அமெரிக்க ஜனாதிபதிகள் ஆட்சியில் இருக்கும் போது வெவ்வேறு கோட்பாடுகளை அமெரிக்க வெளியுறவில் ஏற்படுத்துகின்றனர். காரணம் அமெரிக்காவின் இருப்பும், இறையாண்மையும், பொருளாதாரமும், அரசியல் ஆதிக்கமும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையிலேயே தங்கியிருந்தது. இதனடிப்படையிலேயே 1969 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய ரிச்சர்ட் நிக்சன் (1913-1994) அன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு அமெரிக்க வெளியுறவில் குவாம் கோட்பாட்டை முன்வைத்தார். குறிப்பாக வியட்நாமில் அமெரிக்கா அடைந்த தோல்வியினால் அமெரிக்காவின் இராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கையை மாற்றிக் கொள்ள முயன்றது. அதனை நிக்சன் கோட்பாடு எனவும் அழைப்பதுண்டு (Nixon Doctrine). குவாம் கோட்பாடு 1969 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதி அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனால் அறிவிக்கப்பட்ட ஒரு முக்கிய வெளியுறவுக் கொள்கையாகும். இது கலிபோர்னியாவின் குவாமில் (Guam) செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதால், குவாம் கோட்பாடு என்றும் அழைக்கப்படுகிறது. இது பிராந்திய சுயசார்பை ஊக்குவிப்பதை நோக்கிய ஒரு மாற்றத்தைக் குறித்தது. அது மட்டுமன்றி வியட்நாம் போருக்குப் பிறகு ஆசியாவில் அமெரிக்காவின் நேரடிப் போர் ஈடுபாட்டை குறைவடைந்ததை குறிப்பதாகவும் விளங்கிக் கொள்ளப்பட்டது. அத்தகைய அணுகுமுறையையே தற்கேபாதைய ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப்(2026) ஈரான் போருக்கு பின்னான சூழலில் முன்வைக்க முயல்வதாக தெரிகிறது.
குவாம் கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள்:
பங்களிப்பு (Partnership): அமெரிக்கா தனது நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும். ஆனால், அந்த நாடுகளின் பாதுகாப்பிற்குத் தேவையான முதல் கட்டப் படையெடுப்பு மற்றும் பொறுப்பை அந்த நாடுகளே ஏற்க வேண்டும்.
ஆசியாவில் மாற்றம் (Change of Asia): குறிப்பாக ஆசிய நாடுகள், கம்யூனிச அச்சுறுத்தல்களைத் தடுக்க அமெரிக்கப் படைகளை மட்டும் நம்பியிருக்காமல், தங்கள் சொந்த இராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும்.
அணு ஆயுத பாதுகாப்பு (Nuclear Defense): அமெரிக்காவின் அணு ஆயுதக் குடை (Nuclear Umbrella) நட்பு நாடுகளுக்குத் தொடர்ந்து கிடைக்கும் என்பதுடன் அணு ஆயுதம் அல்லாத அச்சுறுத்தல்களை அந்த நாடுகளின் இராணுவ வல்லமையினால் எதிர்கொள்ள வேண்டும்.
குவாம் கோட்பாட்டின் நோக்கம்:
வியட்நாம் போரின் காரணமாக அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் ஆசியாவில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையைக் குறைத்து வியட்நாம் மயவாக்கல் (Vietnamization) கொள்கையை நடைமுறைப்படுத்துவது பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. உள்ளூர் படைகளுக்குப் பயிற்சி அளித்து, போரைத் தொடரச் செய்வதன் மூலம், கௌரவமான அமைதியை அடைவதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்கா செயல்பட்டது. அதனையே வியட்நாமிய மயமாக்கல் எனக் குறிப்பிட்டுக் கொண்டது. உலகளாவிய ரீதியில் அமெரிக்காவை அனுமதிக்கும் வகையில் இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டது. இந்தக் கோட்பாடு பின்வாங்குவதைப் பற்றியது அல்ல, மாறாக அமெரிக்கா ஒரு பொறுப்பான வகிபங்கைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு நிலையான உபாயத்தை நிறுவுவதைப் பற்றியது என்று நிக்சன் வாதிட்டதாக தெரியவருகிறது. வியூக மாற்றங்கள் பிரதானமான நோக்கமாக அமைந்திருந்தது. இந்தக் கோட்பாடு ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து போன்ற சில நட்பு நாடுகளை பாதுகாப்பு சார்ந்து அமெரிக்காவை மட்டுமே சார்ந்திருப்பதை விடுத்து சுயமாக அல்லது பிராந்திய அளவிலான பாதுகாப்பு உத்திகளை மறுமதிப்பீடு செய்யத் தூண்டியது.
(ஆதாரம்: Mitchell.W.A.(2026) A Grand Strategy of Consolidation: How Trump Can Revitalize American Power.)
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
