சட்டத்தின் ஆட்சி என்பது ஜனநாயக ஆட்சிமுறையின் ஒரு அடிப்படைக் கோட்பாடாகும். இது, ஆட்சியாளர்; உட்பட அனைத்து தனிநபர்கள் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளும் பகிரங்கப்படுத்தப்பட்டதும் சமமாக அமுல்படுத்தப்படுவதும் சுதந்திரமாகத் தீர்ப்பளிக்கப்பட்ட சட்டங்களுக்குப் பொறுப்புடையவர்கள் என்பதை வலியுறுதுகின்ற அம்சமாகும். எந்தவொரு நபரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பதை இது உறுதி செய்வதோடு அதிகாரத்தின் தன்னிச்சையான பிரயோகத்திற்கு எதிராகப் பாதுகாப்புகளையும் உத்தரவாதத்தையும் வழங்குகிறது. இது தொடர்பில் கிரேக்க அரசியலறிஞர் அரிஸ்ரேட்டில் குறிப்பிடும் போது சட்டத்தின் ஆட்சியின் சாராம்சம் மனிதர்களால் அல்ல, சட்டங்களாலான அரசாங்கத்தின் ஆளுகையே சட்டத்தின் ஆட்சி என்றார். சட்டத்தின் ஆட்சி கோட்பாடுகள் நடைமுறை சார்ந்தவை. சட்டங்கள் நாட்டின் உச்சபட்ச சட்டமாக இருக்க வேண்டும் என்பதுடன் பகிரங்கத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். சட்டங்கள் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும். சுதந்திரமான நீதித்துறையால் நியயாதிக்கத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். கூடுதல் நடைமுறை விதிகளின்படி சட்டங்கள் நியாயமாகவும் சமமாகவும் பயன்படுத்தப்படுத்துதல் அவசியமானது. சட்டம் இயற்றுதல் மற்றும் தீர்ப்பளித்தல் செயல்முறைகளில் அதிகாரப் பகிர்வு கடைப்பிடிக்கப்பட வேண்டும். சட்டங்கள் நீதியானவையாகவும் நெறிமுறைகளுக்கு இணக்கமானவையாகவும் இருக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி பின்வரும் பிரதான கூறுகளைக் கொண்டுள்ளது.
பொறுப்புக்கூறல்: சொத்து, அந்தஸ்து மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றைப் முதன்மைப்படுத்தாமல் சட்டங்கள் அனைவருக்கும் சமமானது என்பதைக் அரசாங்கம் உறுதிப்படுத்துவதைக் குறிப்பதாகும். அரசாங்கம் எழுதப்பட்ட சட்டங்களின் கடுமையான வரம்புகளுக்குள் செயல்படுவதற்கான பொறுப்பினைக் கூறுவதாகவே உள்ளது. அது மட்டுமன்றி ஜனநாயக மற்றும் பன்மைத்துவ செயல்முறைகளை சாத்தியமாக்குதல் என்பதாகும்.
நியயாதிக்கம் மற்றும் சமத்துவம்: சட்டங்கள் வெளிப்படையாக வகுக்கப்படுகின்றன. அவற்றின் பிரயோகம் தெளிவானதாகவும் கணிக்கக்கூடியதாகவும், தன்னிச்சையான முடிவுகள் எடுக்க முடியாததாகவும் உள்ளன. அதுவே சட்டத்தின் நியயாதிக்கத்தையும் சமத்துவத்தையும் சாத்தியப்படுத்துகிறது.
சுதந்திரமான நீதித்துறை: சட்டரீதியான தகராறுகள் மற்றும் சவால்கள் உரிமைகளை நிலைநாட்டவும் நிர்வாகத்தின் வரம்புமீறலைக் கட்டுப்படுத்தவும் திறனுள்ள பாரபட்சமற்ற விடயங்களை சுதந்திரமான நீதிமன்றங்களால் மறுஆய்வு செய்யப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
அதிகாரப் பகிர்வு: கட்டுப்பாடற்ற அதிகாரத்தைத் மட்டுப்படுத்தவும் சட்டங்களை உருவாக்குதல் அவற்றை அமுல்படுத்துதல் ஆகியவற்றுக்கான பொறுப்புகள் அரசாங்கத்தின் வெவ்வேறு கிளைகளுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துதல்.
சட்டத்தின் உறுதித்தன்மை: நிர்வாக அதிகாரத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்துவதைத் தடை செய்தல். சட்டங்களை இயற்றுவதற்கான வெளிப்படை தன்மை கொண்டியங்குதல்.
அடிப்படை உரிமைகள்: பிரஜைகளினது அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பது பாதுகாப்பது வளர்த்துச் செல்வது சட்டத்தின் அடிப்படைக் கடமையாக உள்ளது.
சட்டத்தின் ஆட்சி உறுதியாக நிலைநிறுத்தப்படும்போது அது சமூக நல்லிணக்கத்தைப் பேணுகிறது. பிரஜைகளுடன் ஒப்பந்தங்களையும் சொத்துரிமைகளையும் பகிர்வதற்கான ஒப்புதல் அளிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. சட்டத்தின் ஆட்சி அடிப்படை மனித உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாக்கிறது. இதற்கு மாறாக சட்டத்தின் ஆட்சி சிதைவடையும்போது அது பொதுவாக அமைப்பு ரீதியான ஊழல், நீதியற்ற சமூக செயல்பாடு மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையிழப்பு ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது.
(Source: Stein A. Robert. (2019) What Exactly Is The Rule Of Law?.))
