அரசியல் கட்டுரைகள்

நீதித்துறையின் சுதந்திரமும் ஜே.வி.பி. அரசாங்கத்தின் ஆட்சியும்?

இலங்கை தீவின் ஆட்சித்துறை மீண்டும் ஒரு தடவை சுதந்திரமான நீதியின் மீது ஆதிக்கம் செய்துள்ளது. இடதுசாரி ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்து பிற்பாடு தொடர்ச்சியாக நீதித்துறை மீதான அரசியல் தலையீடுகள் அதிகமாக நிகழ்வாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் சுதந்திரமான நீதிக்கு களங்கம் ஏற்பட்டதாக ஐக்கிய நாடு சபை வரை குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தன. ஆனால் நீதித்துறையின் நீண்ட வரலாற்றில் எல்லா ஆட்சியாளர்களும் ஏதோ ஒரு அடிப்படையில் அதன் சுயாதீனத்தை தோற்கடிப்பது வெற்றிகண்டு வருகின்றனர். தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் தக்க வைக்கவும் அத்தகைய அணுகுமுறைகளை பின்பற்ற தலைபடுகின்றனர். நீதித்துறை சுதந்திரம் என்பது நீதிமன்றங்கள் அரசாங்கத்தின் நிர்வாக மற்றும் சட்டத் துறைகளின் நிர்ப்பந்தம் அல்லது அதிகாரப் பியோகம் மற்றும் செல்வாக்கிலிருந்தும்; சக்திவாய்ந்த தனியார் நலன்களிலிருந்தும் விடுபட்டுச் செயல்பட வேண்டும் என்ற அரசியலமைப்பினதும்; அதன் தத்துவார்த்த பிரயோகத்தின் கருத்தியலுமாகும். அது பாரபட்சமற்ற தீர்ப்பை உறுதிசெய்கிறது. தனிநபர் உரிமைகளைப் பாதுகாக்கிறது. மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துகிறது.

குறிப்பாக இலங்கை தீவின் வடக்கு கிழக்கு எத்தகைய மீறல்களை எதிர்கொண்டாலும் அதற்கு நியாயாதிக்கும் ஒருபோதும் கிடைப்பதில்லை என்பது சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் அனுபவமாக உள்ளது. அநேகமான மீறல்கள் வடகிழக்கில் இருந்து தொடங்குகிறது. நீதித்துறையின் சுதந்திரம் பற்றிய உரையாடல்கள் அறிவியல் ரீதியில் பலமான ஒரு நிர்வாக கட்டமைப்பையும் சமூக உறுதிப்பாட்டையும் சாத்தியப்படுத்தக் கூடியது. அதிகாரத்தில் இருக்கும் சக்திகள் தங்கள் நலனுக்கு இடையூறு ஏற்படுகின்றது என்பதற்காக நியாயாதிக்கத்தை மீறுவதும் தங்கள் நலனுக்கு ஏற்ற வகையில் நீதியைப் பயன்படுத்துவதும்; இலங்கை தீவின் பொது நிலைப்பாடாக இருக்கின்றது. வடக்கு கிழக்கு பொறுத்தவரையில் நீண்ட காலமாக நீதித்துறையின் மீதான கட்டுப்பாடுகளும் வரையறைகளும் ஆட்சித்துறையின் நலங்களுக்கு ஏற்ப நிகழ்த்தப்படுவதையும் காணலாம். ஆட்சித் துறையின் அதிகார பிரயோக மையமாக நீதித்துறை விளங்குகின்றது.

நீதித்துறையின் கட்டமைப்பு என்பது ஒரு தேசத்தின் உறுதிப்பாட்டையும் பலத்தையும் தேசத்தின் நியயாதிக்கத்தையும் நிலை நிறுத்துவதாகும். மக்களின் விருப்புக்களை சாமானியர்களின் இருப்பை உத்தரவாதப்படுத்தும் நிறுவனமாக நீதித்துறை விளங்குகிறது. அதன் மீது மேற்கொள்ளப்படும் எல்லா வகையான தாக்குதல்களும் நீதித்துறையை காலவதியாக்குகின்றது என்பதைவிட மக்களின் சமூக இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது. அண்மையில் (26.05.2026) வடக்கு மாகாணத்தில் நீதித்துறையில் ஏற்படுத்தப்பட்ட இடமாற்றம் அதிகமான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அவ்வாறான சர்ச்சைகள் ஒன்றும் இலங்கைத் தீவுக்கு புதியதல்ல. ஏற்கனவே முன்னய ஆட்சியாளர் காலத்தில் இதனையும் விட அதிகமான இடைநிறுத்தங்கள் , இடமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதனால் முன்னைய ஆட்சிகளின் ஆட்சி முடிபுக்கு வருவதற்கும் அரசியல் உறுதித்தன்மை இல்லாது போனதற்கும் காரணமாக அமைந்தது. ஆனால் தற்போது நிகழ்வது இடதுசாரிகள் என்றும் முன்னயத்தின் மாற்றம் என்றும் கருதப்பட்ட அரசாங்கத்தின் காலப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. அரசாங்க அதிகாரிகளின் நலன்களுக்கு எதிரான அல்லது நலன்களை பாதிக்கின்ற விதத்தில் எடுக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகளும் தீர்மானங்களும் அதற்கு பின்னால் இருக்கும் வலுவான காரணம் என அடையாளப்படுத்தப்படுகிறது. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் நீதித்துறைக்கான நியாயாதிக்கத்தை செயல்படுத்துவதற்கு தடையை ஏற்படுத்தப்படுகிறது என்பதே இதன் அடிப்படையாகும். ஜே.வி.பி. அரசாங்கம் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிற்பாடு நீதித்துறை மீதான தலையீடுகளை பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்துக்கு வெளியேயும் நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தீர்ப்புகளைப் பற்றி உரையாடுவதும் அதற்கான முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதும் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதனுடைய ஒரு பக்கமாகவே வடக்கில் நீதித்துறை மீது அரசாங்கத்தின் அழுத்தங்கள் அல்லது கட்டுப்பாடுகள் காணப்படுகிறது.

கடந்த ஆட்சியாளர்கள் காலத்தில் நீதிபதிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய துப்பாக்கிய நிலை வடக்கு கிழக்கு அதிகமாக நிலவியது. நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் பௌத்தமத அத்துமிரல்களுக்கு எதிராகவும் வழங்கப்படும் தீர்ப்புகளையும் நியயாதிக்கங்களையும் எதிர்த்து நீதித்துறையை அவமதிக்கின்ற செயல்பாடுகளினால் நீதித்துறையின் நியாயாதிக்கத்தை வெளிப்படுத்துவார்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்ற நிலை ஏற்பட்டது. மீண்டும் அதற்கான யுகம் அரங்கேற்றப்படுவதாகவே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அரசாங்கத்தின் மூன்று துறைகளும் ஒன்றோடு ஒன்று இசைந்து சமமாக இருந்தாலும் நீதித்துறை என்பது ஒரு நியாயாதிற்கு உட்பட்டு உண்மையைத் தேடி அடையாளப்படுத்துகின்ற ஒன்றாகவே பார்க்கப்பட்டது. அதுவே சட்டங்களுக்கு முன் அனைவரும் சமம் என்ற உண்மை தன்மைக்கான வாதங்களை முன்வைக்கிறது. அவ்வாறான சூழலுக்குள் இலங்கை இருக்கும் மீறல்களும் கட்டுப்பாடுகளும் நியாயாதிக்கத்தின் மீதான நம்பிக்கையை மக்களிடமிருந்து அந்நியப்படுத்த தொடங்கும் வகையான சூழலுக்குள் ஜே.வி.பி. இன் ஆட்சி காணப்படுவது என்பது அதன் உள்ளார்ந்த கோட்பாட்டுத் தன்மைக்குள் காணப்படும் போலித்தன்மையை வெளிப்படையாகக் காட்டுகிறது.

நியாயாதிக்கம் என்பது அதிகார வேறுபாடின்றி நியாயத்தன்மையை உத்தரவாதப்படுத்துவதாகவே காணப்படுகிறது. நீதியை மீறுகின்ற நடவடிக்கை என்பது ஆட்சித் துறையின் நலன்களுக்கு இசைந்து போகின்ற நிலையாகும். இது நாட்டின் காட்டுச் சட்டங்களை (Jungle of Laws) நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்பானதாகும். ஐரோப்பியர்கள் இலங்கை தீவுக்கு வருவதற்கு முன்னர் நிகழ்ந்த தனிப்பட்ட வெறுப்புகளுக்கும் நலங்களுக்கும் உட்பட்ட நியாயாதிக்கங்களை மீண்டும் இடதுசாரி ஆட்சியாளர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள் போன்றே தெரிகின்றது. இலங்கை தீவு சட்டத்தின் ஆட்சிக்குள்ளும் நீதியின் பால்பட்டும் இயங்குவது என்பது சமூக நீதிக்கான அடிப்படையாகும். இது மனித வாழ்வின் இருப்புகான உத்தரவாதமாகும். பிரஜைகள் ஒவ்வொருவரும் அரசாங்கம் அல்லது அதிகார வர்க்கம் நியாயமானதாக நடத்துகிறது என்பதை உணர்த்துவது. நீதித்துறையின் நியாயாதிக்கத்தின் வெளிப்பாடுகளால் மட்டுமே நிகழக் கூடியது. சட்டத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்வதும் மக்களுக்கு முன் நியாயத் தன்மைகளை முன்வைப்பதும் நீதித்துறைக்கு உரிய தனித்துவமாகும். அதன் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதும் விசாரணைகளுக்காகவும் உத்தரவுகளுக்காகவும் தீர்ப்புகளுக்காகவும் நீதித்துறை மீதான தண்டனையை மேற்கொள்வதும் நியாயாதிக்கத்தின் அடிப்படையை குலைப்பதாகும். இது ஒவ்வொரு பிரஜை நலனையும் சம வலுவையும் நியாயாதிக்கத்தின் மீது உள்ள நம்பிக்கையையும் தோற்கடிப்பதாகவே தெரிகிறது. எந்த அடிப்படையில் நீதித்துறை மீது அதிகாரத்தை பிரயோகிக்க முடியாது என்பது மட்டுமல்ல நீதி துறையின் பணியாளர்கள் கூட நீதியின் மீது தமது நலன்களை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்கு நீதித்துறை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எனவே அத்தகைய நீதித்துறை மீதான அதன் இயங்கியல் தன்மையை தோற்கடிப்பது என்பது ஒட்டுமொத்த சட்டத்தையும் விழுமியங்களையும் மரபுகளையும் அழிப்பதற்கு சமமானதாகும்.

எனவே வடமாகாணத்தில் ஏற்பட்ட நீதித்துறை தொடர்பான தலையீடு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை தீவின் எப்பாகத்திலும் பணிக்குழுவினர் பணி செய்வதற்கு உரித்துடையவர்கள். ஆனால் அதற்கான செய்முறையும் அதற்கான விதிகளும் நியாயப்பாடுகளும் அதிகாரத்தின் நலனுக்காக வடிவமைக்க கூடாது. அவ்வாறு வடிவமைக்கும் செய்முறையை ஜனநாயகத்தின் பெயராலோ சோஷலிசத்தின் பெயராலோ அடையாளப்படுத்த முடியாது. அது சர்வாதிகாரத்தின் அடையாளமாகவே தென்படுகின்றது. காரணம் நீதித்துறை மிக உயர்ந்த நிறுவனம் என்பதே அறிவியலின் புரிதலாகும். அதனை அவமதித்தல் பாரதீனப்படுத்துதல் தலையீடு செய்தல் செல்வாக்குச் செலுத்துதல் அனைத்துமே விரோதமான செயலாகவே பார்க்கப்படுகின்றது. அரசியல் கோட்பாட்டாளர் மொண்டஸ்கியூவின் அதிகார வேறாக்கல் கோட்பாடு புலப்படுத்தும் அறிவியல் ரீதியான உண்மையும் உலக வரலாற்றின் அனுபவும் அதுவாகவே காணப்படுகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: யாழ்.தினக்குரல்)