ஈரான் மீதான போரில் அமெரிக்கா தோற்றுவிட்டதென்று மதிப்பீடு அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அதன் வெளியுறவுச் செயலாளரது அறிவிப்புகள் உணர்த்துகின்றன. மீண்டும் மீண்டும் போரை பிரகடனப்படுத்துவதும் சமாதானத்திற்கு தயாராவதுமாக அமெரிக்க ஜனாதிபதி தனது கருத்தை பதிவு செய்திருக்கின்றார். அமெரிக்க வல்லரசின் தன்னாதிக்கம் என்பது முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. இது ஈரானிடம் தோல்வி கண்டிருப்பது என்பது மட்டுமல்ல உலகளாவிய ஆதிக்கத்திலிருந்தும் தோல்வி கண்டதாகவே கருதப்படுகிறது. ஆனாலும் போர் ஓய்வை போருக்கு தயாராகும் காலமாக அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு கருதுவதை கைவிடவில்லை என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஈரான் தனது இராஜதந்திர நகர்வுகளில் முனைப்பாக செயல்படுத்துகிறது. ரஷ்சியாவை அடுத்து சீனாவுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi )விஜயம் செய்துள்ளார். இக்கட்டுரையும் ஈரானிய வெளியுறவு அமைச்சரின் சீன விஜயத்தின் முக்கியத்துவத்தை தேடுவதாக அமைந்துள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் 06.05.2026 சீனாவுக்கு மேற்கொண்ட அரசமுறை விஜயம் முக்கியத்துவம் வாய்ந்த இருநாட்டு உறவுக்குமான அடிப்படையாக விளங்குகிறது. சீன வெளிவிவகார அமைச்சர் வாங்-ஜி (Wang Yi)உடனான சந்திப்பும் இரு நாட்டுக்கு இடையிலான பொருளாதார உடன்பாடுகளும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான உரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீனா, ஈரான்-அமெரிக்க போரில் முதன்மையாக ஒத்துழைப்பை வழங்கிய நாடு என்பது தெரிந்த விடயமே. அதே நேரம் ஈரானின் இராணுவ ரீதியான நடவடிக்கைகளுக்கு பாரியளவிலான உளவுத் தகவல் பரிமாற்றத்தையும் தொழில்நுட்ப ஆயுதங்களையும் வழங்கியதோடு இராஜதந்திர ரீதியில் ஈரானின் நகர்வுகளை ஐக்கிய நாடு சபையிலும் உலக நாடுகள் மத்தியிலும் பிரதிபலித்து வந்தது என்பது மறுக்க முடியாத செய்தியாகும். ஈரானின் வெற்றிக்கு பின்னால் சீனாவின் ஒத்துழைப்பு பிரதானமானதாக காணப்படுகிறது. இதனை விரிவாக நோக்குவது அவசியமானது.
முதலாவது சீன தொடர்ச்சியாக பிராந்திய அமைதியையும் ஈரான் மீதான போரையும் தடுத்து நிறுத்துவதற்கு பெருமளவில் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக போர் தொடங்கியதற்கு (பெப்ரவரி-28.2026) பின்னர் ஏப்ரல் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசரை சீனாவுக்கு அழைத்து சமாதானத்தை வலியுறுத்தியிருந்தது. அப்போது சீன ஜனாதிபதி ஜி.ஜின்பிங் நான்கு அம்சத் திட்டத்தை முன்மொழிந்திருந்தார். அவ்வாறு மார்ச்(2026) மாதத்தின் இறுதிப் பகுதியில் பாகிஸ்தான்; வெளியுறவு அமைச்சர் சீனாவுக்கு மேற்கொண்ட விஜயம் பிராந்தி அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துகின்ற விதத்தில் சீனாவினுடைய நடவடிக்கைகள் அமைந்திருந்தது. போர் தொடங்கியதிலிருந்து நிலைமையைத் கையாளும் வகையில் பல்வேறு தரப்பினரிடையே மத்தியஸ்தம் செய்வதற்காக சீனா தொடர்ந்து தூதுவர்களது பயணங்களையும் மற்றும் சமாதான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. அதற்கான அடிப்படை காரணமாக இருப்பது ஹர்மூஸ் நீரிணையூடாக சீனாவுக்கான சக்திவளத் தேவையை நிறைவு செய்கின்ற விதத்தில் மேக்காசிய நாடுகள் அதிகமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. ஏறக்குறைய 45 சதவீதமான பெற்றோலியத்தை சீனா தனது நுகர்வுக்காக ஹர்மூஸ் நீரிணையூடாக பரிமாற்றம் செய்கிறது. அதனால் பிராந்திய அமைதியை முன்னெடுப்பதில் சீனா முனைப்பாக செயல்படுகிறது. மறுபக்கத்தில் உலகளாவிய வல்லரசு என்ற இலக்கை நோக்கியதாகவும் சீனாவின் நகர்வு அமைந்துவருகிறது. சீனா முன்வைத்த நான்கு அம்சத் திட்டமும் அமெரிக்க-ஈரான் போரை நிறுத்துவதற்கான வழிமுறையை மட்டும் கொண்டதல்ல. அது சீனாவின் உலகளாவிய நலனுக்குமுரியதாகவே தெரிகிறது. இது இருதரப்பையும் ஒரு புரிந்துணர்வின் கீழ் உரையாடலை ஏற்படுத்துகின்ற விதத்திலானதும் சமாதானத்தை கட்டி யெழுப்புகின்ற நோக்கத்துடனும் சீனாவினால் மேற்கொள்ளப்பட்டது என ஈரானிய வெளயுறவு அமைச்சர் சீன விஜயத்தின் போது குறிப்பிட்டிருந்தார். அத்தகைய நான்கம்ச முன்மொழிவு இரு நாட்டுக்கு (ஈரான்-சீனா) இடையிலான நம்பிக்கையை அதிகரிக்க செய்திருப்பதோடு சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் சீனாவின் நடவடிக்கை ஈரானிய இருப்பையும் இறையாண்மையும் அங்கீகரிப்பதற்கான உலகளாவிய உத்தரவாதத்தை வழங்கி இருப்பதாக அராக்ச்சி தெரிவித்துள்ளார்.
இரண்டாவது சீனா முன்வைத்த நான்கம்சத் திட்டம் போரில் சர்வதேச சமூகத்தை கவனம் கொள்ளச் செய்துள்ளது. இது மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரை குறிப்பாக இஸ்ரேலை விரைவில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அப்பாவிப் பொதுமக்களை கொல்வதை தவிர்க்கவும், ஈரானிய அணுசக்திப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வை உறுதியாக ஆதரிக்கவும் அழைப்பு விடுக்கிறது. சர்வதேச சமூகம் மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் மீது சிறப்பு செல்வாக்கு செலுத்தும் முக்கிய நாடுகள் நிலைமையைத் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்துகிறது. உறுதியுடன் இருத்தல்; அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க உதவுதல்; மற்றும் மேற்காசியாவில் அமைதியை மீட்டெடுப்பது என்ற அடிப்படையில் பாரிய பங்கை ஆற்றுகிறது.
மூன்றாவது ஈரானிய வெளியுறவு அமைச்சரின் சீன விஜயம்; அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்ன் சீன விஜயத்துக்கு முன்னதாக வடிவமைக்கப்பட்டிருப்பது அதிகமான அதிர்ச்சியை அமெரிக்க தரப்புக்கு ஏற்படுத்தியுள்ளது. மாறாக சீனாவை பொறுத்தவரையில் ஈரானின் வெளியுறவு அமைச்சருடைய வருகை அமெரிக்க-ஈரான் முரண்பாட்டின் இன்னொரு பிரதிபலிப்பாகவே நோக்கப்படுகின்றது. அடிப்படையில் சீன உலக வல்லரசு என்ற முதல் நிலையை அடைவதற்கான வாய்ப்பைக் கொடுத்த ஈரான்-அமெரிக்க போரை வழிநடத்தியதோடு ஈரானுக்குரிய ஒத்துழைப்பை தொடர்ச்சியாக வழங்க வேண்டிய தேவைப்படும் சீனாவுக்கு எழுந்திருகின்றது. இது சீனாவினுடைய எழுச்சிக்கு பின்னால் அமெரிக்கா ஈரான் மீது மேற்கொண்ட போர் அடிப்படையானது என்பதை உணர்ந்ததன் விளைவாகும். அத்தகைய நிலை நீடிக்க போர் அல்லது சமாதானம் சீனாவின் தலைமைக்கு அவசியமாகிறது.
நான்காவது அணு ஆயுதம் பொறுத்து ஈரானுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்ள சீன எடுத்து இருக்கின்ற நடவடிக்கை இஸ்ரேலின் மேற்காசியா இருப்பை அதீதமான குழப்பத்திற்குள் தள்ளியள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இஸ்ரேலை முன்னிறுத்திக் கொண்டு அமெரிக்கா மேற்காசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது போன்று சீனா ஈரானை முன்னிறுத்திக் கொண்டு மேற்காசிய அரசியலை கையாள போகிறது என்பதை கோடிட்டு காட்டுவதாகவே ஈரானிய வெளியுறவு அமைச்சரின் சீன விஜயம் காணப்படுகிறது. இரு தரப்புக்கும் இடையிலான உறவு என்பதற்குப் அப்பால் மேற்காசிய நாடுகளுடனான ஈரானின் அணுகுமுறை சீனாவின் அணுகுமுறையில் இருந்து வேறுபட்டு இருப்பதை கையாளுகின்ற விதத்திலே சீனாவின் நான்கு அம்சத்திட்டத்தின் உள்ளடக்கம் பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய ரீதியில் சீனாவின் செல்வாக்கை பலப்படுத்துவதோடு உலகளாவிய வல்லரசுக்கான அணுகுமுறையையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
ஐந்தாவது ஈரானின் வெளியுறவு அமைச்சர் சீனாவுக்கு மேற்கொண்டு இருக்கின்ற விஜயாமானது அமெரிக்காவின் Project Freedom என்ற திட்டத்தை முடிபுக்கு கொண்டுவந்துள்ளதாகவே தெரிகிறது. ஹார்மூஸ் நீரிணையைக் கைப்பற்ற அமெரிக்கா பல திட்டங்களை வகுத்த போதும் எதிலும் முழுமையான இலக்கை அடையமுடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் சீன நோக்கிய அராக்ச்சி விஜயம்; அமெரிக்கா தனது திட்டத்திலிருந்து பின்வாங்க வழிவகுத்துள்ளது. Project Freedom திட்டத்தை கைவிட்டு பின்வாங்குவது போன்றே சமாதான ரீதியான உடன்பாட்டுக்கு ஈரான் வருகை தந்திருப்பதாகவும் அதனால் சமாதானபூர்வமான அணுகுமுறையை மேற்கொள்ள இருப்பதாகவும் அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மார்க்கோ ரூபியோ (Marco Rubio) அறிவித்துள்ளார். இது ஈரான் இராஜதந்திர ரீதியில் கையாளும் திறனை கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.
எனவே ஈரானின் இராஜதந்திர நகர்வுகள் அமெரிக்காவின் போரையும் தாக்குதலுக்கான திட்டங்களையும் முறியடிப்பதாகவே காணப்படுகிறது. கடந்த வாரம் அராக்ச்சி ரஷ்சியாவுக்கு மேற்கொண்ட விஜயமும்(27.04.2026) தற்போது சீனாவுக்கு மேற்பட்டிருக்கும் விஜயமும் இராஜதந்திர ரீதியில் வெற்றிகரமானதாகவே தெரிகிறது. இது அமெரிக்காவின் நகர்வுகளை கைவிடுவதற்கும் சமாதான முறைமைக்கூடாக விடயத்தை கையாளுவதற்கும் வழிவகுத்துள்ளது என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.
(நன்றி: தினகரன்)
அரசியல் கட்டுரைகள்
