August 27, 2026
அரசியல் கட்டுரைகள்

இலங்கைத் தமிழரின் நிலைத்திருப்புக்கு போராட்டமே அடிப்படை?

இலங்கை அரசியலில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களுக்கும் எழுச்சிமிக்க மக்களின் பங்கேற்பு இல்லாமல் விடுதலை சாத்தியம் அடைந்தது. பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் உலகளாவிய தோல்வி இலங்கை போன்ற நாடுகளின் விடுதலைக்கு வழிவகுத்தது. ஆனாலும் விடுதலைக்குப் பின்னர் நிகழ்ந்த தமிழர்களுடைய உரிமைக்கான கோரிக்கையும் சிங்கள சமானிய இளைஞர்களின் ஆட்சி மாற்றத்திற்கான கோரிக்கைகளும் அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராட்டங்களாக காணப்பட்டன. அத்தகைய போராட்டங்களுக்குள்ளால் ஆட்சியைப் பிடித்த ஒரு தரப்பே ஜே.வி.பி. அரசாங்கமாகும். அத்தகைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவில் அமைப்புக்களின் போராட்டத்தை நிராகரிக்கின்ற எண்ணத்தோடு செயல்படுகின்ற நிலை தோன்றியுள்ளது. ஜே.வி.பி. ஆட்சிக்கு வருவதற்கும் அதிகாரத்தை கைப்பற்றறுவதற்கும் போராட்டங்கள் காரணமாக அமைந்தன. ஆனால் அத்தரப்பு மக்களின் போராட்டங்களையும் அவர்களது போராட்ட மனோநிலையையும் முற்றாக நிராகரிக்கும் நிலையை வெளிப்படுத்துகின்றனர். இக் கட்டுரையும் ஜே.வி.பி.இன் அமைச்சர் ஒருவர் செம்மணியில் பொதுமக்கள் நிகழ்த்திய போராட்டத்தை தேவையற்ற என விவாதித்திருப்பது பற்றிய உரையாடலையும் அதன் அடிப்படைகளையும் தேடுவதாக அமையவுள்ளது.

ஜே.வி.பி. அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிகழ்ந்த அண்மைய உரையாடல் ஒன்றின் வெளிப்பாடு பின்வருமாறு அமைந்துள்ளது.

செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தேவையில்லாத போராட்டம். ஏனென்றால் நீங்கள் போராட வேண்டியதில்லை, காரணம் செம்மணிக்கான நீதியை அரசாங்கமாகிய நாங்கள் வழங்குவோம் என்றும் உறுதியளிக்கின்றேன். செம்மணிப் படுகொலைகள் 1990ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஏற்பட்டதென்றாகும். நாங்கள் முன்னர் போன்ற அரசியல்வாதிகளல்லர், அத்தகைய அரசியல்வாதிகளிடம் அராஜகம் இருந்தது. அந்த அராஜகம் அனைத்துக்கும் இன்றைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன் நீங்கள் சுதந்திரமாகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஏதுவான சூழல் நாட்டில் உருவாகியிருக்கின்றது. அதே போன்று நாட்டில் சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு வருகின்றது. அதன் மூலமாக நாட்டில் யார் தவறு செய்தாலும், யார் குற்றம் இழைத்தாலும், அந்த குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களுக்கு எதிராக எங்கள் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. செம்மணிப் படுகொலைகளைச் செய்தவர்கள் இருக்கின்றார்கள் என்பது உண்மை. அன்றைய காலகட்டங்களில் கொலை செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் உடல் எச்சங்கள் இன்றைக்குத் தோண்டி எடுக்கப்படுவது உண்மை. அது தொடர்பாக நடவடிக்கைகள் எடுத்ததல், அதற்கு போதுமான நிதி ஒதுக்கீடுகளைச் செய்தல், நீதிபதிகளை நியமித்தல் மற்றும் பாதுகாப்புப் பிரிவை பலப்படுத்துதல் ஆகியவற்றை செய்தது எங்களுடைய அரசாங்கமாகும். ஆகவே மக்களுக்கு நீதியை நிலைநாட்டக் கூடிய செயல்பாடுகளை நாங்கள் முன்னெடுப்போம் என்பதை நாங்கள் மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம். இவ்வாறு தெரிவித்தார் கடற்றொழில் அமைச்சர். இதனை ஆழமாக விளங்கிக் கொள்வது அவசியமானது.

முதலாவது இலங்கையின் அரசியல் போராட்ட வடிவத்துக்கு உட்படுத்தியது என்பதில் இடதுசாரிகளுக்கு பெரும் பங்கு உண்டு. ஆரம்ப காலத்தில் பிரித்தானியருக்கு எதிரான போராட்டங்களை இடதுசாரிகள் கட்டமைத்ததோடு கேம்பிரிட்ஜ் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற சிங்கள மத்திய தர உயர்தரவர்க்கத்தினர் போராட்டங்களுக்காக தலைமைதாங்கினார். அதனுடைய நகர்வாகவே இலங்கையில் இடதுசாரிகளும் விடுதலைக்கான எண்ணங்களை கொண்டவர்களும் பிரித்தானிய காலனித்துவத்திற்கு எதிரான போராட்டங்களை நிகழ்த்தினர். குறிப்பாக ஹலால் இயக்கம் சூரிய மல் இயக்கம் சாராய குத்தகைக்காரர்கள் என பல இயக்கங்கள் தோன்றி சுதந்திரம் பற்றிய விடுதலை பற்றிய உணர்வை முதன்மைப்படுத்தி இருந்தனர். ஆனால் இதன் இருப்போடு சேர்ந்து இடதுசாரிகள் மீது அதிக நாட்டம் கொண்ட இளைஞர்கள் தங்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினையும் அதிகாரத்தையும் பெற்றுக்கொள்வதற்காக ஆட்சியில் மாற்றம் செய்ய திட்டமிட்டர். ஆதன் அடிப்படையிலேயே தீவிர போராட்ட சக்தியாக ஜே.வி.பி. ஆயுதப் போராட்டத்தில் முனைப்புக் காட்டியது. 1971 மற்றும் 1989 ஆம் ஆண்டிலிருந்து நீண்ட மக்கள் போராட்டங்களை ஆயுதப் போராட்டத்தின் தோல்வியோடு முனைப்பு கொண்ட ஜே.வி.பி. 2024 இல் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டது. ஆயுதப்போராட்டத்தின் தோல்வி இலங்கை தீவில் ஓர் ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றது என்ற நிலையை ஜே.வி.பி.க்கு தோற்றுவித்தது. அதனால் ஆயுதங்களை கைவிட்டு மக்களை அரசியல் மயப்படுத்தி போராட்டத்தை நடத்தி ஆட்சியை கைப்பற்றி திட்டமிட்டு அதில் வெற்றியும் கண்டது. இத்தகைய வலுவான ஆயுதப் போராட்ட சக்தியாக விளங்கிய ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்த பிற்பாடு எதிர்மறையான உணர்வுகளை போராட்டக்காரர்கள் மீது ஏற்படுத்த விளைகின்றது.

இரண்டாவது இலங்கை தமிழர்களை பொருத்தவரை 1950 ஆம் ஆண்டிலிருந்து அதிக போராட்டங்களை நிகழ்த்திய ஓர் இனமாக விளங்கியது. ஆயுதத்திலும் அகிம்சையிலும் போராடிய இலங்கைத் தமிழர் இரு போராட்ட வழிமுறைகளிலும் களைப்படைந்தவர்களாக இல்லாத நிலையில் தொடர்ச்சியாக போராட்டங்களை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டுகின்றனர். நம்பிக்கை ஊட்டக்கூடிய விதத்தில் அதிகாரத்தை அடைய முடியாவிட்டாலும் இனத்தின் எல்லைக்குட்பட்ட விதத்தில் தமது இலக்கை அடைவதற்கு அரசியல் கட்சிகளை கடந்து சிவில் அமைப்புகள் பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். அரசியல் ரீதியில் அரசியல் கட்சிகளுக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமுக்க குழுக்கள் சிவில் அமைப்புகள் நலன் பேணும் குழுக்கள் என அரசியல் படிநிலை கோட்பாட்டு ரீதியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலிருந்து கீழ் நோக்கி அதிகாரத்தை அடைவதற்காக பல்வேறு வகை போராட்டங்களை நிகழ்த்தும் இலங்கைத் தமிழர்; தமது பாதுகாப்பையும் அதிகாரத்தையும் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளையும் மீட்பதற்காக போராடுவது நியாயமற்றது என்றும் போலியானது என்றும் தேவையற்றது என்றும் யாரும் கருதி விட முடியாது. இடதுசாரி மரபுகளை கொண்டவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் ஜே.வி.பி.யினர் போராட்டத்தை நிராகரிப்பது வேடிக்கையானதாக இருக்கிறது. அரசியலில் அதிலும் குறிப்பாக ஜனநாயக நீரோட்டத்தில் முக்கியத்துவம் தரும் அரசியல் சக்திகள் போராட்டத்தை ஒரு வழிமுறையாக கொண்டு செயல்படுவது மரபார்ந்த எழுச்சிக்கான அடிப்படையாகும். இது பற்றி முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட்டது நினைவு கொள்ளத்தக்கது. அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி வாரத்தில் George Floyd எனும் கறுப்பினத்தவர் வெள்ளையின பொலிசாரால் நெரித்துக் கொல்லப்பட்டார். இதற்கு எதிராக கறுப்பினத்தவர் நாடுமுழுவதும் எழுச்சி பெற்று போராட்டங்களை நிகழ்த்தினர்.அப்போது இரு தடவைகள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த அரைக்கறுப்பரான ஒபாமா வெள்ளை இனத்தவரது அடக்குமுறைக்கு எதிராக 2020 யூன் 3 ஆம் திகதி பலமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். போராட்டங்களுக்கு எதிராக பேசுபவர்களே கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள், இந.;த நாடு போராட்டங்கள் மீது கட்டியெழுப்பப்பட்டது. அது தான் அமெரிக்க விடுதலைப் புரட்சி. இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கான ஒவ்வொரு அடியும் மக்களின் சுதந்திரத்திற்கான ஒவ்வொரு அடியும் ஆழமான இலட்சியங்களை வெளிப்படுத்துவதற்கான ஒவ்வொரு அடியும் ஆளும் அதிகார வர்க்கத்தினரை நிலைகுலையச் செய்த இத்தகைய போராட்டங்கள் வாயிலாகவே முன்னெடுக்கப்பட்டது என்றார்.

இவ்வகை உணர்வுகளுக்குள்ளே ஜனநாயகம் கட்டி எழுப்பப்படுகின்றது. மக்களால் மக்களுக்கு மக்களே செய்யும் ஆட்சி என்ற மகுடவாசகம் விவாதங்களாலும் போராட்டங்களாலும் மாற்றத்துக்குள்ளாகும் யுகத்தில் வாழ்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 21 ஆம் நூற்றாண்டில் ஜனநாயகம் ஹபர்மாஸ் ((Jürgen Habermas)எனும் சிந்தனையாளனால் உள்வாங்கப்பட்ட விவாத ஜனநாயகம் (deliberative democracy) என்ற அம்சம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் வரைபுகள் மக்களது அறிவியல் ரீதியான அம்சங்களாலும் புலக்காட்சியின் விளைவுகளாலும் நிகழ்த்தப்படும் அரங்கங்களும் போராட்டங்களும் அதனால் எழுச்சி பெரும் விவாதங்களும் அடிப்படையானதாக மாறிவிட்டது. என்றுமே ஜனநாயகம் பற்றிய உரையாடலை ஆபிரகாம் லிங்கனின் எண்ணத்திற்க்குள் மட்டும் புரிந்து கொள்ள முயலுகின்ற சூழலில் ஹபர்மாஸ்ன் சிந்தனை விடுதலையைத் தராது என்பது துயரமானது. இலங்கை தமிழர்கள் தமது போராட்டங்களை சிவில் தரப்புகளாக இருந்து கொண்டு முன்னெடுக்க வேண்டிய தேவை அதீதமாக வளர்ந்திருக்கிறது. அதனை நவீன இடதுசாரி சிந்தனை கொண்டவர்களால் முன்வைக்கப்பட்ட விவாதங்களை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துகின்ற தேவை தவிர்க்க முடியாததது. சமூக எதார்த்தத்தை எதிர்கொள்ளவும் நெருக்கடிகளை வெற்றி கொள்ளவும் சிவில் அமைப்புகளே ஜனநாயகத்தின் முன்னோடிகளாக மாறி உள்ளன. இதனை நோக்கிய செம்மணி அரங்கமும் படுகொலையின் சுவடுகள் வெளிக் கொண்டுவரப்படுவதற்கு அரசியல் கட்சிகளை கடந்து சிவில் தரப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. ஒரு உயிரின் இருப்பு என்பதும் நிலைத்திருப்பு என்பதும் அதன் பாதுகாப்பில் தங்கி இருக்கிறது. உயிரி பாதுகாப்பை தனித்து பேணமுடியாத சூழலில் கூட்டுத்தன்மையோடு அணி சேர்ந்து திரட்சி பெற்று வெளிப்படுத்துவது என்பது தவிர்க்க முடியாதது. அத்தகைய சூழலை நோக்கியே செம்மணிப் படுகொலை காணப்படுவதோடு அதனை எதிர் கொள்வதற்கு போராட்டங்கள் அவசியமானவையாக காணப்படுகின்றன.

எனவே இலங்கை தீவு ஒரு பக்கம் போராட்ட வடிவங்களால் வளர்ந்தது மட்டுமின்றி தமிழர்கள் மற்றும் இடதுசாரிகள் போராட்டத்தின் பால் ஈர்க்கப்பட்டே தமது நிலைத்திருப்பை உத்தரவாதப்படுத்தியுள்ளனர். இத்தகைய சூழலுக்குள் தான் இலங்கை தமிழர்கள் தொடர்ச்சியாக போராடும் இனமாக உள்ளனர். தாமதித்த நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதற்குள்ளேயே இலங்கைத் தமிழர் நீதி பற்றிய புரிதல் காணப்படுகிறது. இலங்கை தமிழர்கள் தொடர்ச்சியாக போராடுவது அவர்களின் இருப்பையும் நிலைத்திருப்பையும் வாழ்வியலையும் உத்தரவாதப்படுத்தற்கே. அதன் மீது எந்தப் பிரஜையும் கேள்வி எழுப்ப முடியாது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)