இலங்கையின் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒரு தடவை ஏற்படும் என்ற அச்சத்தை தென்னிலங்கை ஊடகங்கள் மற்றும் ஆய்வாளர்கள் முன்வைத்து வருகின்றனர். இலங்கை தீவின் பொருளாதாரம் நெருக்கடி என்பது நிரந்தரமானதாகவே உள்ளது. அது மட்டுமல்ல எதிர்காலமும் அவ்வகையான நெருக்கடிக்குள்ளே காணப்பட போகிறது என்ற அச்சத்தை தற்போதைய ஆட்சியாளர்களும் உறுதிப்படுத்துகின்றனர். இடதுசாரி அரசாங்கமும் அதன் திட்டமிடல் பொருளாதாரமும் ஒன்றிணைந்து வளமான பொருளாதாரக் கொள்கையை இலங்கையில் உருவாக்கும் என்ற எதிர்பார்க்கை மக்களிடம் காணப்பட்டது. இது பலமான பொருளாதார கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் என்ற நம்பிக்கையை ஆட்சிக்கு வரும் போது மக்கள் கொண்டிருந்தனர். இலங்கைத் தீவில்; தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு பின்னால் உள்ள காரணங்களை தேட இக்கட்டுரை முயலுகின்றது.
முதலாவது சர்வதேச நாணய நிதியத்துடனான பதினெட்டாவது உடன்பாடு சாத்தியப்படுவதற்கான இறுதி வாய்ப்புக்களை பற்றிய உரையாடலை அரசாங்கம் நிகழ்த்தியுள்ளது. அதன் உடன்பாட்டின் பிரகாரம் 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை அரசாங்கம் சாத்தியப்படுத்தியுள்ளது. அதன் மூலம் அந்நிய செலாவணிக் கையிருப்பு மற்றும் வளர்ச்சி வருவாய் செயல் திறன் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்பனவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் குறிப்பிடுகின்றது. இது மேற்காசியாவில் நிகழும் போரினால் மட்டுமின்றி உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடியும் உள்நாட்டில் நிகழ்ந்த இயற்கை அனர்த்தங்களும் பொருளாதார ரீதியான உற்பத்தி அதிகரிப்புக்கான கொள்கை இன்மையும் இச்சூழலை ஏற்படுத்திருப்பதாக தெரிகின்றது. 2027 ஆம் ஆண்டுடன் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்கும் காலப்பகுதி நிறைவு பெறுகிறது. 2028 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு இலங்கைக்கு இருப்பதாகவும் ஆனால் தவிர்க்க முடியாமல் இலங்கை 19 கடன் திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் கோருமென்றும் தெரிகின்றது. 1965 ஆம் ஆண்டு முதல் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் 17 தடவை இணைந்து பயணித்துள்ளது. தற்போது 18 வது திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. தவிர்க்க முடியாமல் 19 திட்டத்துக்குள் இலங்கை நுழைய வேண்டிய தேவைப்பாடு எழுந்திருக்கின்றது. 2025 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி இலங்கையின் வெளிநாட்டு கடன் நிலை சந்தை மதிப்பில் 54.8 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது. 2022 ஆம் ஆண்டு இலங்கை தனது வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டு கடன் திருப்பி செலுத்துவதை நிறுத்தி உள்ளமை கவனிக்கத்தக்கது.
இரண்டாவது இலங்கை தீவின் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் வெள்ளமும், வறட்சியும் விவசாய உற்பத்தியை பாதித்ததோடு உணவு தேவைக்கான செலவீனத்தை அதிகரிக்கச் செய்ததென்ற நியாயப்பாட்டை அதிகம் முதன்மைப்படுத்த முயல்கின்றது. ஆனால் நடைமுறையில் ஜே.வி.பி. ஆட்சியாளர்கள் விவசாயம் சார்ந்தும் ஏனைய உற்பத்தி பொருளாதாரம் சார்ந்தும் கைத்தொழில் சார்ந்தும் எத்தகைய கொள்கையையும் வகுத்ததாக தெரியவில்லை. மாறாக சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும் நாடுகளிடமிருந்தும் கடன்களைப் பெற்று அவற்றை நுகர்வுக்கு பயன்படுத்தியது. அது மட்டுமன்றி அத்தகைய நிதியினை பெருமளவுக்கு அரசியல் நிகழ்வுகளுக்காக பயன்படுத்தியதே அன்றி நிலையான ஒரு பொருளாதார திட்டமிடலை உருவாக்க முனையவில்லை. ஜே.வி.பி. அரசாங்கம் திட்டமிடல் பொருளாதாரத்தை (Planning Economy) வகுத்துக் கொண்டு நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை பெருக்குகின்ற எந்த மார்க்கத்தையும் உருவாக்க தவறியிருந்தது. மாறாக சர்வதேச நாணயநிதியத்தின் சமூக செலவுகளையும் நலத்திட்டங்களையும் மாற்றி அமைத்ததோடு வரி உயர்வு மின்சாரகட்டண உயர்வு பெற்றோலிய விலை உயர்வு எரிவாயு போன்ற பல அத்தியாவசிய செலவீனத்தை அதிகரித்து அரசாங்க செலவினத்தை குறைக்கும் விதத்தில் செயல்பட்டது. இவ்வாறு மேற்கொண்ட அனைத்து உத்திகளும் சாதாரண குடிமக்கள் மீது கடுமையான அழுத்தங்களையும் வறுமையினையும் உயர்வடைய வழிவகுத்தது. அனேகமான சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் செயலிழக்கின்ற நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாவது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்கள் உண்மையான பொருளாதார மாற்றத்திற்கான வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு பதிலாக தற்காலிக நெருக்கடி மேலாண்மைக்கான கருவியாக மட்டுமே அரசாங்கம் கருதியது. இதனால் 2024 சீர்திருத்தங்களை மீண்டும் முன்னிலைப்படுத்தியது. இவற்றில் வருவாய் திரட்டல் மற்றும் வரி நிர்வாகத்தை வலுப்படுத்துதல், பொது நிதி மேலாண்மை, கடன் மேலாண்மை சீர்திருத்தங்களை முன்னெடுத்தல் என்பனவற்றை மேற்கொண்டது. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களிலிருந்து எழும் நிதி அபாயங்களைக் குறைப்பதற்காக செலவுக்கு ஏற்ற எரிபொருள் மற்றும் மின்சார விலை நிர்ணயத்தைப் பராமரித்தல், ஆட்சியை மேம்படுத்துதல் வங்கிகளை மறுசீரமைத்தல், வலுவான ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தங்களைச் செயல்படுத்த முயன்றது. ஆனால் மறுசீரமைப்புகள் வலுவான ஊழல் அதிகரிப்பையும் ஆட்சி நெருக்கடியையும்; எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு அரசாங்கத்தை தள்ளப்பட்டது. இதனால் அரசாங்கம் குறிப்பிடுவது போல் ஊழலுக்கு எதிரான நடைமுறையையோ ஆளுகைக்குள் ஊழல் ஒழிப்பையோ சாத்தியப்படுத்த முடியவில்லை. உண்மையான சீர்திருத்தமானது திறமையான ஓர் அரசை உருவாக்குவதாகும். விரயத்தையும் ஊழலையும் குறைத்து உற்பத்தித்திறனை அதிகரித்து சாதாரண மக்களுக்கு வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை விரிவுபடுத்திக் கொடுப்பதேயாகும்.
நான்காவது இலங்கையின் பொருளாதார ரீதியான நெருக்கடிக்கு பின்னால் வளர்ந்திருக்கும் வலுவான உள்நாட்டு காரணிகள் அதீதமான பொருளாதார பலவீனத்தை உத்தரவாதப்படுத்துகிறது. உற்பத்தித்துறையின் வளர்ச்சிக்கான திட்டமிடலின்மை மற்றும் அரசியல் ரீதியான தலையீடுகள் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. அரசியல் இலாபங்களுக்காக பொருளாதார ரீதியான கட்டமைப்புகளை புதிய அரசாங்கம் பலவீனப்படுத்த தொடங்கியிருக்கின்றது. சேவைதுறை மீது மேற்கொள்ளப்படும் அரசியல் ரீதியான உத்திகள் உள்நாட்டு பொருளாதாரத்தின் சிதைவுகளை அதிகப்படுத்தியுள்ளது. இளம் தலைமுறையினரின் வேலையின்மைக்கு பின்னால் சேவைதுறை சார்ந்திருக்கும் அரசியல் தலையீடுகளும் அரசியல் இலாபங்களை நோக்கிய உத்திகளும் அதன் அடிப்படை சூழலை இல்லாமல் செய்துள்ளது. ஊழலை ஒழித்தல் என்பது அரசியலுக்கான முதலீடாகவே காணப்படுகிறது. அத்தகைய அரசியல் முதலீடு ஊழலை மேலும் மேலும் அடையாளப்படுத்தவும் வளர்ச்சியடையவும் அதன் மூலமாக அரசியல் ஆதாயத்தை சாத்தியப்படுத்தவும் வழி வகுத்திருக்கின்றது. இது இலங்கையின் அரசியல் பொருளாதரத்தை பாரியளவில் நெருக்கடிக்குஉள்ளாக்கி இருக்கின்றது.
ஐந்தாவது ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி. அரசாங்கம் உள்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரி செய்வதற்கு பெற்றுக் கொண்ட உதவிகளையும் நன்கொடைகளையும் நிதியினையும் அரசியல் தேவைகளுக்காகவும் அதன் இலக்குகளை அடைவதற்காகவும் அதிகம் பிரயோகப்படுத்தி இருக்கின்றது. உள்நாட்டில் கட்சியின் ஆதரவாளர்களுக்கான நலசேவைகளுக்கும் பாரிய அளவில் முதன்மைப்படுத்தியமை பொருளாதார பின்னடைவை சாத்தியப்படுத்த வழிவகுத்துள்ளது. வெளிப்படையாக பார்க்கின்ற போது சாதாரணமான விடயமாக இருந்தாலும் உள்ளார்ந்த அர்த்தத்தில் அது ஒரு பாரிய பொருளாதார இழப்புகளை அதிகரித்து செல்கின்றது. இது மத்திய தர வர்க்கத்திடம் அறவிடப்படும் வரிச் செய்முறைக்கு நிகராக வர்த்தகர்கள் செல்வந்தர்கள் அடுக்கில் உயர் நிலையில் உள்ளவர்கள் பெருமளவுக்கு வரி செய்முறையில் இருந்து தப்பிக் கொள்பவர்களாகவே காணப்படுகின்றனர். இதனால் இலங்கையின் நுகர்வின் தன்மை நடுத்தர வர்க்கத்தினர் பெருமளவுக்கு தமது செலவீனங்களை சுருக்கிக் கொள்வதும் மட்டுப்படுத்திக் கொள்வதும் இழப்பீடுகளை சரி செய்வதற்கு முயற்சிப்பதும் பாரிய பொருளாதாரம் சிதைவின் உள்ளடக்கமாக விளங்குகிறது.
எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து தேசிய அரசாங்கம் பற்றிய உரையாடலை முன்னெடுத்த போதும் அவை சாதகமான விளைவை தரவில்லை. இதனால் பொருளாதார நெருக்கடிக்குரிய விளைவுகளை ஜே.வி.பி. அரசாங்கம் எதிர்கொள்ளுகின்ற துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. இதன் விளைவுகளை எதிர்வரும் காலங்களில் இலங்கை தீவு சந்திக்க இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. ஆனாலும் இலங்கை தீவில் ஏற்படும் நெருக்கடிகளை எதிர் கொள்கின்ற விதத்தில் இந்திய- சீன- அமெரிக்க தொடர்பிலான உத்தி ஒன்றை இலங்கை தீவு எப்போதும் கொண்டிருக்கின்றது. இத்தகைய பிழைப்புப் பொருளாதாரத்தைக் கைவிட்டு அதற்குப் பதிலாக உற்பத்திப் பொருளாதாரத்தை அதிகரித்து ஏற்றுமதியை பலப்படுத்தி புதுமைகளை உருவாக்கி உலகளாவிய நம்பிக்கையைப் பெற்று சொந்த வலிமை மூலம் இலங்கையின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் ஒரு முதிர்ச்சியான தேசியப் பொருளாதாரம் (National Economy) அவசியமாகும். ஆதனை விடுத்து மீண்டும் நாடுகளிடமும் சர்வதேச நிறுவனங்களிடமும் தங்கியிருத்தல் என்பது இலங்கையில் எஞ்சியுள்ள நிலப்பரப்பின் இறைமையையும் அதற்க்கான வாய்ப்புகளையும் படிப்படியாக உலக நாடுகளிடம் இழக்கும் நிலையை தோற்றுவிப்பதற்கான நிலையாகவே அமையும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
