அரசியல் கட்டுரைகள்

தமிழகத் தேர்தல் முடிபுகளும் தென் இலங்கை அரசியலும்? Tamil Nadu election results and South-Sri Lankan politics ?

தமிழ்நாட்டு தேர்தல் மாறுபட்ட தெரிவென்றை ஏப்ரல் 04.2026 வெளியான தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. தமிழக வெற்றி கழகம் ((Tamilaga Vettri Kazhagam ) ) 108 ஆசனங்களையும் திராவிட கட்சிகளின் கூட்டுக்கள் மீதி ஆசனங்களில் 73 இனை தி.மு.க.வும், அ.தி.மு.க 53 ஆசனங்களையும் தேர்தலில் கைப்பற்றியுள்ளன. தமிழக சட்ட சபை அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சி அமைப்பதிலும் அதன் எதிர்காலத்திலும் அதீதமான நெருக்கடிகளை எதிர் நோக்கலாம் என்ற மதிப்பீடுகள் கடந்து போகிறது. ஆனாலும் தமிழக வெற்றிக்கழகத்தின் நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். நீண்ட காலத்துக்கு பின்னர் மீண்டும் சினிமா நடிகர்களிடம் தமிழக அரசியல் ஒப்படைக்கப்பட்டிருப்பதையும் இதன் விளைவுகள் எத்தகைய தாக்கத்தை தரப் போகிறது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரதான அம்சமாகும். எம்.ஜி.ஆர். சினிமா நடிகரா மட்டும் இருக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்வது அவசியமானது. அவர் ஒரு பேரியக்கத்தினதும் அண்ணாத்துரை என்ற பேரறிஞனாலும் வளர்க்கப்பட்டவர் என்ற அடிப்படையில் நோக்குவது பொருத்தமானது. இக்கட்டுரையும் தமிழக தேர்தல் முடிவுகள் தென் இலங்கையின் அரசியலில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற தேடலுக்கான பதிலாக உள்ளது.

முதலாவது தென்னிலங்கையின் தற்போது உள்ள ஆட்சியும் தமிழக ஆட்சியும் புதியவை. இரண்டுமே ஆட்சி நிகழ்த்துவதில் அனுபவங்களை அதிகம் கொண்டவை அல்ல. அனுபவரீதியில் இரு தரப்;பிற்கும் இடையிலான ஒற்றுமை அதிகமான உள்ளது. ஆனால் தென்னிலங்கையின் ஆட்சியில் ஏதோ ஒரு அடிப்படையிலான சித்தாந்தத்தின் எச்சசொச்சங்கள் காணப்படுகிறது. மார்க்சிஸ மரபிற்குள்ளால் வளர்ந்தது மட்டுமல்ல இரு தடவை புரட்சியை முன்னெடுத்து தோல்வியடைந்து அழிக்கப்பட்ட நீண்ட துயரங்களையும் இழப்பீடுகளையும் கண்ட கட்சி ஜே.வி.பி. இது எதுவும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கிடையாது. சினிமா பாணியிலான பிரச்சாரத்தையும் சினிமா மயவாக்கத்தையும் கொண்ட ஆதரவை கொண்டு ஆட்சிக்கு வருகை தந்த கட்சியாகும். தமிழகம் அடைந்திருக்கும் புதிய வடிவம் என்பது தென்னாசியாவில் ஏற்பட்ட இளைய தலைமுறையினரின் அரசியல் நடத்தையின் (Gen-Z) கூறாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டியுள்ளது. நேபாளம், வங்களாதேஷ் போன்ற நாடுகளில் ஏற்பட்ட இளையோரின் எழுச்சி போன்று தமிழக தேர்தல் முடிபுகள் வெளிப்படுத்துகின்றன. அதனை கடந்து ஆட்சித் துறையிலும் அதிகார கட்டமைப்பிலும் அனுபவம்மற்ற அரசாங்கத்தின் இருப்பை தமிழகம் எதிர்கொள்ள இருக்கின்றது. அதன் அடிப்படையில் தென்னிலங்கையில் ஆட்சியோடு சம தூரத்தில் பயணிக்க கூடிய ஒரு ஆட்சியை தமிழகத்தில் அமைவதாகவே புரிந்து கொள்ள முடியும். அதனால் தமிழகத்தை கையாளுவதில் அல்லது கவனம் கொள்வதில் தென்னிலங்கை அதிக பிரயத்தனம் கொடுக்க வேண்டியதில்லை என்பது உணரப்படுகின்றது. வெளியுறவுக் கொள்கையில் கொழும்பு எப்போதும் புதுடில்லியோடு பலமான உறவைக் கொண்டிருப்பதனால் தமிழகம் கொழும்புக்கு அல்லது தென்னிலங்கைக்கு இரண்டாவது பட்சமானதாகவே இருக்க வாய்ப்புள்ளது. இதன் பிரதான விடயம் தேர்தலுக்கு முன்னர் கச்சதீவு பொறுத்து தமிழக வெற்றி கழகம் முன்வைத்த நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் தென் இலங்கைக்கு இருக்கும் பிரதான சவாலாக மாறக்கூடியது. ஏற்கனவே இலங்கையின் ஜனாதிபதி கச்சதீவு தொடர்பில் முன்வைத்துள்ள பிரகடனம் இலங்கையின் இறைமை பொறுத்ததென்பது தெரிந்ததே. அதனை தென்னிலங்கை புதுடில்லியுடன் சமரசம் செய்வதன் மூலம் தீர்த்துக் கொள்ள அதிகம் முயலும். அதனால் புதிய முதலமைச்சர் நடிகர் விஜய்க்கு தமது கட்சி முன்வைத்த தேர்தல் வாக்குறுதியை சாத்தியப்படுத்துவதில் அதிகமான நெருக்கடி நிலை ஏற்படும். அதனை கடந்தும் தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்த முயலுமாக இருந்தால் தென்னாசியப் பிராந்தியத்திலே புதிய வாய்ப்புகளுக்கான சூழல் ஒன்றை தோற்றுவிக்கும்.

இரண்டாவது தமிழக வெற்றி கழகத்தின் தமிழ் உணர்வும் காங்கிரசோடு கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிடும் சூழலும் புது டெல்லியை அதிக கேள்விக்கு உட்படுத்தக் கூடும். ஈழத்தமிழரிடமும் அதிக கேள்விகளை உருவாக்கும். பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் தமிழகத்துக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் அதிக சவாலை கொடுக்கின்ற சூழல் ஒன்று ஏற்படும். இச்சந்தர்ப்பத்தில் புதுடில்லியும் கொழும்பும் கைகோர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு அதீதமானதாக அமையும். இது தென்னிலங்கையில் இருக்கும் தீவிர இன மத வாதிகளுக்கு வாய்ப்பான அரசியல் களத்தை தோற்றுவிக்கும். குறிப்பாக தமிழகம் கச்சதீவுக்காக கொந்தளிக்குமாயின் அதன் விளைவு மறைமுகமாக தென்னிலங்கையின் ஆட்சியை இழந்திருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் அது சார்ந்த சக்திகளுக்கும் ஒரு வாய்ப்பை கட்டமைக்கும். தென்னிலங்கையினுடைய ஊழல் திறைசேரி மோசடி மற்றும் படுகொலைகளின் பிரதிபலிப்புகள் ஜே.வி.பி.யின் ஆட்சி மீது அதிகமான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் கச்சதீவு பற்றிய தேர்தல் வாக்குறுதி நடைமுறைப்படுத்தப்படும் சூழல் ஏற்படுமாக இருந்தால் தீவிர தென் இலங்கை சக்திகளுக்கு அதீதமான வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக அமையும். அதே நேரம் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை நெருக்கடியின்றி நடாத்த புதுடில்லி அனுமதிக்குமா என்ற சந்தேகம் வலுவடைந்து வருகிறது. அல்லாதுவிட்டால் புதுடில்லிக்கு கீழ்படிவான ஆட்சியை சாத்தியப்படுத்தும் நிலை ஏற்படும். இந்தியா ஒரு அரைகுறை சமஷ்டி (Quasi Federal) அரசியலமைப்பைக் கொண்டதென்பது தெரிந்த விடயமே.

மூன்றாவது தமிழக வெற்றி கழகம் தொங்கு நிலை சட்டசபையை எதிர் நோக்குவதனால் உறுதியான ஆட்சியை சாத்தியப்படுத்துகின்ற வாய்ப்பை விட நெருக்கடிகளை அதிகம் எதிர்கொள்ள போவது என்பது அதன் ஆரம்ப நகர்வுகள் காட்டுகின்றன. தேர்தல் வாக்குறுதிகளை அதிகம் வழங்கிய தமிழக வெற்றி கழகம் அவற்றை நிறைவேற்றுவதிலும் அதிக சிரமங்களை எதிர் நோக்கவுள்ளது. முதலமைச்சர் விஜய் தனது முதல் உரையிலேயே மக்களிடம் சாத்தியமானதை பற்றியும் அவகாசம் தேவை என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். இது தேர்தல் வாக்குறுதிகளை பற்றியதாகவே தெரிகிறது. இளையோர் அரசியல் என்பது சித்தாந்தங்களை அல்லது கருத்தியலை முன்னிறுத்திக் கொண்டு எழுச்சி பெற்ற வரலாறுகள் தென்னாசியாவின் அனுபவமாக உள்ளது. தெலுங்கானா விடுதலைப் போராட்டம், கலிஸ்தான் விடுதலை போராட்டம், அதே போன்று ஈழவிடுதலைப் போராட்டம் என்பன அதிக இளையோர் முயற்சியாகவே அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்ற ஆட்சி என்பது சிறுவர்களை (Kid’s Government) தேர்தலில் அதிகம் பயன்படுத்திக் கொண்டதன் விளைவென்ற விமர்சனம் தவிர்க்க முடியாமல் இந்த அரசாங்கத்திற்கு உரியது. இதன் பிரதிபலிப்புகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா இடங்களிலும் வெளிப்படுத்துவதாகவே தமிழக ஊடகங்கள்; கருத்து முன்வைக்க முயலுகின்றன. ஆனால் மக்கள் அத்தகைய கட்சியை நோக்கி அல்லது ஆட்சி நோக்கி வாக்களிப்பை நிகழ்த்தி இருப்பது என்பது தென்னாசியாவில் எழுந்திருக்கும் புதிய அனுபவமாகவே தெரிகின்றது. இத்தகைய ஆட்சியை கையாளுவது என்பது இலகுவானதாகவே தென்படுகிறது. கொழும்புக்கு சாதரண விடயமாகவே அமைய வாய்ப்புள்ளது. இலவசங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் சிறுவர்களின் பிடிவாதங்களுக்கும் குழந்தைகள் உட்பட்டவர்களிடம் அகப்பட்டிருக்கும் ஆட்சி அரசியல் கோட்பாடுகளையும் நியதிகளையும் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது. அல்லது புதிய கோட்பாடுகளுக்கு உட்படுத்த வேண்டிய நிலையை தோற்றுவித்துள்ளதாகவே தெரிகிறது.

நான்காவது ஈழத்தமிழர்களுடைய அரசியலோடு அதிக நெருக்கமுடைய தமிழகம் மீண்டும் ஒரு வேறுபட்ட யுகத்துக்குள் நுழைந்திருப்பது ஈழத்தமிழர்களின் இளையோர் கருதுவது போல் வாய்ப்பானதாக அமையுமா என்பது கேள்விக்குரியது. ஈழத்தமிழர்களின் எதிர்பார்க்கைகளும் தமிழகத்துடனான உறவும் கட்சிகளால் வளர்க்கப்படுவதற்கான தேவைப்பாடு இருந்தாலும் புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் தமிழக வெற்றி கழகம் ஈழத்தமிழருடைய அரசியல் சார்ந்து கொண்டிருக்கும் கருத்தியல் என்ன என்பது வெற்றிடமாகவே உள்ளது. அது மட்டுமின்றி அத்தகைய புதிய ஆட்சியின் கருத்தியல் வடிவமே தெரியாத நிலையில் அது தரக்கூடிய விளைவும் தெளிவற்றதாக உள்ளது. மாறாக கடந்த கால திராவிட கட்சிகள் அனைத்தும் ஏற்படுத்திய விளைவுகளின் எதிரொலிப்பும் அதிலிருந்து மாறுபட்ட இருப்பின் வடிவமும் புதிய வரவுக்கு வித்திட்டதே அன்றி கொள்கை சார்ந்த பரிமாணம் என்று அடையாளம் காணமுடியாதுள்ளது. அரசியல் கருத்தியல்கள் அனைத்தையும் தொலைத்து விட்டு ஒரு புதிய வடிவத்துக்குள் தென்னாசியப் பிராந்தியம் நுழைகிறது என்பது நேபாளம், வங்களாதே~; போன்ற நாடுகளில் காணமுடிகிறது. அதன் விளைவுகளை ஈழத் தமிழர்கள் முன்கூட்டியே அடைந்து இருக்கிறார்கள். ஆனாலும் ஈழத் தமிழர்கள் தமது அரசியல் ரீதியான முன்னைய நியமங்களை மிக ஆரோக்கியமாகவும் சரியான திசையிலும் வடிவமைத்திருந்தனர். 2009 களில் ஈழத்தமிழர்கள் தமிழக ஆட்சியிடமிருந்தும் புதுடில்லி இடமிருந்தும் அதிக துயரங்களை எதிர்கொண்டிருந்தனர் என்பது மறக்க முடியாத யதார்த்தமாகும்.
எனவே தமிழகத்தின் புதிய ஆட்சி அதிக எதிர்பார்க்கையோடு நிறுத்தப்படுகின்றது. அதே நேரம் தென்னிலங்கை தமிழக ஆட்சியை இலகுவில் கையாளக் கூடிய சூழலே காணப்படுகிறது. தமிழக வெற்றிக கழகத்தின் கச்சதீவு பற்றிய தேர்தல் வாக்குறுதியை விட ஆட்சியை தக்கவைப்பதில் அதிக நெருக்கடியை எதிர் கொள்ள இருகிறது. ஆட்சி சாத்தியப்படாது விட்டாலும் மாற்றத்திற்கான வடிவம் எந்த கொள்கைகளாலும் கட்டமைக்கப்படவில்லை என்பதுடன் புதுடில்லியுடனான பகைமை அதீத மாற்றத்தையும் தராது என்பதை உணர முடிகிறது.

(நன்றி: தினக்குரல்)

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்