தேசியவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட தேசத்தின் நலன்களுக்கும் பண்பாட்டு அடையாளத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் அரசியல் சித்தாந்தம் ஆகும். மொழி, வரலாறு, கலாச்சாரம் போன்ற பொதுவான பிணைப்புகளைப் முதன்மைப்படுத்திக் கொள்ளும் ஒரு தேசம், இறையாண்மை கொண்டதாக தன்னைத்தானே வடிவமைத்துக் கொள்வதை வலியுறுத்துகிறது. தேசியவாதம் நவீன வரலாற்றில் ஒரு முக்கிய அம்சமாகும். நவீன வரலாற்றில் மனித நடத்தையின் மையமாக விளங்கும் தேசியவாதம் மனிதகுல வரலாற்றின் ஒரு கட்டமாகும். சமூகம், அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு வாழ்வு ஆகிய அனைத்தையும் குறித்து நிற்கும் ஓர் அம்சமாகத் தேசியவாதத்தைக் குறிப்பிடலாம். நவீன தேசியவாதத்தின் ஊற்று ஐரோப்பாவாகவே விளங்குகிறது. ஐரோப்பிய தேசியவாதத்திலிருந்தே ஏனைய தேசங்களின் தேசியவாதம் வளர்ச்சியடைந்தது. ஆசிய-ஆபிரிக்க தேசியவாதம் காலனித்துவ எதிர்ப்பு தேசியவாதங்களாகவே தோற்றம் பெற்றன. தேசங்கங்கள் உருவான பின்னர் உப தேசியவாதங்களை தமக்குள் விடுதலை வேண்டி கட்டமைத்துக் கொண்டன.
வோற்சன் (Watson)) குறிப்பிடும் போது, ஒரு தேசிய இனம் என்பது ஒருமைப்பாட்டுனர்வாலும், பொதுப்பண்பாட்டாலும், தேசியப் பிரக்ஞையாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கள் திரளைக் கொண்ட சமூகப்பிரிவாகும் என குறிப்பிட்டார்.
ஹான்ஸ் கொன் (Hans Kahn) தேசியவாதத்தை வரையறுக்கும் போது, தேசிய இனப்பண்புகள் என்பன இங்கு இயங்கிக் கொண்டிருக்கும் வரலாற்று உயர் சக்திகளால் உருவாக்கப்படுபவை ஆகும். பொதுப்பூர்வீகம், பொதுமொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பு, அரசியல் இருப்பு பழக்கவழக்கங்கள், மரபுகள்,சமயங்கள் போன்ற புறநிலை வேறுபாடுகளிற்கேற்ப தேசியமும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றது. தேசிய இனங்களின் உருவாக்கத்திற்குப் புறநிலைக் காரணிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்த போதிலும் உயிர்த்துடிப்பும், செயல்முனைப்பும் கொண்ட ஒரு பொது மனப்பாங்கே இன்றியமையாத ஒரு கூறாக இருக்கிறது. இப்பொது மனப்பாங்கை நாம் தேசியவாதம் என அழைக்கின்றோம். இம் மனோ நிலை மக்கள் கூட்டத்தின் பெரும்பான்மையோரிற்கு எழுச்சி உணர்வை ஊட்டுகின்றது. அக்கூட்டத்தில் அடங்கும் எல்லோரிற்கும் அது உணர்வூட்டுவதாக இனங்காட்டுகிறது.
நிச்சேர்ட் (Richard) தேசியவாதம் என்பது பல சிறு அரசியல் கூறுகள் ஒன்றிணைத்து அரசியல் புவியில் ரீதியாக ஒரு பெரிய அலகை ஆக்குகிறது என்கிறார். வணிக வளர்ச்சிக்குத் தடையாக இருந்தவற்றை அகற்றி பெரிய உள்நாட்டுச் சந்தைகளை உருவாக்கி அளவுத்திட்ட சிக்கனங்களை ஏற்படுத்தி அது பொருள் உற்பத்தி ஆதிக்கத்துடன் ஒத்துழைக்கின்றது. ஒரு பொது மொழி இவ்வகையிலான தொடர்புகளை எளிதாக்குகின்றது. அத்துடன் அம் மொழியைப் பேசும் மக்களை அது உணர்ச்சி ரீதியாக பிணைக்கின்றது. தேசிய இலக்கியமும் தேசிய மொழியும் நம்பிக்கைக்கு வழிகோலுகின்றன. பொதுப் பண்பாடு, சமயம் பழக்கவழக்கம், வாழ்க்கைமுறை சூழவுள்ள உலகைப் பற்றி நோக்குகள் போன்ற இவையாவும் சமுதாயப் பிணைப்பை மேலும் வலுப்படுத்துகின்றன.
லெனின் (Vladimir Lenin) தேசியவாதத்தை வரையறுக்கும் போது, சமுதாய வளர்ச்சிப் படிகளின் ஒரு கட்டத்தில் முதலாளித்துவத்தின் ஒரு தவிர்க்க முடியாத வடிவமாக தேசிய இனங்கள் உருப்பெற்றன. உலகம் முழுவதிலும் நிலமானிய முறையை முதலாளித்துவம் இறுதியாகத் தோற்கடித்த காலப்பகுதி தேசிய இயக்கங்களுடன் பின்னிப்பிணைத்துள்ளது. நிலமானிய முறையும், எதேச்சாதிகாரமும் வீழ்ச்சியுற்ற அதே சமயம் முதலாளித்துவ ஜனநாயக சமுதாயமும், தேசிய அரசுகளும் உருவான காலப்பகுதியுமான இக்காலகட்டத்தில் தான் முதன் முறையாக தேசிய இயக்கங்கள் வெகுசன இயக்கங்களாக மாறின. ஒடுக்கப்படும் எந்தவொரு முதலாளித்துவ தேசியவாதத்திலும் கூட ஜனநாயகம் அதன் உள்ளடக்கமாக அமைந்துள்ளது என்கிறார்.
தேசியவாதம் பற்றி ஆராய்ச்சியாளரிடையே பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்ற போதிலும் பல ஒத்த கருத்துக்களும் நிலவுகின்றன. தேசியவாதத்தில் இரு கட்டங்கள் உண்டென்றும் அதில் முதலாவதுகட்டம், ஜனநாயகத்தன்மை (Democratic Content) வாய்ந்ததென்ற கருத்து பொதுவாக எல்லா ஆராய்ச்சியாளரிடமும் உண்டு. இரண்டாவது கட்டம், ஏனனய இனங்களை ஒடுக்குவதாகவோ அல்லது ஏனைய அரசுகளை ஆக்கிரமிப்பதாகவோ மாறும் கட்டமாகும். இதை இன்னொரு விதத்தில் தேசியப்பற்று(வெறி) என வர்ணிக்கலாம். எனவே தேசியவாதத்தில் குறிப்பிடப்படும் முதலாவதுகட்டம் முற்போக்கானதாக அமைய, இரண்டாவது கட்டம் பிற்போக்கானதாய் அமைகிறது. இலங்கையில் சிங்கள் பௌத்த தேசியவாதம், மற்றும் இஸ்ரேலில் யூததேசியவாதம் என்பன இரண்டாவது கட்டத்தையே சார்ந்தனவாகும்.
புதிய தேசியவாதம்
தேசியவாதம் பற்றிய உரையாடல் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் எச்சமாக தோன்றி வளர்ச்சி அடைந்து வருகின்ற கோட்பாடாக விளங்குகிறது. தேசியவாதத்தை முன்னிறுத்தியே உலகில் உள்ள ஒவ்வொரு தேசியங்களும் தேசிய அரசுகளும் நமது இருப்பையும் வளர்ச்சியையும் நிர்ணயிக்கின்றன. தேசியவாதமானது மேலாதிக்க புதிய தேசியவாதமாகவும் (Hegemonic New Nationalism) தற்காப்பு புதிய தேசியவாதமாகவும் (Defensive New Nationalism)எனவும் நவீன தேசியவாதத்தை இரு பிரிப்புகளாக அறிஞர்கள் விவாதித்து வருகின்றனர். தற்போது நவீன தேசியவாதத்தின் பல பரிமாணங்களில் நவ தேசியவாதம் (Neo-Nationalism) புதிய தேசியவாதம் (New Nationalism) எனவும் அத்தகைய பிரிப்பை அடையாளப்படுத்துவதாக உள்ளது. அமெரிக்க தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய தேசியவாதத்தை புதிய தேசியவாதம் என்றும் நவ- தேசியவாதம் என்றும் அழைக்க முயற்சிக்கின்றனர். புதிய தேசியவாதத்தை இருவகையாகப் பிரிக்கும் முயலுகின்றனர். ஏற்கனவே குறிப்பிட்டது போன்று ஒன்று மேலாதிக்க தேசியவாதம் இரண்டு தற்காப்பு தேசியவாதம்;. அமெரிக்க தேசியமானது மேலிருந்து கீழ் நோக்கி(From Top to Bottom) கட்டமைக்கப்பட்டது ஒன்றாக காணப்படுகிறது. அரசு முதன்மை பொருளாக கொண்டு மைய தேசிய அரச அடையாளத்தை உருவகப்படுத்தி முன்கொண்டு செல்வதை அவதானிக்க முடிகிறது. இங்கு ஒரு தேசியமையத்தை நோக்கி அமெரிக்க தேசியம் ஒருங்கிணைக்கப்படுகிறது. அதாவது அமெரிக்க தேசியத்தை மையப்படுத்தி அல்லது நோக்கி அரசியல் சக்திகளை ஒன்றிணைக்கும் புதிய வடிவம் ஒன்றை கொண்டிருக்கின்றது. அதனை புதிய தேசியவாதம் என்று அழைக்கின்றனர். தேசியவாதத்தில் அறிவு அல்லது கல்வி தேசிய கட்டுமான உருவாக்கத்துக்கான பாதையாக கருதப்படுகிறது. அமெரிக்க பெருமைவாதம் உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கவாதம் என்பன அவர்களது தேசியவாதத்துக்கான தூண்டுகோல்காக இருப்பதை அவதானிக்க முடியும். இது மேலாதிக்கத்துக்கான ஆழமான புரிதலை தருகிறது. குடியேற்றவாசிகளை கொண்ட ஐக்கிய அமெரிக்கா மக்கள் உதுரிகளை குடியேறியளாகக் கொண்ட ஒரு தேசிய இனமாக உருகிபிணைந்துள்ளனர். இது தேசியவாதத்தின் ஒரு புதியவகையான தேசியவாதமாகும். அமெரிக்காவில் குடியேரிய மக்கள் பெருமளவுக்கு வரலாற்று பெருமைகள் எதுவும் கொண்டிராதவர்களாகவே காணப்படுகின்றனர். இதனால் அங்கு குடியேற்றிய முதல் இனமாக அல்லது குடியேற்றவாசிகளாக ஆங்கிலேயர் காணப்பட்டதனால் அதன் அடிப்படை ஆங்கிலேய மரபுகளுக்குள்ளால் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் காலத்துக்குகாலம் உதிரிகளாக குடியேறிய பல்வேறு இனமத மொழி பிரிவினர் ஆங்கில மொழியை தமது அன்றாட வாழ்வியல் மொழியாகக் கொண்டனர். இவர்கள் தமது அடுத்த தலைமுறை ஆங்கிலத்தை தாய் மொழியாக பிரயோகிக்க வழிவகுத்தனர். இவ்வாறு அமெரிக்க தேசியத்தின் ஆங்கிலம் மையவாதத்தைப் பற்றிக் கொண்டது. இங்கு ஆங்கிலம் என்பது மொழியாக பண்பாடாக பழக்கவழக்கமாக அரசியல் நடத்தையாக வெளிப்படுத்தப்பட்டது. குடியேற்றக் கலாச்சாரத்தையும் பல்லினத்தன்மையையும் ஆங்கில மொழி வரலாற்றுப் பெருமை இன்மை என்பன அமெரிக்க தேசியத்தின் இயல்புகளாக காணப்பட்டது. அமெரிக்காவில் உத்தியோக மொழியாக ஒன்று இல்லை என்றாலும் நடைமுறையில் ஆங்கிலமொழியை தேசியத்திற்கான அச்சாணியாக கொள்வதற்கு அமெரிக்கர்கள் தவறவில்லை. அமெரிக்க தேசியம் அளவிலும் இயல்பிலும் புரிந்து கொள்ளப்பட வேண்டியது பல்லின பலகலாச்சார ஒருங்கிணைக்கும் குடியேற்றவாசிகளின் தனித்தன்மையும் அங்கு இழக்கப்படுவதில் தான் அமெரிக்க தேசியம் உருவாக முடிந்தது. அதனால் அமெரிக்க தேசியத்தை நீண்ட வரலாற்றுடன் அனைத்து உருவாக்கப்பட்ட ஏனைய தேசிய இனங்களின் வரலாற்றோடு தேசியவாதத்தோடு பொருத்திப் பார்க்கமுடியாது. இதனை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேம்ஸ் வரைந்த மொன்றோகோட்பாடு (Monroe Doctrine-1823)உணர்த்தி நிற்கின்றது. மொன்றோக் கோட்பாடானது அமெரிக்க கண்டங்கள் இரண்டையும் ஐக்கிய அமெரிக்காவுக்குள் உட்படுத்ததிட்டமிட்டது. அதன் அடிப்படையில் வடக்கு தெற்கு அமெரிக்க கண்டங்கள் ஐக்கிய அமெரிக்காவின் அரசியலோடு பிணைக்கப்பட்ட ஒன்றாக விளங்குகிறது. அது ஐக்கிய அமெரிக்காவின் தேசிய எல்லைக்கு வெளியே அரசியல் விஸ்தரிப்பில் இருந்து தனது தேசியத்தை உருவாக்கிய வரலாற்றை கொண்டது. இரு கண்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அகண்ட தேசிய அரசுக்கான வடிவமாக விளங்கியதோடு அது பின்னர் உலகளாவிய பரிமாணத்தைக் கொண்ட தேசியமாக விரிவடைந்துள்ளது. அதாவது அமெரிக்க தேசியம் உலகப் பரப்பை தனக்கான உலகமாக கொண்டிருக்கின்றது என்பதே இதன் புரிதலாகும். பனிப்போர் காலத்தில் கம்யூனிசத்துக்கு எதிராக அல்லது தன் போட்டியாளருக்கு எதிராக அமெரிக்கா கடைப்பிடித்த முடக்கல்கோட்பாட்டுக்கு (Theory of Containments) பதிலாக அந்நாடுகளின் அரசியல் பொருளாதரத்தில் பங்கேற்றல் மற்றும் ஆக்கப்போக்கு (Engagement, Constructivism) என்பனவற்றை கடைப்பிடித்து அமெரிக்க தேசிய நலன் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் வளர்க்கவும் வேண்டியதற்கான வெளியுறவுக் கொள்கையை அமெரிக்கா வரைந்துகொண்டது. முடக்கல் கோட்பாடு மற்றும் பங்கேற்பும் அமெரிக்காவின் தேசியத்துக்கு வெளிப்பக்கமாகவும் உட்பக்கமாகவும் அமைய ஆக்கப்போக்கு கோட்பாடானது அமெரிக்கத் தேசியத்தின் வெளிப்பக்கமான கட்டமைப்பு வளர்ச்சியாகவும் நோக்கப்படுகிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு என்பது அமெரிக்காவின் மேலாண்மை உலகில் அமெரிக்காவின் ஆதிக்கம் என்னும் விடயங்களை உள்ளடக்கியது. இங்கே அமெரிக்க மேலாண்மை அமெரிக்கப் பெருமைவாதம் என்பன அமெரிக்க தேசியத்தின் ஒரு முக்கிய முனைப்பான போக்காக காணப்படுகிறது. 1945ஆம் ஆண்டு முதல் முறையாக அணுகுண்டை அமெரிக்கா வெடிக்கவைத்த போதும் அடுத்தது 1969ஆம் ஆண்டில் நிலவில் அமெரிக்கா கால் பதித்தபோதும் அமெரிக்க பெருமைவாதம் முதன்மைப்படுத்தப்பட்ட போக்கினை உலகளாவிய ரீதியில் தொடர்ந்தும் முதன்மையை நிலைநாட்ட அமெரிக்காவின் பெருமைவாதம் அமெரிக்க தேசியத்தின் உயிர்நாடியாக இருந்து வருவதை காணலாம். இங்கு பெருமைவாதம் என்பது மேலாதிக்கத்துக்கான ஒரு கருவியாக அமைய முடிகிறது என்பது கவனத்திற்குரியது. பெருமைவாதங்கள் மேலாதிக்கவாதமாக வடிவம் பெறுவதே உலகத்துக்கு அபாயமானது. இன்றைய வர்த்தகப் போட்டிச் சந்தை பிரயோகத்தில் மேலாதிக்கம் கொண்ட தேசங்களும் மேலதிகத்திற்கு உட்பட்ட தேசியங்கள் என இருவகை தேசிய அடையாளம் காணமுடிகிறது.
தேசியவாதத்தைப் பொறுத்தவரையில் பல்லினத் தேசியவாதம்(Multi Nationalism) என்பது ஒரு முக்கிய அம்சமாக விளங்குகின்றது. பல்லினக் தேசியவாதத்தைப் பிரதேசத் தேசியவாதம் (Territorial Nationalism), அரசுமத்தியதேசியவாதம் (State Centric Nationalism)என்றவாறு அழைப்பதுண்டு. பல்லினங்களுள்ள ஒரு நாட்டில் அரசு என்பது மையக்கருத்தாக அமைய அதனைப் பொதுமையாகக் கொண்டு தேசியவாதம் வளர்வதுண்டு. இனங்களுக்கிடையில் பாரபட்சம் எழும்போது அரசு மத்தியத் தேசியவாதம் தோல்விகாண, தேசிய இனப்பிரச்சினை உருப்பெற்று தேசிய இனம் சார்ந்த தேசியவாதம் வளர்வதுண்டு. எவ்வாறாயினும் புள்ளிவிபர ரீதியாக நோக்கும் போது பல்லினத் தேசியவாதம் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகின்றதென்பதும் அத்தேசியவாதம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றதென்பதும் கவனிக்கத்தக்கது.
தேசியவாதம் ஒரு வாழ்க்கை முறைமையாகவும், சர்வதேச ஒழுங்கமைப்பாகவும் விளங்குகின்றது. தனிமனிதன் தொடக்கம், ஐக்கியநாடுகள் சபை உட்பட சர்வதேச ஸ்தாபனங்கள் வரை, தேசியவாதமென்பது ஓர் ஒழுங்கமைப்பாக, ஒரு முறைமையாகக் காணப்படுகின்றது. தனிமனிதன் சிறு தேசிய இனமாகவோ (National Minority) அன்றேல் தேசிய இனமாகவோ (Nationality) அமைய, தேசிய இனம் தேசிய அரசாகவோ (Nation State) அல்லது பல்தேசிய இனம் (Multi Nationalities) பல்தேசிய இன அரசாகவோ (Multi Nation – State) அமைய, அரசுகள் சர்வதேச ஸ்தாபனங்களாக அமைய, உலகம் ஓர் ஒழுங்கமைப்பைப் பெற்றுள்ளது.
தேசியவாதம் தேசங்களின் சுயநிர்ணய உரிமை (Right of Self – Determination of Nations) என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விளங்குகின்றது. இந்தஉரிமையின் அடிப்படையில் தான் அரசுகளும், தேசிய இனங்களும் ஒழுங்கமைக்கப்பட வேண்டுமென்பது பொதுவிதியாக அமைகின்றது. இந்த விதிமீறப்படும் போது இவ்வொழுங்கமைப்பும் மீறப்படுகின்றது. அரசுகளுக்கிடையேயான ஒழுங்கமைப்பு (நாடுகளின் சுயநிர்ணய உரிமை) மீறப்படும் போது அது நாடுகளுக்கிடையேயான பிரச்சினையாகவும், பல்தேசிய இன அரசுக்குள் தேசிய இன ஒழுங்கமைப்பு (தேசிய இனத்தின் சுயநிர்ணயஉரிமை) மீறப்படும் போது அது தேசிய இனப் பிரச்சினையாகவும் உருவெடுக்கிறது.
எனவே தேசியவாதத்தை வாழ்விலிருந்து பிரித்து நோக்க முடியாதுள்ளது. தேசியவாதம் சமூகவாழ்வின் மையஸ்தானமாகவும், சமூகவிஞ்ஞானத்தின் மையஸ்தானமாகவும் விளங்குகின்றது. அதாவது தேசியவாதத்தை விளங்கிக் கொள்ளாமல் சமூக நடத்தையைச் சரிவர விளங்கிக் கொள்ள முடியாது. சமூக,அரசியல்,பொருளாதார நடவடிக்கைகளை நிர்ணயிக்கும் ஒர் அம்சமாகத் தேசியவாதம் காணப்படுகின்றமையால் தேசியவாதம் சமூகவாழ்வின் மையஸ்தானமாக விளங்குகின்றது. எனவே தான் சமூகவிஞ்ஞானத்தின் பல்துறை சார்ந்த அறிஞர்களின் ஈடுபாட்டையும் ஒருங்கேவரும் தன்மையுள்ளதாகத் தேசியவாதம் காணப்படுகின்றது. குறிப்பாக இவ் ஆராய்ச்சியில் வரலாறு, அரசியல், விஞ்ஞானம் பொருளியல், மானிடவியல், சமூகவியல், அரசியற்புவியியல் போன்ற பல்வேறு துறைகளையும் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். Ethnography எனும் ஒரு துறை தேசியவாதம் பற்றியும் இனப்பரம்பல் (Ethnic Distribution) இனங்களுக்கிடையேயான உறவுகள் (Ethnic Relation) பற்றியும் ஆராயும் ஒரு விசேட துறையாகத் தற்போது வளர்ந்துவருகின்றது.
ஆதாரம் மு.திருநாவுக்கரசு,(2019)பூகோளவாதமும் புதிய தேசியவாதமும், பூவரசி வெளியீடு, சென்னை, இந்தியா.
