July 20, 2026
அரசியல் கட்டுரைகள்

இராணுவ தொழில் நுட்பத்திறனும் அமெரிக்க-ஈரான் போர் முனையும்?

ஈரான் அமெரிக்க போர் உலகம் எதிர்பார்க்காத எல்லையை நோக்கி நகர்ந்துவருகிறது. போரின் விளைவுகளை உலக நாடுகள் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் போரின் எல்லை விரிவடைந்திருக்கிறது. ஹார்மூஸ் நீரிணை போர் மையமாக மாறி இருக்கின்றது. ஈரானின் எதிர்த்தாக்குதல்கள் அமெரிக்காவின் மேற்காசிய இராணுவத் தளங்களை தீவிரமாக அழிவுக்கு உள்ளாக்கிவருகிறது. இதன் பதில் அமெரிக்கா ஈரானிய மக்கள் குடியிருப்புக்களையும் ஈரானின் உள்கட்டுமானங்களையும் தகர்க்கத் தொடங்கி இருக்கிறது. இரு நாடுகளும் போரின் சமபலத்தை வெளிப்படுத்தினாலும் ஈரானி வளங்கள் மட்டுமல்ல மேற்காசிய வளங்கள் பாரிய அழிவுகளை சந்தித்து வருகிறன. இக் கட்டுரையும் ஈரான்-அமெரிக்கப் போரின் புதிய எல்லைகளை தேடுவதாக உள்ளது.

முதலாவது ஈரான்-அமெரிக்கப் போரின் புதிய எல்லையாக பெரும்பாலும் அழிவு நாள் விமானம் என்று குறிப்பிடப்படும் டுபோலெவ் Tu-214PU வான்வழி கட்டளை மையத்தை, ரஷ்சியா, தெஹ்ரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திற்கு நகர்ந்து திரும்பியுள்ளது. Tu-214PU விமானம் (டூம்ஸ்டேவிமானம்-DoomsdayPlane) மொஸ்கோவிலிருந்து புறப்பட்டு ஜூலை 13,2026 அன்று ஈரானில் தரையிறங்கியது. பிராந்திய போர்நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து ஈரானிய இராணுவ உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துவந்த நிலையில் இந்த விமானங்களின் நிலையெடுப்பு நிகழ்ந்தது. ஈரானுக்கும் ரஷ்சியாவுக்கும் இடையிலான இராணுவ உடன்பாடுகள் வலுவான ஒரு நிலையை எட்டி உள்ளது என்பதை இச்சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது. ஈரானின் போர்திறனுக்கு பின்னால் ரஷ்சியா சீனா மற்றும் வடகொரியா என்பன உண்டும் என்பதை மீளவும் உறுதிப்படுத்தப்படுகிறது. இதுவே அமெரிக்காவுக்கு இருக்கும் மிகப்பிரதான சவாலாகவுள்ளது. இத்தகைய இராணுவ வலுவை கொண்ட விமானத்தின் தரயிறக்கம் சர்வதேச அரசியலில் நாடுகளுக்கு இடையில் அதிர்ச்சியை தந்திருக்கிறது. இது ஒரு தகவல் மையம் என்றும் அணுவாயுதத் தாக்குதலுக்கு பின்னரும் நிலைத்திருக்கக்கூடிய தகவல்களை பரிமாற்றக் கூடிய திறன் கொண்டது என்றும் விவாதிக்கப்படுகிறது. இது சார்ந்த விவரங்கள் அதன் திறனை மதிப்பீடு செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

Tu-214PU (Punkt Upravleniya) என்பது ரஷ்சியாவால் பயன்படுத்தப்படும் சிறப்பு வான்வழி கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு (Airborne Command and Control) விமானமாகும். இது வான்வழி கட்டுப்பாட்டு மையம் அல்லது பறக்கும் கிரம்ளின் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. Tu-214PU விமானம் ரஷ்சியாவின் எஸ். பி. கோர்புனோவ் கசான் விமான உற்பத்தி நிறுவனத்தால் (S. P. Gorbunov Kazan Aviation Plant)) தயாரிக்கப்பட்டது.Tu-214 விமானத்தின் அடிப்படை அமைப்பை (Airframe) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. Tu-214PUவிமானத்தின் உட்புற அமைப்பு மற்றும் மின்னணு கட்டுப்பாட்டு அமைப்புகள் (Avionics) பாதுகாப்பான கட்டளை மற்றும் தகவல் தொடர்பு நடவடிக்கைகளுக்காக பெருமளவில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது 2018 டிசம்பர் 28 இல் முதல் சோதனைப் பறப்பை மேற்கொண்டது. பின்னர், 2019 ஆம் ஆண்டில் சேவைக்காக இணைக்கப்பட்டது.
வான்வழி கட்டளை மையம் இரட்டை எஞ்சின் கொண்ட Tu-204  Tu-214 பயணிகள் விமானத்தின் பெரிதும் மாற்றியமைக்கப்பட்ட ஒரு வகையாகும். பாதுகாப்பான தகவல் தொடர்பைக் கொண்டது. கடுமையான மின்னணுப் போரின் போதும் தகவல் தொடர்பைப் பராமரிப்பதற்காக மேம்பட்ட மறைகுறியாக்கம் செய்யப்பட்ட செயற்கைக்கோள் இணைப்புகள், ஜாமிங் (Anti-Jamming Tech) எதிர்ப்புத் தொழில்நுட்பம் மற்றும் C2 அமைப்புகள் இதில் நிரம்பியுள்ளன. உயர்மட்ட அரசு அதிகாரிகளுக்கான போக்குவரத்தை நிர்வகிக்கும் ரஷ்சியாவின் உயரடுக்கு ரோஸியா (Rossiya Special Flight Squadron) சிறப்பு விமானப் படைப்பிரிவால் பிரத்தியேகமாக இயக்கப்படுகிறது. இதன் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது. Tu-214PU விமானம் மணிக்கு சுமார் 850 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது. இது சுமார் 6,500 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது.

இதே மாதிரியான விமானத்தை அமெரிக்காவும் கொண்டுள்ளது. அமெரிக்காவின் அழிவு நாள் விமானம் அதிகாரப்பூர்வமாக E-4B Night watch (தேசிய வான்வழி செயல்பாட்டு மையம்) என்று அழைக்கப்படுகிறது. இது அணுப் போர் அல்லது தேசிய நெருக்கடி நிலையின் போது ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளர் மற்றும் உயர்மட்ட இராணுவத் தலைவர்களுக்கான ஒரு பறக்கும் கட்டளை மையமாகச் செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். இது போயிங் 747-200 ரக விமானத்தை பெரிதும் மாற்றியமைக்கப்பட ஒரு வடிவமாகும். 1974-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து சேவையில் இருந்த E-4A ரகத்திலிருந்து E-4B உருவானது. முதல் B மாதிரி 1980-ஆம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க விமானப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 1985-ஆம் ஆண்டிற்குள் அனைத்து விமானங்களும் B மாதிரிகளாக மாற்றப்பட்டன. அனைத்து E-4B விமானங்களும் Nebraska உள்ள விமானப்படைத் தளத்தில் இருக்கும் 595-வது கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுக் குழுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 595-வது கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுக் குழுவானது, 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி எட்டாவது விமானப்படையின் கீழ் இணைக்கப்பட்டது.

இரண்டாவது ஆளில்லாத விமானங்களை அதிகம் ஈரான் ஈடுபடுத்தியது போன்று நீருக்கடியில் எதிரி நாட்டின் கப்பல்களையும் தாக்குதல் படகுகளையும் தகர்ப்பதில் ஈரான் முனைப்பு காட்டுகிறது என அமெரிக்க கட்டளை மையம்( U.S. Central Command – CENTCOM) தெரிவித்தது. ஹார்மூஸ் நீரிணை தொடர்பிலும் ஈரானின் துறைமுகங்களை நோக்கிய முற்றுகையிடும் நடவடிக்கைகளின் போதும் அமெரிக்க கடற்படை அதிக நெருக்கடியை சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்; வெளிப்படுத்தியுள்ளன. ஏழாவது நாளாக விமான தாக்குதல்களை ஈரான் மீது அமெரிக்கா நிகழ்த்திய போதும் கடல் முற்றுகையிலும் ஹார்மூஸ்ஸை கைப்பற்றுவதிலும் ஈரானின் நவீன இராணுவ தொழில் நுட்ப ஆயுதங்கள் அதிக நெருக்கடியை ஏற்படுத்திவருகிறது என்பதை சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாவது இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்கள் மேற்காசியாவில் அமெரிக்க தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல்கள் பாரிய நெருக்கடியை பிராந்திய நாடுகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. பஹ்ரைன், கட்டாரில் உள்ள இராணுவத் தளங்களை குறிவைத்ததாக ஈரான் இராணுவம் கூறுகிறது. அதே நேரத்தில் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் கொண்டு ஈரான் நடாத்திய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுத்து வருவதாக குவைத் இராணுவம் கூறுகிறது. ஈரான் தாக்குதல்களைத் தங்கள் இராணுவம் முறியடித்த பின்னர், விழுந்த ஏவுகணைச் சிதறல்களால் ஒரு குழந்தை காயமடைந்ததாக கட்டார் அதிகாரிகள் கூறுகின்றனர். ஈரான் தனது இராணுவ தொழில் நுட்பத்தை துல்லியமாக பயன்படுத்த முனைவதனால் நெருக்கடி மிக்க சூழலை பிராந்திய நாடுகள் எதிர்கொண்டுள்ளன. அமெரிக்க தளங்களுக்கு ஏற்பட்டுள்ளது சேதங்கள் பாரிய சிதைவுகளை சந்தித்து வருகிறது. ஈரானின் நவீன தொழில்நுட்பமும் ஆயுதங்களும் மேற்காசிய நாடுகளில் பாரிய மாற்றத்தை அல்லது நெருக்கடியை உருவாக்குவதாகவே தெரிகின்றது. போர் விரிவடைகின்ற ஒன்றாக மாறியுள்ளது. அமெரிக்கா தொடர்ந்து ஏழாவது நளாக ஈரான் மீது பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ரயில் நிலையம் கட்டடங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நான்காவது இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே நிலவும் புவிசார் அரசியல் தொடர்புகள் ஈரானின் இராணுவ பலத்தை அதிகரிக்க செய்திருப்பது குறிப்பிதத்தக்கதாகும். இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு இராணுவத்தை விரிவாக்குவதில் பங்கெடுப்பு செய்கின்றது. மத்திய ஆசியக் குடியரசுகள் ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேலிய தாக்குதலை எதிர்கொள்வதில் கவனம் கொண்டவையாக விளங்குகின்றன. இது தரைவழித் தொடரில் ஏற்பட்டிருக்கும் பரிமாணமாகவே காணப்படுகிறது. இதன் விளைவுகளே அமெரிக்கர் தாக்குதலை எதிர்கொள்வது அல்லது வெற்றி கொள்வதில் நெருக்கடியாக விளங்குகிறது.

எனவே அமெரிக்கா ஈரானுடனான போரில் வெற்றியை எட்டுவது அதிக காலமும் அதிகளவில் இழப்பையும் சந்திக்கும் என்ற மதிப்பு சர்வதேச ஊடகங்களிடம் காணப்படுகிறது. அமெரிக்க எதிரி நாடுகளுடான இராணுவ ஒத்துழைப்பும் ஈரானின் இராணுவ வலுவில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக தேசிய அவசரநிலைகள் அல்லது நெருக்கடி காலங்களில் அரசின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் பாதுகாப்பான தகவல் தொடர்பு பரிமாற்றத்தைக் கொண்டு இராணுவ நகர்வுகளை ஒருங்கிணைத்து கட்டளையிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு விமானத்தின் தெஹரான் வருகை அதிக வலுவை கொடுத்துள்ளது. போரின் நீட்சியானது அமெரிக்காவை மட்டுமின்றி உலகளாவிய பொருளாதார இழப்பையும் ஆட்சிக் குழப்பத்துக்கும் உள்ளாக்கி இருக்கிறது. ஈரான் அமெரிக்க போரும் உக்ரையின்-ரஷ்சியப் போரும் உத்தரவாதப்படுத்த முடியாத உலக அரசியல்-பொருளாதார-இராணுவ இருப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே உலகத்தின் இருமுனை போர்க்களம் மூலமாத உலக பொருளாதாரக் கட்டமைப்பு சிதைவடைந்து வருகின்றது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி: தினகரன😉