அரசியல் கட்டுரைகள்

ஜே.வி.பி.இன் சட்டத்தின் ஆட்சியும் பௌத்த மதத் துறவிகளும்?

தென் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுகின்ற போது ஜே.வி.பி. கடந்தகால ஆட்சிமுறைகளிலிருந்து அதிக மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை சிங்கள் மக்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் வழங்கியிருந்தது. ஜே.வி.பி.இனர் பொருளாதார நெருக்கடி, அரசியல் கொந்தளிப்பு, சமூக ஒழுங்கு, சட்டத்தின் ஆட்சி, மற்றும் வெளிப்படைத்தன்மை போன்ற பல விடயங்களை தேர்தல் பிரச்சாரங்களிலும் உரையாடல்களிலும் அதிகம் முக்கியத்துவத்தை கொடுத்து ஆட்சியை கைப்பற்றியவர்கள். ஆரம்பகால பகுதி ஓரளவு சுமூகமாக காணப்பட்டபோதும் படிப்படியாக அனைத்து அம்சங்களும் பலவீனம் அடைய தொடங்கியது. மேற்குறிப்பிட்டவை அனைத்தும் ஒவ்வொன்றும் சிதையும் போது முன்னய ஆட்சியைவிட மோசமான நிலைக்குள் இலங்கைத் தீவை ஜே.வி.பி. அரசாங்கம் கொண்டு செல்கிறதா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. இயற்கை அனர்த்தம், திட்டமிடலற்ற பொருளாதாரம், பிராந்திய சக்திகளிடம் தங்கியிருத்தல், சர்வதேச மட்டத்தில் எழுந்த போர்கள் தென்னிலங்கையின் ஆட்சியை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது என கூறிவிட்டு கடந்து செல்ல ஜே.வி.பி. ஆட்சியாளர்கள் முனைகின்றனர். ஆனால் சட்டத்தின் ஆட்சிக்கும் ஈரான் மீதான போருக்கும் நேரடியாக என்ன தொடர்பு உள்ளது என்பதே பிரதான கேள்வியாகும். இக்கட்டுரையும் ஜே.வி.பி. இன் அதிகாரத்தின் கீழ் சட்டத்தின் ஆட்சி அடைந்திருக்கும் உண்மை தன்மையை தேட முயலுகிறது.

சட்டத்தின் ஆட்சி (Rule of Law) என்பது ஆட்சி அதிகாரத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். ஆட்சியாளர் உட்பட நாட்டின் எல்லைக்குட்பட்ட அனைத்து பிரஜைகளும் நிறுவனங்களும் அமைப்புகளும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் மதிக்கப்பட்டு தீர்ப்பளிப்பதற்கான சட்டங்களின் பொறுப்புடைமையை குறிப்பிடுவதாகும். இது சொத்து மற்றும் அரசியல் அதிகாரத்தை காரணமாக கொள்ளாது எந்தவொரு தனிநபரும் நிறுவனமும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர் என்பதை உறுதி செய்கிறது. இது சட்டத்தின் உயர்நிலையையும், சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பதையும் அதாவது தன்னிச்சையான நடவடிக்கைகள் அல்லது பாகுபாட்டைத் தடுக்கும் வகையில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்ட விதிமுறைகளும் தண்டனைகளும் உட்படுத்தப்படுவதைக் குறிப்பதாகும். இது நீதியை அடைவற்கான வாய்ப்புக்களை கொடுக்கும் பலமான கருத்தியலாகும். அதாவது குடிமக்கள் தங்களது தகராறுகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் அதிகப்படியான தாமதமின்றி நியாயமான விசாரணைகளை அடைவதற்கும் சுதந்திரமான பாரபட்சமற்ற நீதிமன்றங்களை அணுகவும் வாய்ப்புள்ள உரிமையைப் குறிப்பதாகவுள்ளது. இது சட்ட உறுதித்தன்மையை சுட்டுகின்ற விதத்தில் மக்கள் தங்கள் உரிமைகளையும் பொறுப்புகளையும் புரிந்துகொள்ளும் வகையில் சட்டங்கள் தெளிவாகவும் விளங்கிக் கொள்ளக் கூடியதாகவும் பொதுமக்கள் அணுகக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இவை அனைத்தும் அடிப்படையில்; ஜனநாயகத்தின் தூண்ணாகவே அளவிடப்படுகிறது. சட்டத்தின் ஆட்சி என்பதை மதம் சாராது இனம் சாராது மொழி மற்றும் பிரதேசம் சாராது எல்லாப் பிரஜைகளுக்கும் பாரபட்சமின்றி நிறைவேற்றுகின்ற அம்சமாகவே தத்துவம் உரைக்கின்றது. இலங்கைத் தீவில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முதல் சாதாரண பிரஜைகள் வரை சட்டம் எல்லோருக்கும் சமமானது என்பதை உணர்த்துவது சட்டத்தின் ஆட்சியாகும். இதனை ஆழமாக அவதானிப்பது அவசியமாகும்.

முதலாவது இலங்கை தீவின் பௌத்தமதத்தை சார்ந்த பிக்கு ஒருவர் மேற்கொண்ட குற்ற செயலை விசாரணைக் உட்படுத்துவதற்கோ பிக்குவை சிறையில் அடைப்பதற்கோ இலங்கை சட்டம் இடம் கொடுக்கவில்லை என்பதை ஜனாதிபதி முதல் இடதுசாரி ஆட்சியாளர்கள் எல்லோருமே வெளிப்படுத்துவதை காணமுடிகின்றது. குற்றம் நிகழாத ஆனால் பொய்யான குற்றம் சாட்டப்பட்ட பல சாதாரண பிரஜைகள் மீது இவ்வகை குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தால் சட்டம், பொலீஸ், நீதித்துறை, சட்டவாதிகள் சமூக மட்டத்திலான அமைப்புகள் ஊடகங்கள் உட்பட எல்லாத தரப்பும் எழுச்சி பெற்று சாதாரண மனிதனை அவனது சுய கௌரவத்தையும் அடையாளத்தையும் இல்லாமல் செய்து விடுகின்ற செய்முறை ஒன்று நிகழ்ந்து முடிந்திருக்கும். ஆனால் ஒரு மேல் நிலையிலுள்ள பௌத்த துறவி நிகழ்த்திய குற்றச்செயல் ஒன்றுக்கு எத்தகைய சட்டத்தின் கீழ் அவரை கைது செய்வதென்ற கேள்வி ஆட்சியாளர்கள் எதிர் கட்சியினர் பாரபட்சம் இன்றி எழுப்புகின்றனர். அவ்வாறானால் இலங்கையின் பௌத்தமதத்திற்கு எதிராக இலங்கை அரசியல் யாப்பில் அல்லது அரசியல் சட்டத்தில் எந்த வகையான கட்டுப்பாடும் விதிக்க முடியாது என்பதை உணர்த்துகிறது. பௌத்த மதம் தனியான சட்டத்தை தமக்குள் கொண்டிருக்கிறது. அல்லது அதற்கு இலங்கையின் சட்டம் ஒன்றும் கட்டுப்பாடு விதிக்க முடியாது என்பதாகும். அவ்வாறாயின் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கீழ் அல்லது அதிகாரத்தில் பௌத்த துறவிகளோ, பௌத்த பீடங்களோ இல்லை என்பதேயாகும். பௌத்த பீடங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளே இலங்கையின் ஆட்சி அதிகாரம் உள்ளது என்பதையும் உறுதிப்படுத்துகின்றது. இலங்கை அரசு பௌத்த துறவிகளின் அரசு. அத்தகைய அரசுக்குள் உட்பட்டதே இலங்கை அரசாங்கம்.

இரண்டாவது இலங்கைத் தீவின் அரசியல் வரலாறு முழுவதும் பௌத்த துறவிகளும் பௌத்த பீடங்களுமே ஆதிக்கம் பெற்றிருந்தன. தமிழ் மக்களுக்கு எதிராகவும் அவர்கள் மீதான போருக்கும் மூலகாரணமாக செயல்பட்டவர்கள் பௌத்த துறவிகள் என்பதை ஒவ்வொரு வன்முறைகளிலும் கண்டு கொள்ள முடிகிறது. இலங்கையின் சட்டங்கள் ஏனைய சாதாரண மக்களும் ஏனைய மத பிரிவுகளுமே உரியதாகத் தெரிகிறது. ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரம் பௌத்த மதத்திற்குட்பட்டதாகவே உள்ளது. 1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் வரைபுக்கும் பௌத்தமத பீடங்களும் அதன் துறவிகளும் இல்லை என்பதை தெளிவாக அடையாளப்படுத்துகின்றது. வரலாற்று காலம் முதல் இலங்கைத்தீவின் அரசியல் பௌத்த துறவிகளால் கட்டமைக்கப்பட்டது மட்டுமின்றி அவர்களின் அதிகாரத்துக்குள்ளேயே இலங்கையின் அரசியல் காணப்படுகிறது. உள்நாட்டுச் சட்டத்திற்குள் கட்டுப்படாத பௌத்த துறவிகள் சர்வதேச சட்டங்களும் விழுமியங்களுக்கும் கட்டுப்படக் கூடியவர்களல்ல என்பது தெளிவானதே. சட்டம் எதுவும் பௌத்த மதத்தை கட்டுப்படுத்த முடியாதது என்ற நிலையில் சட்டத்தின் ஆட்சி எவ்வாறு சாத்தியமாகும். சட்டத்தின் ஆட்சி காணாமல் போவது ஜனநாயகம் காணாமல் போவதற்கு சமமானது.

மூன்றாவது இத்தகைய நிலையிலேயே சட்டத்தின் ஆட்சி மீது இலங்கை தமிழர்கள் மலையகத் தமிழர்கள் இஸ்லாமிய தமிழர்கள் அதிர்ப்தியுடையவர்களாக காணப்படுகின்றனர். கடந்த வரலாறு முழுவதும் பௌத்தத்தின் பெயரால் இலங்கை தீவின் அரசியல் கட்டமைக்கப்பட்டது மட்டுமின்றி சட்டத்தின் ஆட்சி என்பதும் சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பதும் பௌத்த மத துறவிகளுக்கு உட்பட்டது அல்ல என்ற உணர்வை ஏனைய தேசிய இனங்களுக்கு அடையாளப்படுத்துகின்றது. இலங்கை தமிழர் மீது நடத்தப்பட்ட 75 ஆண்டுகால அடக்கு முறையின் வடிவங்கள் அனைத்தும் பின்னால் பௌத்த மதம் அதன் ஆதிக்கம் அது மேற்கொண்ட நடவடிக்கைகள் அடிப்படை காரணங்களாக அமைந்திருந்தன என்பதை இச்செயல் உணர்த்துகின்றது. இதனாலே சிறுபான்மை தேசிய இனங்கள் இலங்கை தீவின் அரசியலில் தனித்துவ அடையாளத்தை பேண முயல்வது மட்டுமின்றி தமது உரிமைகளையும் அதிகாரத்தையும் பெற்றுக்கொள்வதற்கான போராட்டங்களை நடத்த வேண்டிய நிர்ப்பந்த்திற்குள் தள்ளப்பட்டனர். இலங்கை தீவு பௌத்த மதத்தினருக்கு மட்டுமே உரியது என்ற விவாதத்தை பௌத்த துறவிகள் பல சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தியுள்ளனர். சட்டத்தின் ஆட்சி இலங்கைத் தீவில் சாத்தியமற்ற போவதற்கு பௌத்த துறவிகளின் நடத்தைகள் காரணமாகவே உள்ளன.

நான்காவது இலங்கைத் தீவில் சட்டத்தின் ஆட்சியை தமது கைகளில் வைத்துக் கொண்டு ஆட்சியாளர்கள் அதிகாரத்தை பிரயோகிக்க கூடிய அளவுக்கு எத்தகைய வாய்ப்பும்; இல்லை என்பதை பௌத்த துறவிகளின் நடவடிக்கை உணர்த்துகின்றது. பாராளுமன்ற அமைச்சரவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பிரதமர் என்று அனைத்து அதிகார மையங்களும் பௌத்ததுறவிகளின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பது சட்டத்தின் ஆட்சியை சாத்தியப்படுத்த முடியாமைக்கான காரணமாக உள்ளது. சட்டத்தின் ஆட்சி தோல்வி அடைவதற்கு பின்னால் பௌத்ததுறவிகளும் அவர்களது நடவடிக்கைகளும் காரணமாகவே உள்ளனர். எத்தகைய குற்றச் செயலை அவர்கள் மேற்கொண்டாலும் அவர்கள் மீது சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாத எனவும் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். தற்போது இருக்கும் சட்டத்தின் முன் பௌத்த துறவிகள் விதிவிலக்கு அளிக்கப்பட்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தப்படுகிறது. இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்டவர்களாக பௌத்த துறவிகளும் பௌத்த பீடங்களுமே உள்ளன. ஜனாதிபதி கிடையாது.

ஐந்தாவது பௌத்த துறவிகள் நிகழ்த்தும் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதீதமாகவே வளர்ந்து செல்கின்றது. அவ்வாறு வளர்ச்சி அடைந்து செல்வதற்கு பின்னால் இலங்கைத்தீவின் சட்ட ஒழுங்கு காணாமல் ஆக்கப்படுவது ஒருபுறம் அமைய மறுபக்கத்தில் ஆட்சியாளர்கள் பௌத்த துறவிகளைக் கண்டு அச்சமடைபவர்களாக விளங்குகின்றனர். மதம் என்பது ஆத்ம விடுதலையும் துறவறத்தையும் மோட்சத்தையும் அதிகம் வலியுறுத்துவது. பௌத்த மதத்தின் போதனைகள் பரிநிர்வாண நிலை பற்றியும் அதன் மூலம் ஞான நிலையை அடைவது பற்றியும் அதன் கோட்பாடுகளை பௌத்தம் வரையறுத்துள்ளது. கௌதம புத்தரின் போதனைகளில் உயர்வாக கருதப்படும் கணபங்கவாதம் தத்துவ அடையாளத்தை உறுதிப்படுத்துகின்றது. உலக இன்பங்களிலிருந்து ஆத்ம விடுதலை சாத்தியம் பற்றிய போதனைகளை பௌத்தம் கொண்டிருக்கின்றது. ஆனால்; இலங்கைத் தீவின் பௌத்த துறவிகள் மேற்கொள்ளும் குற்றச் செயல்கள் எந்த விதத்திலும் துறவறத்தையோ பரிநிர்வாண நிலையையோ ஆத்ம விடுதலையையோ வெளிப்படுத்தவில்லை. மாறாக அரசியலையும் அதிகாரத்தையும் குற்றச்செயல்களையும் தமதாக்கிய மதமாக இலங்கையில் பௌத்தத்தை கட்டமைத்துள்ளது. இதனால் பௌத்த மதத்தின் உண்மையான வடிவங்களை இலங்கைக்குள் கண்டு கொள்வது கடினமானதாகவே உள்ளது.

ஆறாவது பௌத்த துறவிகளால் மேற்கொள்ளப்படும் குற்ற செயலுக்கு எதிராக வடக்கு கிழக்கு தழுவிய தமிழ் மக்களின் பிரதேசங்களிலேயே சிவில் அமைப்புக்களின் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. தென் இலங்கையில் எந்த சிவில் அமைப்புகளும் பௌத்த துறவிகள் மீதான குற்றச் செயலை எதிர்த்து விழிப்புணர்வையோ போராட்டத்தையோ முன்னெடுக்கவில்லை. இடதுசாரிகள் வலதுசாரிகள் தராண்மைவாதிகள் என்ற பாரபட்சமின்றி எந்த தரப்பும் பெருமளவுக்கு எழுச்சி பெறக்கூடிய அளவுக்கு செயல்படவில்லை. இதன் உள்ளார்ந்த அர்த்தம் இலங்கைத்தீவின் அரசியலில் பௌத்த துறவிகளின் ஒழுக்கம் பற்றி பெரும்பான்மையான பௌத்த மக்கள் எத்தகைய கருத்தும் கொண்டிருக்கவில்லை என்பது மட்டுமின்றி குற்றச் செயல்களை அங்கீகரிக்கின்ற போது அவை குற்றச் செயல்களாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதே அதன் முடிவாக தெரிகின்றது. வடக்கு கிழக்கு தமிழர்கள் பௌத்த துறவிகள் மீதும் அவர்களது குற்றச் செயல்கள் மீதும் நிகழ்த்துகின்ற போராட்டங்கள் அனைத்தும் எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதே உண்மையானது.

எனவே தென்இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கொண்டுள்ள ஜே.வி.பி.ஓர் இடதுசாரி கட்சி அல்ல என்பதை மீளவும் நிறுவியுள்ளது. அது மட்டுமின்றி பௌத்த மதத்திற்கு உட்பட்டதே ஜே.வி.பி. என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது ஒட்டுமொத்தமான இலங்கை தீவின் வரலாற்றின் வளர்ச்சியாகும். இதனாலேயே சிறுபான்மை தேசிய இனங்கள் தென்னிலங்கையின் பாரபட்சமான அதிகார அணுகு முறைக்கு எதிராக போராட்டங்களையும் எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்துகின்ற துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை தீவு குற்றச்செயலில் தேசமாக மாறி வருகின்றது. பௌத்த துறவிகளின் போதைப் பொருள் கடத்தல்; மற்றும் குற்றச் செயல்கள் என்பன சட்டத்தின் ஆட்சியை முற்றாகவே இல்லாமல் செய்துள்ளது. இலங்கைத் தீவில் இடதுசாரிகளின் போலித்தன்மையை மீண்டும் ஒரு தடவை ஜே.வி.பி.இன் ஆட்சியில் உறுதிப்படுத்தியுள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)