இலங்கை-இந்திய நட்புறவு பலமானதாக அமைந்துள்ள காலப்பகுதி நிலவுவதாகவே தெரிகிறது.இலங்கைத் தீவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் அதிக கவனம் கொண்டுள்ள இந்தியா உணவுப் பொருட்களையும் மற்றும் அத்தியாவசியப் பொருட்களையும் தொடர்ச்சியாக அனுப்ப தீர்மானித்துள்ளதாக செய்திகளை வெளியிட்டுவருகிறது. இலங்கைக்கான இந்தியத்தூதுவர் மிலிந்த மொறகொடவினது தமிழக விஜயமும் வடக்கு மாகாணத்தின் துணைத்தூதுவர் நடராஜன் ராகேஸ்ன் கிழக்கு மாகாணத்திற்கான பயணமும் அதிக அரசியல் முக்கியத்துவத்தை தந்திருப்பதுடன் இலங்கையுடனான இந்தியாவினது நெருக்கத்தை கோடிட்டுக் காட்டுகிறது. இதே நேரம் இக்கட்டுரை புதுடில்லி,சென்னை,கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் நோக்கிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசாங்கத்தின் அணுகுமுறை புதிய அத்தியாயத்தை நோக்கி நகருகிறதா என்பதை தேடுவதாக உள்ளது.
முதலாவது,1987 இல் வடமராட்சி மீது இலங்கை இராணுவம் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து இந்தியா இராணுவத்தின் விமானப் படை உணவுப் பொதிகளை வானத்திலிருந்து மக்களுக்கு வீசியது. தற்போது கப்பல் மூலம் கொழும்புக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கிவருவதுடன் தொடர்ச்சியாக வழங்க தாம் தயாராக இருப்பதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தூதுவரது சென்னைப் பயணம் கொழும்பு சென்னை உறவில் பலமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈழத்தமிழருக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்க முன்வந்த தமிழக முதலமைச்சரை கொழும்பு நோக்கி திருப்பியதில் ஈழத்தமிழ் தலைமைகளுக்கும் பங்குண்டு. தமிழகத்தின் தலைமையைக் கண்டு அதிகம் குழப்பத்திலிருந்த தென் இலங்கைத் தலைமைகளை நெருங்க வழிவகுத்ததில் பொருளாதார நெருக்கடிக்கும் பாரதீய ஜனதா கட்சியின் அரசியல் தலைமைகளுக்கும் அதிகமான பங்கிருந்ததை மறுக்க முடியாது. கொழும்பு புதுடில்லி உறவு மட்டுமன்றி தற்போது கொழும்பு சென்னை உறவாகவும் மலர்ந்துள்ளது. 2009 இல் நிகழ்ந்த இறுதிக் கட்ட போர் அதற்கான வடிவத்தைக் கொடுத்தாலும் காங்கிரஸ் தி.மு.க என்ற தேர்தல் கூட்டுடாகவே வெளித்தோன்றியது. ஆனால் அது தற்போது நட்புறவின் அடையாளமாக மாறியுள்ளது. அத்தகைய நட்புறவை பலப்படுத்துவதில் மிலிந்த மொறகொடவின் தூது அதிக முக்கியத்துவத்தை பெறுகிறது. தமிழருக்கு மட்டுமல்ல இலங்கைத் தீவு முழுவதற்கும் உணவு வழங்க விண்ணப்பித்த ஈழத்தமிழ் தலைமைகள் எவரும் மு.க.ஸ்டாலினுக்கோ இந்தியாவுக்கோ நன்றி தெரிவிக்க முன்வராத போது நேரடியாகச் சென்று மேலும் உணவு பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள நகர்வை இலங்கைத் தூதுவர் மேற்கொண்டுள்ளார். இவ்வாறே மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற போதும் ஈழத்தமிழ் தலைமைகள் வாழ்த்து தெரிவித்துவிட்டு அதனை ஊடகங்களுக்கு அறிக்கையிட்டுவிட்டு தமது அரசியல் வாழ்த்து முடிந்துவிட்டதென்று கருதினார்கள். உண்மையிலேயே ஈழத்தமிழர் அரசியல் மீது அக்கறையிருந்திருந்தால் ஸ்டாலின் பதவியேற்பு விழாவுக்கு கட்சி பேதங்களைக கடந்து செயல்பட்டிருப்பார்கள். தொப்புள்கொடி உறவு, நேசசக்தி என்றெல்லாம் கருதப்படுவதற்கு அர்த்தம் தெரிந்திருந்தால் ஈழத்தமிழ் தலைமைகள் அந்த உறவைப் பாதுகாப்பதற்கு முயன்றிருப்பார்கள். இதுவரை புதுடில்லி-கொழும்பு உறவே பலமானதாக அமைந்திருந்தது தற்போது கொழும்பு -சென்னை உறவும் வலுவானதாக மாறத்தொடங்கியுள்ளது. இதன் விளைவு அபாயமானது. ஈழத்தமிழரது எதிர்காலம் மேலும் கேள்விக்குரியதாக வாய்ப்பு அதிகமாகவுள்ளது.
இரண்டாவது, பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதான தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ததுடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர். அதில் முதன்மையானவர் இந்தியா பிரதமரான நரேந்திர மோடி அவர்கள். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த முதல் இந்தியப் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. 1926 களில் மகாத்மா காந்தி, சட்டோபாத்தியாயா போன்ற இந்தியத் தலைவர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்தாலும் பிரதமர் என்ற நிலையில் முதல்முதலில் யாழ்ப்பாணம் வருகை தந்தவர் நரேந்திர மோடி என்பது கவனத்திற்குரியதாகும். விடுதலைப் போராட்ட காலத்தில் இலங்கை வந்த இந்தியத் தலைவர்களை கடந்து அவர்கள் ஏதோ ஒரு அடிப்படையில் காங்கிரஸ் தலைவர்களாகக் காணப்பட்டனர் என்பது முக்கியமானது. அதே போன்று தமிழக பாரதீய ஜனதாவின் தலைவர் அண்ணாமலையின் வருகை இலங்கைக்கானதாக அமைந்தாலும் யாழ்ப்பாணத்திற்கான அவரது விஜயம் முக்கியமானதாகவே கருதப்பட்டது. பாரதீய ஜனதாக்கட்சியைச் சேர்ந்தவர் யாழ்ப்பாணம் வருகை தந்தமை அரசியல் ரீதியில் முக்கியமானதாகவே தமிழர்கள் கருதினார்கள். ஏனைய தமிழக ஆளும் தி.மு.க, அ.தி.மு.க, போன்ற கட்சித் தலைமைகளுடன் ஒப்பிடும் போது அண்ணாமலை அவர்களது யாழ்ப்பாண வருகை தமிழகத் தலைவர்களை மட்டுமல்ல காங்கிரஸ் தலைமைகளையும் குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதில் வைகோ, நெடுமாறன், திருமாவளவன், மற்றும் சீமான் போன்றவர்கள் விதிவிலக்கானவர்களாக மட்டுமன்றி அவர்கள் ஈழத் தமிழர் அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தலைவர்களாக இல்லை என்பது ஏற்றுக் கொள்ள வேண்டியதாகவே உள்ளது. ஆனால் அவர்கள் மட்டுமே தேர்தல் அரசியலுக்கு அப்பால் ஈழத்தமிழர் அரசியலை தமிழகத்தில் நிலைநிறுத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதில் புதியவராகவும் காங்கிரஸ் மரபுக்கு அப்பால்பட்டவராகவும் அண்ணாமலையே காணப்படுகின்றார். கச்சதீவு பற்றிய சர்ச்சையில் அவரது காங்கிரஸ் தி.மு.க. வுக்கு எதிரான கருத்துக்கள் அதிகமான மாற்றத்தை நோக்கி இந்தியா இலங்கைவிடயத்தில் நகரப் போகின்றதென்பதை கோடிட்டுக் காட்டுவதாகவே உள்ளது. அதாவது இலங்கையுடன் இந்தியா ஒரு புதிய உடன்பாட்டுக்கு செல்லவேண்டிய தேவை கச்சதீவு சார்ந்து மட்டுமல்லாது ஏனைய விடயங்களிலும் காணப்படுக்றது.
மூன்றாவது, 1987 இல் காங்கிரஸ் அரசாங்கத்தினால் செய்யப்பட்ட இலங்கை-இந்திய உடன்படிக்கை காலவதியாகும் நிலையை நோக்கி நகர்கிறது. இரு நாட்டின் தலைவர்கள் மேற்கொண்ட உடன்படிக்கையும் சரி அதன்பிரகாரம் கைமாற்றப்பட்ட கடிதமும் சரி இலங்கை ஆட்சியாளர்களால் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது தற்போதைய சூழல் பிராந்திய அடிப்படையிலும் உலகளாவிய போக்கிலும் அதிக மாற்றங்களை கொண்டுள்ளது. இலங்கைத் தீவும் சீனாவின் செல்வாக்கு அதிகம் வளர்ந்துள்ளதுடன் அமெரிக்காவின் முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது. சீனா தற்போது தென் மகாணத்தை அடுத்து கிழக்க மாகாணத்தை நோக்கிய நகர்வுகளை ஆரம்பித்துள்ளது. அண்மையில் சீனாவின் உணவுப் பொருகளுடன் இலங்கைக்கான சீனத் தூதுவர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தமை முக்கியமுடையதாக அமைந்திருந்தது. அதனை அடுத்தே இந்தியத் துணைத்தூதுவரின் கிழக்கு மகாண விஜயம் அமைந்திருந்தமையும் பொருளாதார அபிவிருத்தி விடயங்கள் உரையாடப்பட்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. எனவே இத்தகைய இழுபறியை தொடர்வதை மாற்றிக் கொள்வதே இந்தியாவுக்கும் பாரதீய ஜனதாக் கட்சி அரசாங்கத்திற்கும் பொருத்தமானதாக அமையும். நரேந்திர மோடி அண்ணாமலை அணி இலங்கையுடன் ஒரு புதிய உடன்பாட்டுக்கு செல்ல வேண்டிய அகச்சூழலும் புறச்சூழலும் காணப்படுகிறது. கச்சதீவு மட்டுமல்ல இலங்கையின் வடபகுதியில் அமைந்து;ள்ள தீவுகளை நோக்கிய பிற வல்லரசுகளது நடவடிககையும் திருகோணமலைத் துறைமுகத்தை கையகப்படுத்தும் விதத்தில் பிற சக்திகளது நகர்வுகளும் இந்தியாவுக்கு ஆரோக்கியமான நகர்வாக அமையாது. அவற்றுக்கான சரியான வரைபுகள் இல்லாத சந்தர்ப்பம் நீடிக்குமாயின் இலங்கைத் தீவை நோக்கிய பிறசக்திகளது தலையீடு தவிர்க்க முடியாததாக அமைவதுடன் தொடர்ச்சியான நெருக்கடி நீடிக்கவும் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
நான்காவது, ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வு 1987 இல் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் கீழ் உள்ள 13 வது திருத்தச் சட்டமூலம் சார்ந்ததாகவே அமைந்துள்ளது. அத்தகைய வரைபின் உள்ளடக்கங்கள் பலவீனப்படுத்தப்பட்டதுடன் அமுலாக்காது கடந்த 35 வருடங்களுக்கு மேல் தென் இலங்கை ஆட்சியாளர்கள் ஏமாற்றினார்கள் என்பது எந்த இந்தியக் கொள்கை வகுப்பாளருக்குமோ ஆட்சியாளருக்குமோ சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அதனை விளங்கிக் கொள்ளவில்லை என்றால் அத்தகைய அரசியல் தலைவர்களாலும் கொள்கை வகுப்பாளர்களாலும் இந்தியாவை பாதுகாக்க முடியாது என்பது தெளிவாகும். தற்போதைய இந்திய ஆட்சித் துறையிடமும் அரசியல் தலைமையிடமும் அத்தகைய சூழல் மிக குறைவானதே. அதனால் இந்தியா ஈழத்தமிழரது அரசியல் தீர்வுக்குரியதான புதிய உடன்பாடொன்றுக்கு செல்வதே மிகப் பொருத்தமானது. 13 ஆம் திருத்தம் கால அடிப்படையில் இலங்கை ஆட்சியாளர்களால் பலமிழக்க செய்யபட்டுள்ளது. அதனை ஏற்றுக் கொள்ள இலங்கை ஆட்சியாளர்கள் தயாராக இல்லாத நிலையில் புதிய உடன்பாட்டை நோக்கி நகர்வது பொருத்தமானது.
ஐந்தாவது, அத்தகைய உடன்பாட்டை ஈழத்தமிழரது கோரிக்கைகள் உள்ளடக்கப்படுவதுடன் இலங்கை அரசாங்கத்தால் மீளப் பெறப்பட முடியாத விடயங்களையும் வடக்கு கிழக்குக்கான பொருளாதார கட்டமைப்பினையும் கொண்டதாக அமைக்கப்பட வேண்டும்.அத்தகைய பொருளாதாரக் கட்டமைப்புக்கான நிதி பிரமாணங்களை இந்திய நிதி நிறுவனங்களின் உத்தரவாதத்துடன் புலம்பெயர் நிதி மூலங்களை பயன்படுத்தக் கூடியதாக அமைதல் வேண்டும். வடக்கு கிழக்கு பாரம்பரிய தாயகம் என்பதை உறுதிப்படுத்துவதுடன் இரு மாகாணங்களும் தனித்தனி நிர்வாக அலகுகளாக இயங்குவதற்கான நடவடிக்கையும் உள்ளடக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கிலுள்ள ஏனைய தேசியங்களது இருப்பை உத்தரவாதப்படுத்தும் உடன்படிக்கையாக அமைவது அவசியமானது.
எனவே பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் பிராந்தியக் கொள்கையாக விள்ங்கும் ‘சகார்த்’ திட்டம் வரையறுப்பது போல் பிராந்திய நாடுகளின் பாதுகாப்புக்கு முதலிடம் என்பதை அடிப்படையாகக் கொண்டு புதிய உடன்பாடொன்றை இந்திய இலங்கையுடன் மேற்கொள்ள வேண்டும். அதில் ஈழத்தமிழரது அரசியல் பிரச்சினைக்கான தீர்வென்பது முக்கியமானதென்பதையும் ஈழத்தமிழரது இருப்பின் பாதுகாப்பே இலங்கைத் தீவின் உணவுப் பாதுகாப்பினையும் இராணுவ அரசியல் சமூகப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் என்பதை முதன்மைப்படுத்த வேண்டும். இலங்கைத் தீவுக்கான அரசியல் பொருளாதார பாதுகாப் பின்மைக்கு ஈழத்தமிழரது பாதுகாப்பின்மையே அடிப்படைக்காரணம் என்பதை புதிய உடன்பாடு கவனம் கொள்ள வேண்டும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
