அரசியல் கட்டுரைகள்

ஈழத்தமிழரது வெளியுறவில் தமிழகம் திறவுகோலாகும்: தமிழ் தேசியப் பேரவையின் தமிழக விஜயம் உணர்த்தும் அரசியல்!

ஈழத்தமிழரின் அரசியல் 2009 க்கு பின்னால் பெரும் நெருக்கடிமிக்க சூழலை எதிர்கொண்டுள்ளது. ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்ததன் பிற்பாடு தமிழ் தேசிய கட்சி அரசியலும் பலவீனம் அடைந்துள்ளது. ஈழத்தமிழர் தனித்து விடப்பட்ட ஒரு நிலைக்குள்ளே அவர்களது கூட்டு உளவியல் காணப்படுகின்றது. ஆனால் ஈழத்தமிழரின் அரசியல் பக்கங்களை முதன்மைப்படுத்திய தமிழ்த் தேசிய பரிமாணத்தைக் கொண்ட சில கட்சிகள் ஓரளவுக்கு அத்தகைய நெருக்கடிகளை சரி செய்து கொள்வதற்கு தமக்குள்ளும் தமக்கு வெளியேயும் பல போராட்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அணி சேர்வதும் கூட்டுக்களை கட்டமைப்பதும் புதிய உத்திகளை வகுப்பதும் பின்னர் அவை அனைத்தும் காணாமல் போவதும் நெருக்கடி மிக்க அரசியலாக ஈழத்தமிழர் அரசியல் அரங்கு உள்ளது. அத்தகைய சூழலில் மாற்றங்களை நோக்கி அதிகம் நகர வேண்டிய தேவையும் அவசியமும் ஈழத்தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் முன்வைக்கப்பட்டது. அதன் பிரகாரம் தமிழ் தேசிய பேரவை ஈழத்தமிழருக்கான ஒரு வெளியுறவு கொள்கையை கட்டமைக்கும் நோக்குடன் 18.12.2025 இல் தமிழகத்திற்கு மேற்கொண்ட விஜயத்தை அடுத்து புதிதாக ஆட்சியை கைப்பற்றி இருக்கும் தமிழக வெற்றி கழகத்தில் முதலமைச்சர் விஜையின் தலைமையிலான அரசாங்கத்துடன் சந்திப்பொன்றை 03.07.2026 மேற்கொண்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்துடன் தமிழ் தேசிய பேரவையின் சந்திப்பின் போது சில முக்கிய அம்சங்கள் அடங்கிய கோரிக்கையை முதலமைச்சர் விஜயிடம் கையளித்திலிருந்தனர். அதில் உள்ளடக்கப்பட்ட அம்சங்களை முதலில் அவதானிப்பது அவசியமானது.
ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு, தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி (Federal) அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம். ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவம். தமிழக–ஈழத்தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள். மற்றும் இந்தியாவில் தங்கியுள்ள ஈழத்தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் இரு தரப்பினராலும் கலந்துரையாடப்பட்டன. இதன் மூலம் ஏற்படக்கூடிய மாற்றங்களை ஆழமாக அவாதிப்பது பொருத்தப்பாடுடையது.

முதலாவது ஈழத்தமிழரின் பலவீனமடைந்திருக்கும் அரசியல் பக்கங்களை சரி செய்ய வேண்டிய தேவைப்பாடு ஈழத்தமிழரின் அரசியல் கட்சிகளுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் உள்ளது. அதனை நோக்கி ஈழத்தமிழர்கள் தம்மை பலப்படுத்திக் கொள்வதற்கு தமக்குள் ஒருமைப்பாட்டையும் ஐக்கியத்தையும் கூட்டுக்களையும் ஏற்படுத்துவதுடன் தமக்கான நட்புக்களையும் பலப்படுத்திக் கொள்ளுதல் முதன்மையானதாக உள்ளது. அரசியல் கட்சிகளின் முன்னைய தலைவர்களும் முன்னய அரசியல் கட்சிகளும் அத்தகைய ஒருமைப்பாட்டையும் ஐக்கியத்தையும் ஒன்று சேர்ந்து கூட்டுக்களை உருவாக்குவது பற்றிய கரிசனை அற்றவர்களாக உள்ளனர். ஈழத்தமிழர்களைப் பற்றிய எண்ணங்களை விட கட்சிகளின் நலன்களும் தலைமைகள் உட்பட கட்சியின் பிரதானிகளின் நலன்களுமே முக்கியமானதாக கருதுகின்றனர். அதனால் அத்தகைய தரப்புக்களை ஈழத்தமிழர்கள் கைவிட்டு புதிய தரப்புகளையும் முன்னோக்கி நகரும் தலைமைகளையும் அடையாளம் கண்டு அத்தகைய தரப்புக்களோடு சேர்ந்து பயணிக்க வேண்டிய தேவை தவிர்க்க முடியாது. ஈழத்தமிழர்கள் கடந்த 17 ஆண்டுள் தம்மைத் தொலைத்து விட்டதாக விமர்சனங்கள் இருந்தாலும் ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டத்திற்கு நிகரான ஒரு ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்ட ஜே.வி.பி. ஆட்சி அமைப்பதற்கு ஏறக்குறைய அரை நூற்றாண்டுகள் தேவைப்பட்டது. அவ்வாறான அனுபவத்தையே தென்;னாசியாவில் தெலுங்கானா விடுதலைப் போராட்டம், மாவோயிஸ்டுகளின் நேபாளத்தில் எழுச்சி என்பனவற்றைக் கண்டு கொள்ள முடிகிறது.

இரண்டாவது ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமாக வடக்கு கிழக்கை பாரம்பரியமாக வாழ்விடமாகக் கொண்டதுடன் தமிழை அடையாளமாக பிரதிபலிக்கின்ற இனமாக உள்ளனர். அதனால்; தமக்கு ஒத்த இயல்பு கொண்டபிற பிரதேசங்களோடு ஒன்றிணைந்து ஐக்கியமடைந்து ஒத்துழைப்பு வழங்கி செயல்படக்கூடிய இறைமையுடைய இனமாக விளங்குகின்றனர். அதனடிப்படைக்குள் அதிக நெருக்கமுடைய மக்களாக தமிழக மக்களும் தமிழக அரசும் காணப்படுகின்ற போது அதனோடு இணைந்து ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பை பலப்படுத்திக் கொள்வது அவசியமானது. அதற்கான ஒரு களத்தை தமிழ் தேசிய பேரவை கடந்த ஆண்டு தொடங்கியிருந்தது. அதனுடைய நீட்சியாக தமிழகத்தின் புதிய அரசோடு கைகோர்த்திருப்பது ஈழத்தமிழரின் இருப்புக்கான பலமாகவே தெரிகின்றது. பலத்தை கட்டமைப்பது என்பது ஈழத்தமிழரின் பாரம்பரிய நிலத்தில் சுதந்திரத்தோடும் இறைமையோடும் தன்னாதிக்கத்தோடும் சுயநிர்ணயத்தோடும் வாழ்வதற்கான அடிப்படையாக அமையும்.

மூன்றாவது ஈழத்தமிழரின் அமைவிடம் தந்துள்ள புவிசார் அரசியல் கேந்திர முக்கியத்துவம் தனித்துவமானது. தமிழகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்குமான கடல் வழி உறவானது 24 கி.மீ. தூரத்துக்கு இடைப்பட்டதாகவே உள்ளது. பாக்குநீரிணை தமிழர்களின் அரசியலின் இயங்கியலை நிர்ணயிக்கும் விதிகளை மையப்படுத்திய கடல் பகுதியாகும். தமிழகத்துக்கும் ஈழத்தமிழருக்குமான அத்தகைய தொடர்பு முரண்பாடுகளை ஏற்படுத்தினாலும் ஆயுதப் போராட்ட வளர்ச்சி அடைந்த காலத்தில் அத்தகைய கடலே புரிந்துணர்வுடன் நட்புடனும் பரஸ்பரம் ஒத்துழைப்பையும் கூட்டுத் தன்மையும் பிரதிபலித்திருந்தது. 2009 க்கு பின்னரான முரண்பாடுகளுக்கும் பகைமைக்கும் அந்நிய சக்திகளும் மற்றும் எதிரிகளின் செயல்பாடுகளுமே காரணம் என்பதை உணர்த்துகிறது. தமிழ் தேசியப் பேரவை ஈழத்து மீனவர்கள் பிரச்சினை சார்ந்து தமிழக வெற்றிக்கழக அரசோடு உரையாடத் திட்டமிட்டிருப்பது ஆரோக்கியமான வழிகாட்டலை ஏற்படுத்தக் கூடியது. இது இரு தரப்பு மீனவரது வாழ்வியலை புரிந்துணர்வுடன் கூட்டாக செயல்படுகின்ற சூழல்லொன்றை ஏற்படுத்துவதாக அமையும். பாக்குநீரிணை ஈழத்தமிழருக்கும் தமிழக தமிழருக்கும் உணர்த்தும் செய்தியானது புவிசார் அரசியல் பலம் தமிழகத்தோடு புதுடில்லியை கையாள்வதற்கான பிரதிபலிப்புகளை பரிசளித்துள்ளது என்பதாகும். அதற்கு ஈழத்தமிழர்கள் தயாராக வேண்டும். தமிழகம் புதுடில்லி உடனான உறவை எவ்வகையானதாகக் கொண்டாலும் அதன் வலிமை ஈழத்தமிழர்களுடைய அரசியல் பலப்படுத்தைக் தரக்கூடிய உத்தியாகவே தெரிகின்றது.

நான்காவது ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத்துக்குமான உறவு அடிப்படை அரசியல் புரிந்துணர்வில் தங்கியுள்ளது. அரசற்ற ஈழத்தமிழர்களின் வெளியுறவுக்கான திறவுகோலாகவே தமிழகமே உண்டு என்பது தெளிவானது. அத்தகைய திறவுகோலை நோக்கி ஈழத்தமிழர்களின் அரசியல் பக்கம் நகர்த்தப்படுகின்ற போது முதலில் அதற்கான பகையற்ற உறவை ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அதன்படி ஈழத்தமிழர் அரசியல் உறுதிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது. அரசற்ற சூழலில் வெளியுறவை கட்டமைக்கின்ற போது தமிழகம் அதன் முதல் வெளியுறவுச் சக்தியாக அமைதல் அடிப்படையானது. தமிழகத்துடனான உறவின் மூலமே புதுடில்லியையும் பிற அரசுகளையும் கையாள முடியும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுதல் வேண்டும். அத்தகைய புரிதல் இரு தரப்புகளுக்கிடையிலும் பலமானதாகவும் விட்டுக் கொடுப்புக்களை கொண்டதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமைவது அவசியமானது.

ஐந்தாவது ஈழத்தமிழர்களின் அரசியலில் தமிழகம் நீண்ட காலமாக பலமான சக்தியாகவே விளங்குகிறது. அத்தகைய பாரம்பரியத்தை வளர்தெடுப்பதுடன் அதற்கு ஊடாக அரசியல் பலத்தை உத்தரவாதப்படுத்திக் கொள்வது அவசியமானது. தமிழகம் ஈழத்தமிழருக்கான ஆதரவை வெளிப்படுத்துவது என்பது தென்னிலங்கையின் அரசியல் சக்திகள் இடம் அதிர்த்தியையும் எதிர்ப்புணர்வையும் தோற்றுவிக்க கூடும். குறிப்பாக தமிழ் தேசிய பேரவையின் சென்னை விஜயத்தை அடுத்து இலங்கை அரசாங்கத்தின் மீன்பிடித் துறை அமைச்சர் தமிழக அரசோடு உரையாட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஒரு வகைகள் தமிழ் தேசியப் பேரவையின் நகர்வின் வெளிப்பாடாகவே இருக்கலாம். அதிலும் மீனவர் பிரச்சினை தொடர்பில் இராஜதந்திர ரீதியான உறவுமுறையொன்றை தொடக்கப் போவதாக தென்னிலங்கை ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இவ்வாறு ஓர் அரசியல் களத்தை தயார் செய்வது என்பது ஈழத்தமிழரின் அரசியல் இருப்புக்கான தற்போதைய தேவையாகும். அடிப்படையில் தவிர்க்க முடியாமல் ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை நோக்கி நகர்த்த வேண்டிய தேவைப்பாடு தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய அடிப்படை ஈழத்து- தமிழக அரசியல் கட்சிகளின் உறவில் அதிகம் தங்கியுள்ளது.

எனவே தமிழ் தேசிய பேரவையின் இரண்டாவது தமிழகம் நோக்கி விஜயம் ஈழத்தமிழர் அரசியலில் மாற்றங்களுக்கான அடிப்படையை தோற்றுவிக்கின்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. அதனை நோக்கி ஈழத்தமிழர்கள் நகர்வது மட்டுமின்றி அதற்கான விட்டுக் கொடுப்புக்களையும் புரிந்துணர்வையும் கட்டமைப்பதற்கு சிவில் அமைப்புகளும் ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். ஆரோக்கியமான ஒரு வழித்தடம் அரசற்ற சமூகம் ஒன்றின் வெளியுறவை தொடக்கப் புள்ளியாக அடையாளப்படுத்தியுள்ளது. அதனை கொண்டு செல்வதும் வளர்த்தெடுப்பதும் தமிழகத்தை திறவுகோலாக கருதுவதும் ஆரோக்கியமான அரசியலிலே தங்கியுள்ளது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி: யாழ்.தினக்குரல்)