August 1, 2026
அரசியல் கட்டுரைகள்

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பும் ஜே.வி.பி. அரசாங்கத்தின் நீதித்துறைச் சுதந்திரமும்?

இலங்கை அரசியலமைப்பின் 107 ஆவது உறுப்புரையின் பிரகாரம் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் அதிக விவாதங்களை உருவாக்கி உள்ளது. இலங்கையின் நீதித்துறை பற்றி இப்பகுதி பல தடவை குறிப்புக்களை வெளியிட்டுள்ளது. அத்தகைய பலவீனங்களை கொண்டுள்ள முறைமை மாற்றம் என்ற பிரச்சாரத்தை முன்வைத்த ஜே.வி.பி. இன் ஆட்சியிலும் நீதித்துறை இனங்களுக்கிடையில் பாரபட்சங்களை மட்டுமின்றி பெரும்பான்மை இனத்துக்குள்ளும் ஆதிகார நலன் மற்றும் உயர்வர்க்க நலன்களுக்கு உட்பட்டும் இயங்குவதற்கு முனைகிறது என்ற குற்றச்சாட்டு அதிகமாக முன்வைக்கப்படுகிறது. இலங்கையின் நிர்வாக சேவையில் ஒன்றாக விளங்கும் நீதித்துறை இதர பணி குழுக்களைப் போன்று 1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பிற்குள் வடிவமைக்கப்பட்டது. நீதிபதிகளின் வயதெல்லையை நீடிப்பது என்பது பொது நிர்வாக கட்டமைப்புக்குரிய வரைவாகவே உள்ளது. இக்கட்டுரையும் நீதிபதிகளின் வயதெல்லையை நீடிப்பது தொடர்பில் எழுந்திருக்கும் சர்ச்சைகளின் பின்னால் இருக்கும் நியாயப்பாட்டை உரையாடுவதாக உள்ளது.
கிரேக்க அரசியல் சிந்தனை முதல் இன்று வரை நீதி என்பது நியாயத்தின் பால்பட்டது என்றும் அநீதியின் ஒரு வடிவம் என்றும் உணரப்படுகிறது. அநீதி இழைக்க முடியாத சூழலில் நீதி உரையாடப்படும் என்பதும் கிரேக்க மரபின் புரிதலாகும். அது என்றுமே மாறாதது மட்டுமின்றி உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் பின்பற்றப்படும் வடிவமாகவும் விளங்குகிறது. நீதித்துறையின் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் வைத்திருக்கும் நியாயம் பல்வேறுபட்டது. ஒன்று, நிலுவையில் உள்ள வழக்குகளை அனுபவம் வாய்ந்த நீதிபதிகளினால் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்வது. இரண்டு, 1978 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நீதிபதிகளின் வயதெல்லை மாற்றத்துக்கு உள்ளாக்கப்படவில்லை என்பது. மூன்று, நீதிபதிகளின் எண்ணிக்கை போதாது என்பது. அதாவது வளர்ந்த உலக நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு 47-60 நீதிபதிகளாக உள்ளபோது இலங்கையில் 10 இலட்சம் மக்களுக்கு 20 நீதிபதிகளுள்ளனர் என்பதாகவுள்ளது. இதனை விரிவாகப் புரிந்து கொள்வது அவசியமானது.

முதலாவது எதிர்க்கட்சிகளின் விவாதங்கள் அதீதமாக ஆளும் தரப்பினால் கொண்டு வரப்படும் விடயங்களை எதிர்ப்பதாக காணப்படுகிறது. நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தப்பட வேண்டும் என்ற அளவுக்கு எதிர்க்கட்சிகள் தமது ஆட்சி காலத்தை மறந்து செயல்பட முனைகின்றனர். அது மட்டுமன்றி அரசியலமைப்பு வரைவின்படி பொது வாக்கெடுப்பானது அரசியலமைப்பின் 1-11மற்றும் 30(2),62(2) ஆகிய பிரிவுகளுக்கே பாராளுமன்றத்தில் 3/2 பெரும்பான்மையுடன் பொதுவாக்கெடுப்பு தேவையானதாக உள்ளது. ஏனைய பிரிவுகளில் திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். தேசிய பிரச்சனைகள் தேசிய நலன் சார்ந்த அம்சங்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் ஆட்சியின் நிடிப்பு பற்றிய அம்சங்கள் பொதுவாகெடுப்புக்கு விடப்படுதல் இலங்கையின் அரசியலமைப்பின் காணப்படுகிறது. ஆளும் தரப்பு முன் வைக்கும் நீதிபதிகளின் சேவை காலத்தை இரண்டு வருடங்கள் நீடிப்பது என்பது அரசியலமைப்பின் திருத்தத்துக்கு உட்பட்டது. அது முறைப்படி சாத்தியமாகின்ற போது அதன் விளைவுகள் எதிர்க்கட்சிகளின் ஊழல் சார்ந்த அம்சங்களும் அது தொடர்பில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய முனைப்புகள் நீடிக்குமென்று எதிர்கட்சியினர் அச்சமடைவதாகவும் உணரப்;படுகிறது.

இரண்டாவது நீதித்துறை சார்ந்த தரப்பின தெளிவாகவும் விவரமாகவும் அது தொடர்பில் விவாதங்களை உருவாக்கியுள்ளனர். குறிப்பாக 29.07.2026 இல் இலங்கைக்கான சட்டத்தரணிகள் சங்கம் நீதித்துறை தொடர்பில் கால நீடிப்பு செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சியை முழுமையாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது. 3000 மேற்பட்ட சட்டத்தரணிகள் கொழும்பில் ஒன்று கூடி அரசாங்கத்தின் நகர்வுகளை நிராகரித்ததுடன் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போதுவதாகவும் தெரிவித்துள்ளனர். இலங்கை சட்டத்தரணிகள் சங்க வளாகத்தில் நடைபெற்ற விசேட பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய அரசாங்கத்தின் நடவடிக்கை நீதித்துறையின் சுயாதீனத்திற்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்தார்.

மூன்றாவது இலங்கையின் நீதித்துறை பிரதானமாக மூன்று தரப்பினரின் நலன்களை நிறைவு செய்வதில் எப்போதும் கவனம் கொண்டது. ஒன்று, இலங்கையின் ஆளும் தரப்பு தமது நலனுக்கு ஏற்ற வகையில் நீதித்துறையின் சுயாதிபத்தியத்தை பாதிக்கும் விதத்தில் செயல்படும் திறனை கொண்டது. நீதிபதிகள் நியமனம் பதவி, பதவி நீக்கம் போன்றவை நிறைவேற்று துறையின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகவே காணப்படுகிறது. நீதிசேவை ஆணைக்குழுவின் செல்வாக்கு திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் காணப்பட்டாலும் நடைமுறையில் நிறைவேற்றதுறை அதில் பிரதான அங்கமாக விளங்குவது. இது நீதித்துறையின் சுயாதிபத்தியம் அல்லது சுதந்திரமான நீதித்துறை என்ற விவாதத்தை இலங்கை காணமுடியாது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. இரண்டு, பெரும்பான்மை மக்களின் நலன்களை மட்டுமே நீதித்துறை நிறைவு செய்யக் கூடியது. அது ஏறக்குறைய ஒரு இனவாத உணர்வோடு கட்டியெழுப்பப்பட்டது. கல்லோயாப் படுகொலை முதல் செம்மணிவரை உறுதிப்படுத்தப்பட்டது. மூன்று, உயர் வர்க்கத்தின் நலன்களில் கவனம் கொண்டது. குறிப்பாக உயர் வர்க்கமான பௌத்ததுறவிகளின் இருப்புக்கான நலன்களும் கொய்கம,(Govigama) கறவா (Karava) சமூகத்தினதும் நலன்களும் உத்தரவாதப்படுத்துகின்ற விதத்தில் அரசியலமைப்பு நீதித்துறையை கட்டியெழுப்பியுள்ளது. இதற்குள் இயங்குவது தான் இலங்கையின் நீதித்துறை. இது அதிகம் நலன் பற்றிய விவாதங்களை அடையாளப்படுத்துகிற போது மேற்குறித்த மூன்று பிரிவினரதும் நலன்களில் கவனம் கொள்ளும். அதற்கு அடுத்த நிலையிலே சாதாரண மக்கள் பிரதேசங்கள் கவனத்திற்கு கொள்ளப்படும். அது கூட ஆதிக்கம் பெற்றவர்கள் அல்லது அதிகாரம் உடையவர்களை பாதுகாக்கப்படுகின்ற செய்முறையாகவே நிலவுகிறது.

நான்காவது ஜே.வி.பி.யை பொறுத்தவரையில் தமது ஆட்சிக் காலத்தை மூன்று துறையின் உத்தரவாதப்படுத்தப்பட்ட பாதுகாப்பை பேண வேண்டும் என்பதில் கவனம் கொண்டுள்ளது. நிறைவேற்றுத்துறையான ஜனாதிபதி மற்றும் சட்டத்துறையான பாராளுமன்றம் முழுமையான ஜே.வி.பி.இன் கட்டுப்பாட்டில் உள்ளது. நீதித்துறையை தற்போது இருக்கும் பணிக்குழு சார்ந்த இயந்திரம் ஏற்கனவே ஆட்சியாளர்களால் கட்டியெழுப்பப்பட்டது. கறவா சமூகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நீதித்துறையானது அத்தகைய அரசியல் கட்சிகளின் உயர்வர்க்க நலனை கொண்ட ஒன்றாக உள்ளது. அதன் இரண்டாம் மூன்றாம் நிலையில் இருப்பவர்களும் பிற தேசியங்களைச் சார்ந்திருப்பவர்களும் ஜே.வி.பி. ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தாத வகையிலும் ஊழல் குற்றச்சாட்டுகளையும் ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளையும் ஜே.வி.பி.நலன் சார்ந்து ஏற்படுத்திக் கொள்கின்ற விதத்திலும் பணிக்குழுவை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பணிக்குழுவின் கட்டமைப்பை மாற்றுவதாக இருக்க வேண்டுமே அன்றி நீதித்துறைக்குள் மட்டும் சீர்திருத்தம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீதித்துறையில் காணப்படும் பலவீனங்களை முற்றாகவே அகற்றிவிட்டு தகமை அல்லது திறன்(Merit) அடிப்படையில் நீதித்துறை அல்லது பணி குழு உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படுவது இலங்கையின் முறைமை மாற்றத்திற்கான அடிப்படையாகும். அத்தகைய எந்த விதியையும் கருத்தில் கொள்ளாது அரசியல் அமைப்பையும் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட பணிக்குழுவையும் சமரசம் செய்வதன் ஊடாக அடுத்து வரும் இண்டு ஆண்டுகால ஆட்சியை ஆரோக்கியமாக நிகழ்த்துவதில் ஜே.வி.பி. கவனம் கொள்கிறது. அதன் மாற்றத்திற்கான இலக்கும் கொள்கையும் ஒட்டுமொத்தமான இலங்கைக்கான மாற்றமாக தென்படவில்லை. இதன் விளைவு அடுத்து வரும் ஆட்சிக்காலத்தை வேறு ஒரு தரப்பு கைப்பற்றுமாக இருந்தால் இந்த சூழலால் கடந்த கால சூழல் அப்படியே மீளவும் தக்க வைக்கப்படும். ஜே.வி.பி.உம் கடந்த கால ஆட்சியைப் போன்ற ஒரு கட்டமைப்பையே வடிவமைத்துவருகிறது.

எனவே இலங்கையின் நீதித்துறை பற்றிய உரையாடல்கள் விவாதங்கள் அதன் முழுமையாக மாற்றப்படுகிற போது மட்டுமே சாத்தியமான செய்முறைகளை உத்தரவாதப்படுத்த உதவும். ஜே.வி.பி. இனது விருப்புக்கும் நலனுக்கும் நீதித்துறையை கையாளுவது என்பது நீதித்துறைக்கான சுதந்திரத்தை மீறுவதாகவே தெரிகிறது. இது ஏற்கனவே இருந்த அரசாங்கங்களிலிருந்து ஜே.வி.பி. வேறுபட்டது இல்லை என்பதையும் முறைமை மாற்றம் என்பது தேர்தல் பிரச்சாரம் மட்டுமே என்பதையும் எதிர்காலத்தில் இந்த முறைமை தொடர போகிறது என்பதையும் நிறுவியுள்ளது. இதனையே நீதித்துறையில் ஜே.வி.பி. அரசாங்கம் விட்டுச்செல்லும் அம்சமாக விளங்குகிறது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினக்குரல்)