மட்டுமின்றி மாகாணசபைக்கான தேர்தலை நிகழ்த்துவதை வேறு காரணங்களை முதன்மைப்படுத்திக் கொண்டு காலம் தாள்த்துவதாக தெரிகிறது. அது தொடர்பிலான கோரிக்கை கூட்டாக வலியுறுத்துகின்ற விதத்தில் ஆறு அரசியல் கட்களின் மேடை முனைகின்றது. ஆனாலும் தேர்தலை எதிர் கொள்கின்ற உத்தியாகவே ஆறு கட்சிகளின் மேடை தென்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறன. கிழக்கு மாகாணத்தினது கடந்தகால அனுபவங்களை கருத்தில் கொள்ளாத நிலையொன்று வடக்கு கிழக்கு அரசியல் கட்சிகளிடம் காணப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் தனித்துவமான கட்டமைப்பை ஏற்படுத்த முடியாத நிலையில் முழு இலங்கையிலும் அத்தகைய புரிதலுடன் அணிசேர முடியுமா என்ற சந்தேகம் அதிகம் காணப்படுகிறது.
மூன்றாவது இலங்கையில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்கள் காணி தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை முன் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அமைந்துள்ளது. ஆறு கட்சிகளின் மேடை வெளிப்படுத்தியுள்ள விடயம் தமிழ் மக்களுக்குரியதாகவே அதிகம் உணரப்படுகிறது. இலங்கையில் தமிழ் மக்களது காணிகளே ஏனைய தரப்புக்களால் ஆக்கிரமிக்கப்படுகிறது. காணி தொடர்பில் ஏற்பட வேண்டிய தீர்வு தமிழ் மக்களுக்கே முதன்மையானது. அதனை நோக்கியே அதிகம் போராட்டங்களும் உரையாடல்களும் வடக்கு கழக்கில் காணப்படுகிறது. பெரும்பான்மை சிங்கள மக்களது காணிகளை தமிழர்களோ இதர இனத்தவரோ ஆக்கிரமிக்கவில்லை. அதற்கான தீர்வுகளே அடிப்படையான விடயமாகும். காணியை கையாளும் அதிகாரத்தை தமிழ் மக்களிடம் வழங்கிவிடக் கூடாது என்பதற்காகவே மாகாணசபை அதிகாரத்தில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை கடந்தகால அரசாங்கங்களும் தற்போதைய அரசாங்கமும் ஒரே மாதிரி கையாள முனைகிறது. அதனை எப்படி பொதுமைப்படுத்தி தீர்வு காண்பது என்பது முக்கியமானது.
இத்தகைய கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் ஆறு தமிழ் பேசும் கட்சிகளும் கூட்டாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளன. இது ஒரு ஆரோக்கியமான செய்முறையாகத் தென்பட்டாலும் நடைமுறையில்; கடந்த காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பிரதான விடயம் என்பதை கவனத்தில் கொள்வது அவசியமானது. மேற்குறித்த மூன்று பிரச்சினைகளும் நீண்ட காலமாக இலங்கை தீவில் நிலவும் பிரச்சனைகளாகவே காணப்படுகின்றன. ஆனால் அவை சார்ந்து அதிக கவனம் கடந்த காலங்களில் மேற்கொள்ளாது தவறவிட்ட தமிழ் பேசும் கட்சிகள் தற்போது முன்னெடுக்க காரணம் என்பது அதிக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மிக நீண்ட காலமாக ஆறு அரசியல் கட்சிகளின் மேடையின் உறுப்பினர்கள் நல்லாட்சி அரசாங்கத்தோடும் அதன் முன்னரான பொதுஜன பெரமுன அரசாங்கத்துடனும்;, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி அரசாங்கங்களுடனும் பங்காளராகவும் அமைச்சுப் பொறுப்புடையவர்களாகவும் செயல்பட்டவர்கள். அப்போது இவ் விடயங்களை எதனையும் கண்டு கொள்ளாமல் இருந்தமை கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டியது அம்சமாகும். குறிப்பாக நல்லாட்சி காலத்தில் ஆறு அரசியல் கட்சி மேடை அரசியலமைப்பு முன்மொழிவுகளை முன்னெடுத்த தரப்புகள் என்பது முக்கியமானது. அவர்களால் அப்போது செயல்படுத்த முடியாததை மீள கொண்டுவர முடியுமென கருதுவது அதீதமான போலித்தனம் என்பதை கண்டு கொள்ள முடிகிறது. இவற்றை ஆழமாக நோக்குவது அவசியமானது.
ஆறு அரசியல் கட்சிகளின் மேடை அடையாளப்படுத்தி இருக்கும் பிரச்சினைகள் முதன்மையானவையாகும். அதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால் இதனை இவ் ஆறு அரசியல் கட்சிளின் மேடை ஏன் கடந்தகாலத்தில் கண்டு கொள்ளவில்லை என்பதே முக்கியமானது. தென்னிலங்கையில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் ஊழலுக்கு எதிரான தீவிர நகர்வுகளை திட்டமிடுகின்ற போது தென்னிலங்கையிலும் சிங்களப் பெரும்பான்மை கட்சிகள் மத்தியில் ஒரு கூட்டு உருவானது. அது பின்னர் காணாமல் போய்விட்டது. அத்தகைய நிலையே ஆறு கட்சிகளின் மேடைக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முன்கூட்டியே ஆபத்துக்களை தடுப்பதற்கான உத்தியான மேடையாகும் என்ற சந்தேகம் அதிகமாக பொது வெளியில் உண்டு.
ஆறு கட்சிகளின் மேடை மீது அதிக விமர்சனங்களை ஆளும்தரப்பு முன்வைத்துள்ளது. அதில் பிரதானமானது இனவாதம் பற்றிய உரையாடலாகும். ஆனால் இனவாதம் என்பது அடிப்படையில் ஓரினத்தை இன்னோர் இனம் இன ரீதியாக ஆதிக்கம் செய்கின்ற முறைமையை அதிகம் குறிப்பதாகும். இது இன அடையாளத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதையும், இனத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதையும், ஒரு குறிப்பிட்ட இனக் குழுவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதையும் குறிப்பதாகும். குறிப்பிட்ட குழுவிற்குள் பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியம், பரம்பரை, மொழி மற்றும் மரபுகள் மீது அதிக கவனம் செலுத்துதல் மற்றும் உடல் ரீதியான அல்லது இன ரீதியாக இனவாதத்தைப் போலவே செயல்படுதலாகும். ஒருவரின் இனப் பின்னணியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவரை நியாயமற்ற முறையில் நடத்துதல் சார்ந்ததே இனவாதமாகும். இது மட்டுமன்றி ஒரு தேசம் அல்லது அரசு ஒரு மேலாதிக்க இனத்தின் மூலம் கடுமையாக வரையறைக்குள் இயங்குவதைக் குறிப்பதும் இனவாதமாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. இதில் ஏதாவது ஓரம்சத்தை ஆறு கட்சிகளின் மேடை கொண்டிருக்கிறதா என்பது கேள்வியாகவே உள்ளது. ஆறு கட்சிகளும் ஒருமித்த எந்தக் கொள்கைகயையும் கொண்டதல்ல. உலகளாவிய அரசியலில் கூட்டுக்கள் பலமானவை. ஆனால் அவை தேர்தலுக்காக அல்லது இலட்சியத்திற்கான ஒன்றிணைவதைக் கண்டு கொள்ள முடிகிறது. குறிப்பாக தேர்தல் கூட்டுகள் வெற்றியை நிர்ணயிப்பதற்கும் கொள்கைக் கூட்டுகள் அரசியல் இலட்சியத்தை வென்றெடுப்பதற்கும் வடிவமைக்கப்படுவது வழமையானது. ஆனால் ஆறு கட்சிகள் மேடை ஒரு கூட்டாகவோ அல்லது முன்னணியாகவோ அடையாளப்படுத்தப்படுவதில் அவர்களே தவிர்க்க முயன்றுள்ளனர். மாறாக மேடை மூலம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்ற நோக்குடன் செயல்படுகின்ற அமைப்பாகவே கருதுகின்றனர். அத்தகைய அழுத்தம் எதற்கானது என்பதே பிரதானமானது. இதனால் இவர்களை ஒரு கூட்டு என்றோ அணி என்றோ அடையாளப்படுத்தி விட முடியாதுள்ளது. வழமையான சந்தித்து உரையாடுவதற்குரிய அல்லது வெளிப்படுத்துவதற்குரிய ஒரு மேடையாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆறு காட்சிகளின் மேடையில் அங்கம் பெற்றிருந்த கட்சிகளும் சரி தலைமைகளும் சரி ஒருங்கிணைவுக்குரிய கொள்கைப் பற்றுதிகளை வெளிப்படுத்தும் இயல்பை கொண்டவர்கள் இல்லை. கடந்த காலங்களில் ஆளும் தரப்போடு ஒன்றித்து பயணித்தவர்கள். இதனால் இவர்களிடம் தெளிவான கொள்கை பற்றியோ கூட்டுக்குரிய பண்புகளோ, பெரும் அளவில் கொண்டிருக்காதவர்களாகவே காணப்பட்டுகின்றனர். இவர்கள் நம்பிக்கை ஊட்டும் அளவுக்கு கடந்த கால அரசியலை கட்டமைக்க தவறியவர்கள். பாரிய நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் அரசாங்கத்தோடும் ஆளும்தரப்போடும் கூட்டாக செயல்பட்டவர்கள். நெருக்கடிகளின் மத்தியில் தமது பிரதேசங்களையும் நமது மொழி பேசும் மக்களின் பாதுகாப்பதில் முனைப்பு காட்டியவர்களாக விளங்கியவர்கள். இவர்களிடம் இலங்கைத்தீவு முழுமைக்குமான அரசியலை கையாளும் திறன் இருப்பது போல் தெரியவில்லை. பலவீனமானது மட்டுமல்ல நீண்ட காலம் தலைமைத்துவங்களை கட்சிகளுக்குள் கொண்டவர்கள். ஜனநாயகப் பண்பு எதனையும் தமது கட்சிக்குள் மதிக்காதவர்கள்;. பெரும் அளவுக்கு மக்களின் செல்வாக்கை அதிகம் கொண்டிராதவர்கள்.
எனவே இவர்களால் முன்னெடுக்கப்படும் கூட்டான மேடைத் தீர்மானங்கள் வெற்றிகரமான சூழலை ஏற்படுத்தக் கூடியதாக அமைய வாய்ப்பு மிகக் குறைவானதாகவே உள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு இத்தகைய அழுத்தங்கள் ஒன்றிணைவுகள் மேடைகள் மாற்றத்தை தந்துவிடும் என்று எதிர்பார்ப்பது கடினமானதே. ஆனால் தவிர்க்க முடியாமல் இவ்வகை உரையாடல்கள் மக்கள் மத்தியில் காட்சிப்படுத்தப்படுகிறது. ஆழமாகப் பார்த்தால் அவற்றின் நோக்கம் வேறுபட்டதாகவே தெரிகிறது. இவ்வாறு எழுச்சியடையும் மேடைகள் பின்னர் பலவீனப்பட்டுப் போகின்றன. மாறாக கொள்கைப் பற்றுதியுடனும் ஜனநாயக மரபுகளுடனும் தூரநோக்குடனும் அர்ப்பணிப்பான தலைமைகளுடனும் பரந்த அளவிலான கூட்டணிகள் எழுச்சி பெறுவது அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த உதவும்.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினக்குரல்)
