அரசியல் கட்டுரைகள்

ஈரான் மீதான இஸ்ரேலிய-அமெரிக்கப் கூட்டுப் போரும்-சமாதானமும் ?

போர் நிறுத்த உடன்பாட்டை மீறி அமெரிக்கா-இஸ்ரேலியா கூட்டு தாக்குதல் மீண்டும் நிகழ்ந்துள்ளது. ஆனால் அதே நேரம் 60 நாட்கள் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு இரு தரப்பும் எட்டுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக செய்தி ஊடககங்கள் தெரிவிக்கின்றன. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்படிக்கையில் அமெரிக்காவும் ஈரானும்; பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாக அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (J D.Vance) கூறியுள்ளமை கவனத்திற்குரியது. ஆனால் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இல்லை என்றும் 60 நாள் போர்நிறுத்த நீட்டிப்பு ஒப்பந்தத்திற்கான ஒரு கட்டமைப்பு குறித்து அமெரிக்க மற்றும் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் தெரியவருகிறது. அமெரிக்க தாக்குதலுக்கு பதிலளிக்கும் ஈரானும் இஸ்ரேல் மீதும் அமெரிக்காவின் மேற்காசியத் தளங்கள் மீதும் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு தாக்குதலை எதிர்கொள்ளும் விதத்தில் ஈரானிய நகர்வுகள் அண்மை காலப்பகுதியில் முதன்மையானதாக இருந்தது. ஈரானுக்கு எதிரான போர் தொடங்குகின்ற போது ஈரான் வெளிப்படையாக போருக்கு தயார் நிலையில் இல்லாததைக் காட்டிக் கொண்டது. ஆனால் தற்போது போருக்கு தயார் என்ற ஒரு வெளிப்படைத் தன்மையை கொண்டிருக்கிறது. இத்தகைய தாக்குதல்களும் போருக்கான முனைப்புகளும் அடிப்படையில் அணு ஆயுத உற்பத்தியை ஊக்குவிக்கும் சூழலை ஏற்படுத்தும் ஒன்றாக தெரிகிறது.

அமெரிக்கா இஸ்ரேலிய கூட்டின் பிரதான இலக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைப்பற்றுவதும் ஹார்மூஸ் போக்குவரத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுமாக அமைந்துள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை மற்றும் உடன்பாடுகள் இரண்டு நாடுகளும் பரிமாற்றிக் கொண்ட சமாதான வரைவுகளும் நிபந்தனைகளும் அதனையே அதிகம் வலியுறுத்தி இருந்தன. ஆனால் நடைமுறையில் இறுக்கமான நிபந்தனைகள் அமெரிக்க-இஸ்ரேலியக் கூட்டின் இலக்கை முடிவுக்கு கொண்டு வந்தது. அதுவே போருக்கான வலுவான காரணமாக மாறிவருகிறது.

சமாதான உடன்பாட்டு முயற்சி என்பது போருக்கான தயார்படுத்தல் என்பதை மீண்டும் ஒரு தடவை உணர்த்தி இருக்கின்றது. அமைதியான காலப்பகுதியில் இரண்டு தரப்புகளும் ஆயுதங்களை குவித்ததோடு போருக்கான உளவுத் தகவல்களையும் உத்தரவாதப்படுத்திக் கொண்ட காலமாக அமைந்துவிடுவது வழமையானதாகும். அதை ஈரான் மீதான போரின் ஆரம்ப நாட்களில் ஏற்பட்ட இழப்பீடுகளை வைத்துக்கொண்டு அளவீடு செய்ய முடிகின்றது. ஈரான் மீதான அமெரிக்கா இஸ்ரேலிய கூட்டு தாக்குதல் அதன் இராணுவ இலக்குகளை கடந்து பொதுமக்கள் மீது அழிவை சாத்தியப்படுத்தவும் ஈரானின் பெற்றோலிய வளங்களை தகர்த்து அழிக்கவும் திட்டமிட்டுள்ளது என்பதை ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார். ஈரானைப் பொறுத்தவரை இஸ்ரேல் மட்டுமின்றி வளைகுடா நாடுகளில் அமெரிக்க இராணுவ தளங்கள் முற்றாகவே விரட்டி அடிக்கப்படுவது அதன் இருப்புக்கு உத்தரவாதம் தரும் என்பதை முதற்கட்டத் தாக்குதலிலே அடையாளம் கண்டுள்ளது. இதனால் மீளவும் பிராந்திய மட்டத்திலான போரின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக காணப்படுகிறது.

சமாதான உரையாடலின் போது தாக்குதலை நிகழ்த்துவது ஒன்றும் அமெரிக்க-இஸ்ரேலியக் கூட்டுக்கு புதியதல்ல. ஈரான் பயன்படுத்தும் அனேகமான தாக்குதல் விமானங்களும் ஆளில்லாத விமானங்களும் அதிகமாக அணு ஆயுத தொழில்நுட்பத்தை பிரயோகித்து மேற்கொள்ளப்படுவதாக தகவல்களும் உண்டு. இது ஈரானின் அணுவாயுத திறனை சாத்தியப்படுத்துவதற்கான நடவடிக்கையாகவே விளங்குகிறது. இரண்டாம் கட்ட போர் அணு ஆயுதத்தின் உறுதிப்பாட்டை ஈரானுக்கு ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பை தந்துவிடும் என்பதை காட்டுகிறது. ஈரான் மிக நீண்ட காலமாக முன்னெடுக்க திட்டமிட்ட அணு ஆயுத உற்பத்தியை போர் உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகம் கொடுத்திருக்கின்றது. ஏற்கனவே ஈரானிய அணுவாயுத உற்பத்தி திறன் மீது எத்தகைய நெருக்கடியும் ஏற்படுத்த முடியாது என்பதை உணர்த்திய உள்ளதோடு சீனா-ரஷ்சியா-வடகொரியா போன்ற அணுவாயுத நாடுகளில் ஒத்துழைப்பு ஈரானிய அணு ஆயுத உற்பத்தியை உறுதிப்படுத்த வழி வகுத்துள்ளது. ஈரான் நெருக்கடிமிக்க சூழலில் அணுவாயுத பரிசோதனையை சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகம் கொண்டிருக்கின்றது. இஸ்லாமிய மதத்தின் பிரகாரம் அணு ஆயுதப் பரிசோதனை மீது நாட்டமற்றது என்ற வாதம் இருந்தாலும் நிர்பந்தங்களும் ஈரானியர்களின் இருப்பை உத்தரவாதப்படுத்தும் அம்சங்களையும் உருவாக்க வேண்டிய தேவை ஈரான் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் விதிவிலக்கானது என்பதைவிட ஈரானின் உயிர்வாழ்வு அணுவாயுதத்தில் தங்கியிருந்தது என்பதே பரிசோதனைக்கான அடிப்படையாகும். அயதுல்லாக்கள் அணு ஆயுத பரிசோதனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத போதும் தவிர்க்க முடியாது அதற்கான நிர்ப்பந்தத்தை உலக ஆதிக்க சக்திகள் ஏற்படுத்துகின்ற போது எதிர் கொள்ளும் நிலையை அடைந்திருக்கின்றன.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முற்படவில்லை என்ற தனது சமீபத்திய உறுதிமொழிகளை ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷஷ்கியன் (Masoud Pezeshkian ) மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பிராந்தியத்தில் நிலவும் உறுதியின்மைக்கு இஸ்ரேலே காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். லெபனானில் மனிதாபிமானப் பணியாளரான சிரில் பாசில் ( Cyril Bassil) தெற்கு லெபனானில் நிலைமை முற்றிலும் பேரழிவானது என்றும், மார்ச் மாதம் முதல் 3320க்கும் மேற்பட்ட பொது மக்களை கொன்றுள்ள இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களுக்கு மத்தியில் அச்சம் மிகவும் தெளிவாக உணரப்படுகிறது என்று குறிப்பிட்டார். இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானின் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கட்டாயமாக இடம்பெயரச் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், படைகள் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த லிட்டானி ஆற்றைக் (Litani River) கடந்து செல்லும் நிலையில் ஹிஸ்புல்லாவின் தாக்குதலை எதிர்கொள்கின்றன. இஸ்ரேலின் இடைவிடாத விமானக் குண்டுவீச்சு மற்றும் தீவிரமடைந்து வரும் தரைவழிப் படையெடுப்பின் போது தெற்கு லெபனானில் ஒரு முழுமையான பேரழிவு ஏற்படக்கூடும் என உதவி அமைப்புகள் எச்சரிக்கின்றன. மறுபுறம் குவைத்தில் அமெரிக்கப் படைகள் தங்கியிருந்த விமானப்படைத் தளத்தின் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதலை ஐக்கிய அரபு அமீரகம், கட்டார் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஹார்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. போருக்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 138 கப்பல்கள் கடந்து சென்ற நிலையில் நடப்பிலுள்ள நாட்களில் மூன்று கப்பல்களும், சில நாட்களில் ஏழு கப்பல்களும் மட்டுமே நீரிணையைக் கடந்து சென்றுள்ளன. ஹார்மூஸ் வழியாகச் செல்லும் கப்பல் வழித்தடங்களில் கண்ணிவெடிகள் புதைக்கப்படுவதும் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்புகளில் குறுக்கீடுகளும் ஏற்படுவதும் தொடர்ந்து நீடிப்பதாக தெரியவருகிறது.

போர்நிறுத்த மீறல்கள் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்துள்ள நிலையில் எந்தவொரு உடன்பாட்டையும் சீர்குலைப்பதைத் தடுக்கும் முயற்சியில் இரு தரப்பினரும் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. ஈரானுடனான போருக்கான வரைபான அமைதி உடன்பாட்டை அமெரிக்கா இஸ்ரேல் விரைவுபடுத்தும் விதத்திலும் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தும் முயற்சியாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் டார் (Mohammad Ishaq Dar) அமெரிக்க வெளியுறவு செயலாளரான மார்கோ ரூபியோவைச் சந்திப்பதற்காக 29.05.2026 அமெரிக்கா பயணமாகிறார்.

எனவே ஈரான் மீதான இரண்டாவது தாக்குதல் சமாதானத்தை விட அணு ஆயுத உற்பத்தியை மேற்கொள்ளும் நாடாக மாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையாகவே தெரிகின்றது. ஈரான் அணுவாயுதத்தை தயாரித்துக் கொள்வதே பிராந்தியரீதியிலும் அதன் இருப்புக்கும் பாதுகாப்பானது. ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்க- இஸ்ரேல் கூட்டு எப்போதும் மேற்கொள்வதில்; பிரதான பங்கை வகிக்கும் நடுகளாக உள்ளன. அவை இரண்டுமே அணுவாயுத நாடுகளாகவே உள்ளன. அதற்கு பதிலளிக்கும் திறன் ஈரானிடம் அவசியமானது. அப்போது மட்டுமே ஈரான் மீதான போர் முடிபுக்கு வரும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)