அரசியல் கட்டுரைகள்

ஈழத்தமிழர் அரசியலில் முடிவுக்கு வருகிறதா தமிழரசுக்கட்சி?

இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழரசு கட்சி தனித்துவமான இடத்தை வகித்து வந்துள்ளது. கடந்த காலம் முழுவதும் ஈழத்தமிழர்  அரசியல் செல்நெறியை வகுப்பதில் பெரும்பங்கு வகித்தது. 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழரசு கட்சி 75 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. ஒவ்வொரு காலப்பகுதியிலும் அதன் இருப்பையும் அது மக்களோடு கொண்டிருந்த நெருக்கமான உறவையும் பிரதிபலிக்கும் விதத்தில் சமஸ்டி என்றும், தனிநாடு என்றும், மாவட்ட அபிவிருத்தி சபை என்றும், மாகாண சபை என்றுமம் அதன் கோரிக்கைகள் காணப்பட்டது. தமிழ் மக்கள் வடக்கு-கிழக்கு சார்ந்து தனித்துவமான வகிபாகத்தை தமிழரசு கட்சி பிரதிபலிக்கும் என்ற நோக்கோடு பின் தொடர்ந்து இருந்தனர். ஆனால் சமகாலத்தில் தேர்தல் தோல்விகள் மட்டுமின்றி கட்சிக்குள் எழுந்த பாரபட்சங்களும், ஜனநாயகம் என்ற போர்வையில் உட்கட்சி போராட்டங்களும் நீதிமன்ற செய்முறைகளும் அதன் உருவத்தை முற்றாகவே சிதைத்துள்ளது. இக்கட்டுரையும் தமிழரசு கட்சி தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியையும் அதற்கான விளைவுகளையும் தேட முயல்கிறது.

தமிழரசு கட்சி பொறுத்து அதன் மாற்றணி என்று கருதப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் குறிப்பிட்ட விடயம் கவனத்திற்குரியது. அதாவது, “தமிழரசு கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த பாதையை தொடர்கின்ற வகையில் கட்சியின் முடிவுகள், பதவிகள் அமையக்கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “தமிழரசு கட்சி பிரதான கட்சியாக உள்ளமையினால் அந்தக் கட்சியை தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது” எனவும் குறிப்பிட்டு இருந்தார். தொடர்ந்து, ‘கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலரின் ஆதிக்கத்தை கட்சி தொடர்ந்து அனுமதிக்க கூடாது எனவும், தொடருமானால் மோசமான கொள்கை ரீதியான பாதையில் தமிழ்த் தேசிய அரசியல் தள்ளப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவர்கள் தமிழரசு கட்சியுடன் அனைவரும் இணைய வேண்டும் எனவும்; இளைஞர்கள் பெண்கள் தமிழரசு கட்சியில் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். இருவரது கருத்துக்கள் தமிழரசுக் கட்சியின் மீள் உருவாக்கம் பற்றிய உரையாடலாகவே தெரிகின்றது. ஆனால் இதன் எதார்த்தத்தை புரிந்து கொள்வது அவசியம்.

முதலாவது, தமிழரசு கட்சியின் நெருக்கடியானது கட்சியின் எதிரிகளாலோ அல்லது விரோதிகளாலோ ஏற்படுத்தப்பட்டது அல்ல. மாறாக கட்சிக்குள் இருந்து கட்சியை அழிக்க திட்டமிடும் சக்திகள் மேற்கொள்ளுகின்ற பிரதான உத்தியாகவே தெரிகின்றது. கட்சியின் கட்டமைப்பை சிதைப்பது; அதன் கொள்கைகளை பலவீனப்படுத்துவது; தமிழ் மக்களிடமிருந்து கட்சியை அந்நியப்படுத்துவது என்பன அக்குழுவின் பிரதான சமகால நடைமுறையாக காணப்படுகிறது. கட்சியின் தேர்தல் தோல்விக்கு பின்னர், தோல்வி பற்றிய எந்த உரையாடலும் இன்றி, பொதுச் சபையில் எந்தவிதமான விவாதமும் இன்றி, கட்சியை பலவீனப்படுத்தும் செய்முறை ஒன்றே காணப்படுகிறது. தமிழ் மக்கள் பெரும் நெருக்கடியான சூழலில் அகப்பட்டு இருக்கின்ற போது, அது பற்றி எந்தவிதமான கருத்துக்களும் வெளிப்பட்டிருக்கவில்லை. மாறாக கட்சியினுடைய முரண்பாடுகளை முன்னிறுத்தி, தனி மனித நலன்களை முதன்மைப்படுத்திக் கொண்டு, கட்சியை பலவீனப்படுத்துகின்ற நடைமுறையே மேற்கொள்ளப்படுகிறது. கட்சி என்பது மக்களுடையது என்ற எண்ணங்களின்றி, மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுச்சபை உறுப்பினர்களின் விருப்புக்கு உட்பட்டது என்று கட்சியின் சில உறுப்பினர்களும் அதன் தலைவர்களும் கருதுகின்றனர். அதனையே ஒவ்வொரு உரையாடல்களிலும் அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

இரண்டாவது, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் பெரும் தோல்வியை எதிர்கொண்ட தமிழரசுக் கட்சி கிழக்கில் உள்ள ஆசனங்களை வைத்துக்கொண்டு தான் வெற்றி பெற்றதாக கருதுகின்றது. ஆனால் வடக்கில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமிழரசு கட்சியிலிருந்து வெளியேறி உள்ளனர் என்ற நிலைப்பாடு கட்சியின் தலைமைகளுக்கும், தொண்டர்களுக்கும், பொதுச் சபை, மத்திய குழு உறுப்பினர்களுக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது. கட்சி என்பதும் அதன் செயல்பாடு என்பதும் மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற போது மாத்திரமே நிலையானதாகவும், தொழிற்படு திறனுடையதாகவும், அதன் கொள்கைகளை அமுல்படுத்தக்கூடியதாகவும் காணப்படும். துரதிஷ்டவசமாக தமிழரசுக்கட்சி அத்தகைய எண்ணங்கள் எதுவும் இன்றி, கட்சியின் பொறுப்புகளை கொள்கைகளை நிராகரித்து, தனிப்பட்ட நலனுக்காக கட்சியினுடைய வடிவம் பலவீனப்படுத்தப்படுகிறது. வடக்கு-கிழக்கு தழுவிய விதத்தில் வலுவான கட்சி கட்டமைப்புகளை கொண்டு தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. சமகாலத்தில் அதன் முன்னோடிகள் முதன்மைப்படுத்தி வைத்திருந்த எத்தகைய கொள்கைகளும் கட்சி உறுப்பினர்கள் பின்பற்றாத நிலைமைகளே காணப்படுகின்றன. இதன் விளைவு கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது.

மூன்றாவது, பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் சில உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாகவும், தமிழ்ப் பொது வேட்பாளர் கட்சியின் மூத்த உறுப்பினராகவும் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை தமிழரசு கட்சி மேற்கொண்டு வருகிறது. தமிழ்ப் பொது வேட்பாளர் என்பவர் தமிழ் தேசியத்தின் பெயராலும் அதன் குறியீட்டின் பெயராலும் தமிழ் மக்களை ஒன்றாக திரட்டுகின்ற இலட்சியத்தை கொண்டு களம் இறக்கப்பட்டவர். அவரை தோற்கடித்தல் என்பதுவும், அவர் ஆதரவானவர்களையும் தமிழ்ப் பொது வேட்பாளரையும் கட்சியில் இருந்து நீக்குவது என்பதுவும், தமிழர்களை ஒன்றாக திரட்டுவதையும் வடக்குக் கிழக்காக ஐக்கியப்பட்டிருப்பதையும் தமிழரசுக்கட்சி நிராகரிப்பதாகவே பொருள் கொள்ளப்பட வேண்டும். தமிழ்த் தேசியத்தை நிராகரித்துவிட்டு செயல்பட முனையும் நடவடிக்கைகளையே சமகால தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் முன்கொண்டு நகர்கின்றனர். அதுமட்டுமன்றி கடந்த கால ஜனாதிபதித் தேர்தல்கள் ஒவ்வொன்றிலும் தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களிக்குமாறே தமிழரசு கட்சி கட்டளை பிறப்பித்துள்ளது. எல்லா சந்தர்ப்பங்களிலும் தென் இலங்கை வேட்பாளர் ஒருவரை ஆதரித்தே தமிழரசு கட்சி செயல்பட்டுள்ளது. அதன் பிற்பாடு நிகழும் பாராளுமன்ற தேர்தல்களில் தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர். இதனுடைய அடிப்படையிலேயே கடந்த தேர்தலிலும் தமிழ்ப் பொது வேட்பாளரை தோற்கடிக்கும் நோக்கோடு ஒரு தேசிய இனமாக சிந்திக்க வேண்டிய தரப்பினர் மிக மோசமான அணுகுமுறைகளை பின்பற்றியிருந்தனர்.இதன் விளைவுகள் பாராளுமன்றத் தேர்தலில் படுமோசமான தோல்விகளை எதிர்கொண்டர். தோல்வியை நீட்சியாக பேணுவதற்கு தமிழரசுக் கட்சி தயாராவதற்கான அணுகுமுறைகளையே சமகாலத்தில் தொடர்ச்சியாக பேணிவருகின்றார்கள். தமிழ்த் தேசியத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்ட ஒரு கட்சி அழிக்கப்படுகின்ற நிலை தவிர்க்க முடியாததாக மாறிக் கொண்டிருக்கின்றது. தொடர்ச்சியாக பலவீனமான இயல்புகளை பேணுகையில், கிழக்கு மாகாணத்தில் தமிழரசு கட்சி பெற்ற ஆசனங்களை அடுத்து வரும் தேர்தலில் பாதுகாக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்கானது என்ற எண்ணத்தோடு இந்த கேள்வி ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும்.

நான்காவது, தமிழரசு கட்சி பொறுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் குறிப்பிட்டு இருக்கும் கருத்து ஆரோக்கியமானது. எனினும், கட்சி அரசியலில் ஒரு பலவீனமான அல்லது தமிழ் காங்கிரஸ் பொறுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொறுத்தும் அதன் தலைமை கொண்டிருக்கும் பலவீனமான அபிப்பிராயமாகவே தோன்றுகிறது. இத்தகைய பலவீனமான அபிப்பிராயத்தை வைத்துக் கொண்டு ஒரு கட்சியை கட்டமைப்பதும் பலப்படுத்துவதும் மிகக் கடினமானது. அதேநேரம் இலங்கையில் மட்டுமின்றி உலக வரலாறுகளிலும் ஒரு கட்சியின் காலப்பகுதி காணாமல் போவதும் புதிய கட்சிகள் தோற்றுவிக்கப்படுவதும் எழுச்சி பெறுவதும் தவிர்க்க முடியாததாகவே காணப்படுகிறது. அத்தகைய சூழலுக்குள்ளேயே ஈழத்தமிழர் அரசியல் காணப்படுகிறது. ஈழத் தமிழர்களுடைய அரசியல் கடந்த கால வரலாறு முழுவதும் அடையப்படாத கொள்கைகளுக்காகவும் அல்லது கொள்கைகளை அடைய முடியாத கட்சிகளாலும் தலைவர்களாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் துயரம் நிலவுகின்றது. இத்தகைய சூழலை மாற்றி அமைக்க வேண்டிய தேவையும் அவசியமும் ஈழத்தமிழர் மத்தியில் எழுந்துள்ளது. பழையவற்றை சீரமைப்பது என்பதுவும், சரிப்படுத்துவது என்பதுவும், ஒன்றிணைப்பது என்பதுவும் சாத்தியமற்ற செய்முறையின் வடிவங்களாகவே காணப்படுகிறது. அதனால் புதிய தலைமைகளையும் புதிய கட்டமைப்புகளையும் நோக்கி ஈழத்தமிழர்களுடைய அரசியல் எண்ணம் மாற்றப்பட வேண்டும். பழைய மரபுகளை எண்ணங்களை கைவிடாத ஏமாற்றுத்தனமும் போலித்தன்மையும் கொண்டிருக்கின்ற கட்சிகளையும் அதன் கொள்கைகளையும் பின்பற்றுவது சமகால அரசியல் சூழலுக்கு உகந்ததாக தெரியவில்லை. சமகால அரசியல் சூழல் என்பது உள்நாட்டிலும் பிராந்தியத்திலும் சர்வதேச மட்டத்திலும் வேறுபட்டதாகவே காணப்படுகிறது. அத்தகைய மாற்றங்களை எதிர்கொள்ளுகின்ற கட்டமைப்பினையும், திறனையும், அதற்கான இலக்குகளையும் ஈழத்தமிழர்களின் பழமைவாத கட்சிகள் கொண்டிருக்கவில்லை. அவர்களது அணுகுமுறைகள் அனைத்தும் கட்சி நலன் சார்ந்தும், உறுப்பினர்கள் சார்ந்தும், அதிலும் ஆதிக்கம் செலுத்துபவர்கள் சார்ந்துமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மாறாக முன்னோடிகளின் எண்ணங்களோடு கூட கட்சியினுடைய வடிவங்கள் இல்லாது போய்விட்டது. அதனால் இளைஞர்கள் அல்லது புதிய அணுகுமுறைகளை கொண்டவர்கள் புதிய அமைப்புகளை ஸ்தாபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டலும் அணுகுமுறைகளும் தற்போது அவசியமானதாக உள்ளது. தற்போது இருக்கின்ற அரசியல் கட்சிகளின் இயல்புகளும் அணுகுமுறைகளும் ஒன்றை ஒன்று மிஞ்சியதாகவே அமைகின்றது. அவர்களுக்கிடையில் காணப்படும் புரிந்துணர்வுமம், ஒத்துழைப்பும், உடன்பாடுகளும் தமிழ் மக்களுக்கானது அல்ல. மாறாக கட்சிகளுக்கும், கட்சியின் ஆதிக்கம் பெறுபவர்களுக்கும், அதன் உறுப்பினர்களுக்கு மட்டுமானதேயாகும். சாதாரண தமிழ் மக்களின் நோக்கி அவர்களுடைய கொள்கைகள் வளைக்கப்பட மாட்டாது.

ஐந்தாவது, தமிழரசு கட்சியின் பதில் தலைவருடைய அழைப்பு யாரை நோக்கியது என்ற கேள்வி இயல்பாகவே எழுதுகிறது. கட்சியின் ஒரு சில உறுப்பினர்களின் எதேச்சதிகாரத்தை சவாலுக்கு உட்படுத்தியவர்கள் கட்சியை விட்டு பெரும் எண்ணிக்கையில் நீக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் புதிதாக கட்சியில் இணைப்பவர்கள் கட்சியில் நீக்கப்பட்டவர்கள் போன்ற ஒரு நிலையை மீளவும் உருவாக்காத என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இவற்றுக்கான பதில்களும் உரையாடல்களும் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட வேண்டும். தமிழரசு கட்சி காணாமல் போவது என்பது துயரமானதாக இருந்தால் அதன் தற்போதைய உறுப்பினர்களும் அவர்களுடைய நடவடிக்கைகளும் கட்சியின் இருப்பை மேலும் பலவீனப்படுத்துவதாகவே தெரிகின்றது. அதனை மீட்டெடுப்பது என்பதை விட புதிய கட்சிகளை உருவாக்குவது பொருத்தப்பாடுடையது என்ற விவாதம் தமிழ் மக்களிடம் ஆரம்பித்திருக்கின்றது. அத்தகைய புதிய அணிகள் அல்லது கட்சிகள் தோற்றுவிக்கப்படவில்லை எனில் தென்னிலங்கையை நோக்கியும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளை நோக்கியும் ஈழத் தமிழர்கள் அணி திரட்டப்படுவார்கள். அவ்வாறு அணிதிரட்டப்படுகின்ற சந்தர்ப்பம் முழுமையாகவே ஈழத் தமிழர்களின் இருப்பையும் வாழ்வையும் முடிவுக்கு கொண்டு வரக்கூடியதாகும். அதாவது தேசிய இருப்போடு அடையாளப்படுத்தப்படும் சூழல் என்பது காணாமல் போய், இலங்கை தேசியத்துக்குள் அங்கமாகும் நிலை தவிர்க்க முடியாத நிலையை ஏற்படுத்தும். கட்சியும், கட்சியினுடைய உறுப்பினர்களும், அதன் தலைமைகளும் சரியான முறையில், நியாயமான அடிப்படையில் தமிழ் தேசியத்தின் சார்பு நிலைக்குள் இருப்பவர்களை முதன்மைப்படுத்த முன்வரவேண்டும். இல்லையேல் கட்சியை கட்டமைப்பதோ, மீளமைப்பதோ எந்த விதத்திலும் சாத்தியமற்றதாகவே காணப்படுகிறது.

எனவே, தமிழரசு கட்சியும் ஏனைய தமிழ் கட்சிகளும் கூட்டு பற்றி உரையாடுகின்றனர். அத்தகைய கூட்டு பற்றிய உரையாடல்களும் கட்சிகளை மீளமைக்க திட்டமிடுவதும் மிகவும் போலித்தனமான விடயங்களுக்கானது என்பது தமிழ் மக்களுக்கு இலகுவாகவே தெரிகின்றது. அதனால் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இவர்களுடைய அணுகுமுறைகளை நிராகரிக்கின்ற மனோநிலையோடு செயல்பட ஆரம்பித்து விட்டார்கள். அதிலிருந்து அவர்களை தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்ப்பது என்பது கட்சிகளின் கட்டமைப்புகளை, அது சார்ந்த கொள்கைகளை சாதாரண தமிழ் மக்களுக்காக வளைந்து கொடுக்கக் கூடிய விதத்தில் உருவாக்குவதாலேயே சாத்தியமாகும். மக்களை நோக்கி கட்சிகளின் உடைய இருப்புகளை மாற்றுவது; மக்களின் நலன்களை கட்சியின் நலனாக கருதுவது போன்ற பல விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய பொறுப்பாண்மையை கட்சிகள் கொண்டிருக்கின்றன. அவற்றை மேற்கொள்ளாத வரை கட்சிகளை மீளமைப்பதோ, பழம்பெருமை பற்றி உரையாடுவதோ, ஐக்கியத்திற்காக உழைப்பதோ எந்த பயனையும் ஈழத்தமிழர் உடைய அரசியலில் ஏற்படுத்தாது. தோல்விகளுக்கு பின்னரும் கட்சிகளையும் அமைப்புகளையும் அவ்வாறே வைத்துக்கொண்டு செயல்பட முனைகின்ற மோசமான நிலையையே ஈழத் தமிழர் மத்தியில் காணப்படும் கட்சிகள் கொண்டிருக்கின்றன. இது ஈழத்தமிழரை மீட்பதற்கானதாக தெரியவில்லை. மாறாக மீளவும் ஒரு 75 வருடங்கள் தமிழ் மக்களே எவ்வாறு ஏமாற்றலாம் என்பதை பற்றிய திட்டமிடலை கூட்டாக மேற்கொள்ள தயாராவது போன்றே தெரிகிறது.

-பேராசிரியர். கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)