இலங்கையில் போதை பொருள் பாவனை போருக்கு பிந்திய காலத்திலே அதிகரித்தது என்பது புள்ளி விபரரீதியாக புரிந்து கொள்ளக் கூடியது. அதிலும் வடக்கு கிழக்கு 2009 க்கு பின்னர் தீவிர போதை பொருள் பாவனைக்குரிய பிரதேசமாக மாறிவருகிறது. அது பின்னர் படிப்படியாக தென்னிலங்கையை காவுகொண்டுள்ளது. ஒட்டுமொத்த இலங்கை தீவும் போதைப்பொருள் பாவனையில் மூழ்கி இருக்கின்றது என்பதை நடைபெறும் அனைத்து குற்ற செயல்களையும் வைத்துக்கொண்டு முடிவுக்குவரலாம். ஆனால் அத்தகைய சமூக உருவாக்கத்தை முதன்மைப்படுத்துவதில் ஆட்சியாளர்களும் அரசாங்கங்களும் சமூகத்திற்கும் மட்டுமன்றி புலனாய்வுத்துறைகளும் பாதுகாப்பு பிரிவுகளும் பங்காற்றியது என்பது தவிர்க்க முடியாது ஏற்றுக் கொள்ள வேண்டிய விமர்சனமாகும். வடக்கு கிழக்கு நிர்வாகக்கட்டமைப்பில் இருக்கும் அனைத்து நீதி அமைப்புகளிடம் கட்சிகளிடமும் மக்களிடமும் அத்தகைய கருத்து ஆழமாக உள்ளது. இக் கட்டுரையும் வடக்கு கிழக்கில் போதை பொருள் பாவனையும் கல்வித்துறையும்; சார்ந்து உரையாட முனைகிறது.
கல்வி Education) என்பது அறிவை ஊட்டுதல், அறிவுறுத்தல் மற்றும் கற்பித்தல் பற்றிய கருத்தியலாக கருதப்படுகிறது. ஒரு கல்வி நிறுவனத்தினால் அறிவியல் உருவாக்கப்படுவது என்பது மூலாதாரமானது. கல்வி தனித்து வெள்ளை பட்டி தொழிலுக்கான (White collar Job) ) வழிகாட்டி மட்டும் கிடையாது அது சமூகத்தின் இருப்பை கட்டமைக்கவும் மாற்றவும் வளர்ச்சிக்குரியதாக கொண்டு செல்லவும் வழி வகுக்கும் நிறுவனமாகும். இன்னொரு வகையில் கூறுவதானால் ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான கட்டமைப்பை கொடுப்பது கல்வியாகும். அதற்குள் கல்வி நிறுவனங்கள் அடிப்படையானதாகும். பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் பிற கல்வி நிறுவனங்களும் அறிவியலை உருவாக்குகின்ற பிரதான மையங்களாகும். பொருளை மையப்படுத்தி அறிவியல் கட்டமைக்கப்படுகிறது என தத்துவவியல் கூறுகின்றது. பிரபஞ்சத்தில் அனைத்துமே பொருளின் தன்மையிலும் பெறுமானத்திலும் வடிவத்தினாலும் கட்டமைக்கப்படுகின்றது. பொருளும் கருவிகளும் அறிவியலின் பிரதான பங்கெடுப்பை சாத்தியப்படுத்துகின்றன. இதனை நோக்கிய சமூகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதனூடாகவே நாகரீகம் தோற்றம் பெறுகின்றது. வடக்கு கிழக்கு போதைப் பொருள் பாவனையின் அதிகரிப்பு நிகழ்வதற்கு பின்னால் திட்டமிட்ட ஆட்சியாளர்களின் கொள்கைகளும் இனவாத உணர்வுகளும் அடிப்படையானவையாக இருந்துள்ளன. அதனாலேயே வடக்கு கிழக்கு சமூகங்களின் உள்ள கல்லூரிகள் பாடசாலைகள் இலக்கு வைக்கப்பட்டடு போதைப்பாவனை அதிகரிக்கப்பட்டது. இதில் பாடசாலைகள் அதிக முக்கியத்துவம் பெற்றதாக மாறியது. அதனை ஆழமாக விளங்கிக் கொள்வது அவசியமானதாகும்.
முதலாவது பாடசாலைகளின் கட்டமைப்பு மட்டுமின்றி நவீன தொழில்நுட்பத்தின் வருகை பாரிய மாற்றத்தை கல்வித்துறை அடைய வழிவகுத்தது. ஆசிரியர் மாணவர் உறவு புதிய வடிவத்துக்குள்ளும் மாற்றத்திற்குள்ளும் கல்வி கட்டமைப்பு வேகமாக நுழைந்தது. இதற்குள் தயாராகாத மரபார்ந்த சூழலில் வளர்ந்த நாடுகள் பின்பற்றும் மாதிரிகளை பின்தங்கிய நாடுகளும் உள்ளங்குவதற்கு நிர்ப்பந்திக்கும் கல்விக் கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டன. ஆனால் உள்வாங்களின் திறல்கள் முழுமைப்படுத்தப்படாத சூழலில் வளர்ந்த கல்வித் திட்டங்கள் இணைக்கப்பட்டன. இது ஆசிரியர் மாணவர் சமூகங்களுக்கு இடையில் முரண்பாட்டை உருவாக்கியது. மரபு சார்ந்த கல்வியும் தமிழ் மக்களின் இயல்பான பண்பாட்டு மாதிரிகளும் அத்தகைய வளர்ச்சி பெற்ற தொழில்நுட்பத்தின் பயிற்சி இன்மையும் முரணியத்தின் தீவிரத்தை ஏற்படுத்தியது. இதுவே ஆசிரிய-மாணவ புரிந்துணர்வின்மைக்கு காரணமானது. இதனால் பாடசாலைகளை விட தொழில்நுட்ப திறனை பிரயோகிக்கும் ஆசிரியர்கள் முக்கியத்துவம் பெற்றவர்களாகவும் அதனை உள்வாங்கிய ஆசிரியர் தேர்ச்சிகள் மாணவர்களின் ஈர்ப்பு தன்மை கொண்டவையாகவும் மாறுகின்ற போது மரபார்ந்த ஆசிரியர்கள் அவமதிக்கப்படுகின்ற நிலை பாடசாலைகளின் இருப்பையும் கல்வி நிறுவனங்களையும் பலவீனப்படுத்தியது.
இரண்டாவது பாடசாலைகளின் மீதான கட்டுப்பாடும் பணிவும் மரபார்ந்த சமூகத்திடம் காணப்பட்டது. சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகள் நவீன சட்ட நடைமுறைகளால் பலவீனப்படுத்தப்பட்டன. வளர்ந்த நாடுகளின் சட்டங்களை தெரிவிக்கும் கல்விக் கொள்கைகளை முதன்மைப்படுத்துகிற போது மரபார்ந்த கொள்கைகள் காலாவதியாகின்றன. ஆனால் மரபார்ந்த ஆசிரியர்களும் மரபார்ந்த கல்வி கூடங்களில் உட்பட்ட கட்டமைப்புகளும் அவற்றின் மீதான நுட்பங்களும் காலாவதியாகவில்லை. அவற்றை அப்படியே வைத்துக் கொண்டு சட்டங்களில் நவீன மாற்றங்களை செய்கின்ற போது மாணவ-ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும்-பாடசாலைக்குமான உறவு பலவீனமடைந்தது. மாணவர்கள் ஆதரவான சட்டங்களுக்குள் பாடசாலைகளையும் ஆசிரியர்களையும் உள்வாங்கப்பட்ட நிலையில் ஆசிரியர்களையும் பாடசாலைகளையும் பாதுகாக்கும் சட்ட பிரமாணங்களை உள்வாங்க தவறியதும் முரண்பாட்டின் தோற்றமாக மாறியது. இது படிப்படியாக பாடசாலைகளின் கட்டமைப்புகளை மாணவர்கள் மீதான கவனயீர்ப்பை இல்லாமல் செய்வது. ஓர் ஆசிரியனால் மாணவன் உருவாக்கப்படுகிறான் என்ற நிலைமாறி தொழில்நுட்பத்திறனாலும் (Digital Teacher) சட்ட பாதுகாப்பாலும் மாணவன் வளர்கிறான் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டது. இதனால் சுய ஆளுமை படைத்த மாணவர்களும் இல்லாமல் போய் ஆளுமை படைத்த ஆசிரியர்களும் காணாமல் போகின்ற நிலை தோற்றியுள்ளது. மாணவர் மையக் கல்வி என்பது ஆசிரியரின் ஆளுமையிலும் பாடசாலையின் ஆளுமையிலும் மாணவர்களின் திறன் வளர்ச்சியிலும்; மையப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கையின் கல்வி கொள்கைகள் வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருந்து தரையிறக்கம் செய்யப்படுகிற போது ஆசிரியர்களின் முக்கியத்துவம் பலவீனமடைகிறது. இது பெருமளவுக்கு பாடசாலைகளை தோல்விகரமான நிலைக்குள் கொண்டு சென்றுள்ளது. இது சமூகத்துக்கும் பாடசாலைகளுக்கும் இடையிலான உறவு நிலையை பலவீனப்படுத்தியது.
மூன்றாவது போதைப்பொருள் பாவனை பாடசாலை மாணவர்களை நோக்கி இலக்கு வைக்கப்படுகிற போது அதனை கட்டுப்படுத்துகின்ற செய்முறை பாடசாலை நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களால் பாதுகாக்க முடியாத சூழல் அதற்கு பதிலான வன்முறைகள் வெளிப்படுத்த தொடங்கியது. ஆசிரியர்கள் மீது மாணவ சமூகம் கொண்டிருக்கின்ற மோதல் வெறுப்பினை தீவிரப்படுத்தியது. வன்முறைகளை தடுப்பதற்கான புறச் சூழலை கட்டுப்பாட்டுக்குரிய தரப்புக்கள் அதனை தடுக்க தவறியிருந்தன. ஆசிரியர் ஒருவன் பாடசாலையை அணுகுகிற போதும் அதிலிருந்து விடுபடுகிற போதும் தனது பாதுகாப்பையும் தான் சார்ந்த குடும்ப அலகின் பாதுகாப்பையும் முதன்மைப்படுத்த வேண்டிய நிலையே காணப்பட்டது. அதிக வன்முறைத் தளங்களை கட்டுப்படுத்துகின்ற அரசும் அரசின் நிறுவனங்களும் தவறியிருந்தன. தனிப்பட்ட ரீதியில் படுகொலைகளும் காயப்படுத்தல்களுக்கும் அவமதிப்புகளும் தாக்குதல்களும் ஆசிரிய சமூகம் உட்படுத்தப்பட்டது.
\நான்காவது கல்வி நிறுவனங்கள் நலன் சார்ந்தும் உறவுகள் சார்ந்தும் நட்பு சார்ந்தும் கட்டமைக்கப்படுகின்ற போது அறிவியலை வளர்க்க வேண்டிய ஆசிரியனுக்குள்; தோற்றுப் போகும் மனோநிலை இயல்பாகவே வலுப்பட்டது. நிர்வாக கட்டமைப்பு முறையின் பலவீனமான கொள்கைகளும் போதிய உட்கட்டமைப்பின்மைகளும் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான உறவுத்தன்மையின் பலவீனமான வளப்பகிர்வும் அறிவியல் சார்ந்து இயங்க முடியாத சூழலை ஏற்படுத்தியது. இந்த அடிப்படையில் நகரப் பாடசாலைகள் கல்லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் குவிந்துள்ளன. மத்திய அரசின் பாடசாலைகள் மாகாண அரசின் பாடசாலைகள் என்ற நடைமுறைகளும் அத்தகைய பலவீனத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஒரே பாடத்திற்காக நகரங்களில் எண்ணிக்கையற்ற ஆசிரியர்கள் காணப்படுகின்ற போது கிராமங்களில் ஆசிரியர் பற்றாக்குறையால் முக்கிய பாடங்களை பாடசாலைகள் இடைநிறுத்துகின்ற நிலை காணப்படுகிறது. இது கிராம மட்டத்தில் இயங்கும் பாடசாலைகள் மூடப்படுகின்ற நிலையக்கு இட்டுச் செல்கிறது. இது கல்விக் கொள்கையின் அமுலாக்கத்தின் பலவீனம் அடையாளப்படுத்தப்படுகிறது. இது பெரும் அளவுக்கு ஆசிரியர்களின் ஆசிரியர்துவத்தை தனித்துவம் இல்லாமல் செய்ய முயல்கிறது.
ஐந்தாவது பயிற்சி அற்ற ஆசிரியர்களின் ஆசிரிய நியமனங்கள் பதவி நிலை நியமனங்கள் திறமையின் அடிப்படையில் இல்லாத ஒரு சூழலை தோற்றுவித்திருக்கின்றது. பாடசாலை நிர்வாக கட்டமைப்பு கையாளுவதற்கான ஆசிரியர் வளம் இன்மை பாடசாலைகளில் அதிகம் நிலவுகிறது. கிராம பாடசாலைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களை கற்பிக்கும் ஒரேயாசிரியர் பயிற்சியற்ற சூழலில் அறிவியலை தொழில்நுட்பத்தை மட்டுமின்றி மனோநிலையையும் மாணவர் மத்தியில் பலவீனப்படுத்தி விடுகிறது. இதன் விளைவு சமூகத்தில் இருப்பில் வன்முறைகளுக்கும் பிறழ்வான நடத்தைக்கும் மூலவேராகின்றது. 30வருட ஆயுதப் போரில் மூழ்கியிருந்த போதும் கல்வியில் வளர்ச்சி பாதிக்காது காணப்பட்டதற்கு மரபு சார்ந்த கல்வியே காரணமாக புரிந்து கொள்ளப்படுகிறது. கல்வியின் புறச்சூழல் ஆரோக்கியமான மனோநிலையை உருவாக்குகின்ற களத்தை தந்திருந்தது. ஆனால் அது அனைத்தும் மரபுகளுக்குள்ளால் கட்டமைக்கப்பட்ட காலமாக இருந்தது. வடக்கு கிழக்கு திறந்துவிடப்பட்ட போது அது ஒரு உலகமய மரபுக்குள் நுழைந்தது. அத்தகைய உலகமய மரபு திறனற்ற சூழலை தோற்றுவித்தது.
எனவே பாடசாலைகளை, கல்வி நிறுவனங்களை, மாணவர்களை, மற்றும் சமூகத்தை குற்றம் சாட்டுவதற்கு முன்னர் அதற்கான புறச் சூழலையும் அகச்சூழலையும் அரசாங்கம் கட்டமைக்க வேண்டும். அதில் சமூகம் பங்கெடுக்க வேண்டும். கல்வி என்பது கல்வி நிறுவனங்களுக்குள் மட்டும் உருவாகுதல்ல. அதற்கான புறச் சூழலும் இசைந்து போகக் கூடிய விதத்தில் மாற்றங்கள் நிகழ்த்தப்பட வேண்டும். வேகமான தொழில்நுட்ப யுகத்தில் அதனை சாத்தியப்படுத்துவது என்பது கடினமான இலக்கு. போதனைகளை யாரும் முன்வைத்து விட்டு செல்ல முடியும். ஆனால் அவை ஒவ்வொன்றும் செயல் வடிவம் பெறக் கூடியதாக காணப்படுகின்ற போது மட்டுமே சாத்தியமான வளர்ச்சி நிலையை அடைய முடியும். போதைப் பொருள் பாடசாலைகளை கல்லூரிகளை இலக்கு வைக்கிறது என்பதை அரசாங்கத்தினதும் சமூகத்தினரும் தோல்வியாகும். அதனை அரசாங்கமும் சமூகமும் கூட்டாக கட்டுப்படுத்தும் போது மட்டுமே அதிலிருந்து விடுபடுகின்ற நிலையை உருவாக்க முடியும். மாறாக அரசாங்கமோ சமூகமோ அதனை ஊக்குவிப்பது என்பது ஒட்டுமொத்தமான தேசத்தின் தோல்வியாகவே அமையும்.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:யாழ்.தினக்குரல்)
