பூகோள அரசியலில் போட்டி வல்லரசுகளின் இரண்டும் தலைவர்களும் சந்திக்கும் வரலாற்று நிகழ்வு சீனாவில் பெய்ஜிங் நகரில் இடம்பெற்றது. அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது தடவை ஆட்சிக்கு வந்த பிற்பாடு சீனாவுக்கு தனது இரண்டு நாள் அரசமுறைப் பயணத்தை டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டிருந்தார். எலான் மாஸ்க், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறைச் செயலாளர் பீட்ஹெட்ஸெத் மற்றும் ட்ரம்ப்ன் மகன் பரோன் வில்லியம் (Barron William Trump) உட்பட்ட பெரு குழுவினருடன் சீன சென்றுள்ளார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு தாக்குதல் நெருக்கடியான சூழலுக்குள் வர்த்தக ரீதியில் சீனாவுக்கு எதிரான பாரிய வரிகளை மேற்கொண்ட பிற்பாடு உலகளாவிய எண்ணை வார்த்ததத்தில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி சூழலில் அமெரிக்க ஜனாதிபதியின் சீன விஜயம் அமைந்திருக்கின்றது. அமெரிக்க ஜனாதிபதியின் சீன விஜயத்தின் முக்கியமான உரையாடல்களும் அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களையும் தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முதலாவது அமெரிக்க ஜனாதிபதியின் நெருக்கடி மிக்க காலப் பகுதியில் சீனாவுக்கு மேற்கொண்ட விஜயம் அதிக இராஜதந்திரப் பெறுமானத்தை கொண்டுள்ளதாகவே தெரிகிறது. சீனாவில் ட்ரம்ப்க்கான வரவேற்பு முக்கியத்துவம் அதிகமானதாக காணப்பட்ட சூழல் ஒன்றை அவதானிக்க முடிகிறது. சீனாவின் சிவப்புக் கம்பளத்தில் வரவேற்கப்பட்ட ட்ரம்ப் அதிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாகவே நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. சீனர்களுடைய மரபானது வரலாற்று நிகழ்வுகளுக்கூடாக அமெரிக்காவுக்கு காட்சிப்படுத்த வேண்டிய சீனாவின் உள்ளடக்கங்களை முன்னிலைப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளதாகவே தெரிகிறது. இரு தலைவர்களது உரைகளும் தமது தேசங்களின் பொருளாதார வர்த்தக முக்கியத்துவத்தை அடையாளப்படுத்தி இருந்ததோடு சீனா வரலாற்றை அடையாளப்படுத்த சீன ஜனாதிபதி ஜின்பிங் அதிக முனைப்புக் காட்டியிருந்தார். இராணுவ அணிவகுப்பில் முன்வைக்கப்பட்ட அம்சங்கள் அனைத்தும் இராஜதந்திர ரீதியில் ஓரம்சமாக பார்க்கப்படுகின்றது.
இரண்டாவது இருநாட்டு தலைவர்கள் மேற்கொண்ட வர்த்தகரீதியான உரையாடலும் புரிதலும் உடன்பாட்டுக்கான முனைப்புகளும் கடந்த காலங்களில் அமெரிக்கா சீனா மீது விதித்த வரி முறைமைகளை அதிகம் கேள்விக்குப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன் வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட விடயங்கள் குறித்து விவாதிப்பதற்காக டிரம்ப் உடன் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட அமெரிக்க வணிகத் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் பெய்ஜிங்கிற்கு வந்தடைந்ததும் வர்த்தக குழுவினர் அனைவரையும் அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க வணிக சமூகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரதிநிதிகள் என்பதையும், அனைவரும் சீனாவை மதித்து போற்றுகிறார்கள் என்றும்; அந்தக் குழுவை அறிமுகம் செய்துவைத்தார். உலக வரலாற்றில் வர்த்தகமே நாடுகளின் உறவையும், அதனால் விளைந்த சர்வதேச உறவையும் கட்டமைக்கிறது என்பதை நேரடியாக கண்டுகொள்ள முடிகிறது.
மூன்றாவது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு மூடிய அறையில் நிகழ்ந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாக ஜின்பிங் ட்ரம்பிடம் தெரிவித்ததாக தெரியவருகிறது. ஆனால், தைவான் குறித்த கருத்து வேறுபாடு உறவுகளை ஆபத்தான பாதைக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும் மோதலுக்குக் கூட வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்ததாக பேச்சுவார்த்தைகள் குறித்த பெய்ஜிங்கின் அறிவிப்பு தெரிவிக்கிறது. அமெரிக்காவின் பக்கம்; தைவான் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்தாலும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் தைவான் விவகாரம் விவாதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். தைவான் விவகாரம் குறித்த அமெரிக்காவின் கொள்கை இன்று நாம் இங்கு நடத்திய சந்திப்பின்படியும் இன்றளவும் மாற்றமின்றி உள்ளது. இந்த விவகாரம் சீனாவால் எழுப்பப்பட்டது. சீனர்கள் எப்போதும் தங்கள் தரப்பில் இதை எழுப்புவார்கள், அமெரிக்கா எப்போதும் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திவிட்டு மற்ற தலைப்புகளுக்குச் சென்றுவிடுவது வழமையானது. அவர்கள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், நாங்கள் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பது அவர்களுக்கும் தெரியும் என்று நான் நினைக்கிறேன், என்று ரூபியோ அந்தப் பேட்டியில் கூறினார். தைவானும் சீனாவும் மீண்டும் ஒன்றிணைவது என்பது ஏதோ ஒரு கட்டத்தில் நடந்தேயாக வேண்டியதென்று ஜின்பிங் தெளிவுபடுத்தியுள்ளார், என்றும் ரூபியோ கூறினார்.
நான்காவது இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு இரு நாடுகளின் அரசியல் பொருளாதாரம் இராணுவ விடயங்களை கடந்து உலகளாவிய ரீதியான நெருக்கடிகளை அதிகம் பிரதிபலித்ததாகவும் சீனா தனது முதல் நிலை வல்லரசு எண்ணத்தை அதிகம் பிரதிபலிக்கும் நகர்வுகளை மேற்கொண்டு இருந்ததையும் கண்டு கொள்ள முடிந்தது. ஈரான் போர் என்பது சீனாவுடனான போராகவே அவதானிக்கப்படுகிறது. ரஷ்சியா சீனா வடகொரியா போன்ற தேசங்களன் ஒருமைப்பாட்டுக்குள்ளால் ஈரானின் போரை அளவீடு செய்யும் மேற்குலகம் அதன் விளைவுகள் சீனாவின் பலமான பொருளாதாரக் கட்டமைப்பினால் மட்டுமின்றி அதன் இராணுவ பலத்தினால் வடிவமைக்கப்படுகிறது என்பதை அங்கீகரிப்பதாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். மாறாக, ஈரான் போரின் காரணமாக மூடப்பட்டிருந்த ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான இரு தலைவர்களின் பொதுவான விருப்பம் மற்றும் மேற்காசியா நாடுகளுடனான விநியோகங்கள் மீதான சீனாவின் சார்புநிலையைக் குறைப்பதற்காகவும் அமெரிக்க எண்ணெயை வாங்குவதில் ஜின்பிங்கின் வெளிப்படையான ஆர்வம் ஆகியவற்றில் அமெரிக்காவின் அறிக்கை கவனம் செலுத்தியிருந்தது. ஆடம்பரமான அரச விருந்தில், (Great Hall) சீனா-அமெரிக்க உறவுதான் உலகில் மிக முக்கியமானது என்று ஜின்பிங் பார்வையாளர்களிடம் கூறினார். நாம் அதைச் செயல்பட வைக்க வேண்டும். ஒருபோதும் சீர்குலைக்கக் கூடாது, என்று சீன ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐந்தாவது சீனாவின் முதல்தர வல்லரசு என்பதற்கான அங்கீகாரமாக அமெரிக்கா ஜனாதிபதியின் விஜயம் பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் தலைவர்களின் சீன விஜயம் ஈரான் மீதான போரின் ஆரம்பத்தில் நிகழ்த்து. தற்போது அமெரிக்கர்கள் சீனாவுக்கு மேற்கொண்டிருக்கும் பயணமானது ஈரான் மீதான போரில் பெரும் நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கின்ற சூழலில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி சீனாவிடம் இராஜதந்திர ரீதியில் சரணடைவது போன்ற ஒரு அரசியல் நகர்வென்றாக புரிந்து கொள்ள முடிகின்றது. இது ஏறக்குறைய சீனாவிடம் உலக வல்லரசின் பலத்தை ஒப்படைப்பது போன்று அல்லது கை மாற்றுவது போன்றதென்றாக தெரிகிறது. அல்லது சீனாவுடன் சமரசம் செய்து கொண்டு ஒரு பனிப்போரை நகர்த்தும் திட்டமிடுவதாகக் கூட அமைய வாய்ப்புள்ளது.
ஆறாhவது சீனா ஒரு கம்யூனிச சித்தாந்தத்திற்குள் இரும்புத்திரை அரசியலை பின்பற்றி இருந்த போதும் உலகளாவிய வர்த்தகத்திலும் பொருளாதாரத்தில் சீனாவை மையப்படுத்தி ஒரு எழுச்சிகரமான பொருளாதார இருப்பை கட்டி எழுப்பி இருக்கின்றது. சீனாவின் உலகம் நோக்கிய பார்வை என்பதும் முதலாளித்து பொருளாதார செய்முறை மரபுகளை தகர்த்துக் கொண்ட சோஸலிச சந்தை பொருளாகாரத்தில் வடிவத்திற்கு ஊடாக எழுச்சி பெற்றிருக்கின்றது. 1972 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரமாக இருந்த ஹன்றிகீசிங்கர் இரு நாட்டுக்குமான உறவில் முக்கிய பங்கு வகித்தார். சீனாவுக்கும் சோவியத் யூனியனுக்குமான உறவை அல்லது கூட்டின் வலுவை அல்லது சோஸலிசத்தின் வளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவர முன்வைத்த உத்தியின் விளைவு சீனாவின் வளர்ச்சியாகும். முதலாளித்துவம் அல்லது தராண்மைவாதத்துடனான சீனாவின் வெற்றிகரமான உறவு சீனாவின் அரசியல் பொருளாதார வளர்ச்சியை சாத்தியமாக்கியது.
எனவே ஜனாதிபதி டிரம்ப்ன் சீனாவுக்கு மேற்கொண்ட பயணம் 145 சதவீதம் வரி உச்சத்தை எட்டிய நிலையில், நவீன தொழில்நுட்பத்திற்கு அத்தியாவசியமான அரிய கனிமங்களின் வர்த்தகம், தைவானுக்கான அமெரிக்க ஆயுத விற்பனை, ஹார்மூஸ் நீரிணை மற்றும் ஈரானுடனான போர் உள்ளிட்ட முக்கிய முட்டுக்கட்டைகளைத் தீர்க்க இரு தரப்பினரும் முயன்றதைக் காட்டுகிறது. அதே நேரம் சீனா உலகளாவிய ஆதிக்கத்தில் தனது முதல் நிலையை உறுதிப்படுத்தவும் அமெரிக்க அதனை சமரசம் செய்யவும் முனைகிறதாகத் தெரிகிறது. ஆனாலும் அமெரிக்காவின் வர்த்தக இராஜதந்திரத்தைக் காட்டிலும் இராணுவ முனைப்பில் கவனம் கொள்வதில் குறியாகவே செயல்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமுண்டு.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
