அரசியல் கட்டுரைகள்

தமிழக வாக்காளர்களின் தேர்தல் நடத்தையும் ஈழத்தமிழர்களும்?

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் அதிக குழப்பங்களையும் நெருக்கடிகளையும் தோற்றுவித்திருக்கிறது. ஆட்சி அமைப்பதில் தமிழக வெற்றிக்கழகம் பெரும் இளுபறிக்குப் பின்னர் இடதுசாரிகளதும் காங்கிரஸ் கட்சியினதும் ஒத்துழைப்போடு சாத்தியமாகியுள்ளது. ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி பெரும்பான்மையற்ற நிலையானது ஒரு பக்கம் உறுதியற்ற ஆட்சிக்கு வழி வகுக்கும் என்ற எதிர்பார்க்கை உண்டு. மறுபக்கத்தில் த.வி.க. (Tamilaga Vettri Kazhagam ) வழங்கியுள்ள வாக்குறுதிகளால் தமிழகம் பொருளாதார ரீதியில் எதிர்நோக்கவுள்ள நெருக்கடி அதீதமானதாக அமையப் போகிறதாக தெரிகிறது. அல்லது வாக்குறுதிகளை கைவிட வேண்டும். முதலமைச்சரின் முதல் உரையிலேயே தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசமும் சாத்தியமானதைப் பற்றியும் உரையாற்றியுள்ளார். இத்தகைய முதிர்ச்சியற்ற அரசியல் நடத்தைகள் ஈழத்தமிழர்களுடைய அரசியலில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பது அவதானிக்கப்பட வேண்டியது. ஈழத்தமிழரின் புவிசார் அரசியல் ரீதியில் தமிழகம் அதீத முக்கியத்துவத்தை கொண்டது. தமிழக வெற்றிக்கழகம் கச்சதீவு தொடர்பில் கொண்டிருக்கின்ற உரையாடல்கள் அதிக நெருக்கடியை அல்லது மாற்றத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்துமா என்ற கேள்வியை உருவாக்கி உள்ளது. இதனை ஆழமாக அவதானிப்பது அவசியமானது.

தமிழக வெற்றி கழகத்தை நோக்கி தமிழக மக்கள் வழங்கிய மக்கள் தீர்ப்பானது அதிக வாதப்பிரதிவாதங்களை தந்திருக்கிறது. அது தமிழக மக்களின் முடிபாகும். குறிப்பாக தமிழக வாக்காளர்களின் நடத்தை சினிமா கவர்ச்சிக்குக்குள்ளும் குழந்தைகளின் அல்லது சிறுவர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும் ஆட்சி அதிகாரத்திற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறன. கொள்கையற்ற நீண்ட அனுபவமற்ற முதிர்ச்சியடையாத கட்சியும் வாக்காளர்களும் தமிழகம் பொறுத்து மட்டுமல்ல ஈழத்தமிழர் பொறுத்து எடுக்கப் போகும் தீர்மானங்கள் முக்கியமானவை. எத்தகைய கொள்கையையும் முதன்மைப்படுத்தாத ஒரு கட்சியின் ஆட்சியை தமிழக வாக்காளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் பிரதிபலிப்பு இளைய தலைமுறை வருகை என்று அடையாளப்படுத்திக் கொண்டாலும் நடைமுறையில் நேபாளம் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தெளிவற்ற நிலையற்ற இளையோரின் ஆட்சியில் பங்கில்லாத வடிவமாக தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை அடையாளப்படுத்த முயலுகின்றன சூழல் நிலவுகிறது. ஆனாலும் பெரும்பான்மை மக்களின் முடிவும் கொள்கை பற்றுடைய இடதுசாரிகளின் இணைவும் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி நிலைத்திருப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

இது வாக்காளரின் நடத்தையில் காணப்பட்ட புதிய வடிவமாக புரிந்து கொள்ள முடிகிறது. இது கொள்கை சார்ந்ததோ, கருத்தியல் சார்ந்ததோ அல்லது மாற்றத்திற்கான நியமங்கள் சார்ந்தாகவோ தோற்றவில்லை. மாறாக 21ம் நூற்றாண்டின் இன்றைய சகாப்தம் கொள்கையற்ற வாக்காளர்களின் நடத்தையை அதிகம் கொண்டிருக்கிறது. ஓர் அறிவியல் ரீதியில் மதிப்பீடு செய்ய முடியாத நெருக்கடிக்கும் எல்லாவற்றையும் நிராகரிப்பது என்ற பின்நவீனத்துவ சிந்தனைத்தளத்தில் அங்கமாகவும் இதனை புரிந்து கொள்ள வேண்டிய உள்ளது. ஆனால் இது தொடர்பில் ஈழத்தமிழர்களிடமும் அத்தகைய வெளிப்பாட்டை 2024 தேர்தலில் சிறிய அளவில் வெளிப்படுத்தியிருந்தனர் என்பதை மறுக்க முடியாது. அதற்கான விளைவை சொற்பகாலத்தில் புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வகையான கொள்கையற்ற மறுதலிப்பு வாதங்களையும் நிராகரிப்பு தன்மைகளையும் முதன்மைப்படுத்திய வாக்களிப்புகள் பரவலாகவே காணப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகம் நீண்ட நிலையான கருத்தியல் வளர்ச்சியின் அங்கமாக தன்னை வரிந்து கட்டிக் கொண்ட தேசம். அரசியல் சித்தாந்தத்தில் சிங்காரவேலரும், பெரியாரும், அண்ணாத்துரையும் உருவாக்கிய மறுமலர்ச்சியில் வலுப்பெற்ற தேசம் என்பதை மறுக்க முடியாது. காலனித்துவ காலத்திலும் சுதந்திரத்திற்கு பின்னரும் அத்தகைய கருத்து அலையும் வீச்சு எல்லையும் வலிமையானதாக இருந்தது. அத்தகைய எழுச்சியை தக்கவைக்க முடியாத சுயநலவாதிகளின் நலன் சார்ந்த அரசியல் ஏற்படுத்திய விளைவுகளை மக்கள் தற்போது வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழக தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் மிக முக்கியமான செய்தி ஒன்றாக நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியின் வீழ்ச்சி உணர்த்துகிறது. மிக நீண்ட காலமாக ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் விடுதலைப்புலிகளையும் அதன் தலைமையும் முன்னிறுத்தி பாரிய பிரச்சாரத்தையும் உரையாடல்களையும் நிகழ்த்தும் நாம் தமிழர் கட்சி எந்த ஆசனங்களையும் பெறாத நிலை மட்டுமன்றி அதன் வாக்கு வங்கி (4.0சதவீதம்)பெரிய அளவில் சரிவடைந்துள்ளமை கவனத்திற்குரியது. இது ஈழத்தமிழர் பொறுத்து தமிழகம் கொண்டிருக்கின்ற மனோநிலையை இனம்காண முடிகின்றது. தமிழகத்தில் 1970-களுக்குப் பின்னான காலப்பகுதியில் ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் பின்தளமாக தமிழகம் அடையாளப்படுத்தப்பட்டது. அரசியல் கட்சிகளும் தனிமனிதர்களும் ஈழ ஆதரவாளர்களும் பலமாக இருந்த தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவான ஒரு கட்சியால் ஓர் ஆசனத்தை கூட பெற முடியாத நிலைக்குள் இன்றைய காலப்பகுதி நிறுத்தி உள்ளது. இது பெரும் அளவுக்கு ஈழ ஆதரவை தமிழகம் கைவிட்டு உள்ளதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. ஈழ ஆதரவு என்பதற்கான அரசியல் கட்சிகளும் கட்சிகளின் தலைமைகளும் இல்லாத நிலையை ஒன்றை தமிழகம் அடைந்திருக்கிறது. நீண்ட காலமாக தமிழகத்தில் ஈழத்தமிழருக்காகவும் குரல் கொடுக்கும் நாம் தமிழர் கட்சிக்கு ஓர் ஆசனத்தை ஏனும் வழங்க முடியாத தமிழக வாக்காளர்கள் ஈழத்தமிழருடைய அரசியலில் எத்தகைய கவனத்தை கொள்வார்கள் என்பது கேள்விக்குரியதாக தெரிகிறது. குறிப்பாக அரசியல் மயமாக்கத்திற்கும் சமூகமயவாக்கத்துக்கும் பதிலாக சினிமா மயவாக்கத்திற்குள் தமிழகத்தின் அடையாளம் இருப்பதோடு அது ஒரு கைத்தொழிலாக வளர்ச்சியை பெற்றிருப்பதும் கொள்கையற்ற அதன் தேவை உணராத பரம்பரையினர் வாக்காளர்களாகவும் வாக்காளர்களை அச்சுறுத்துவோர்களாகவும் மாறியுள்ளனர். இதுவே ஈழத்தமிழரின் இலட்சியம் சார்ந்த கொள்கைகளுக்கு உதவ முடியாத நிலையை தமிழகம் அடைவதற்கு அடிப்படை காரணமாக தெரிகின்றது. புரட்சிகரமான எத்தகைய சிந்தனையுமற்ற ஒரு சமூகத்தின் ஆதிக்கம் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னாசியா முழுவதும் வளர்ச்சி அடைந்துள்ளது. அதன் விருப்பங்களும் அவாக்களும் நிகழ்வுகளையும் குறுகிய காலத்தையும் குறுகிய நலன்களையும் அணுகுமுறையாக மட்டுமே கொண்டிருக்கின்றது. அது ஒரு நீண்ட கால சமூகமாக தன்னை தயார்படுத்தாத நிலைக்குள் தென்னாசிய பிராந்தியம் அகப்பட்டிருக்கின்றது.

ஈழத்தில் இளையோர் கருதுவது போன்று தமிழக வெற்றி கழகம் ஈழத்தில் ஒரு மாற்றத்தை நோக்கி நகருகின்ற தரப்பாக மாறுமா என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்திருக்கிறது. காரணம் கச்சதீவை மீட்பது என்பது தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் ஒன்றாகும். அது இரண்டு நாட்டுக்கும் இடையிலான உடன்பாட்டின் பிரதிபலிப்பு என்பதையும் அது ஒரு அரசியல் தீர்மானத்தின் நகர்வு என்பதையும் புரிந்து கொள்ளுதல் வேண்டும். அவற்றைக் கடந்து தமிழக வெற்றி கழகம் மீட்பதற்கான போராட்டத்தில் ஈடுபடுமாக இருந்தால் ஈழத்தமிழர் அரசியல் புதிய சூழல் ஒன்றுக்குள் நகர்வதற்கான வாய்ப்பை அடைவார்கள். மறுபக்கத்தில் அவை அனைத்தும் தேர்தல் வாக்குறுதிகளாக கைவிடப்படுமாக இருந்தால் அதன் விளைவுகளை ஈழத்தமிழர்கள் அடைய வேண்டிய நிலையும் தவிர்க்க முடியாததாகும். இதுவரை தமிழக வெற்றிக்கழகம் ஈழத்தமிழருடைய அரசியலை எத்தகைய பாதிப்பையும் நெருக்கடியையும் ஈடுபாட்டையும் கொண்டிருந்தது அல்ல. இதனால் அது ஒரு புதிய அணியாக விளங்குவதனால் அதனை நோக்கி புதிய உரையாடல்களை ஏற்படுத்த முடியும் என்ற ஓரம்சம் பலமானதாக காணப்படுகிறது. அதற்கு தயாராக ஈழத்தமிழர்களும் அவர்களது அரசியல் கட்சிகளும் அவர்களது சிந்தனையும் கட்டமைக்கப்பட வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் திமுக-அதிமுக போன்று அல்லாமல் ஒரு புதிய அணியாக உருவாகியுள்ளது. அதனோடு ஈழத்தமிழரின் அணுகுமுறை புதிதாகவும் அதிக விளைவை தரக்கூடியதாகவும் கட்டமைக்க முடியும். ஆனால் தமிழக வெற்றி கழகத்திற்கு இருக்கும் ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதிலும் வலுவான மத்திய அரசையும் வலுவான எதிர்க்கட்சிகளையும் எதிர் கொள்வதைக் கடந்து வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அமுல்படுத்த வேண்டிய சூழல் பாரிய நெருக்கடிகளை கொண்டிருக்கின்றது. இதனை கடந்து கச்சதீவையோ ஈழத்தழிழர் அரசியலையோ ஒரு பொருட்டாக கொள்ளுமா என்பது கேள்விக்குரியது. ஏற்கனவே ஈழத்தமிழர் ஆதரவான தரப்புக்களில் ஒன்றான நாம் தமிழர் கட்சியின் தோல்வி தமிழகத்தின் ஈழத்தமிழர் பொறுத்த ஈடுபாட்டை சந்தேகத்திற்குரியதாக்கிறுள்ளது.

எனவே தமிழகத்தின் வாக்காளர்களின் நடத்தையில் காணப்பட்ட மாறுதல் அல்லது புதிய வடிவம் ஈழத்தமிழரை தமிழகம் கைவிட்டதாகவே தெரிகின்றது. 1970 முதல் 1990 கள் வரையான தமிழகத்தை தற்போது கண்டுகொள்ள முடியாதுள்ளது. வெறுமையான மாற்றம் ஒன்றுக்குள் வாக்காளர்களும் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றது. புதுடில்லி மட்டுமல்ல சென்னையும் கடந்த காலத்தை போன்று ஈழத்தமிழரோடு இல்லை என்பதை மீளவும் ஒரு தடவை ஈழத்தமிழருக்கு உணர்த்தியுள்ளது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:யாழ். தினக்குரல்)