June 21, 2026
அரசறிவியல் சொற்களஞ்சியம்

நீதி என்ற எண்ணக்கரு (Concept of Justice)

நீதி என்ற சொல் (Justice) Justicia என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து உருவாகியது. இதனுடைய அர்த்தம் (Justica) யாதெனில் (Joining) இணைத்தல் அல்லது பொருந்துதல் (Fitting)  என்பதாகும். எனவே நீதி என்பதனுடைய உண்மையான அர்த்தம் மக்களை சமூக நிறுவனங்களுடனும் செயற்பாடுகளுடனும் இணைத்தல் அல்லது பொறுத்துதல் ஆகும். வேறு வார்த்தைகளில் சொன்னால்; மக்களையும் சமூகத்தையும் நேர்த்தியான முறையில் இணைப்பதே நீதி ஆகும். ஆனால் நீதி பற்றிய இந்த அர்த்தமானது சட்ட, அரசியல், சமூக, பொருளாதார அடிப்படையிலும் விரிவாக நோக்கப்படுகின்றது. சட்ட ரீதியான அர்த்தமே நீதியில் ஆதிக்கம் பெற்று காணப்பட்டாலும் ஏனைய அம்சங்களின் முக்கியத்துவத்தையும் நாம் மறுக்க முடியாது.

அரசறிவியலில் நீதி என்பது சமூக நிறுவனங்களில் நேர்மைத் தன்மை, சட்டபூர்வத்தன்மை மற்றும் சரியான ஒழுங்கிற்கான அடித்தளக் கொள்கையாகும். சமூகங்களின் உரிமைகள், கடமைகள், பயன்கள் மற்றும் பொறுப்புக்களை எவ்வாறு பகிர்ந்தளிக்கின்றன என்பதை அது நிர்ணயிக்கிறது. ஒரு அரசாங்கத்தின் சட்டங்களும் கொள்கைகளும் தார்மீக ரீதியாக நியாயமானவையா என்பதை மதிப்பிடுவதற்கான இறுதி அளவுகோலாக நீதி செயல்படுகிறது.

நீதி என்ற எண்ணக்கரு காலமாற்றங்களுக்கும் சமூக மாற்றங்களுக்கும் ஏற்ப அபிவிருத்தி அடைந்து வந்த ஒன்றாக காணப்படுகின்றது. மனித நாகரிகம் வளர்ச்சி அடையாத காலத்தில் காட்டு நீதி (Wild Justice) என்பது நிலவி வந்தது. இதனுடைய அர்த்தம் யாதெனில் வலிமையே சரியானது என்பதாகும் (Might is Right). சமூகத்திலே பலம் பெற்றிருப்பவர்கள் அதிகாரத்தையும் நீதியையும் தமது கரங்களிலே வைத்திருப்பார்கள். அவர்கள் விரும்பியதே சட்டமாகவும் நீதியாகவும் கருதப்பட்டது. ஆயினும் நாகரிக வளர்ச்சியுடன் நீதி பற்றிய கருத்துக்களில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கின.
இவ்வகையில் முதன் முதலாக நீதி பற்றிய சிந்தனையில் ஒரு திருப்பத்தினை ஏற்படுத்தியவராக அரிஸ்ரோட்டில் என்ற கிரேக்க சிந்தனையாளர் காணப்படுகின்றார். அரிஸ்ரோட்டில் தான் முதன் முதலாக சட்டங்களின் அடிப்படையில் சமத்துவமாக நடத்தப்படுவதேயே நீதி என வலியுறுத்தினார். ஆனால் பிளேட்டோவின் (Plato) சகோதரரான கிளாகோனின் (Glaucon ) கூற்றின்படி நீதி என்பது யதார்த்த நடைமுறையில் சுயநலத்திற்கான அநீதியின் ஒரு வடிவமேயாகும் (Justice itself is really a form of self – interested injustice). நீதியின் அளவு என்னவெனில் எவராலும் தவறு வெய்ய இயலாத நிலையில் எழக்கூடிய ஒப்பீட்டளவிலான ஒரு நிர்ணயோகும். ( Justice has a relative value to do wrong) என்றார் கிளாகோன். நீதி என்பது ஒரு சமூக ஒப்பந்தமாக வடிவம் பெறுவதாகவும் ஒருவரை மற்றவர் ஒடுக்கிட முடியாத அளவிற்கு ஏறக்குறைய சமபலங்கொண்ட தப்பினாரிடையே நீதி உருவெடுக்கிறது என்றும் கூறுகின்ற கிளாகோன்; தாம் இளைக்கும் அநீதியினால் நன்மையைவிடவும் தமக்கு தீமை அதிகம் விளையும் என்ற நிலையில் நீதியை பின்பற்றும் சூழல் உருவாவதாக கூறுகிறார்.

நீதி என்பது எப்போதும் சுயநலம் வாய்ந்தாய் உள்ளதென்றும் நீதியை எவரும் மனவுவந்து மேற்கொள்வதில்லை என்றும் பிளேட்டோவின் இரு சகோhதரர்களான கிளாகோனும், அடிமண்டஸ்ம் (Adeimantus) வாதித்தனர். உண்மையில் தந்தமது வல்லமைளுக்கு பொருத்தமான வகையில் சுயநலம் கொண்ட தமது தேவைகளை நியாயப்படுத்துவதற்கான ஒரு மார்க்கமாகவே நீதி என்பது நிலவுகின்றது. பலம் பொருந்திய சக்திகள் தந்தமது நலம் சார்ந்த வகையில் அநீதியை நீதி என்று வரையறுத்து முன்னிறுத்தும் போது பலம் குன்றியவர்கள் ஒப்பீட்டுரீதியான நீதியை நிலை நிறுத்துவதற்கு கிளாகோனின் சமூக ஒப்பந்தக் கோட்பாட்டில் வழியுண்டு. அதாவது நீதியை ஒரு சமூக ஒப்பந்தம் (Social Contract) என்ற வடிவத்தில் நிலைநிறுத்தும் இடத்தில் ஓர் அநீதியான பலவானுக்கு முன்னால் சமூகத்தில் பலர் கூட்டாக திரளும் போது அந்தப் பலவான் பலவீனமான நிலைக்கு தள்ளப்படுகிறான். இந்தவகையில் சமூகக் கூட்டு, அணி சேரல்கள் என்பவற்றின் மூலம் ஒப்பீட்டு ரீதியான நீதி கிடைக்க முடிகிறது.

கிரேக்க நீதிக் கருத்துக்களை மேலும் வலுப்படுத்தியவர்களாக உரோம கால அறிஞர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் தான் நீதியினுடைய சட்ட அடிப்படையை வலுப்படுத்தி சட்ட ஆட்சி என்பதனை முதன் முதலாக தெளிவுபடுத்தியவர்களாக காணப்படுகின்றனர். உரோமர்களுடைய சட்டம், நீதி பற்றிய கருத்துக்களும் இன்றைய நவீன சட்டம்சார் நீதி பற்றிய கருத்துக்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆயினும் 17ம் நூற்றாண்டு வரை நீதி பற்றிய கருத்துக்கள் பல பிரச்சினைகளையும் சவால்களையும் சந்தித்தது. ஏகபோக அதிகாரங்களை கொண்டவராக மன்னனும் சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களாக நிலப்பிரபுக்களும் மதகுருமார்களும் காணப்பட்;டமையால் இவர்களுடைய ஆதிக்கத்தினை மீறக்கூடிய வகையிலே நீதி காணப்படவில்லை.

முதன் முதலாக பிரான்சில்; இடம்பெற்ற முடியாட்சிக்கு எதிரான புரட்சியே நீதி பற்றிய நவீன கருத்துக்களுக்கு வலுவூட்டியது. ரூசோ, வோல்ரேயர் என்ற இரு பிரான்சிய சிந்தனையாளர்களின் முடியாட்சியினுடைய கெடுபிடிகளுக்கு எதிராகவும் பாமர மக்களை விடுவிக்கும் நோக்குடனும் தெரிவித்த கருத்துக்கள் நீதி பற்றிய கருத்துக்களுக்கு முன்னோடியாக இருந்தன. இவ்விரு அறிஞர்களின் கருத்துக்களின்படி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் பிரான்சியப் புரட்சியின் முப்பெரும் சுலோகங்கள் தோற்றம் பெற்றது. பின்னர் இச்சுலோகங்களே சட்டத்தின் சுலோகங்களாகவும் நீதியின் சுலோகங்களாகவும் ஜனநாயகத்தின் சுலோகங்களாகவும் வளர்ச்சி கண்டன.

பிரான்சிய புரட்சியினை தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளிலும் ஜனநாயக யுகம் தோன்றிய பின்னரே நீதி பற்றிய கருத்துக்களில் திருப்பு முனைகள் ஏற்பட்டன. அனேகமான நீதி பற்றிய கருத்துக்கள் யாவும் ஜனநாயகத்துடனான போராட்டத்துடனும் ஜனநாயக நிறுவனங்களுடனும் மற்றும் ஜனநாயக கோட்பாடுகள் நடைமுறைகள் என்பவற்றுடனும் இணைந்தவையாகவே காணப்படுகின்றன. பிரான்சுப் புரட்சியிலிருந்து சமகாலம் வரை பல்வேறு அறிஞர்களும் நீதி பற்றிய கருத்துக்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளார்கள்.

(ஆதாரம்: மு.திருநாவுக்கரசு(2025), ‘ஈழத்தமிழினமே நீதி தேன்நிலவல்ல: அது யதார்த்தத்தை கையாளவல்ல ஆளுமையின் வெளிப்பாடு’.)