இலங்கை இந்திய உறவு வலுப்படுத்த வேண்டும் என்ற சூழலுக்குள் இந்தியா காணப்படுகிறது என கடந்த வாரம் இப்பகுதியில் உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் நீட்ச்சியை இந்தவாரம் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது. இலங்கையின் ஜனாதிபதி அநுர குமாரதிஸநாயக்காவும் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவும் இணைந்து மன்னார் பிராந்தி சுகாதார மோம்பாட்டை ஏற்படுத்தும் விதத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் விபத்து மற்றும் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு 16.09.2026 இடம்பெற்றுள்ளது. இந்திய அரசாங்கத்தின் 600 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரு நாட்டுக்குமான உறவு மட்டுமன்றி வடக்குக்கான உறவையும் பலப்படுத்துகின்ற விதத்தில் நிகழ்வு அமைந்திருக்கின்றது என்பதை கண்டு கொள்ளக் கூடியதாக இருந்தது. இக் கட்டுரையும் இலங்கை-இந்தியா உறவு பலப்படுத்தப்பட வேண்டும் என்ற சந்தோ~; ஜாவின் உரையாடலை விளங்கிக் கொள்வதற்கு முயல்கிறது.
முதலில் நிகழ்வில் சந்தோஷ் ஜா உரையாற்றுகின்ற போது முன்வைத்த விடயங்களை நோக்குவது அவசியமானதாகும்.
இந்தியா – இலங்கைக்கு இடையிலான ஆழமானதும் நீண்டகாலமானதுமான தனித்துவமான உறவு தொடர்ந்து மேலும் வலுப்படுத்தப்படும். இரு நாடுகளின் மக்களின் நலன் மற்றும் செழிப்பை உறுதிப்படுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டின் வெளிப்பாடாக இந்தியா – இலங்கை உறவு அமைந்துள்ளதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை வளமான தேசமாகவும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை உருவாக்கும் மாற்றத்திற்கான பாதையிலும் பயணித்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் மாற்றத்திற்கான முயற்சிகள் தெளிவாக வெளிப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா பல்வேறு திட்டங்களின் ஊடாக நெருக்கமாக இணைந்து செயற்பட்டுவருவதாகவும் கூறியுள்ளார். வடக்கு மாகாண மக்களுடனும், இலங்கையுடனும் மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு துறைகளில் இந்தியா பல ஆண்டுகளாக இணைந்து செயற்பட்டு வருவதாகவும் இலங்கையின் அனைத்து சமூகங்களினதும் நலன் மற்றும் செழிப்பை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் இந்தியா தொடர்ந்து நெருக்கமாக இணைந்து பணியாற்றும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். .அவ்வாறே இலங்கையின் ஜனாதிபதி அநுர குமாரதிஸநாயக்க நிகழ்வில் உரையாற்றுகின்ற போது இலங்கையில் சுகாதார சேவையை வலுப்படுத்துவதற்கு இந்திய அரசு வழங்கிவரும் பங்களிப்புக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய அரசாங்கத்துக்கும் விசேட நன்றிகளை தெரிவித்திருந்தார். இத்தகைய உரைகளிலின் புரிதல் எட்டப்பட வேண்டிய நிலை காணப்படுகிறது. அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.
முதலாவது இலங்கை இந்திய உறவு வலுவானதாக காணப்பட வேண்டும் என்பது இலங்கைக்கான இந்திய தூதுவரது உரை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் அமைவிட முக்கியத்துவம் இந்தியாவின் பாதுகாப்போடும் இந்திய அரசியல் பொருளாதாரம் விடயங்களோடும் அதிகமான நெருக்கத்தைக் கொண்டிருப்பதனால் அத்தகைய உறவின் முக்கியத்துவம் அவசியமானதாக காணப்படுகிறது. அது மட்டுமின்றி இலங்கைக்கு இந்தியாவுக்குமான தரைவழிப் பாதை தொடர்பில் அதிக ஈடுபாடு கொண்ட சந்தோஷ் ஜா வடக்கை முதன்மைப்படுத்தியும் வடக்குக்கும் இந்தியாவுக்குமான உறவின் அவசியத்தையும் வலியுறுத்தி இருந்தமை கவனத்திற்குரியது. இந்தியாவின் அணுகுமுறைகளில் தனித்துவமான ஒரு போக்கொன்றை இனம்காண முடிந்ததை கண்டு கொள்ள முடிகிறது. இலங்கையில் ஜே.வி.பி. அரசாங்கம் ஆட்சியில் இருப்பதற்கான அடிப்படையை இந்தியா முதன்மைப்படுத்துகின்ற அதேவேளை வடக்கு கிழக்கு சார்ந்த அரசியலில் கவனம் கொள்வதில் ஈடுபாடு காட்டுவதில் முனைப்பு கொண்டதாக ஜாவின் உரை விளங்குகிறது. காரணம் இலங்கை பாதுகாப்பு பொறுத்து இந்தியாவோடு இருக்கின்ற நெருக்கத்தை வடக்கு கிழக்கு சார்ந்த விதத்தில் கையாள வேண்டிய தேவைப்பாடு இந்தியாவுக்கு உண்டு என்பதை உணர்த்துகின்றது. ஆனாலும் இந்தியா பொருளாதார உதவிகளையும் ஒத்துழைப்பையும் அனுசரணைகளையும் வடக்கு கிழக்கு நோக்கி அதிக வழங்கலை மேற்கொள்கிறது. அதற்காக அரசியல் ரீதியான அதிகாரம் தமிழ் மக்களிடம் இருக்கின்ற போது மட்டுமே இந்தியா வழங்குகின்ற நிதி உதவிகளும் வீடமைப்பு திட்டங்களும் பொருளாதார ஒத்துழைப்புகளும் நிலையானதாக விளங்கும் என்பதை புரிந்து கொள்வது அவசியமானது. தமிழ் மக்களுக்கான தெளிவான ஒரு அரசியல் அதிகாரம் கிடைக்கப் பெறுகின்ற போது மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படும் அபிவிருத்திய பாதுகாக்கப்படும் என்ற எண்ணப்பாங்கு முதன்மைப்படுத்தப்பட வேண்டும். அரசியல் அதிகாரமற்ற அபிவிருத்தியதும் பாதுகாப்பு அற்றதாகவும் மீறப்படக்கூடியதாகவும் மீளப்பெறக்கூடியது ஒன்றாகவும் அமைந்திருக்கும். மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் உள்ளாக்கப்பட உள்ள மன்னார்; வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் இந்திய உதவி திட்டத்தை கைமாற்றுகின்ற செய்முறை ஒன்றை இலங்கையின் ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்.
இரண்டாவது இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்ததோடு இந்தியாவின் நிதியை உதவியை முன்மொழிவதனூடாக மன்னர் வைத்தியசாலையை மத்திய அரசின் நலனுக்குள் உட்படுத்தியுள்ளார். இது மாகாண சபையை முறைமையை பலவீனப்படுத்துகின்ற அல்லது மாகாணசபைகள் அதிகாரங்களை பலவீனப்படுத்துகின்ற அல்லது வடக்கின் சுகாதார சேவையை மத்திய அரசுக்குள் உள்வாங்குவது என்ற செய்முறை ஒன்றை வெற்றிகரமாக நகர்த்தி இருக்கின்றனர். இந்திய அரசாங்கம் இனப்பிரச்சினைக்காக முன்மொழிந்த மாகாண சபை முறைமையை இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியினால் பலவீனப்படுத்துகின்ற நடவடிக்கையாகவே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. மன்னார் பொது வைத்தியசாலையின் நிர்வாக அதிகார கட்டமைப்புகளை மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களிடம் காணப்பட்டாலும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் உண்டு. இதுவே இலங்கை இந்தியா உறவின் இலங்கை நோக்கிய பார்வையாக உள்ளது. வடக்கு கிழக்கு தமிழர்கள வாழும் பிரதேசங்களில் அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற அனேகமான அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா-சீனா மற்றும் அமெரிக்காவின் பெயரால் நிகழ்த்துவதில்; கரிசனை கொள்கின்றது.
எனவே இந்தியா கருதுவது போல் இலங்கையுடனான உறவை வலுப்படுத்தும் விதத்தில் இலங்கைய ஒத்துழைப்பு வழங்கினாலும் இலங்கை ஆட்சியாளர்கள் வடக்கு கிழக்கை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை அதிகம் முதன்மைப்படுத்துகின்றனர். பதிமூன்றின் கீழான மாகாண சபை அதிகார எல்லைகளை மட்டுப்படுத்துவதிலும் அல்லது இல்லாமல் செய்வதிலும் வெற்றிகரமான பக்கத்தை நிகழ்த்துகின்றனர். இந்தியாவை வைத்துக் கொண்டே இந்தியா முன்வைத்த மாகாண சபை பலவீனப்படுத்தும் நடவடிக்கை ஜே.வி.பி.அரசாங்கம் நிகழ்த்திவருகிறது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:யாழ்.தினக்குரல்)
