அரசியல் கட்டுரைகள்

அமெரிக்க காங்கிரஸ்னால் ஈரான் மீதான போரை நிறுத்த முடியுமா?

மேற்காசிய பிராந்தியத்தில் பெற்றோலியம் உலகப் பொருளாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியது என்பது தெளிவாக தெரிகின்றது. பூகோளமயவாதம் மனித சமூகத்தின் இருப்பில் கூட்டுத் தன்மையும் தங்கியிருத்தலையும் சாத்தியப்படுத்தியதோடு அதன் மீது ஏற்படுகின்ற அனைத்து போர்களும், எதிரான நகர்வுகளும் முழு உலகத்தை பாதிப்புக்கு உள்ளாக்குகின்ற வலிமையை கொண்டிருக்கின்றது என்பதை மேற்காசியப் போர் உணர்த்தியுள்ளது. உலகத்தின் சக்தி வளம் எந்த அளவுக்கு வலிமையானது என்பதை ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டத் தாக்குதலின் பிரதிபலிப்பு காட்டியுள்ளன. அத்தகைய போரின் தீர்வற்ற மீளமுடியாத நிலை அமெரிக்க- ஈரானிய- இஸ்ரேலிய பொருளாதரத்தை மட்டுமின்றி உலகப் பொருளாதாரத்தையும் முற்றாகப் பாதிக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. ஈரானுடனான போர் தொடர்பாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இராணுவ அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் போர் அதிகாரத் தீர்மானத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபை (03.06.2026) 215க்கு 208 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றியது. பெரும்பாலும் அடையாளப்பூர்வமாக உள்ள இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில், நான்கு குடியரசுக் கட்சியினர் கட்சி வேறுபாடுகளைக் கடந்து வாக்களித்த அனைத்து ஜனநாயகக் கட்சியினருடனும் இணைந்துள்ளனர். இத் தீர்மானம் செனட் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக் கட்டுரையும் ஈரான் மீதான போரை முடிபுக்கு கொண்டுவர அமெரிக்க காங்கிரஸ் முன்வைத்து வாக்களித்த தீர்மானம் போரை நிறுத்துமா என்பதற்கு விடை தேடுவதாக உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரங்கள் முதன்மையாக அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாம் பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி நிர்வாகத் துறையின் தலைவராகவும் தனித்துவமான இராணுவ, பொருளாதார, இராஜதந்திர, காங்கிரஸ் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஈரான் மீதான போரின்; விளைவுகளை அமெரிக்க காங்கிரஸ் அதிகம் முதன்மைப்படுத்தி தீர்மானம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. அமெரிக்கா போரிலிருந்து வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை சாதகமாக முடிவுகளால் ஜனாதிபதிக்கும் உலகத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசியல் யாப்பின் படி போர் பிரகடனங்களை காங்கிரஸ் மட்டுமே வெளியிட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது. அதே வேளை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரம் வரம்பற்றது என்பது மட்டுமல்ல அதிகம் சட்ட நுணுக்கங்களையும் தந்திரங்களையும் பிரதிபலிக்கக் கூடியது. அமெரிக்க காங்கிரஸ{க்கு ஜனாதிபதி அறிவிக்காமல் பல தாக்குதல்களை கடந்த காலத்தில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் உண்டு. ஆனால் போர் தொடங்கிய 48 மணித்தியாலத்திற்குள் காங்கிரஸ்க்கு அறிவிக்க வேண்டும் என அமெரிக்க சட்டம் கூறுகிறது. ஆதன் பிற்பாடு காங்கிரஸ் அனுமதி வழங்காதுவிட்டால் குறைந்தது 60 நாட்களுக்கு உட்பட்ட விதத்தில் அப்போர் பற்றிய விடயங்களை நிறுத்த வேண்டும். அதனையும் கடந்து போர் மேற்கொண்டால் போரில் ஈடுபடுத்தப்பட்ட படைகளை பாதுகாப்பாக பின்வாங்குவதற்கு 30 நாட்கள் கூடுதலாக வழங்கப்படும். மொத்தமாக 90 நாட்கள் ஜனாதிபதி தாக்குதலை அல்லது போரை நிகழ்த்தலாம் என்பதே அமெரிக்க சட்டத்தின் தொகுப்பாகும். அதாவது காங்கிரஸ்ன் அனுமதியின்றி 90 நாட்களுக்கு மேல் ஒரு இராணுவ நடவடிக்கையை ஜனாதிபதி எடுக்க முடியாது என்பதாகும். ஆனால் திடீர் தாக்குதல், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், அல்லது அவசர சூழ்நிலைகளில் ஜனாதிபதி காங்கிரஸில் முன்கூட்டிய போர் பிரகடனம் இல்லாமலேயே இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிய பல நிகழ்வுகள் உள்ளன. இதனால் ஜனாதிபதியின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் 1973-War Powers Resolution கொண்டுவரப்பட்டது. அதன் பிரகாரம் 1973 ஆம் ஆண்டின் போர் அதிகாரத் தீர்மானம் (50 USC 1541–1548) என்பது காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் நாட்டை ஒரு ஆயுத மோதலில் ஈடுபடுத்தும் அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டாட்சிச் சட்டமாகும். ஆப்போதைய ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் வீட்டோவை மீறி இயற்றப்பட்டது. இது போரை அறிவிப்பதற்கான காங்கிரஸின் அரசியலமைப்பு அதிகாரத்தை மீண்டும் உறுதிப்படுத்தியதாக கூறப்பட்டது.

அதன்படி ஜனாதிபதி இராணுவ ரீதியில் போர் நடவடிக்கையில் ஈடுபடுத்திய பிறகு குறிப்பிட்ட காலத்திற்குள் காங்கிரஸ{க்கு அறிவிக்க வேண்டும்;. நீண்டகால நடவடிக்கைக்கு காங்கிரஸின் அனுமதி தேவைப்படும். அதன் பிரகாரம் அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை மட்டுமின்றி செனட்சபையிலும் பெரும்பான்மையுடன் நிராகரிக்கப்படுகின்ற தீர்மானம் எடுக்கப்படுகின்ற போது ஜனாதிபதி வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை கையாள முடியும் என அமெரிக்க சட்டம் கூறுகிறது. ஜனாதிபதி அந்தச் சட்டத்திற்கு வீட்டோ செய்தால், அதை மீறுவதற்கு (override) இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை தேவைப்படும். அதனால் பிரதிநிதிகள் சபை மட்டுமல்ல செனற்சபையும் இணைந்து செயல்படுவது முக்கியம். ஒரு அவை ஆதரித்து மற்றய அவை நிராகரித்தால் பொதுவாக அந்தத் தீர்மானம் காங்கிரஸின் இறுதி முடிவாக மாறாது. இவற்றைவிட ஜனாதிபதி 10 நாட்களுக்குள் (ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து) மசோதாவில் கையொப்பமிடாமல் இருக்கும்போது காங்கிரஸ் கூட்டத்தொடரை முடித்துவிட்டால் அந்த மசோதா சட்டமாக மாறாது. இது Pocket Veto எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் அதிகாரம் மேலானது. உலக அரசியல் வரலாற்றிலேயே அமெரிக்க ஜனாதிபதி பொருளாதார (IEEPA-1977) அடிப்படையிலும் அரசியல் மற்றும் இராணுவ ரீதியிலும் நிறைவேற்று தன்மை கொண்ட அதிகாரத்தை பிரதிபலிக்கக் கூடிய விதத்தில் அரசியலமைப்பு கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரமே ஜனாதிபதி போர் பிரகடனம் ஒன்றை மேற்கொள்ளுகின்ற போது தன்னிச்சையாக எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை அமெரிக்க காங்கிரஸில் தெரியப்படுத்துதல் என்பது போலித்தனமான புரிதலைக் கொண்டதாக பார்க்கப்படுகிறது. எல்லா வகையிலும் ஜனாதிபதிக்கு போர் அதிகாரத்தை வழங்கி விட்டு அதை தடுப்பதற்கு சில வழிமுறைகளை உருவாக்கி காட்சிப்படுத்தப்பட்டாலும் அது உள்ளார்ந்த அர்த்தத்தில் ஜனாதிபதிக்கான அதிகாரத்தை எல்லா சந்தர்ப்பத்திலும் முதன்மையானதாக அரசியல் யாப்பு குறிப்பிடுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதியின் போர் பிரகடனத்தை தடுப்பதற்கான அமெரிக்க அரசியல் யாப்பு விதிகள் அனைத்தும் பலவீனமாக இருப்பதோடு ஜனாதிபதியின் வீட்டோ அதிகாரத்தை கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக காங்கிரஸ் விளங்குகிறது. ஆனால் நெருக்கடிகளையும் அமெரிக்க நலன்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக மக்களுடைய ஆதரவையும் அமெரிக்க காங்கிரஸையும் முன்னிலைப்படுத்திக் கொண்டு ஜனாதிபதியின்; அதிகாரத்தினுடைய எல்லையை மட்டுப்படுத்த முடியும். இது வெளிப்படையாக பார்த்தால் அவ்வகையான விளைவையும் எதிர்கொள்ள கூடிய விதத்தில் அரசியல் யாப்பு வரையப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரத்தை இராணுவ ரீதியில் முழுமைப்படுத்தும் போது அமெரிக்காவின் உலகம் மேலாதிக்கத்தை அடைவதற்கான இலக்குகளை முதன்மைப்படுத்தி இருப்பதை உணர முடிகின்றது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை ஏதாவது ஒரு நாடு தடுத்து நிறுத்த முயலும் போது இராணுவ அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியான உத்திகளை முன் கொண்டு செல்ல முடியும் என்பதையும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அமைவாகவே பிராந்தியங்களை நோக்கியும் உலக நாடுகளை நோக்கியும் செனற்சபையினர் இராஜதந்திர ரீதியில் அமர்த்துவதற்கு அரசியல் யாப்பு ஆரோக்கியமான கட்டமைப்பை நிறுவியுள்ளது. அதன் பிரகாரம் பிராந்தியங்களுக்கு இடையிலான உறவையும் முழு உலகத்துக்குமான உறவையும் காங்கிரஸின் ஒரு பிரிவான செனற்சபை நேரடியாக அவதானிப்பதற்கான உபாயங்களை வகைப்படுத்தி கட்டமைத்து இருக்கிறது. இது அனைத்தும் ஜனாதிபதி அதிகாரத்தை பலப்படுத்துவதாக அமைந்திருப்பதற்கு அப்பால் அமெரிக்க தேசத்தின் வளங்களையும் வாய்ப்புகளையும் அடைவதற்கான உத்திகளை கொண்டிருக்கிறது.

அமெரிக்க அரசியலமைப்பு சிறியதாகவும் வலிமை கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது அதன் உலகளாவிய ரீதியான அதிகாரத்தை அடைவதற்கான உத்தியாகவே புரிந்து கொள்ள முடியும். இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்து ஓர் அரசியல் அமைப்பு(1776-2026) நிலை பெற்றிருப்பதற்கும் அது அமெரிக்க தேசத்தை உலகத்தின் முன் வலிமையானதாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டது என்பதும் தெளிவாகிறது. அதன் பிரகாரமே ஜனாதிபதியின் அதிகாரம் வரையறுக்கப்பட்டு இருக்கிறது என்பதும் புரிந்து கொள்ள முடிகிறது.

அமெரிக்கப் போர் என்பது அமெரிக்க அரசியல் யாப்பின் வரைவுகளுக்கும் அமெரிக்க தேசிய நலனுக்கும் உட்பட்டது என்பது உணர்த்துகிறது. காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் உலகத்தின் மீது காட்டப்படும் கருணையின் போலித்தன்மையை அடையாளப்படுத்துவதாக தெரிகின்றது. காங்கிரஸின் எத்தகைய தீர்மானத்தினாலும் அமெரிக்கா ஜனாதிபதியின் போர் அறிவிப்பை முற்றாக நிறுத்தி விட முடியாது மாறாக அப்போரின் நெருக்கடிகளை முன்வைத்து கைவிடுவதற்கு அல்லது பின்வாங்குவதற்கும் முயற்சிக்க முடியும். அது ஜனாதிபதியின் அடுத்த கட்ட ஆட்சிக்கான இலக்குகளை முன்னிறுத்துவதில் இருந்த தொடங்குகிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு பெருமளவுக்கு சமகாலத்தில் சாத்தியமற்றதாகவே விளங்குகிறது. ஜனாதிபதி ட்ரம்ப் இரண்டாவது தடவை ஆட்சியை அடைந்திருப்பதனால் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவானது. அதனை விட அமெரிக்காவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசியல் யாப்பின் பிரகாரம் ஒரு பக்கம் காணப்பட்டாலும் மறுபக்கத்தில் ட்ரம்ப்ன் பக்கம் அவரது நிர்வாகத்திற்கும் பொறுப்புடையதாக விளங்குகிறது. அதனால் போரின் வெற்றியை காட்டும் வரையும் அமெரிக்கா ஈரான் மீதான போரை நிகழ்த்தும் என்பது அதன் அரசியல் அமைப்புக்கும் அரசியல் அமைப்புக்கு வெளியேயும் உணர்த்துகின்ற உறுதிப்படுத்துகின்ற விடயமாக தெரிகின்றது. அமெரிக்கா தோற்றடிக்கப்பட வேண்டும் அல்லது வெற்றி கொள்ளப்பட வேண்டும். அப்போது போர் முடிபுக்கு வரவாய்ப்புள்ளது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி: தினகரன்)