இலங்கை தீவின் அரசியலில் மதங்களும் மதவாதிகளும் அதிகமான இன உணர்வுகளால் கட்டி வளர்க்கப்பட்டுள்ளனர் என்பதை அடையாளம் காட்டுகின்ற சூழல் மீண்டும் ஒரு தடவை எழுந்துள்ளது. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் (Amila Jeevantha Peiris) இரத்தினபுரி மறைமாவட்டத்தைச் சேர்ந்த இலங்கை கத்தோலிக்க குருவும் மருத்துவமுறை (Clinical Psychology Graduate) உளவியல் பட்டதாரியும் மனித உரிமைப் பாதுகாவலரும், அரகாலயா எதிர்ப்புப் போராட்டங்களில் ஒரு முன்னணித் தலைவராக விளங்கியவர். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் நிகழ்ந்திய இனப்படுகொலையை வெளிப்படையாக கருத்து முன்வைத்ததாக கிறிஸ்தவ மதத்தின் உயர் சபைகள் மற்றும் சமூகவலைத் தளங்கள் அருட்தந்தையர் மீது குற்றச்சாட்டுகளை முதன்மைப்படுத்துகின்றன. தமிழ் மக்கள் மீது நிகழ்ந்தது இனப்படுகொலை என்பதை தென் இலங்கையின் மத நிறுவனங்கள் நிராகரித்ததன் விளைவையே இலங்கைத் தீவு அரசியல்-பொருளாதார-சமூக சிதைவுக்கும் ஆயுதப் போராட்டத்திற்கும் காரணமாக அமைந்தது. அருட்தந்தையர் முன்வைத்த இனப்படுகொலை தொடர்பான கருத்து பாரிய முரண்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டுரையும் அத்தகைய கருத்தின் உண்மைத்தன்மையையும் விளைவுகளையும் தேட முயலுகிறது.
அருட்தந்தை குறிப்பிடும் விடயத்தை முதலில் நோக்குவது பொருத்தப்பாடுடையது. இலங்கையில் சிங்கள அரசாங்கங்களால் தமிழ் இனவழிப்பு நடவடிக்கைகள் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாகவும் ஊடகவியலாளர் தராகி சிவராம் கொலை தொடங்கி தீபச்செல்வனின் நூல்கள் சுங்கத்திணைக் களத்தில் முடக்கப்பட்டமை வரையிலும் அனைத்தையுமே இனவழிப்பு நடவடிக்கைகளாக கருதவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் உரையாடுகின்ற போது,
1956ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டத்துக்கெதிராக வடக்கிலிருந்து காலி முகத்திடலில் போராட்டம் நடத்த வந்த தமிழர்கள் கொடூரமாக அடித்து துரத்தப்பட்ட வரலாறும் உண்டு. அப்போது திட்டமிட்ட அடிப்படையில் தமிழ் மக்கள் இன ரீதியாக அழிக்கப்பட்டனர். இனப்படுகொலை என்பது ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வது மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடையாளத்தை அழிக்க முயற்சிப்பதும், அவர்களை உடல் மற்றும் உளரீதியாக ஒடுக்குவதும் இனவழிப்பேயாகும். இந்த ஒடுக்குமுறைகள் சிங்கள மக்களால் செய்யப்பட்டவை அல்ல, மாறாக 1948 முதல் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தங்களது அதிகாரத்தைத் தக்கவைக்க சிங்கள தேசியவாதத்தைப் பயன்படுத்திக் கொண்டதன் விளைவேயாகும். 1956 இல் காலி முகத்திடலில் அஹிம்சை முறையில் போராடிய தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, 1983 கறுப்பு ஜூலை,யாழ். நூலக எரிப்பு மற்றும் தர்மரத்னம் சிவராம் (தராக்கி)உள்ளிட்டோரின் படுகொலைகள் நிழல் அரசாங்கங்களின் பகுதியே எனக் குறிப்பிட்டார்.
அருட்தந்தை முன்வைத்த கருத்துக்கள் ஆழமான உண்மைத் தன்மையை வெளிப்படுத்தியிருக்கின்றது. அவரால் முன்வைத்த கருத்துக்கள் உண்மையானது மட்டுமின்றி இலங்கையின் அரசியல் வரலாற்றின் யதார்த்தமான பக்கங்களை உணர்ந்தியுள்ளது. அருட்தந்தை போன்று பல தென் இலங்கை புத்திஜீவிகள் தமிழருக்கு எதிரான வன்முறைகளை கடந்த காலங்களில் வெளிப்படுத்தியிருந்தனர். சிங்கள ஆய்வாளரான எல். பியதாசா என்பவர் மிகச் தெளிவாக Sri Lanka: The Holocaust and After என்ற நூலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் அவரது அமைச்சர்களும் எவ்வாறு இனப்படுகொலைக்கு திட்டமிட்டு வழிநடத்தினார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அவ்வாறே இனக் கலவரத்தின் கொடூரத்தை படம்பிடித்த சிங்கள இடதுசாரியான கீர்த்தி பாலசூரியா முக்கியமான குறிப்புகளை தந்துள்ளார். ஜீலை இனக் கலவரம் தொடர்பில் சிங்கள ஆட்சியாளர்களை பற்றியும் நடந்த கொடுமைகள் பற்றியும் சிங்கள புத்திஜீவிகளே அதிகம் வெளிப்படுத்தியுள்ளனர். கலாநிதி அதிகாரம் என்பவர் மகாவம்சத்தில் ஒரு பிரதியேனும் இல்லாமல் எரித்து சாம்பலாக்கப்பட வேண்டும் அப்போது தான் இலங்கை தீவில் அமைதியும் சமாதானமும் சாத்தியப்படும் என்று குறிப்பிட்டார். அருட்தந்தையின் கருத்தினை ஆழமாக அவதானிப்பது அவசியமானது.
முதலாவது 1956 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தீவில் நிகழ்ந்த இனப்படுகொலை தொடர்பில் ஆழமான விவாதங்களை அருட்தந்தை பதிவு செய்துள்ளார். அவரது கருத்துக்களின் பிரகாரம் 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் இலங்கைத் தீவின் பாரபட்சத்தையும் முரண்பாட்டையும் பகைமையும் ஏற்படுத்தி உள்ளது என்பதை தென் இலங்கையர் உணர்த்துவதாக உள்ளது. 1956 ஆம் ஆண்டு ஏற்படுத்திய சுதேச சட்டங்கள் ஜே.வி.பி.க்கும் வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கும் ஆயுதப் போராட்டத்திற்கு மூலவேராக அமைந்திருந்தது. அத்தகைய அணுகுமுறையை தொடக்கி வைத்த தீவிர ஆதிக்க செய்முறைகளின் வெளியிடாக ஆயுதப் போராட்டம் முனைப்பு பெற உதவியது. 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டத்தின் நீட்;ச்சியாகவே 1958 ஆம் ஆண்டு 1972 ஆம் ஆண்டு 1983 ஆம் ஆண்டு இனப்படுகொலைகளும் அதன் தொடராகவே 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையும் நிகழ்ந்தது. தனிச்சிங்களச் சட்டமே ஒரு நீண்ட இனப் படுகொலையின் அரங்கமாக இலங்கைத் தீவை மாற்றியது.
இரண்டாவது அருட்தந்தையர் குறிப்பிடுவது போல் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் விளைவுகள் தீவிரமாக அமைய மறுபக்கத்தில் கிறிஸ்தவ மதத்தின் பாரம்பரியம் ஈழத்தமிழர் ஆயுதப் போராட்டத்திலும் அகிம்சை போராட்டத்திலும் பங்களிப்பையும் தியாகங்களையும் அளவுக்கதிகமாக தந்துள்ளது. அறிவியல் ரீதியிலும் போராட்ட உணர்வையும் சமூகங்கள் மற்றும் அடிபட்ட சமூகங்களை நோக்கி தமது பணிகளை மேற்கொள்ளும் போது உண்மை தன்மைகளையும் பிரதிபலிக்கும் கிறிஸ்தவ மதத்தின் விடுதலை உணர்வை எடுத்துச் செல்றார்கள். தென் ஆபிரிக்க அங்கிலிக்கன் பேராயர் டெஸ்மன்ட் டுட்டூ (Desmond Mpilo Tutu-South African Anglican bishop ) முதல் ஜோசப்பு இராஜப்பு வரை அதனையே உலகத்திற்கு தந்துள்ளது. இதனை உச்சரிப்பதற்கு தென்னிலங்கை பெரும்பான்தை கிறிஸ்தவம் பெரும் தடையாக உள்ளது. அதனை உடைப்பதில் அருட்தந்தை பீரிஸ்ன்; பங்கு தனித்துவமானது. ஒரு நீண்ட மௌனத்தின் பின்னர் தென்னிலங்கையில் மனச்சாட்சியின் திறவுகோலாக அமைந்துள்ளது. இதன் பிரகாரம் இனப்படுகொலை சார்ந்த உரையாடலை வெளிக் கொண்டுவந்துள்ளார். அவர் குறிப்பிடுவதை கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் இலங்கைத் தீவில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.போலி இடதுசாரிகளின் ஆட்சியிலும் அதனையே தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரம் தொடர்கிறது.
மூன்றாவது உலக வரலாற்றில் கிறிஸ்தவ மதம் மறுமலர்ச்சிகளையும் மாற்றங்களையும் தந்துதவி இருக்கின்றது. புரட்சிகரமான சிந்தனையை முன்மொழிந்திருக்கிறது. இதற்கு ஊடாகவே உலகம் மாற்றங்கள் மறுமலர்ச்சியையும் அடைந்திருகிறது. ஐரோப்பிய மறுமலர்ச்சி யுகம் கிறிஸ்தவ போதனைகளாலும் போதகர்களாலும் கட்டிவளர்க்கப்பட்டதாகவே உள்ளது. கிறிஸ்தவ மத பிரிவினர் எழுச்சி பெற்றது போன்று உலக வரலாற்றில் வேறு எந்த மதமும் புரட்சிகரமான மாற்றங்களை உலகிற்கு தந்துவிடவில்லை. அத்தகைய புரட்சியே மாற்றங்களின் தோன்றிய கிறிஸ்தவ மதம் தமிழர் மீதான படுகொலையை அரசியலை விசாரணைக்குள் உட்படுத்தியுள்ளது. தமிழ் மக்களை துயரத்தையும் அதன் உண்மைத் தன்மையையும் அருட்தந்தையர் வெளியே கொண்டு வந்திருக்கின்றனர். தென் இலங்கையில் ஏற்படுகின்ற மாற்றங்களை தமிழர்கள் மீதான அடக்குமுறை தீர்வாக அமையாது என்பதை மீண்டும் ஒரு தடவை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தென்னிலங்கையின் மாற்றங்களுக்கான தரப்புக்களை முதன்மைப்படுத்துவதும் அதனூடாக ஓர் அரசியல் மாற்றத்திற்கான அடிப்படை தோற்றுவிக்கப்படுவதும் அவசியமானதாக தெரிகின்றது.
நான்காவது தென்னாசியாவில் மட்டுமல்ல ஏனைய பிராந்தியங்களிலும் இளம் தலைமுறையினரின் (Gen-z) எழுச்சி என்பது எல்லாவற்றையும் தகர்க்கின்ற நியாயத்தன்மைகளை அதிகம் முன்னிறுத்த் முயலுகின்ற சூழலில் அருட்தந்தையின் வெளிப்பாடு அதிகமான முக்கியத்துவத்தை தென்னிலங்கைக்கு கொடுத்துள்ளது. பெரும் மத நேசிப்பைக் கொண்டவர்களையும் கிறிஸ்துவ மதத்தின் மரபுகளை அதிகம் பின்பற்றுபவர்களையும் உண்மை தோற்றங்களையும் இயல்புக்கங்களையும் அடையாளப்படுத்துவதில் அருட்தந்தையரின் விவாதம் முக்கிய பங்காற்றுகிறது. தவிர்க்க முடியாமல் டெஸ்மன்ட் டுட்டூ போன்று ஒரு மாற்றத்தை நோக்கி எழுச்சி பெறுவதற்கான வாய்ப்புகளை தமிழ் மக்களிடம் ஏற்படுத்திய மன்னார் பேராயர் இராஜப்பு ஜோசப்பு போன்று மற்றத்துக்கான அடையாளமாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸ்ன் கருத்துக்களை புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே கிறிஸ்தவ மரபு இலங்கைத் தமிழரின் அரசியல் போராட்ட மனோநிலையம் நியாயப்படுத்தியதுடன் முதன்மையான இடத்தை தந்துள்ளது. அருட்தந்தையரின் கருத்து அடைந்திருக்கும் விளைவு தமிழ் மக்களின் இருப்பை மேலும் பலப்படுத்துவதற்கான குரலாக தெரிகிறது. தென்னிலங்கையில் எழுந்திருக்கும் அருட்தந்தையரின் குரல் ஏனைய தென் இலங்கையின் அருளாளர்களது மனச்சாட்சிக்கு விடப்பட்ட உந்துதலாகவே தெரிகிறது. மதங்களும் மத நிறுவனங்களும் அதன் போதார்களும் மக்களுக்கானவர்களே. மக்களின் விடுதலைக்கானவர்களே. இலங்கை தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நியாயப்படுத்திய குரலாக அருட்தந்தையரது கருத்து உள்ளது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி: யாழ்.தினக்குரல்)
