August 18, 2026
அரசியல் கட்டுரைகள்

ஈழத்தமிழர் இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஷ்டியை கோருவது தேசத்துரோகமானதா?

உலக அரசியல் வரலாற்றில் தேசிய இனப்பிரச்சினைகள் வலுவான தேச கட்டுமானங்களுக்கான அடிப்படையை ஏற்படுத்தியிருந்தது. அதற்கான நியாயபூர்வமானதும் தர்க்கரீதியானதுமான முடிவுகளை முன்வைப்பதில் சோஸலிஸ ஆட்சியாளர்களுக்கும் இடதுசாரி கொள்கை வகுப்பாளர்களுக்கும் அது சார்ந்த சிந்தனையாளர்களுக்கும் அதிக பங்கு வகித்தனர். தேசிய இன பிரச்சினைக்குரிய தீர்வு கால்மார்க்சின் மார்கசிய சிந்தனை பின்வந்த கோட்பாட்டு மற்றும் நடைமுறை சார் அறிஞர்களின் எண்ணங்களினால் அதிக மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாகவே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுகளாக பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை கோட்பாடும், சமஸ்டி கோட்பாடும் முதன்மையானதாக பின்பற்றப்பட்டது. அதன் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுகளால் புதிய நவீன அரசுகள் தோற்றின. அந்த வரிசைக்குள்ளேயே ஈழத்தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக்கான கோரிக்கைகள் மேலெழுந்திருந்தது. இலங்கை அரசின் கொள்கைக்குள்ளும் ஒற்றையாட்சிக்குள்ளும் ஏற்பட்ட நெருக்கடிகளின் பிரதிபலிப்புக்களால் சமஸ்டி கோரிக்கை 1949-1972 வரை ஈழத்தமிழரிடம் எழுச்சி பெற்றது. அதன்போது உலகளாவிய இடதுசாரி ஆட்சி முறைகளும் அன்றைய பனிப்போர் உலக ஒழுங்கும்; அதற்கான கருத்தியலும்; வலுவான ஒத்துழைப்பை கொடுத்திருந்தது. ஆனால் அத்தகைய சமஸ்டி கொள்கைக்கும் தீர்வை சாத்தியப்படுத்த முடியாத சூழலில் 1972-2009 வரை ஈழத்தமிழ் இளைஞர்கள் தனிநாட்டுக்குரிய கோரிக்கையை முன்வைத்து ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தனர். அதற்கான அங்கீகாரம் சத்தியப்படுகின்ற வாய்ப்பை இழக்கின்ற போது ஆயுத போராட்டம்; 2009 களில் முடிவுக்கு வந்தது. அதனை அடுத்தே மீண்டும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஸ்டி கோரிக்கை முன் வைக்கப்பட்டுவருகிறது.

சமஸ்டிக் கோட்பாட்டின் நடைமுறையில் பல்வேறுபட்ட வடிவங்;களுக்குள் காணப்படுகிறது. கோட்பாட்டாளர்கள் சமஸ்டியை பல பிரிப்புகளாக நடைமுறை உலகத்தில் அடையாளம் கண்டுள்ளனர். அத்தகைய அடையாளங்களில் பிந்திய வளர்ச்சி நிலையானது பொஸ்னிய-ஹெர்சிகோவினாவின் சமஸ்டி யாப்பு 1994 மார்ச் வோசிங்டன் உடன்படிக்கை மற்றும் 1995 டிசம்பர் டேரென் உடன்படிக்கையின் பிரகாரம்; மேற்குலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட தென்றாகவே பார்க்கப்படுகிறது. அது பெருமளவுக்கு உலகமயவாக்கத்திற்குள் வடிவமைக்கப்பட்டுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஸ்டி உள்ளது. இதன் உள்ளடக்கம் மிகச் சிறப்பான பாரபட்சமற்ற இனங்களுக்கிடையில் இணக்கத்தைக் கொண்டதாக தெரிகிறது. பெரும்பான்மையான பொஸ்னியர்களும் சிறுபான்மையான குரோசியர்களும் ஏனைய இனத்தவர்களும் இணைந்த ஆட்சி முறைமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக ஓரினத்தவர் இருக்கும் போது இன்னோர் இனத்தவர் உப-ஜனாதிபதியாக விளங்குவார். இலங்கை தீவுக்கு அதிகம் பொருத்தமானதாகவே பொஸ்னிய-ஹெர்சிகோவினாவின் சமஸ்டி யாப்பின் உள்ளடக்கம் காணப்படுகிறது.

புவிசார்அரசியல் தனித்துவமான சமஸ்டி இயல்புகளை வடிவமைக்கின்றது. அவ்வகையான சமஸ்டி வடிவங்களுக்கு உள்ளே 1787 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா மகாநாடு அதிகமான விவாதங்களை முன்வைத்து. இறுதியில் கூட்டாட்சிக்கு பதிலாய் சமஸ்டி ஆட்சிக்கான தீர்மானத்தை எடுத்தது. பிலடெல்பியா மாகாநாட்டின் விவாதங்களில் பிரிந்து செல்ல முடியாத ஒன்றாகவே சமஸ்டியை அடையாளம் கண்டது. கூட்டாட்சி பிரிந்து செல்வதற்கான அதிக வாய்ப்புகளை கொண்டிருக்கின்றது என்ற விவாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் அமெரிக்கா தனது அதிகார கட்டமைப்பை சமஸ்டி வடிவத்துக்குள் ஒடுக்கிக் கொண்டது. அதன் பின்னான உலகளாவிய அனுபவங்கள் அரைசமஸ்டி, முழுவளர்ச்சியடைந்த சமஸ்டி, சமச்சீரான சமஸ்டி, சமச்சீரற்ற சமஸ்டி, நாடாளுமன்றமுறைச் சமஸ்டி, ஜனாதிபதிமுறைச் சமஸ்டி, ஓரினத்தன்மையான சமஸ்டி, ஈரினத்தன்மையான சமஸ்டி, பல்லினச் சமஸ்டி, ஈரலகுச் சமஸ்டி என பல வகைப்பாடுகளை அனுபவமாக நாடுகள் கொண்டுள்ளன. அத்தகைய வரையறைகள் அனைத்தும் அந்தந்த நாடுகளில் அரசியல் கலாச்சாரம் பொறுத்தும் புவிசார் அரசியல் பொறுத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இலங்கை தீவின் சமஸ்டி பற்றிய விவாதங்கள் அவசியமானதாகவும் பொருத்தப்பாடுடையதாகவும் நோக்கப்பட வேண்டும்.

ஈழத்தமிழர்களை பொறுத்தவரையில் தனி நாட்டு கோரிக்கை கைவிடப்படுவது என்றும் சமஸ்டி கோரிக்கை முழுமைப்படுத்த முடியாதது என்றும் உரையாடல்கள் உண்டு. இது கருத்தியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட கூடியதென்றல்ல. சமஸ்டி கோருவது என்பது தனி நாட்டு கோரிக்கையை கைவிடுவதோ அல்லது அதனைக் கோருபவர்கள் துரோகிகள் என்றோ அர்த்தமாகாது. மாறாக சாத்தியப்பாடுடைய வாய்ப்புகளை முன்னிறுத்தி அதனூடாக தீர்வுகளை அடைவதற்குரிய சூழலை தேடுவது அவசியமானதும் பொருத்தப்பாடுடையதுமாகும். 21 ஆம் நூற்றாண்டின் தேசிய இனப் பிரச்சினைக்குரிய தீர்வுகளில் அனுபவம் 20ஆம் நூற்றாண்டோடு ஒப்பிடும்போது வேறுபட்டதென்றாக காணப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டில் தேசிய இனங்களுக்குரிய தீர்வுகளை சோஸலிஸ்டுகள் அதிகம் முன்னிறுத்தி இருந்தனர். அதனால் அத்தகைய தீர்வுகள் புதிய அரசுகளின் உருவாக்கங்களை தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் மூலம் சாத்தியமானது. ஆனால் நடைமுறையில் அல்லது 21ம் நூற்றாண்டு அதற்கான வாய்ப்புகள் அற்ற ஒரு சூழலில் தேசங்கள் வல்லரசுகள் நலன்பால்பட்டு தேசிய இனங்களுக்குரிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சாத்தியப்படுத்துகின்றன. கிழக்கு ஐரோப்பா முழுவதும் தோன்றிய நவீன அரசுகளின் வடிவங்களுக்கு பின்னால் மேற்குலக வல்லரசுகளின் நலன்களே ஆழமான தலையீட்டினை ஏற்படுத்தியிருந்தன. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் கிழக்கைரோப்பியப் பிராந்தியத்தில் அரசுகளின் உருவாக்கங்களை தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தின் பெயரில் வெற்றிகரமான உடைப்புகளை செய்து தமக்கு ஏற்ற வகையிலான அரசகட்டமைப்புகளை வடிவமைத்துக் கொண்டன. இத்தகைய அனுபவமே 21ம் நூற்றாண்டின் முதலாவது தசாப்த அனுபவமாக இருந்தது. ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தங்கள் முழுமையாகவே தேசிய இனங்கள் மீது நெருக்கடி மிக்க சூழல் ஒன்றைத் தோற்றுவிப்பதில் பிராந்திய அரசுகளும், அரசுகளும், சர்வதேச அரசுகளும் முனைப்புக் கொண்டிருந்தன. அதிலும் குறிப்பாக மேற்காசியா பொறுத்து மேற்குலக வல்லரசுகளின் அணுகுமுறை அத்தகைய வடிவத்துக்குள்ளையே மண்டியிட்டுள்ளது. குர்த்திஸ்தான் விடுதலைப் போராட்டம் மற்றும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கான தீர்வற்ற செய்முறையானது பல தசாப்தங்களாக நிகழும் புவிசார் அரசியல் போராட்டமாக உள்ளது. வல்லரசுகளின் நலன்கள் பொறுத்து தேசிய இனங்களினுடைய பிரச்சினைக்கான தீர்வுகள் எட்டப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு ஈழத் தமிழர்கள் தமது தேசிய இன பிரச்சினைக்குரிய தீர்வை இனங்காணவும் தீர்வை நோக்கிய அணுகுமுறைகளை நகர்த்தவும் திட்டமிடுவதும் அவசியமானது.

தேசிய இனப்பிரச்சினை என்பது சர்வதேச பிரச்சினை என்ற அடிப்படைகளுக்குள்ளேயே ஈழத்தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்குரிய தீர்வை தேடுதலும் அடைதலும் சாத்தியமாகும். இந்தியா பிராந்திய ரீதியில் வலுவான சக்தியாக விளங்கும் வரையும் அதன் செல்வாக்குக்குள் ஈழத்தமிழருடைய அரசியல் இறைமை நிர்ணயிக்கப்பட வேண்டிய சூழல் தவிர்க்க முடியாததாக விளங்குகிறது. 30 வருட கால ஆயுதப் போரை நிகழ்த்திய விடுதலைப்புலிகளின் வீழ்ச்சி என்பது இந்தியா சார்ந்த கொள்கையின் பிரதிபலிப்பென்பதை அறிவியல் ரீதியில் நிராகரித்து விட்டு செல்ல முடியாது. அதனால் தனிநாடு என்ற அம்சம் சாத்தியமற்றது என்றோ தீர்வொன்று சாத்தியமானதற்கு தடையானது என்றோ அர்த்தம் அல்ல. அது சாத்தியப்படாத அம்சம் என்றோ உரையாடுவதல்ல நோக்கம். குறைந்தபட்சம் சாத்தியப்படான செய்முறையை முன்னுறுத்திக் கொண்டு நகர்வதே ஈழத்தமிழருடைய அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வுகான வாய்ப்புக்களைத் தரும். 13ஆம் திருத்த சட்டம் மூலம் ஈழத்தமிழருடைய தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக கண்டுகொள்ள முடியாது. காரணம் அதிகாரமற்ற சபை என்பதை அதன் நடைமுறை சார்ந்து இலங்கை அரசின் அணுகுமுறை எத்தகையது என்பது கடந்த 39 வருடங்களில் அல்ல 17 வருடங்களில் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது. அப்படியாயின் தேசிய இனமாக தமது பாரம்பரிய வாழ்விடப் பிரதேசமாக வடக்கு கிழக்கை கொண்ட இறைமையும் சுய ஆட்சியும் சுயநிர்ணயமும் கொண்டதான ஓர் ஆட்சி முறைமை அல்லது தீர்வாக சமஸ்டி மட்டுமே இருக்க முடியும்.

ஈழத்தமிழர்கள் சமஸ்டியை நோக்கி நகர்வது தனி நாட்டை கைவிடுவதாகவோ துரோகமிளைப்பதாகவோ கருதப்படுவது யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதன் விளைவாகிவிட வாய்ப்புள்ளது. ஆனால் அதனை அடைவதற்கான வழிமுறை எதனையும் கொண்டிருக்காத ஓரினம் தனிநாடு பற்றி உரையாடுவது அதற்கான சூழல் சாத்தியமுடையதா என்ற கேள்வி மீது நின்று கொண்டு விடை தேடுதல் வேண்டும். விடுதலைப் புலிகள் தனிநாட்டுக்கான தெளிவான வழிவரைபடத்தைக்; கொண்டு கருநிலை அரசை முதன்மைப்படுத்தி போராடினார்கள். ஆனால் 2009 பின் அத்தகைய எந்தவித வடிவங்களுமின்றி கோரிக்கைகளாக மட்டுமே தனிநாடு பற்றிய எண்ணம் உரையாடப்படுகிறது. இலக்கை அடைவதற்கான சூழல் ஒன்றின் பால்பட்டு அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் ஈழத்தமிழராக ஒன்றிணைந்து பிராந்திய, சர்வதேச நகர்வுகளை சாத்தியப்படுத்தக் கூடிய வாய்ப்பு ஒன்றை அடையாளம் காண முடியாதவர்களாக ஈழத்தமிழர் காணப்படுகின்றனர். தனிநாட்டுக்குரிய வாய்ப்பினை உத்தரவாதப்படுத்துவதற்கு எத்தகைய எத்தனாம் மேற்கொள்ளாது ஓரினம் தனிநாட்டை பற்றி உரையாடுவதும் அதற்காக காலத்தை செலவு செய்வதும் இனத்தின் இருப்பை இல்லாமல் செய்வதற்கு சமமானது. சாத்தியப்பாடானதை நோக்கி நகர்வதே தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்பை ஏற்படுத்தும். அதனை நோக்கி நகருகின்ற தரப்புகளை ஆதரிப்பதும் அணி திரட்டுவதும் வெற்றிகரமான சூழலை நோக்கி இராஜீக முயற்சிகளை முன்னிறுத்துவதும் அவசியம். இலங்கை நோக்கி இந்தியாவின் வெளியுறவு தீவிர கண்காணிப்பை கொண்டிருக்கின்றது என்ற கருத்தியலோடு அதனை கையாளுவதற்கான உத்திகளை வகுத்துக் கொண்டு செயல்படுவது அவசியமானதாக தெரிகின்றது. அது சில சந்தர்ப்பங்களில் சமஸ்டியை கடந்து சுயநிர்ணயத்திக்கான வாய்ப்பினை உத்தரவாதப்படுத்த உதவும் என்பது முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.

எனவே தீர்வை நோக்கி முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் ஈழத் தமிழர்கள் வரவேற்கின்ற அதே சந்தர்ப்பத்தில் அத்தகைய தீர்வுகள் வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்ட ஒரு தேசிய இனம் என்று அடையாளத்தை உத்தரவாதப்படுத்திய இறைமை பொருந்திய சுயநிர்ணையத்துக்கு உட்பட்ட ஆட்சி முறையினை தக்க வைக்க கூடிய தீர்வு அவசியமானது. அதனை நோக்கி நகர்வது ஆரோக்கியமான மாற்றங்களை அடைவதற்கான வழிமுறையாக அமையும். சாத்தியப்படற்ற விடயங்களை விவாதிப்பதை விடுத்து சாத்தியமானதை நோக்கி இலங்குகளை வடிவமைத்தலும் அதற்கான வழிவரைபடத்தை வரைபதும் அதன்வழி செயல்படுவதுமே பொருத்தமான விவாதமாகும்.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி:யாழ்.தினக்குரல்)