நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் முக்கியம் வகிப்பவர்களாக இராஜதந்திரிகள் விளங்குகின்றனர். ஒரு நாட்டின் பிரதான இராஜதந்திரிகளாக தூதுவர்களையே அரசுகள் நியமிக்கப்படுகின்றன. தூதுவர்களைவிட விசேட தூதுவர்கள், நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் என பலர் காணப்படுவர். அவர்களது பதவியும் பணியும் தமது தேசத்துக்கான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதையே பிரதான நோக்கமாக கொண்டுள்ளனர். ஐரோப்பிய வரலாற்றில் தொடங்கி வைக்கப்பட்ட இராஜதந்திர உறவின் (Diplomatic Relations) வடிவமானது இராஜதந்திரிகளால் நாடுகளுக்கிடையிலான உறவு ஆளப்படுவதாகவே தெரிகிறது. இராஜதந்திர உறவுகள் இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையேயான முறையான தொடர்ச்சியான தொடர்புகள், தகவல் பரிமாற்றங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளை அதிகம் குறித்து நிற்க்கிறது. இதில் பொதுவாக, தூதர்களின் பரஸ்பரப் பரிமாற்றம் தூதரகங்களின் அரசியல் செயல்பாடு மற்றும் வர்த்தகம், பாதுகாப்பு, உலகளாவிய விடயங்கள் தொடர்பான ஒத்துழைப்பு ஆகியவை உள்ளடங்கும். இலங்கை தீவின் இந்தியாவின் தூதுவர்கள் இராஜதந்திரிகளாகவே செயல்படுகின்ற போக்கு அதிகம் காணப்படுகிறது. தூதுவர்களது ஒவ்வொரு நகர்வும் இராஜதந்திர நகர்வாகவே அமைந்திருக்கின்றது. இக்கட்டுரையும் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவின் (Santose Jah) வடக்கு நோக்கிய விஜயம் பெறுகின்ற இராஜதந்திர முக்கியத்துவத்தை தேடுவதாக வடிவமைக்கப்படுகிறது.
இலங்கைக்கான இந்தியத் தூதர் வடக்கு மாகாணத்திற்கு மேற்கொண்ட விஜயம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அவதானிக்கப்பட வேண்டும். அவர் யாழ்ப்பாணம் மற்றும் தீவுப் பகுதிகளை நோக்கி மேற்கொண்ட விஜயம் தனித்துவமான எண்ணத்தைக் கோடிட்டுக் காட்டுவதுடன் இந்தியாவின் இலக்கையும் உறுதிப்படுத்த முயல்வதாக தெரிகிறது. குறிப்பாக இந்தியத் தூதுவரது பயணம் வடக்கு மாகாணத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கரையோரப் பிரதேசங்களை அதிகம் பிரதிபலித்திருந்தது. யாழ்ப்பாணத்தின் கரையோர பிரதேசங்களையும் அவற்றில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்களையும் முதன்மைப்படுத்தியதோடு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விக்கான புலமைப் பரிசில் திட்டங்களிலும் கவனம் செலுத்தியதையும் காணமுடிந்தது. நெடுந்தீவு, நயினாதீவு, காங்கேசன்துறை போன்ற கரையோரப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் பெருமளவான வாய்ப்புகளையும் உதவிகளையும் வடக்கு மகாணத்திற்கு முதன்மைப்படுத்தியிருந்தார். இத்தகைய தூதவரது விஜயம் இராஜதந்திர நகர்வாகவே உள்ளது. அத்தகைய விஜயத்தின் முக்கியத்துவத்தை ஆழமாக புரிந்து கொள்வது அவசியமானது.
முதலாவது இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே.வி.பி. அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிற்பாடு நிகழ்ந்த சந்திப்புகளில் பலதடவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தரைவழி தொடர்பை கட்டமைப்பதற்கான முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்தியிருந்தார். கொழும்பில் நடைபெற்ற உலகளாவிய புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவ உச்சிமாநாட்டில் (மே2,2026) கருத்துக்களைத் தெரிவிக்கும் போது, தூதுவர் சந்தோஷ் ஜா பாக்நீரிணைக்கு குறுக்கே ஒரு பாலம் அல்லது சுரங்கப்பாதை வழியாக தரைவழி இணைப்பு ஏற்படுத்துவது குறித்து பல தசாப்தங்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது என்றும் உலகம் முழுவதும் இதுபோன்ற வழித்தடங்களுக்குப் போதுமான உதாரணங்கள் உள்ளன அதன் பொறியியல் நன்கு அறியப்பட்டுள்ளது, அதனால் ஏற்படும் பொருளாதாரம் வளர்ச்சி கவர்ச்சிகரமானது, இதுபோன்ற பாலங்கள் எங்கெல்லாம் கட்டப்பட்டுள்ளனவோ, அங்கெல்லாம் அதன் நன்மைகள் மறுக்க முடியாதவை. ஆனால் நாம் தொடர்ந்து தயங்குகிறோம். நான் தெளிவாகச் சொல்கிறேன் தயங்குவதற்கான காலம் முடிந்துவிட்டது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒரு நிரந்தர இணைப்பு இந்தப் பிராந்தியம் முழுவதின் புவிசார்-பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் எனக் குறிப்பிட்டார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தரைவழி தொடர்பு ஒன்றை மேற்கொள்வற்கான வாய்ப்புகள் உருவாகி இருப்பதாகவும் அவ்வாறு அவர் முன் வைத்ததற்கு பின்னால் இலங்கை இந்தியா பொருளாதார முக்கியத்துவம் அதிகம் உணரப்படுவதையும் கொண்டதாகவே முன்வைக்கப்படுகிறது. தென் இலங்கையின் தீவிர தேசிய வாதிகள் என தம்மை அடையாளப்படுத்தும் அரசியல் தலைவர்கள் எதிர்த்த போதும் தூதுவர் தொடர்ந்து அதனை முதன்மைப்படுத்தி வருகிறார். தூதுவர் சந்தோஷ் ஜா அத்தகைய கொள்கையிலிருந்து விலகியதாக தென்படவில்லை. அதனுடைய ஓர் அங்கமாகவே அவரது வடக்கு மாகாணத்திற்கான விஜயம் அமைந்திருந்தது.
இரண்டாவது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாலம் அமைக்கும் திட்டம், 2002ஆம் ஆண்டில் இவ்விரு நாடுகளின் அரசாங்கங்களாலும் முதன்முதலில் முன்மொழியப்பட்டது. 2002-2004 அமைதி ஒப்பந்தத்தின் போது அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அனுமான் பாலம் என்று அதனை அழைத்ததோடு அதனை கட்ட உதவுமாறு இந்தியாவைக் கேட்டுக்கொண்டார். 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையின் ஜனாதிபதியாக இருக்கும் போது ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட இரண்டு நாள் இந்தியப் பயணத்தின் போது, இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் முன்மொழியப்பட்ட பாலம் குறித்த முழுமையான சாத்தியக் கூற்றுக்கான ஆய்வை நடத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவால் தொடங்கப்பட்ட அந்த ஆய்வுத் திட்டத்தின் சாத்தியக் கூற்றைத் தீர்மானிக்க தொழில்நுட்ப பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களை மதிப்பீடு செய்யும் பூர்வாங்க வேலைகள் தொடங்க்கப்பட்டது. இந்தப் பாலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், சுற்றுலா மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதையும் நெருங்கிய உறவுகளையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. இலங்கை ஆட்சியாளர்கள் எத்தகைய தடுப்புச் சுவர்களை கட்டமைக்க முயன்றாலும் இந்தியா பாலம் அமைப்பதற்கான நகர்வுகளை முதன்மைப்படுத்திவருகிறதை அவதானிக்க முடிகிறது. இலங்கையில் நிகழும் மாற்றங்களையும் பொருளாதார நெருக்கடிகளையும் எல்லா சந்தர்ப்பங்களிலும் சாதகமாக்கிக் கொண்டு இந்தியா நகர்ந்து செல்லும் போக்கும் நிலவுகிறது. தென்னிலங்கை ஆட்சியாளர்களையும் எதிர்க்கட்சியினரும் இந்தியாவுக்கு எதிரான மனோநிலையை கொண்டிருந்தாலும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் இந்தியாவை அரவணைத்து செல்ல வேண்டிய நிலை தவிர்க்க முடியாதததாகிறது.
மூன்றாவது அத்தகைய தரைவழிப் பாதையில் சாத்தியமின்மைகள் அதிகமாக உள்ளதாகவே தென் இலங்கையின் போக்கு உணர்த்துகிறது. இலங்கை ஆட்சியாளர்கள் ஒருபோதும் தரைவழிப்பாதைக்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதற்கான எண்ணத்தை கொண்டிருப்பவர்களாக தென்படவில்லை. தரைவழிப்பாதை ஒன்றுகாக ஜே.வி.பி. அரசாங்கம் இந்தியாவோடு ஓர் உடன்பாட்டை எட்டுமாக இருந்தால் தென்னிலங்கையில் ஆட்சி மாற்றத்துக்குரிய சூழல் சாத்தியமாகும். அதனை கடந்த காலங்களின் போக்குகளிலிருந்து அவதானிக்க முடிகிறது. மீளவும் தென்னிலங்கை தீவிரவாத சக்திகள் எழுச்சி பெற்று ஜே.வி.பி.இன் ஆட்சியை முடிபுக்கு கொண்டுவர வாய்ப்புள்ளது. தீவிரவாதத்தினூடாக ஆட்சியை கைப்பற்றி இந்திய இலங்கை அரசியல் உறவை கையாளுகின்ற நிலை ஏற்படும்.
நான்காவது இந்திய தரப்பு தரைவழிப் பாதையை கட்டமைப்பதன் பிரதான உத்தி இலங்கை தீவில் சீனா மட்டுமல்ல அந்நிய சக்திகள் எதுவும் மேலும் நுழைந்து விடாது தடுப்பதற்கு தரைவழிப்பாதை அவசியமானது என கருதுகின்றனர். ஏற்கனவே சீனா ஹம்பாந்தோட்டையை கைப்பற்றிய நிலையில் தரைவழி சாத்தியமாகுமாயின் அதன் தந்திரோபாயம் கணாமல் போகும் நிலை ஏற்படும். அதனாலேயே இந்தியா தரைவழி பாதைக்கான முக்கியத்துவத்தை உணர்த்த முயலுகிறது. சந்தோஷ் ஜாவின் வடக்கு பயணம் தரைவழிப்பாதைக்கான எண்ணத்தைக் கொண்ட ஒரு தூதுவரது விஜயமாகவே புரிந்து கொள்ளப்படுதல் அவசியமானது. இதன் பிரதிபலிப்புகளே அவரது சந்திப்புகளிலும் உரையாடல்களிலும் வெளிப்படுத்தப்பட்ட செய்தியாக தெரிகின்றது. இத்தகைய இராஜதந்திர நகர்வுகளை கண்டறிவது என்பது ஈழத்தமிழருடைய அரசியலில் அவசியமான பக்கங்களாகவே தெரிகின்றது. ஏனெனில் ஈழத்தமழரின் அரசியலோடு பாக்குநீரிணை அதிக நெருக்கமான உறவை சாத்தியப்படுத்தி இருந்தது. அவ்வகை நிலைப்பாடு ஒன்று தனுஸ்கோடி-தலைமன்னாரை நோக்கிய தரைவழிப் பாதைக்கான சூழல் உணரப்படுகிறது.
ஐந்தாவது ஈழத்தமிழர்களை பொறுத்தவரை தரைவழிப் பாதையின் முக்கியத்துவம் அரசியல் பொருளாதாரம் சார்ந்த தனித்துவமான தீர்மானங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை கொடுக்கக்கூடியது. ஆனாலும் தரைவழிப் பாதையினுடைய கட்டுமானம் இலங்கை தீவின் மீண்டும் ஒரு அரசியல் கொதிநிலைக்கான சூழலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை கொண்டிருப்பதாகவே தெரிகிறது. கடந்த கால வரலாற்றின் படிப்பினைகள் அதனையே தெளிவுபடுத்துகின்றன. அத்தகைய அரசியல் கொதிநிலையானது ஒருபக்கம் ஈழத்தமிழருக்கு சாத்தியப்படானதாக அமைந்தாலும் மறுபக்கம் தென் இலங்கையோடு முரண்பாட்டையும் பகைமையையும் வன்முறையையும் உருவாக்கக் கூடியதாக அமையும் என்ற சந்தேகத்தை தருகின்றது. ஆனால் அது தவிர்க்க முடியாததது. ஜே.வி.பி. அரசாங்கம் மட்டுமின்றி எத்தகைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தரைவழிப்பாதைக்கான வாய்ப்பை ஒருபோதும் சாத்தியப்படுத்தாது. காரணம் இலங்கை தீவாக இருப்பதே இலங்கை அரசாக இருப்பதற்கான அடிப்படையாகும். தவறுமாயின் இலங்கைத் தீவு மட்டுமல்ல இலங்கையின் அரசின் வடிவத்தையும் தரைவழிப்பாதை மாற்றிவிடும். இலங்கை தீவை தகர்க்கப்படுமாக இருந்தால் அதன் விளைவுகள் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு ஆபத்தான விளைவுகளை தருவதற்குரிய சூழலை ஏற்படுத்தும். கடல் மீதும் கடல்களை நோக்கியும் தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் கொண்டிருக்கின்ற நடவடிக்கைகள் இலங்கையை தீவாக வைத்துக் கொள்வதற்கான உத்தியாகவே தெரிகிறது.
ஆறாவது இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவை எதிர்கொள்வதற்கு அமெரிக்காவுடனும் சீனாவுடனும் நட்புக் கொள்வது ஒரு உத்தியாகவே விளங்குகிறது. பொருளாதார நெருக்கடியை தீர்த்துக் கொள்வதற்கு அமெரிக்காவோடு நெருக்கமான உறவை தென் இலங்கை ஆட்சியாளர் கட்டமைப்பது என்பது கடந்த 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சியில் இருக்கும் போது தொடக்கப்பட்டதென்றாகும். அத்தகைய சூழலையே மீளவும் நினைவுபடுத்துகின்றது. தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் நெருக்கடிகள் தோன்றுகிற போது அதனை எதிர்கொள்வதற்கு வெளியுறவு பாரம்பரியத்தையும் இராஜதந்திர உத்திகளையும் நகர்த்துவதில் தேர்ச்சி உள்ளவர்களாக காணப்படுகின்றனர். அத்தகைய தேர்ச்சி இராஜதந்திரமே இலங்கை தீவின் அரசியலை நெருக்கடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்கிறது. தமிழர்கள் நெருக்கடிகளில் தமது இருப்பை பாதுகாப்பதை கற்பனாவாதங்களையும் அதற்கான புனைவுகளையும் முன்னெடுத்துச் செல்வதன் மூலம் தோல்விகளை எதிர்கொள்கின்றனர். ஈழத்தமிழர் பலமான கருநிலை அரசை (Proto-Nation State) பாதுகாக்க முடியாது கற்பனாவாதங்களும் இராஜதந்திர வறுமையும் அடிப்படை காரணங்களாக காணப்பட்டன. அதனையே கடந்த 17 வருடங்களாக நிலைநிறுத்தி வருகின்றனர்
எனவே மீண்டும் ஒரு இலங்கைத் தீவின் அரசியல் கொதிநிலை உட்படுத்தும் நகர்வுகள் ஆழமானதாக தெரிகிறது. வெளித்தோற்றத்தில் நலத்திட்டங்களும் ஒத்துழைப்புகளும் கைலாகு கொடுப்பதும் மகிழ்விப்பதும் நிகழ்ந்தாலும் உள்ளார்ந்த அர்த்தத்தில் அவை இராஜதந்திர செய்முறையாக அரங்கேற்றப்படுகிறது. இந்தியாவின் இலங்கைக்கான தூதுவரின் வடக்கு விஜயமும் தென்னிலங்கை ஆட்சியாளர்களின் அமெரிக்கா நோக்கிய நகர்வும் சமகாலத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டிய இராஜதந்திர அரசியலாகவே தெரிகின்றது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
