June 14, 2026
அரசியல் கட்டுரைகள்

தீவிரம் பெறும் அமெரிக்க-ஈரான் போரால் போர்நிறுத்தம் முடிபுக்கு வருகிறதா?

அமெரிக்கா-ஈரான் போர் மீண்டும் தீவிரம் பெற தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவின் உலங்குவானூர்தியான ஏ.எச்-64 அப்பார்ச்சி (AH-64 Apache helicopter) மீதான ஈரானிய தாக்குதலின் பிரதிபலிப்பாக ஈரானுடனான போரை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகிறது. ஹார்மூஸ் நீரிணையில் பறந்து சென்ற அமெரிக்க ஹலிகொப்ரர் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படை தாக்கியமையே அமெரிக்காவின் தாக்குதலுக்கு காரணம் என பென்ரகன் அறிவித்துள்ளது. பரஸ்பரம் இருநாட்டு தலைவர்களும் எச்சரிக்கைகளையும் தாக்குதல்களையும் நிகழ்த்தி வருகின்ற சூழலில் சமாதான முயற்சி முடிவுக்கு வரும் நிலையில் உலக அரசியல் போக்கு காணப்படுகிறது. இக்கட்டுரையும் மீளவும் முனைப்புப் பெறும் அமெரிக்கா-ஈரான் போர் ஏற்படுத்தக் கூடிய விளைவுகளை தேடுவதாக உள்ளது.

முதலாவது போரின் தீவிரத்தன்மை இருநாட்டு ஜனாதிபதிகளும் வெளிப்படுத்தும் எச்சரிக்கைகள் உணர்த்துகின்றன. குறிப்பாக ஈரான் தலைவர்கள் உடன்பாடு எட்டுவதற்கான முயற்சிகளை மீண்டும் மீண்டும் தாமதப்படுத்துவதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது மேலும் இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரித்தார். அமெரிக்க அப்பாச்சி ஹெலிகொப்டரை ஈரானிய ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தியதற்குப் பதிலடியாக அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கள் வெளியாகியுள்ளது. பதிலுக்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷஷ்கியன் (Masoud Pezeshkian) ஈரான் பதில் தாக்குதலை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்ச்சி குறிப்பிடும் போது அமெரிக்கப் படைகள் உயிர் தப்ப வேண்டுமாயின் பராசீகத்தை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரித்தார். இவ்வாறு பரஸ்பரம் எச்சரிக்கைகளை முன் வைத்துக்கொண்டு தாக்குதலை நகரத்திவருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கைகள் மீது உலகளாவிய ஊடகங்களும் நாடுகளும் நம்பிக்கை இழந்துவரும் நிலையில் அமெரிக்காவின் வல்லரசு ஆதிக்கத்திற்கு சவால் மிக்கதென்றாக மாறியுள்ளது. இத்தகைய எச்சரிக்கையும் சாத்தியமற்ற போகின்ற நிலை ஒன்றை ஈரான் போரில் அமெரிக்கா எதிர் கொண்டிருக்கின்றது. அதனால் அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைகள் காலாவதியானவையான விளைவை தரக்கூடியவையாக தெரிகின்றது. ஓய்வுபெற்ற அமெரிக்க ஜெனரல் மார்க் கிம்மிட் (Mark Kimmitt) அல் ஜசீராவிடம் அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதல்கள் ஈரானின் புதிய போர்க்கள ஆத்திரமூட்டலை விட முடங்கியுள்ள இராஜதந்திரத்தின் மீதான விரக்தியிலிருந்தே அதிகம் உருவாவதாகத் தெரிகிறது என்று கூறுகின்றார். வியட்நாம் போருடன் ஒப்பிட்டும் போது அவர்களை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்பு கடுமையான குண்டுவீச்சைப் பயன்படுத்தியதாகக் கூறினார். ஆனால், அதே அணுகுமுறை ஈரானிடம் பலனளிக்குமா என்பது கேள்விக்ககுரியது என்றார். ஈரானியர்கள் பொறுமையைத் தங்களின் மிகச்சிறந்த கருவிகளில் ஒன்றாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இரண்டாவது ஈரான் ஜனாதிபதி மற்றும் வெளிவரா அமைச்சர்களின் அமெரிக்கா நோக்கிய உரையாடல்களும் எச்சரிக்கைகளும் தீவிரம் பெறுவதாகவும் அதிகம் அச்சமூட்டுவதாகவும் மாறி இருக்கின்றது. மேற்காசியாவில் அமைந்துள்ள அமெரிக்காவின் தளங்களை நோக்கி தாக்குதலை விரிவுபடுத்தி இருக்கும் ஈரான் இஸ்ரேல் மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தி வருகிறது. ஈரானின் தாக்குதல்களை தாம் முறையடித்துள்ளதாக வளைகுடா நாடுகள் குறிப்பிட்ட போதும் இஸ்ரேல் மீதான தாக்குதல் பாரிய விளைவுகளை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தி இருப்பதாக ஊடகங்கள் உறுதிப்படுத்துகின்றன. இன்று (11.06.2026) இரவு ஈரான் மீது அமெரிக்கா மிகக் கடுமையாக தாக்குதல் நடத்தும் என்றும் ஈரானின் கார்க் தீவு (Kharg Island) மற்றும் பிற எண்ணெய் உள்கட்டமைப்பு மையங்களை அமெரிக்கப் படைகள் கைப்பற்றும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் புஷர் துறைமுகத்திலிருந்து வடமேற்கே சுமார் 55 கி.மீ (34 மைல்கள்) தொலைவிலும் ஈரானிய பெருநிலப்பரப்பிலிருந்து 15 கடல் மைல்கள் (சுமார் 28 கி.மீ) தொலைவிலும் அமைந்துள்ள கார்க் தீவு ஈரானின் மறுக்க முடியாத பொருளாதார முதுகெலும்பாகும். இந்தத் தீவு ஈரான் நாட்டின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தைக் கையாள்வதோடு, ஆண்டுதோறும் சுமார் 950 மில்லியன் பீப்பாய்களையும் கையாளுகிறது. தங்கள் நாட்டின் மீதான அமெரிக்கத் தாக்குதல்களை ஈரானின் வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளதுடன் இது போர் நிறுத்தத்தை நடைமுறையில் அர்த்தமற்றதாக்கியுள்ளது என்றும் கூறியுள்ளது.

மூன்றாவது ஈரானிய எச்சரிக்கை தீவிரம் பெறுகின்ற சூழலில் அணு ஆயுத உற்பத்திக்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகவே தெரிகின்றது. ஈரானிடம் காணப்படும் செரிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவு சராசரியாக 10 அணுக்கூண்டுகளை தயாரிக்கும் திறனைப் பெற்றிருப்பதாக தெரிய வருகிறது. ஈரானின் உறுதியான எச்சரிக்கைகளும் அதன் நடவடிக்கைகளும் அணு ஆயுதத் திறன் நோக்கிய விரிவாக்கத்தை உத்தரவாதப்படுத்தும் செயலாகத் தெரிகிறது.

நான்காவது ஈரான் சீனா-ரஷ்சியா-வடகொரியா போன்ற நாடுகளுடன் பாதுகாப்பு உடன்பாடு பற்றிய உரையாடலை அண்மை காலகட்டத்தில் தீவிரப்படுத்தி இருந்தது. அதற்கான வெளிப்படையான செய்திகளை ரஷ்சிய ஜனாதிபதி புட்டின் அறிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதக்கான இன்னோர் நகர்வாகவே வடகொரியாவுக்கு சீன ஜனாதிபதி ஜின்-பிங்ன் விஜயம் அமைந்திருப்பதாக தெரிகின்றது. சீனாவை நோக்கி மேற்குலக நாட்டு தலைவர்கள் விஜயம் செய்கின்ற போது சீனா வடகொரியா நோக்கி பயணம் செய்திருப்பது உலக அரசியலை அதிக கவனம் கொண்டிருக்கும் விடயமாகவே உள்ளது. இது எதிர்காலத்தில் நான்கு நாடுகளும் பாதுகாப்பு உடன்பாட்டுக்கான முனைப்புகள் முக்கியம் பெறும் என்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

ஐந்தாவது அமெரிக்காவின் உள்நாட்டில் அடைந்திருக்கும் நெருக்கடியின் சர்வதேச மட்டத்தில் உருவாகி வரும் எதிர் அணிகளும் அதன் வல்லரசு வலுவை முடிவுக்கு கொண்டு வரும் நிலைக்குள் தள்ளுகின்றது. ஐரோப்பாவால் மட்டுமன்றி நேட்டோ நாடுகளாலும் கைவிடப்பட்ட அமெரிக்கா இஸ்ரேலிய கூட்டுடன் ஈரானை தாக்க முயன்றதன் விளைவுகளால் உலக வல்லரசு என்ற அந்தஸ்தை இழக்கின்ற நிலையை நோக்கி பயணிக்கின்றனது. வியட்நாம் போரில் தந்ரோபாயமாக பின்வாங்கிய அமெரிக்க நிர்வாகம் அமெரிக்க வல்லரசின் இருப்பை உத்தரவாதப்படுத்தியிருந்தது. ஆனால் ட்ரம்ப்ன் நிர்வாகம்  ஈரானுடனான போரை பின்வாங்குவதற்கு தயார் இல்லாதது மட்டுமின்றி அதற்கு பின்னால் இஸ்ரேலின் நலன்கள் முக்கியமான விடயமாக காணப்படுகின்றது. இஸ்ரேல்-அமெரிக்க முரண்பாடு என்பது உரையாடலுக்கு மட்டுமே உரியதாக விளங்குகிறது. அடிப்படையில் இரு நாடுகளின் கூட்டு திட்டமே ஈரான் மீதான போர். அதனால் இப்போரின் விளைவுகளை அமெரிக்கா மட்டுமின்றி இஸ்ரேலும் சந்திக்கின்ற நிலைக்குள் நகருகின்றது. மேற்காசியாவில் அமெரிக்காவின் வலுவான நட்பு சக்தியான இஸ்ரேலைப் பலவீனப்படுத்துதல் என்பது அமெரிக்காவின் வீழ்ச்சிக்கான இன்னொரு முகமாக இனங்காணப்பட்டுள்ளது. அதனை நோக்கிய ரஷ்சிய ஜனாதிபதி புட்டின் எச்சரிக்கைகளையும் இஸ்ரேல் மீதான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுகின்ற முனைப்பை வெளிப்படுத்துகின்றார்.

எனவே அமெரிக்கா ஈரானிய போர் முடிவுக்கு வர முடியாத எல்லையை நோக்கி நகருகின்றதா?. இதன் விளைவு அமெரிக்க இஸ்ரேலிய வெற்றி அல்லது தோல்வி என்ற மேற்குமயமான சர்வதேச அரசியலாகும். அதாவது Zero-Sum என்பதன் விளைவாகவே சாத்தியப்படக் கூடியதாகும். இது பூஜ்ஜிய-தொகை விளையாட்டு ஆட்டக் கோட்பாட்டாகும். இது ஒரு கணிதவியல் சித்தரிப்பாகும். இதில் ஒரு பங்கேற்பாளரின் இலாபம் மற்றொருவரின் இழப்பால் சரிசெய்யப்படுகிறது. மொத்த இலாபம் அல்லது நன்மை பாதுகாக்கப்படுகிறது. ஒருவரின் வெற்றி என்பது அதற்குச் சமமான ஒருவரின் தோல்வியைக் குறிக்கிறது. இதன் விளைவாக நிகர மாற்றம் பூஜ்ஜியமாகிறது. ஈரானின் பலம் ரஷ்சியா-சீனா-வடகொரியா சார்ந்த பலத்தின் உள்ளடக்கமாகவே தெரிகின்றது. ரஷ்சியாவுக்கும் உக்ரையினுக்குமான போரின் மீள்வடிவம் ஈரானிய-அமெரிக்கப் போரில் கண்டுகொள்ள முடிகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி:தினகரன்)