July 12, 2026
அரசியல் கட்டுரைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையின் படுகொலையும் அரசியல் அதிகாரத்திற்கான போட்டியும்?

 

இலங்கை அரசியல் வரலாறு முழுவதும் ஒரே விடயம் திரும்பத்திரும்ப நிகழ்ந்து கொண்டே இருகிறது. தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் அதிகார இருப்பை தக்க வைக்கவும் மீண்டும் ஆட்சியை தமது நலனுக்கு வடிவமைக்கவும் தொடர்ச்சியாக முயல்வதும் பின்னர் அதற்கான விசாரணைகளை தொடங்குவதும் மரபார்ந்த அரசியல் கலாசாரமாக மாறி வருகிறது. இலங்கை தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட சிறைச்சாலை படுகொலைகளைப் போன்று தமக்குள்ளும் நமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் படுகொலைகளை தென் இலங்கை ஆட்சியாளர்கள் அரங்கேற்றி வருகின்றனர். கடந்த கால வரலாற்றிலிருந்து எத்தகைய அனுபவங்களைப் பெறாதாவர்களாகவே தென் இலங்கை ஆட்சியாளர்கள் காணப்படுகின்றனர். இக் கட்டுரையும் நீர்கொழும்புச் சிறைச்சாலையில் நிகழ்ந்த படுகொலைகளால் எழுப்பப்படும் கேள்விகளையும் அதற்கான புரிதலையும் வெளிப்படுத்த முயலுகிறது

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏழு சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி சிறைக்குள் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இருந்த முரண்பாடு இரண்டு கைதி குழுக்களுக்கிடையே மோதலாக வெடித்ததாக நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறை அதிகாரிகள் தலையிட்டபோது அவர்கள் மீது கற்கள் மற்றும் கம்பிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பின்னர் நிலைமை தீவிரமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் போதைபொருள் கடத்தல் தொடர்பிலான கும்பல்களின் மோதலின் விளைவுக்கு பின்னால் நீண்ட அரசியல் இலக்கு ஒன்று உண்டு என்றும் தெரியவருகிறது. ஏறக்குறைய இரு நாட்கள் நீடித்;த வன்முறையில் அநேக சிறைக் காவலர்கள் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று அவருடைய உடல் பாகங்கள் சிதைக்கப்பட்டு இருக்கிறது என்றும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அதற்கான சூழலை விளைவுகளையும் ஆழமாக புரிந்து கொள்வது அவசியமான

முதலாவது நீர்கொழும்பு சிறைச்சாலையின் படுகொலை அரங்கேற்றப்பட்ட விதம் என்பது இலங்கை தீவின் அரசியலில் புதியதொன்னல்ல. ஆட்சிக்காகவும் ஆட்சியை கைப்பற்றுவதற்காகவும் வரலாறு முழுவதும் நிகழ்த்தப்படுகின்ற அரசியல் கலாசாரமாகவே உள்ளது. தென்னிலங்கை அரசியல் தலைவர்களிடமும் ஆட்சியாளர்களிடம் இருக்கும் அடிப்படை பண்பாகவே உள்ளது. 70 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தமிழர் மீது இத்தகைய படுகொலைகளையும் வன்முறைகளையும் அரங்கேற்றிய தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தற்போது தமது ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் தடையாக உள்ள சக்திகளை அழித்து ஒழிப்பது அல்லது பலவீனமாக்குவதே பிரதான இலக்காக தெரிகிறது. நீர்கொழும்பு சிறைச்சாலை தாக்குதல் இன்னொரு விசாரணைக்கான களத்தை திறந்து விட்டிருக்கிறது. இதன் விளைவுகள் ஆட்சியை மட்டுமல்ல இலங்கைத் தீவின் வளர்ச்சியையும் இருப்பையும் சமூகங்களுக்கு இடையிலுள்ள ஐக்கியத்தையும் சிதைப்பதற்கான அணுகுமுறைகளாகவே அதிகம் பார்க்கப்படுகிறது.

இரண்டாவது ஜே.வி.பி. இன் ஆட்சியின் நிர்வாகக் கட்டமைப்பு பலவீனமானதாக உள்ளது என்பதை மீண்டும் ஒரு தடவை பதிவு செய்துள்ளனர். கடந்த கால ஆட்சியாளர்களை ஊழல் குற்றச்சாட்டுக்கான கைதுசெய்ய முனையும் போதே அதற்கான புறச்சூழலும் தயார்செய்திருக்க வேண்டும். ஆனால் ஆட்சியாளர்கள் அதனை முழுமையாக எதிர் கொள்ள திட்டமிடவில்லை. இலங்கையின் நிர்வாக இயந்திரம் உயர்வர்க்க நலன்களுக்குள்ளால் கட்டப்பட்டது. முதல்முதலாக உயர்வர்க்கத்தின் நலனுக்கு எதிரான சக்திகளிடம் அரசியல் அதிகாரம் உள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்காவை கைது செய்த போது என்ன நிகழ்ந்தது என்பதற்கான அனுபவத்தை ஜே.வி.பி.ஆட்சியாளர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. வன்முறைகளையும் படுகொலைகளையும்  அதிகாரத்திற்காக மேற்கொள்ளும் தரப்பாகவே தென் இலங்கை அரசியல் காணப்படுகிறது. எதிர்த்தரப்பினர் காலம் காலமாக இலங்கைத் தமிழர் மீது படுகொலைகளை அரங்கேற்றிய சூழலிலும் பல ஆயிரக்கணக்கான இலங்கை தமிழ் இளைஞர்கள் சிறைச்சாலையில் வேட்டையாடியதும் தமது அதிகார நலனுக்கானதே. ஆனால் தற்போது அத்தகைய எதிர்தரப்பினர் நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரங்களை முன்னிறுத்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிட முயலுகின்றனர். அவர்கள் முன்வைக்கும் நீதி, நியாயம் என்பன சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமானதாவே தெரிகிறது.

மூன்றாவது சிறைச்சாலையின் உள்கட்டமைப்பு வசதிகளை விட(1000 கைதிகள்) அங்கு அடைக்கப்பட்ட சிறை கைதிகளில் எண்ணிக்கை(2700 கைதிகள்) அதிகமானது என்ற விவாதம் முக்கியத்துவபடுத்தப்படுகிறது. அது இத்தகைய வன்முறைக்கு வழிவகுத்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இலங்கை தீவு ஏற்கனவே சிறைச்சாலைக்கு உரிய பண்பு எதனையும் அதிகம் கொண்டிருக்காத சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டுக்கள் உண்டு. அது பற்றிய விவாதங்கள் பாராளுமன்ற பதிவுகளில் காணப்படுகிறது. வடக்கு கிழக்கு 1979 ஆம் ஆண்டிலிருந்து திறந்த வெளிச் சிறைச்சாலைக்குரிய பண்பினை அதிகம் பிரதிபலிக்கிறது. இதனுடைய விளைவுகளே தென்னிலங்கையின் சிறைச்சாலைகளை நிரப்பியிருந்தது. சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு குற்றச்செயல்கள் மட்டுமல்ல அத்தகைய குற்றச்செயலை தூண்டுகின்ற அரசியல் நடவடிக்கைகளும் காரணமாகும். சிறைச்சாலைகளின் பாதுகாப்பற்ற வளமற்ற சூழலுக்குள்; அதிகார வர்க்கம் கைதிகளை கையாளுவதில் மட்டுமே கவனம் கொண்டிருந்தது. புதிய ஆட்சியாளர்களும் அதனையே தமது வடிவமாக பின்பற்றிவருகின்றனர். சிறைகள் நிரம்பி வழிவதற்கு பின்னால் இலங்கையின் அரசியல் பொருளாதார சமூகக் கொள்கையை அடிப்படை காரணமாகும் என்பதை ஆட்சியாளர்கள் புரிவதாக தெரியவில்லை. அத்தகைய கொள்கையின் பிரதிபலிப்பு தான் சிறைச்சாலைகள் நிரம்புவதற்கு இளைஞர்கள் இந்த சமூகத்தின் துயரமானவர்களாக அடையாளம் காண்பதற்கும் வழி வகுத்திருக்கின்றது. 1956 ஆம் ஆண்டு முன்னிறுத்தப்பட்ட தனிச் சிங்கள சட்டம் தந்த விளைவுகளில் ஒன்றாகவே இன்றைய இலங்கை தீவின் இருப்பின் தோல்விகளுக்கான அடிப்படை காரணமாக உள்ளது. இதில் ஆளும் மற்றும் எதிர் தரப்பு என்று மட்டும் புரிந்து கொள்ளாது ஒட்டுமொத்த இலங்கை தீவில் இருக்கும் ஆதிக்க சக்திகளும் இதற்கு பொறுப்பானவர்களாகவே காணப்படுகின்றனர். தமது அதிகார நலன்களை நிறைவேற்றுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் தூரநோக்கற்ற திட்டமிடல்களும் பிற தேசியங்கள் மீதான தாக்குதலும் படுகொலைகளும் இலங்கையின் அடையாளத்தை துயரகரமானதாக மாற்றியுள்ளது.

நான்காவது இலங்கைத் தமிழர் மீது பல்வேறுபட்ட தாக்குதல்களையும் இனப்படுகொலைகளையும் சிறையில் அரங்கேற்றிய தென்னிலங்கை ஆட்சியாளர்கள் ஒட்டுமொத்த இலங்கை தீவின் இருப்பையும் நிர்மூலமாக்கி இருந்தனர். இலங்கை தீவில் வாழும் ஒரு தரப்பான இலங்கைத் தமிழர்களின் அரசியல் பொருளாதார சமூக உரிமைக்கான போராட்டங்களை பயங்கரவாதமாக சித்தரித்து அழித்தொழித்ததன் விளைவுகள்; தென்னிலங்கை ஆட்சியாளர்களை எதிர்கொள்ள வைத்திருக்கின்றது. 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரத்தை வெலிக்கடை சிறைச்சாலையில் ஆரம்பித்தார்கள். அதில் குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை உட்பட கொல்லப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் நிகழ்ந்த கொடுமை மிகப்பயங்கரமானது. உயிருடன் குட்டிமணியின் கண்களை தோண்டி எடுத்து புத்த பகவானின் கண்களில் ஒட்டிப்பார்தததுடன் அதனை வீசி எறிந்து சிதைத்ததாகவும் ஆசிய மனித உரிமைகள் அமையம் அப்போது அறிக்கை வெளியிட்டிருந்தது. அன்றைய ஆட்சியாளர்கள் அதனை திட்டமிட்டு தலைமைதாங்கி நடாத்தினார்கள். அது மட்டுமல்ல 2000 ஆம் ஆண்டு பண்டாரவளை சிறைச்சாலையில் நிகழ்ந்த தாக்குதலில் 20 மேற்பட்ட கைதிகள் கொல்லப்பட்டனர. 2012 இல் வெலிக்கடைச் சிறையில் சிறப்பு அதிரடிப்படையினரது தாக்குதலில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். 2020 மகர சிறையில் கொவிட்-19 தொற்றின் போது சிறைக்கைதிகள் நடாத்திய போராட்டத்தை முடிபுக்கு கொண’;டுவர எடுத்த நடவடிக்கையின் போது 11 கைதிகள் கொல்லப்பட்டனர். இவ்வாறு ஆட்சியாளர்களின் நலன்களுக்காவும் ஆட்சியை குழப்பவதற்காகவும் எதிரணியினரின் நலன்களை முதன்மைப்படுத்துவதற்காகவும் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் கொல்லப்படுவது வழமையான அரசியலாக உள்ளது.

எனவே 1983 ஜூலையும் 2026 ஜீலையும் உணர்த்தும் செய்தி ஒன்றானதே. இலங்கை தீவு அரசியல் நாகரீகத்தையும்  மனிதாபிமான மேம்பாட்டையும் இன்னுமே எட்ட முடியாத ஆட்சி அதிகாரத்தைக் கொண்ட தீவாக விளங்குகிறது. இது இரு அரசியல் சக்திகளுக்கிடையிலான மோதல் மட்டும் கிடையாது. இது அரசியல் நாகரிகத்துவம் அரசியல் அதிகாரம் சார் அடையாளங்களுக்கிடையிலான வன்முறையாகும். இலங்கை தீவில் அரசியல் நாகரீகத்தின் மீதான மோதலாகவே தெரிகிறது. இது அரசியல் அதிகாரத்திற்காக சாதாரண மனிதனை அரசியல் மனிதன் வேட்டையாடும் இயல்பூக்கத்தின் பிரதிபலிப்பாக காணப்படுகின்றது. இதன் வரலாறு புரிந்து கொள்ளப்பட முடியாத மனித நாகரீகத்தின் அவமானங்களின் எல்லைகளை அதிகம் முதன்மைப்படுத்துகின்றது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி: தினக்குரல்)