சர்வதேச அரசியல் சீனாவை மையப்படுத்தி சுழற்சியை ஆரம்பித்திருக்கிறது என்பதை உணர முடிகின்றது. அமெரிக்க ஜனாதிபதி இரண்டு நாட்களில் (14-15.05.2026) சீன விஜயத்தை முடித்துக் கொண்ட அடுத்த வாரம் ரஷ்யாவின் ஜனாதிபதி சீனாவுக்கு இண்டு(19-20.05.2026) நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். ஐரோப்பிய தலைவர்களின் சீன வருகையின் நீட்சியாக இரு வல்லரசுகளின் தலைவர்கள் சீனாவுக்கு விஜயம் செய்திருப்பது காட்டுகிறது. இதன் மூலம் சீனா உலக ஆதிக்கத்தின் பரிமாணங்களை கொண்டிருக்கிறது என்பதை கண்டு கொள்ள முடிகின்றது. உலகத்தின் போக்கினை புதிய வடிவத்துக்குள் கொண்டு வந்ததன் அடிப்படை உக்ரையின்-ரஷ்சியப் போருக்கும் ஈரான்-அமெரிக்கப் போருக்கும் பிரதான பங்குள்ளது எனக் குறிப்பிட முடியும். போர்களே புதிய உலகத்தின் திறவுகோல்கள் என்பதை மீண்டும் ஒரு தடவை உலக அரசியலுக்கான அறிவியல் புரிய வைத்துள்ளது. இக் கட்டுரையும் ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினது சீன விஜயம் வெளிப்படுத்தும் அரசியலை தேடுவதாக உள்ளது.
முதலாவது அமெரிக்க ஜனாதிபதி ஒரு பெரும் வர்த்தக கூட்டத்துடனும் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார செயலாளர் உடனம் சீன விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அவரது விஜயத்தின் விளைவுகள் பெரிய அளவில் அமெரிக்க நலன்களுக்கு இடம் கொடுக்காதது மட்டுமின்றி இரு நாடுகளும் உலகில் ஜி-2 என்று அழைக்கப்பட்ட போதும் நடைமுறையில் அதன் முக்கியத்துவத்தை கண்டுகொள்ள முடியவில்லை. இரு நாடுகளின் குழு (ஜி2) என்பது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முறைசாரா பொருளாதார மற்றும் மூலோபாய உறவைக் குறிக்கிறது. இவ்விரு நாடுகளின் ஒருங்கிணைந்த பொருளாதாரங்கள் உலகளாவிய வளர்ச்சியில் (Growth-2)) கிட்டத்தட்ட பாதியை இயக்குகின்றன. ஆனால் அமெரிக்க ஜனாதிபதியின் சீன விஜயம் அமெரிக்காவின் நலன்களை நெருக்கடிக்கு உட்பட்டு இருக்கிறது என்பதை பிரதிபலித்தது. அவரது விஜயம் நடைபெற்ற போதே ரஷ்சிய ஜனாதிபதியின் சீன வருகை உறுதிப்படுத்தப்பட்டது. உலக ஒழுங்கில் துருவங்களாக பார்க்கப்படும் ரஷ்சியாவும் அமெரிக்காவும் சீனாவுடனான உறவை முதன்மைப்படுத்த முனைவதில் போட்டியிட்டுக் கொண்டனர். அத்தகைய போட்டியில் பிரதிபலிப்பில் ரஷ்சியா சீனாவோடு நெருக்கமான உறவை கொண்டு இருக்கின்றது என்பதை மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன. பாதுகாப்பு, இராணுவம், பொருளாதாரம் என்ற அடிப்படையில் 40 உடன்படிக்கைகள் ரஷ்சிய-சீனாவுக்கு இடையில் மேற்கொள்ள திட்டமிட்டதாக தெரியவருகிறது. அமெரிக்காவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விட ரஷ்சியாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் அதன் பரிமாணமும் வேறுபட்டது. அதனை இரு தலைவர்களையும் சீன ஜனாதிபதி சந்தித்த போது அவர்களுடனான உடல் மொழியில் கண்டுகொள்ள முடிந்தது.
இரண்டாவது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் ரஷ்சியாவின் பெற்றோலிய ஏற்றுமதிக்கான உடன்பாடு அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. அமெரிக்கா மற்று மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடையினால் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் ரஷ்சியாவின் பெற்றோலியம் மற்றும் எரிவாயுக்கான சந்தை சீனாவுடன் ஏற்படுத்துவதில் மொஸ்கோ முக்கியம் அளித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ள திட்டமிட்ட (Power of Siberia 2 gas pipeline) குழாய் மூலமாக பெற்றோலிய பரிமாற்றத்திற்கான உடன்பாடு தடைப்பட்டாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பெற்றோலிய வர்த்தகம் சீர் செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகமான பெற்றோரின் நுகர்வை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா முதன்மையானது. அதே நேரம் ஈரான் மீதான அமெரிக்கா தாக்குதலால் வளைகுடா நாடுகளில் இருந்து சீனா கொள்வனவு செய்யும் பெற்றோலியத்தின் வீழ்ச்சி ரஷ்சியாவினால் சரி செய்யப்படுகின்ற சூழல் காணப்படுகிறது.
மூன்றாவது இரு நாடுகளும் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போரையும் உலகளாவிய ரீதியில் வளர்ந்துவரும் காட்டுச்சட்டத்தின் (law of the jungle) நடைமுறையையும் அதிகம் எதிர்த்தன. இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் மத்திய மேற்குப் பகுதியில் புதிய ஏவுகணைத் தளத்தை உருவாக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 175 பில்லியன் டொலர் மதிப்பிலான கோல்டன் டோம் (Golden Dome) பாதுகாப்பு அமைப்புத் திட்டங்களைக் கடுமையாகச் விமர்சித்துள்ளனர். இது விண்வெளியில் உள்ள ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கான திட்டத்தின் விவரங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. கோல்டன் டோம் திட்டத்தில் அதன் விண்வெளி சார்ந்த பாதுகாப்பு அமைப்புகளுடன், மூன்று அடுக்கு ஏவுகணை இடைமறிப்பிகள், ரேடார் வரிசைகள் மற்றும் லேசர்களும் அடங்கும் எனத் தெரியவருகிறது. அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியில் அமையும் என்பதைக் காட்டும் வரைபடமும் அடங்கியிருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஏவுகணைத்தளம், தெற்கு கலிபோர்னியா மற்றும் அலாஸ்காவில் ஏற்கனவே உள்ள இரண்டு ஏவுகணைத் தளங்களுக்கு ஒத்ததாகவும் கூடுதலாகவும் அமையும் எனத் தெரியவருகிறது.
நான்காவது இரு நாட்டுத் தலைவர்களும் சுதந்திரமான வெளிப்படையானதும் சுயநிர்ணயம் கொண்ட வெளியுறவின் முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்தினர். இரு தலைவர்களும் ஏறக்குறைய 40 தடவைகள் தமது ஆட்சி காலத்தில் சந்திப்பை நிகழ்த்தி இருக்கின்ற பதிவை ஏற்படுத்தி உள்ளனர். இரு நாட்டுக்குமான 2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர் உடன்படிக்கையின் 25 வது ஆண்டு நிறைவையும் ஒட்டியதாகவும் புட்டின் விஜயம் உறுதிப்படுத்துவதாக தெரிய வருகின்றது. இரு நாடுகளும் ஒன்றிணைந்து உலகத்தின் போக்கை கையாளுவதற்கான உத்திகள் வகுக்கப்பட்டிருந்தது. உலக அரங்கில் ஒரு நிலைப்படுத்தும் வகிபாகத்தை மேற்கொள்வதற்காக, ரஷ்சியாவும் சீனாவும் இணைந்து ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட வெளியுறவுக் கொள்கைத் திட்டத்தை முன்னெடுக்கும் என்று புட்டின் பெய்ஜிங்கில் உறுதியளித்தார். இராஜதந்திர ரீதியில் ஜின்பிங் அதிகரித்துவரும் குழப்பம் மற்றும் ஆதிக்கம் மேலோங்கியுள்ள உலகில் சீனாவும் ரஷ்சியாவும் அரசியலில் பரஸ்பரம் நம்பிக்கையையும் மூலோபாய ஒத்துழைப்பையும் கூட்டாகப் பலப்படுத்தியுள்ளதாக கூறினார். இது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இல்லாத சீனாவுக்கும் ரஷ்சியாவுக்கும்; ஆழமாக வேரூன்றியுள்ள உறவைக் குறிப்பதாகவே தெரிகிறது. அதே நேரத்தில் இது உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் அதிகாரமும் செல்வாக்கும் சரிவதைக் காட்டுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் சீன ஜனாதிபதி பலமுனை உலகிற்கு(Multi-Polar World Order) அழைப்பு விடுத்திருந்தார். இது உலக ஆதிக்கத்தில் சீனாவின் பங்கை அடையாளம் காட்டுவதாக புரிந்து கொள்ளப்படுகிறது.
ஐந்தாவது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மிகப் பழமான நிலையை எட்டியுள்ளது. 2020க்கும் 2024 ஆம் ஆண்டுக்கு இடையில் இரு நாட்டுக்குமான வர்த்தக ஒத்துழைப்பு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு மட்டும் 237 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டி இருந்தது. உலகளாவிய வர்த்தகத்தில் சீனா ரஷ்சியாவுடன் 4 சதவீதமான பங்கினை நிரப்பீடு செய்கின்றது. இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இருதரப்பு வர்த்தகம் கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகரித்துள்ளது. எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளது. புட்டின் தனது பயணத்திற்கு முன்பே எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்ட முடியுமென மொஸ்கோவில் தெரிவித்துள்ளார். உக்கரையின்-ரஷ்சியப் போருக்கு பின்னர் ஐரோப்பாவின் தடைகளை ரஷ்சியா வெற்றி கொள்வதற்கு சீனாவுடன் பொருளாதார ரீதியான அம்சங்களில் நெருக்கமான உறவை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் ரஷ்சிய பொருளாதாரத்தில் இருப்பை பேணப்படுகின்ற சூழல் ஒன்றை கட்டமைத்திருக்கின்றது. இதற்கு மேற்கு ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களும் அமெரிக்க ஆட்சியார்களுமே காரணம் என்ற விமர்சனம் தவிர்க்க முடியாது ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இதனை 1970 களில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி நிக்சனுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்யப்படுகிறனர். அப்போது பிரித்தாளும் தந்திரத்தில் சீனாவையும் முன்னாள் சோவியத் யூனியனையும் கையாண்டதாக மதிப்பிடபடபடுகிறது. ஆனால் தற்போது சீனா –ரஷ்சிய இணைப்பு உலகத்தையே மாற்றும் திறனைக் கொடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
எனவே சீன ரஷ்சிய பொருளாதாரத்தின் இருப்பையும் சீனாவின் உலகளாவிய மேலாதிக்கத்தின் இருப்பையின் உத்தரவாதப்படுத்துவதாக மாறியுள்ளது. பரஸ்பரம் இரு அரசுகளும் பொருளாதார தளத்திலும் சர்வதேச அரசியல் களத்திலும் புரிந்துணர்வோடு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இத்தகைய உறவின் பலம் உலகளாவிய இராணுவ-பொருளாதார-வர்த்தக மாற்றத்திற்கான முனைப்பாகவே இரு நாட்டுக்குமான உறவு புரிந்து கொள்ளப்படுகிறது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினகரன்)
