எதிர்பார்க்கப்பட்டது போல் ஈரான் அமெரிக்கா போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாகவே தெரிகிறது. ஏறக்குறைய மீளவும் போர் தொடங்கிய நிலையில் மேற்காசிய பிராந்தியம் அதிக கொதி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இது பொருளாதார ரீதியில் உலகளாவிய சூழலை பாதிக்கும் விதத்தில் காணப்படுகிறது. ஈரான் அமெரிக்கப் போர் நகர்வுகள் உலக பொருளாதார நெருக்கடியை தீவிரம் பெறச் செய்துள்ளது. அதனை அனைத்து உலக நாடுகளும் எதிர்கொள்ளுகின்ற நிலை ஒன்றை தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அமெரிக்காவின் வல்லரசு ஆதிக்கத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் போராகவே இது மாறி உள்ளது. சீனாவும் ஈரானுடன் இணைந்து பெரும் சிதைவை அமெரிக்காவுக்கு ஏற்படுத்த முனைப்பு காட்டி வருகின்றது. அமெரிக்க புலனாய்வுத் துறையின் தகவலின் அடிப்படையில் ஈரான்-சீன இராணுவ உறவு பலமானதாகவே உள்ளது. இக் கட்டுரையும் போர் நிறுத்த உடன்பாடு முறிகின்ற நிலையில் அமெரிக்காவின் போர் நகர்வுகள் ஈரானின் முன்னாள் உயர் தலைவர் மரணச்சடங்கின் விளைவுகள் பற்றிய தேடலாக உள்ளது.
ஈரானின் உயர் தலைவர் அலி ஹொமேனியின் (Ayatollah Ali Khamenei) மரணச்சடங்கு பாரிய மக்கள் புரட்சியை ஈரானில் ஏற்படுத்தியிருந்தது. மக்களின் அணி திரள்வு ஈரானின் ஆட்சி மீதான நம்பிக்கையும் அமெரிக்கா மீதான எதிர்ப்பு உணர்வுகளையும் வெளிப்படுத்தியுள்ளது. இது உலக வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை தந்துள்ளது. ஹொமேனியின் உடல் தெஹ்ரானிலுள்ள கிராண்ட் முசல்லா பள்ளிவாசலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் மத்திய தெஹ்ரானின் இமாம் ஹொசைன் சதுக்கத்திலிருந்து ஆசாதி சதுக்கம் வரை சுமார் பத்து கிலோமீட்டர் நீளமுடைய இறுதி ஊர்வலத்தில் மக்கள் திரண்டிருந்தனர். பல இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளின் இருபுறமும் திரண்டு அஞ்சலி செலுத்தினர். மக்களின் உணர்வுகளாக ஈரானிய தேசியக் கொடிகளை தாங்கியிருந்ததுடன் சிவப்பு நிற எதிர்ப்புக் கொடிகளையும் ஏந்தியிருந்தனர். நாம் எழுச்சி பெற வேண்டும் என்றும் அமெரிக்கா விரட்டப்பட வெண்டும் என்ற முழக்கங்கள் மற்றும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் பதாகைகள் நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் கொண்டிருந்தனர். இது உலக நாடுகள் மற்றும் மேற்காசிய நாடுகள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதோடு அமெரிக்க இஸ்ரேலிய தாக்குதல் உத்திகள் ஆட்சி மாற்றத்திற்கான இலக்கும் போலித்தனமான விம்பம் என்பதை அடையாளப்படுத்தி இருந்தது. இதனை ஆழமாக புரிந்து கொள்ளுதல் அவசியமானது
முதலாவது அலி ஹொமேனியின் மரணச் சடங்கு உலக தலைவர்களின் வருகையும் அமெரிக்கா கூட்டுக்கு ஏற்பட்ட தோல்வியாகவே தெரிகின்றது. ஈரானிய மக்கள் தமது உயர் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவது ஒருபுறம் அமைய மறுபக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளின் பிரதிநிதிகள் மரணச் சடங்கில் கலந்து கொண்டமை அமெரிக்கா இஸ்ரேலிய கூட்டின் பலவீனத்தை அடையாளப்படுத்தி இருந்தது. இதனை எதிர்கொள்ள முடியாமலே மீளவும் ஈரான் மீது அமெரிக்கா போரை தொடங்கியது. ஹார்மூஸ்ல் பெற்றோலிய பொருட்களுடன் பயணம் செய்து கொண்டிருந்த எண்ணைக் கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலின் விளைவாகவே அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி தனது பதிவில்; வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் நடைமுறையில் அமெரிக்க ஜனாதிபதியின் முன்பின் முரணான உரையாடலும் தோல்வியை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்க இராணுவ தலைமையும் போரில் வெற்றி பெறுவதற்கு முனைப்பு காட்டி வருகின்றது. இதுவே மீளப் போர் தொடங்குவதற்கான பிரதான காரணமாக உள்ளது.
இரண்டாவது போரின் இலக்குகள் இராணுவ முகாங்களைக் கடந்து பொதுமக்களை இலக்க வைத்து பாரிய அளவில் அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடத்தியதாக தெரிய வருகின்றது. அது சார்ந்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்ச்சி வெளிப்படையாகவே அமெரிக்காவை எச்சரித்தார். அதே நேரத்தில்இ வோசிங்டன் ஈரானுடனான பேச்சுவார்த்தைகளுக்குத் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாகவும்இ தெஹ்ரானுடனான தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் அமெரிக்க வெளியுறவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த இரு நாட்களாக அமெரிக்கா ஈரானிய நகரங்கள் மீது குண்டுவீசியதைத் தொடர்ந்து பஹ்ரைன் குவைத் மற்றும் கட்டாரில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் மூலோபாய மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் பதில் நடவடிக்கைகள் அமெரிக்காவின் இராணுவ தளங்கள் அமைந்திருக்கும் இடங்களை இலக்கு வைத்து தாக்குதலை மேற்கொள்ள போவதாக ஈரான் எச்சரித்தது. இருதரப்பின் போர் உத்திகளும் பொதுமக்களை நோக்கியதாக அமைகின்றது. இது படிப்படியாக அமெரிக்காவை நோக்கி நகரமாக என்ற சந்தேகத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. அமெரிக்க நகரங்கள் மீதான தாக்குதலை ஈரான் ரகசியமான முறையில் நகர்த்த திட்டமிடுவதாகவும் அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அமெரிக்க புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளமை தெரிய வருகின்றது.
மூன்றாவது ஈரானின் உயர் தலைவரின் மரணச் சடங்குக்கு பின்னர் பாரிய போரை ஈரான் நடத்துவதற்கான பலமும் மக்களுடைய ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. மக்கள் வெளிப்படையாகவே அமெரிக்கா மீதான விமர்சனங்களை முன்வைப்பதும் அமெரிக்காவுக்கு எதிரான போரில் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட திட்டமிடுவதையும் கண்டுகொள்ள முடிகின்றது. எனவே மரணச்சடங்கு பின்னான ஈரானின் தாக்குதல் அதீத அச்சுறுத்தலை உலகத்திற்கு தரக்கூடியதாக அமைய வாய்ப்புள்ளது. ஈரானின் அனுமதியைப் பெறாமல் கடந்து செல்ல முயன்றதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்துஇ சமீப நாட்களில் ஹார்மூஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் தாக்கப்பட்டன. இதற்குப் பதிலடியாகஇ அமெரிக்கா ஈரானிய மண்ணில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இது ஈரானின் பலத்தை ஹார்மூஸ்ல் நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கையாகவே தெரிகிறது. ஹர்மூஸ் நீரிணையே ஈரானின் பலமான ஆயுதமாக மாறியுள்ளது.
நான்காவது மீண்டும் போரின் தொடக்கம் உலகளாவிய ரீதியான பொருளாதார நெருக்கடி வீழ்ச்சியை சாத்தியப்படுத்த போகின்றது. அதற்கான ஒட்டுமொத்த விளைவையும் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் எதிர் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் அகப்பட்டுள்ளன. ஐரோப்பா பொருளாதாரம் நெருக்கடியின் உச்சத்தில் காணப்படுகின்றது போல் ஏனைய கண்டத்து நாடுகளும் அத்தகைய நிலையை அடைகின்ற சூழல் ஒன்றுக்குள் ஈரான் அமெரிக்கப் போர் ஏற்படுத்தியுள்ளது. போரின் விளைவுகளை உலகம் முழுமையாக எதிர்கொள்ள முடியாமல் நெருக்கடியை சந்திப்பதற்கான வாய்ப்பை கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. இது பற்றி ஹார்மூஸில் நடைபெறும் மோதல் கடல் வழிப் பாதுகாப்பு மட்டும் அல்ல. அமெரிக்கா ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கிடையேயான அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தத்தின் ஒரு பகுதியாகும். அது உலகளாவிய பொருளாதாரத்தின் மையமாகவே மாறுகிறது.
ஐந்தாவது மீண்டும் தொடங்கியுள்ள அமெரிக்க-ஈரான் போரின் விளைவுகள் உலகளாவிய ரீதியான பொருளாதார நெருக்கடியை மட்டுமின்றி உலக நாடுகளின் அரசியல் உறுதிபாட்டையும் சிதைப்பதற்கான வாய்ப்பை அதிகம் கொண்டிருப்பதாக தெரிகின்றது. குறிப்பாக மேற்காசிய நாடுகள் பாரிய நெருக்கடிக்குள் அகப்பட்டு இருப்பதும் அதன் மூலம் பொருளாதார நெருக்கடியை மற்றுமன்றி அரசியல் இராணுவ நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் முழுமையாக ஈடுபடுத்துவதற்கு இப்போர் அவசியமானதாக காணப்படுகிறது. ஈரானிய மக்களினுடைய ஆதரவு உலக வல்லரசுகளான ரஷ்சியா சீனாவின் ஒத்துழைப்பு அணு ஆயுத பரிசோதனைக்கான வாய்ப்பினை அதிகம் ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க இஸ்ரேலியப் போரின் நெருக்கடி ஈரானுக்கு கொடுத்திருக்கின்றது. புரிந்துணர்வு உடன்பாட்டில் இருந்து ஈரான் விலகிக் கொள்வதன் நோக்கமும் அணு ஆயுத பரிசோதனைக்கான வாய்ப்பை உத்திரவாதப்படுத்துவதாகவே தெரிகின்றது. இத்தகைய உத்திகளையே வட கொரியா அணுவாயுத பரிசோதனைக்காலத்தில் பின்பற்றியது என்பது நினைவு கொள்ளத்தக்கது.
எனவே உலக ஒழுங்கு மீளமைக்கப்படுகிறது என்பதற்கு அப்பால் ஈரான் அணு ஆயுத வல்லரசாக எழுச்சி பெறுவதற்கு ஒரு வாய்ப்பான களத்தை அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு தாக்குதல் கொடுத்திருக்கின்றது. உலக பொருளாதார நெருக்கடி அரசியல் உறுதி இன்மைகள் ஒரு புறம் அமைய மறுபக்கத்தில் ஈரானிய அணுவாயுத பரிசோதனைக்கான வாய்ப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. நூற்றாண்டின் நிகழ்வு என வர்ணிக்கப்படும் ஈரானிய மக்களின் தேசிய உணர்வும் சீனாவுடனும் ரஷ்சியாவுடனும் கொண்டிருக்கும் ஈரானின் இராணுவ ஒத்துழைப்பும் அமெரிக்காவை முற்றாகவே பலவீனப்படுத்துவதற்கான உத்தியாக அமைவதோடு ஈரானின் பலத்தை அதிகரித்துள்ளதாவே தெரிகிறது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினகரன்)
