அரசியல் கட்டுரைகள்

அமெரிக்கத் தூதுவர் ஜீலி சுங்ன் வடக்கு விஜயமும் சீனாத் தூதுவரின் இலங்கைக்கான எச்சரிக்கையும்!

தென் இலங்கை அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டம் நீட்சி பெற்றதாக மாறியுள்ளது. கண்டி தலதா மாளிகையிலிருந்து கொழும்பு நோக்கிய பாத யாத்திரை தீவிரமத் பெற்றுவருகிறது. மக்கள் பங்கேற்பு அதிகரிப்பதுடன் மகா சங்கங்களது ஆதரவுடன் அப்போராட்டம் நிகழ்கிறது. அதே நேரம் இடைக்கால அரசாங்கம் அரசியலமைப்பில் இருபத்தியோராம் சீர்திருத்தம் மற்றும் தற்போது ஆட்சியிலுள்ள ஜனாதிபதி பிரதமர் பதவி விலகுதல் என்ற அம்சங்கள் முதன்மைப்படுத்தப்படுகிறது. தமிழ் தரப்பு எல்லாவற்றும் ஆலோசனை வழங்கும் அதே நேரம் தமிழர் பிரதேசத்தில் எதிர்வரும் மாதங்களில் ஏற்படவுள்ள நெருக்கடிக்கு இடைக்கால தன்னாட்சி அதிகாரக் கட்டமைப்பொன்றை கோர வேண்டிய சந்தர்பட்பத்தை தவறுவிடுவதாகவே தெரிகிறது. குறைந்த பட்சம் 21 ஆவத அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கையாள ஒரு கட்டமைப்பு அவசியம் என்பதையாவது வலியுறுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். அது பற்றி தமிழ் தரப்பு உரையாடுவதாக தெரியவில்லை. இக்கட்டுரை அமெரிக்கத் தூதுவரின் வடக்கு விஜயமும் சீனத் தூதுவரின் எச்சரிக்கை தொடர்பிலான அரசியலை தேடுவதாக உள்ளது.

இலங்கை அரசியலில் ஏற்பட்டிருக்கு பொருளாதார நெருக்கடியை மையப்படுத்தி உள்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளும், உலக நாடுகளும் நகர்வுகளை தமது நலன்களை மையப்படுத்தி செயல்படுவதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் அமெரிக்கா எதிர் சீனா எனும் போட்டி இலங்கைத் தீவை மையப்படுத்தி மீள ஆரம்பித்துள்ளது. இத்தகைய நிலைக்குள் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜீலி சுங் நான்கு நாள் வடக்கு விஜயத்தை கடந்த 25-28 வரை மேற்கொண்டிருந்த போது 26.04.2022 அன்று இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹொங் பரபரப்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். இவை இரண்டுமே சமகாலத்தில் அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தியிருந்தன.

முதலாவது இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளூர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, வோசிங்டனைத் தளமாகக் கொண்ட கடன் வழங்குவோருடனான இலங்கை அரசாங்கத்தின் பேச்சுவார்த்தையை சீனா கவனித்துவருகிறது. இலங்கை அதன் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு சீனா தன்னால் இயன்றதைச் செய்துள்ளது. ஆனால் துரதிஸ்டவசமாக இலங்கை சர்வதேச நாணயநிதியத்திற்கு சென்று கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பதற்கு முடிபு செய்துள்ளது எனத் தெரிவித்த சீனத் தூதுவர் மேலும் குறிப்பிடும் போது இந்த கடன் மறுசீரமைப்பு நிச்சயமாக எதிர்காலத்தில் சீன-இலங்கை இருதரப்பு கடன்களில் தாக்கத்தை ஏற்படுத்தம். எவ்வாறாயினும் ஒப்புக் கொண்டபடி சீனா பழைய கடன்களை தொடர்ந்தும் வழங்கும். இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் சுமை என்பன அவற்றுக்குரிய வரலாற்றுக் காரணங்களைக் கொண்டுள்ளன. அவற்றை ஒரே இரவில் தீர்க்க முடியாது.சீனா மட்டும் தான் இலங்கைக்கு கடன்வழங்குனரல்ல. சீனா இலங்கைக்கு மிகப் பெரிய கடன் வழங்குனருமல்ல. சீனக் கடன்கள் பெரும்பாலானவை சலுகைகள் மற்றும் உட்கட்டமைப்பு சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேம்பாடு சார்ந்தவை. கடன்பொறி என்பது வெறும் கதையாடல். அதனை சில வெளிநாட்டு ஊடகங்கள் அரசியல் வாதிகள் வேண்டும் என்றே உருவாக்கி விளம்பரப்படுத்தி வருகின்றனர் என ஒரு நீண்ட விளக்கத்தை சீனாவின் பக்கமிருந்த நியாயத்தையும் குறிப்பிட்டார்.

இரண்டாவது அமெரிக்கத் தூதுவரது வடக்கு விஜயத்தின் போது அவர் மேற்கொண்ட சந்திப்புகளும் வெளிப்படுத்திய கருத்துக்களும் கவனத்திற்குரியதாகும். குறிப்பாக தமிழ் சிவில் சமூகத்தினரையும் தமிழ் அரசியல் கட்சிகளையும் வர்த்தக சமூகத்தினரையும், காணாமல் போனோரின் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்களையும் மையப்படுத்தியதாக அமெரிக்கத் தூதுவரது சந்திப்புக்கள் அமைந்திருந்தன. அவற்றைவிட சீனத் தூதுவர் பாணியில் நல்லூர் கந்தசுவாமி கோவில் தரிசனம் என்பன முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருந்ததோடு முகமாலையில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் பிரதேசத்தையும் கரையோரப் பிரதேசத்திற்கும் அவரது பயணம் அமைந்திருந்தது.

அவ்வாறே அவரது சிவில் சமூகத்தினரை சந்தித்த பின்பாடு அமெரிக்கத் தூதுவர் தெரிவித்த கருத்து முக்சகியமானது. அதாவது இன்றைய அரசியல் பொருளாதார சவால்கள் தொடர்பாக விவாதிப்பதற்கும் ஜனநாயக இலங்கைக்கான எமது ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதற்கும் நான் யாழ்ப்பாணத்திலுள்ள சிவில் சமூக தலைவர்களையும் சந்தித்தேன் என்றார். அதே போன்று தமிழ் கட்சிகளை சந்தித்தது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன் குறிப்பிடும் போது ,தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிட்ட அமெரிக்கா இயன்றளவு உதவும் என தமக்கு அமெரிக்கத் தூதுவர் உறுதியளித்ததாக தெரிவித்துள்ளனர். அது மட்டுமன்றி வடக்கு மாகாண அபிவிருத்தி குறித்து தொடர்ந்து ஆதரவளிப்பது பற்றியும் இலங்கை முழுவதற்கும் நிலையான முதலீட்டை ஈர்ப்பது மற்றும் பொருளாதார வாய்ப்பை ஊக்குவிப்பது அமெரிக்காவின் முன்னுரிமையாகும் எனவும் அமெரிக்கத் தூதுவர் வடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த போது தெரிவித்துள்ளார்.

எனவே சீன-அமெரிக்கத் தூதுவர்களின் வெளிப்பாடுக் அவர்களது தேசங்களின் நோக்கங்களை தெளிவாக கொண்டுள்ளதை உணர்த்துகின்றது அதன் அரசியல் பக்கங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியமானது.

ஒன்று அமெரிக்கத் தூதுவரின் விஜயம் இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாத்தல். அதனை அவர் பல இடத்தில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்;. அவ்வகை ஜநனநாயகம் என்பது இலங்கையின் ஒற்றையாட்சி தத்துவத்துக்கு உட்பட்டதென்பதையே அவரது கருத்தில் விரவியிருக்கிறது. தற்போது தென் இலங்கையில் எழுந்;துள்ள குழப்பங்கள் இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்துவிடுமா என்ற சந்தேகத்தை அமெரிக்கா மட்டுமல்ல அனேக நாடுகள் கொண்டுள்ளன. அதனை எப்படியாவது ஏற்பட விடாது தடுத்துவிட வேண்டும் என்பதில் கவனம் கொண்டுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜனநாயகமே முதன்மையானது என்பதை அடையாளப்படுத்திவருகிறார். இராணுவம் எழுச்சியடைவது அமெரிக்காவுக்கு நெருக்கடியாக அமைவதுடன் சீனாவின் இருப்பினை பலப்படுத்துவதாக அமைந்துவிட வாய்ப்புள்ளது. இதற்கு மியான்மார் சிறப்பான எடுத்துக் காட்டாகும். அத்தகைய சூழல் ஒன்றுக்கான வாய்ப்பு இலங்கைத் தீவில் ஏற்பட்டுவிடுமாயின் அது அமெரிக்காவுக்கு மட்டு:மல்ல இந்தியாவுக்கும் நீண்ட காலச்சவாலாக அமைந்துவிடும். இலங்கையை சீனாவிடமிருந்து மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அதனைத் தடுப்பதே அமெரிக்கத் தூதுவரது கருத்துக்கள் தெளிவாக காட்டுகின்றன. அவ்வாறே எப்படியாவது சர்வதேச நாணயநிதியத்தின் தலையீமட்டைத் தவிர்த்து இலங்கையை சீனாவின் செல்வாக்கில் வைத்துக் கொள்ள வேண்டும் எனபதே சீனத் தூதுவரது அறிக்கை காட்டகிறது.

இரண்டு அமெரிக்காவின் பொருளாதார முதலீடுகளை வடமாகாணத்தில் ஊக்குவிப்பதோடு இலங்கைத் தீவு முழுவதும் பொருளாதார வாய்ப்புக்களை அதிகரிப்பதே அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது. அதாவது சீனாவுடன் ஒப்பிடம் போது அமெரிக்க முதலீடுகளின் அளவு மிகக் குறைந்ததாகவும் முக்கியத்துவமற்றதாகவும் காணப்படுகிறது. வடக்கை பொருளாதாரமாக கட்டியெழுப்புவதும் அதனூடாக அரவணைப்பதுவும் இதன் பின்னாலுள்ள அரசியல் பக்கமாக தெரிகிறது. சீனாவின் இலங்கைத் தீவு அடங்கிய முதலீடுகளும் பொருளதாரவாய்ப்புக்களும் ஒப்பீட்டடிப்படையில் அமெரிக்காவை விட அதீதமானது. சீனத் தூதுவர் குறிப்பிடுவது போல் துறைமுகங்கள் வீதி அபிவிருத்திகள் விமானத் தளங்கள் அதி வேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் சிறிய நடுத்தர பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக நடைமுறைகள் என பாரிய பொருளாதார பரிமாற்றத்தை கொண்டுள்ளது. அதனுடன் ஒப்பிடும் அளவுக்கு அமெரிக்காவின் பொருளாதார முதலீடுகள் மற்றும் திட்டங்கள் இலங்கைத் தீவை மையப்படுத்தி அதிகமில்லை என்பது தெரிந்த விடயமே. மிலேனிய உடன்பாட்டின் மூலம் அவை அனைத்தையும் நிரப்பீடு செய்ய முயன்றதுடன் பாதுகாப்புச் சார்ந்து இலங்கையுடன் நெருக்கமான உறவைப் பலப்படுத்தவும் அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. அதனை நோக்கிய அசைவொன்றை உருவாக்குவதே தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தின் நோக்கமாகவுள்ளது. அது இலங்கைத் தீவை இந்தோ-பசுபிக் உபாயத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலம் சீனாவை நிரந்தரமாக இலங்கைத் தீவிலிருந்தும் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலிருந்தும் விலக்க முடியுமென கருதுகிறது.

மூன்று அமெரிக்கத் தூதுவரது பொருளாதார உபாயங்கள் சர்வதேசநாணயநிதியத்தை நோக்கியதாக அமைய சீனத் தூதுவரது நகர்வுகள் அதற்கு எதிரானதாகவே அமைந்துள்ளன. அதாவது சீனத் தூதுவரது இலங்கை தொடர்பான கருத்துக்கள் எச்சரிக்கை செய்வதாகவே தெரிகிறது. அதிலும் இலங்கை ஆட்சியாளரது அணுகுமுறைகள் பற்றிய சீனாவின் அவதானிப்பும் எதிர்கால கடன் பரிமாற்றத்தில் ஏற்படவுள்ள தாக்கங்களையும் சீனத் தூதுவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இது இலங்கைக்கான எச்சரிக்கையாகவே தெரிகிறது. இலங்கை சர்வதேச நாணயநிதியத்திடம் போகுமாயிருந்தால் சீனாவுடனான கடன்கள் மட்டுமல்ல ஏனைய பொருளாதார உதவிகளும் நடவடிக்கைகளும் முழுமையாக பாதிக்கும் என்பதை தெரியபட்படுத்தியுள்ளார். சீனாவின் நகர்வு தென் இலங்கை ஆட்சியாளரது அரசியல் நடவடிக்கைகளையும் பாதிப்பதாகவே அமைய வாய்ப்புள்ளது. அதிலும் சர்வதேச மட்டத்தில் இலங்கைத் தீவு மீதுள்ள நெருக்கடியை சீனாவே அதிகம் பாதுகாத்து வருகிறது. அதனையும் இலங்கை ஆட்சியாளர்கள் எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே சீன-அமெரிக்கத் தூதுவர்களது நகர்வுகள் அதிக முக்கியத்துவம் கொண்டதாகவே தெரிகிறது. ஆனால் இத்தகைய இழுபறியானது இலங்கைத் தீவின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்பினை தகர்ப்பதாக அமைந்துவிட வாய்’ப்புள்ளது. அது மட்டுமன்றி இத்தகைய சூழலை உருவாக்குவதில் ஆளும் தரப்பினர் அதிக கவனம் கொள்வதாகவே தெரிகிறது.காரணம் சீனாவின் பிரதமருடனான இலங்கைப் பிரதமரது உரையாடலை அடுத்தே இத்தகைய சூழல் ஒன்றுக்கான நகர்வு திறக்கப்பட்டது. இவை அனைத்தும் உள்நாட்டு இழுபறியை கையாள சர்வதேச இழுபறியை முன்னகர்த்துவதாகவே தெரிகிறது. இதில் வழமை போன்று தமிழ் தரப்பு எந்த முடிபையும் எடுக்க முடியாது வாய்ப்புக்களை கைநளுவவிடும் காரியத்தை சிறப்பாக மீளவும் அரங்கேற்ற உள்ளதைக் காணமுடிகிறது. இலங்கைத் தீவை சுற்று மற்றும் பாதை முன்முயற்சியில் இணைப்பதா அல்லது இந்தோ-பசுபிக் தந்திரத்தில் இணைப்பதா என்ற இழுபறிக்குள் இரு நாட்டுத் தூதுவர்களது நகர்வும் அமைந்துள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)