April 20, 2026
அரசியல் கட்டுரைகள்

நிறைவேற்றதிகாரம் பற்றிய மகாசங்கங்களின் ஆலோசனையும் காலிமுகத்திடல் போராட்டமும்!

இலங்கைத்தீவு பௌத்த மதத்ததை பின்பற்றும் பெரும்பான்மை மக்களைக் கொண்டது. அது கௌதம புத்தபகவானை வணங்குகிறதே அன்றி பௌத்தம் போதித்த மரபுகளை விடுத்து தனது மகாவம்ச மரபை பின்பற்றும் நாடு என்பதை கடந்த காலங்களில் அதிகம் வெளிப்படுத்தியுள்ளது. இலங்கைப் பௌத்தத்தை தேரவாத மையமானது என்ற வாதம் எழுந்திருப்பதும் மகாவம்ச மனோநிலை உடையது என்பதும் அத்தகைய உள்ளடக்கத்திற்காகவே உச்சரிக்கபட்படும் இலங்கை பௌத்த மததத்துவத்தைக் கொண்ட நாடு கிடையாது. தேரவாத பௌத்தத்தைக் கொண்ட நாடு. மகாவம்சத்தைப் பின்பற்றும் நாடு என அழைப்பதே பெருத்தமானது. இக்கட்டுரை இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் பொறுத்து மகாசங்கங்கள் வெளியிட்ட கருத்தினை மையப்படுத்தி விவாதிக்க முனைகிறது.

முதலாவது, 29.05.2022 அன்று அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களை சந்தித்து ஆசிபெற்ற நீதி அமைச்சர் விஜயதாஸா ராஜபக்ஷ இருபீடங்களும் தமக்கு ஆலோசனை வழங்கியதாக முக்கியமான ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். அக்கருத்தை முழுமையாக அவதானிப்பது பொருத்தமானது. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்கும் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும் அரசியலமைப்பின் 13 வது திருத்தச் சட்டமூலம் இந்நாட்டுக்கு மிக ஆபத்தானது. அதைத் தடுப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தால் மாத்திரமே சாத்தியப்படும் என்றும், இலங்கையின் முப்படைகளின் பிரதானியாக ஜனாதிபதி தொடர்ந்திருக்க வேண்டும் ஏனெனில் 13 வது திருத்தச் சட்டமூலம் இந் நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. அதைத் தடுப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தால் மாத்திரமே சாத்தியமாகும். சயாதீன ஆணைக்குழுக்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.அதற்காக ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதே போன்ற தற்போரதைக்கு பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே முக்கியமானது. அதற்கு பதிலாக அரசியலமைப்பு திருத்தம் போன்றவற்றுக்க முன்னுரிமை அளித்தால் பொருளாதார நெருக்கடி மீண்டும் அதிகரித்துவிடும் என்றும் மகாநாயக்கர்கள் தமக்கு தெரிவித்ததாக நீதி அமைச்சர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்

இரண்டாவது, கடந்த வாரம் காலிமுகத்திடல் போராட்ட அணியிலிருந்து தொழில் சங்கம் சார்ப்பில் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் குழுவினர் வடக்குக்கு வருகைதந்தனர். பல சிவில் அமைப்புக்களையும் பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தினரையும் அரசியல் கட்சிகளையும் சந்தித்து ஏன் தமிழ் மக்கள் போராட்டத்தில் பங்களிக்கவில்லை என்பதை பற்றி உரையாடினர். அதில் தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதற்கான காரணங்களை மிகத் தெளிவாக அவ்வமைப்புக்களால் முன்வைக்கப்பட்டது. இலங்கைத்தீவின் வரலாறு முழுவதும் தமிழ் மக்களுக்கு தென் இலங்கை ஆட்சியாளர்களால் இளைக்கப்பட்ட கொடுமைகள் உரையாடப்பட்டது. அவை அனைத்தையும் ஏற்றுக் கொண்ட போராட்டக் குழுவினர் அதற்கான தீர்வுகளை நோக்கி பயணிப்பதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்ள முயல்வதாக உத்தரவாதம் அளித்திருந்தனர். தமிழ் தரப்பு இத்தகைய உரையாடல்கள் தொடரவும் இரு தரப்புக்கும் இடையில் ஒரு உடன்பாடு எட்டப்படுவதும் காலிமுகத்திடல் புரடட்சிகரமானதாக மாற்றப்பட வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

இவ்விரண்டு தரப்பினரது நகர்வுகளை அவதானிக்கும் போது இலங்கைத் தீவு மீளமுடியாத துயரத்தை நோக்கி பயணிப்பதற்கான சூழலையே அதிகம் கொண்டு;ள்ளதென்பது தெரிகிறது. அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.

ஒன்று, இலங்கைத் தீவின் அரசியலை தீர்மானிக்கும் வலிமை மகாசங்கத்தினருக்கே உரியது. மகாசங்கங்கள் எழுதப்படாத (Unwritten Constitution) அரசியலமைப்பைக் கொண்ட அரச நிறுவனங்களாகும். இவை எழுதப்பட்ட அரசியலமைப்பின் மீது அதிக செல்வாக்குச் செலுத்தக் கூடியவை. மகாசங்கங்களே அரசு. அரசாங்கங்களை இயக்கும் அமைப்புக்களும் மகாசங்கங்களே. அரசை பலவீனப்படுத்தும் எந்த நகர்வையும் மேற்கொள்ள அவை அனுமதிப்பதில்லை.பௌத்தத்தின் போதனையிலுள்ள உயர்சிந்தனையான கணவாதம்(மாற்றமே நிலையானது) இலங்கைத்தீவின் பௌத்தத்தில் காணமுடியாத ஓரம்சமாகும். அதனையே ஆறாம் நூற்றாண்டிலிருந்து பௌத்தம் பின்பற்றிவருகிறது. இந்தியாவுக்கும் தமிழருக்கும் எதிரான மனோநிலையில் இயங்கும் இலங்கைத்தீவின் பௌத்தம் தனது அடையாளத்தை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலும் பாதுகாக்க முனைகிறதைக் காணமுடிகிறது.

இரண்டு, 13வது திருத்தம் தமிழ் மக்களின் அதிகாரப்பகிர்வு தொடர்பில் போதாது என்ற வாதங்களும் நடவடிக்கைகளும் நிகழும் போது மகாசங்கங்கள் அதனை நாட்டுக்கே ஆபத்தானவை என விவாதிப்பதன் உள்நோக்கத்தை புரிந்து கொள்வது அவசியமானது. தனிநாடு கோரிய போதும் சமஷ;டி விண்ணப்பித்த போதும் மகாசங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் எத்தகையவை என்பதை தமிழ் மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.கடந்த காலங்களில் தமிழ் மக்களது கோரிக்கைக்கு எதிராக கண்டிபாத யாத்திரைகளும் காலிமுகத்திடல் உண்ணாவிரதக்காரருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களும் யூலைக்கலவரம் போன்று நிகழ்த்தப்பட்ட படுகொலைகளும் அதன் விளைவுகளும் மகாசங்கங்களின் பாதுகாப்புடனேயே நிகழ்த்தப்பட்டதென்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு அனுதாபம் கூட இதுவரை தெரிவிக்காத பௌத்தமத சிந்தனையை தமிழ் மக்கள் புரிந்து வைத்தள்ளனர்.

மூன்று, அதிகாரமற்ற 13 ஐ நாட்டுக்கு ஆபத்தானது எனக்கருதும் மகாசங்கங்களின் போக்குகள் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தமிழ் அரசியல் செயல்பாட்டாளர்களுக்கும் உரிய செய்தியாகும். தமிழ் அரசியல் கட்சிகளது தேர்தல் வாக்குறுதிகளும் தேர்தல் விஞ்ஞாபனங்களும் பாராளுமன்ற உரைகளும் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை மகாசங்கங்களது நடவடிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளன. அதனை முன்வைத்து அரசியல் பிழைப்பை நிகழ்த்தாலாமே அன்றி இலங்கைத்தீவில் எந்த மாற்றதையும் ஏற்படுத்த முடியாது. அதற்கு ஒரு போதும் மகாசங்கம் இடங்கொடுக்காது. அதனையே மகாசங்கள் உணர்த்தியுள்ளன. உள்நாட்டுக்குள் தீர்வினைத் ஏற்படுத்தலாம் என்பதை உச்சரிப்பவர்களுக்கு அதிக விளக்கத்தை மகாசங்கங்களது ஆலோசனை தந்துள்ளது. இது மகாசங்கங்களது நிலைப்பாடு என்பதையும் மகாசங்கம் இலங்கைத்தீவின் அரசியலில் வலிமையானது என்பதையும் உணருதல் அவசியமானது.

நான்கு, காலிமுகத்திடல் போராட்டக்காரருக்கு ஆட்சி மாற்றமா அதிகார மாற்றமா கட்டமைப்பு மாற்றமா என்பதற்கான விடையை மகாசங்கங்கள் அளித்த ஆலோசனையிலிருந்து உணர்ந்து கொள்ளக் கூடியதாக அமையும். இதுவே ஈழத்தமிழருக்கு உள்ள குழப்பமாகும். கடந்த கால அனுபுவங்களைக் கொண்டு தமிழ் மக்கள் காலிமுகத்திடல் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருக்க திட்டமிட்டனர். இலங்கைத் தீவை ஒர் ஆரோக்கியமான தேசமாக மாற்றுவற்கு தயாராக முனையும் காலிமுகத்திடல் போராட்ட அணிக்கு மகாசங்கத்தின் அரசு மீதான செல்வாக்கினை புரிந்து கொள்வதுடன் மாற்றம் செய்வதற்கான வளிமுறை நீண்ட சவால்மிக்கதென்பது கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

ஐந்து, நிறைவேற்றதிகாரம் என்பது நாட்டுக்கு ஆபத்தான 13 ஐக் கட்டுப்படுத்துவதற்கானதென்ற மகாசங்கங்களின் ஆலோசனையானது வடக்கு கிழக்கு மக்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்குமானதாகவே தெரிகிறது. காரணம் இலங்கை-இந்திய உடன்பாட்டிற்கு அமைவாகவே 13 வது திருத்தம் சாத்தியமானது. அத்தகைய திருத்தத்தை ஆபத்தானது என மகாசங்கங்கள் கருதுவதென்பது அந்த உடன்பாட்டை மேற்கொண்ட நாட்டிற்கும் எச்சரிக்கையான ஆலோசனையாகவே உள்ளது. 35 வருடங்களுக்கு மேலாக 13 ஐ முழுமையாக அமுலாக்காது விடுவதற்கும் வடக்கு கிழக்கு பிரிவினைக்கும் பின்னால் உள்ள அரசியல் சக்திகளை தூண்டுவதில் மகாசங்கங்களின் பங்களிப்பை தெளிவாக அவர்களது ஆலோசனை எடுத்துக் காட்டுகிறது. இலங்கைத்தீவுக்குள் இந்தியாவின் நடவடிக்கைகள் ஆட்சித்துறையாலும் அரசாங்கங்களாலும் மகாசங்கங்களாலும் சிறப்பாக கையாளப்படுகின்றதென்பதையே ஆலோசனை உணர்த்துகிறது.

எனவே இலங்கைத் தீவு முழுவதற்குமான 13 ஐ பற்றிய மகாசங்கங்களது ஆட்சித்துறைக்கான ஆலோசனை காலிமுகத்திடல் போராட்டக்காரருக்கும் தமிழ் அரசியல் தரப்புக்கும் மாற்றத்தின் அடிப்படை எதுவென்பதை கோடிட்டுக் காட்டியுள்ளது. காலிமுகத்திடல் புரட்சிகரமானதாக மாறுகின்ற சூழலை கடந்து இலங்கைத் தீவில் எத்தகைய மாறுதலும் நிகழவாய்ப்பில்லை என்பதையே நீதி அமைச்சருக்கு மகாசங்கங்கள் வழங்கிய ஆலோசனை உணர்த்துகிறது. மகாசங்கங்கள் ஜனாதிபதி முறைமையை மட்டுமல்ல தற்போதைய ஆட்சியையும் ஆட்சியாளரையும் பாதுகாக்க முனைகிறதென்பது அதன் ஆலோசனை தெளிவுபடுத்துகிறது. 21 வது திருத்தத்திற்கான வாய்ப்பினையும் அதிலுள்ள ஜனாதிபதி முறைமைக்கு எதிரான தீர்மானங்களும் முடிபுக்குவர அதிக வாய்ப்புள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)