உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019 ஏப்ரல் 21 இல் நிகழ்ந்த போதும் அதற்கான அரசியல் முடிவுக்கு வரவில்லை. தென்னிலங்கையின் அரசியல் கொதிநிலை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை மையப்படுத்தியுள்ளது. ஊழலையும் இனவாதத்தையும் மையப்படுத்தி ஆட்சியமைத்த அரசாங்கம் முன்னைய ஆட்சியாளர்கள் போன்றே செயல்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விளைவாக கைதுகளும் சித்திரவதைகளும் உண்ணாவிரதங்களும் என தென்னிலங்கையின் ஆளும்-எதிர் தரப்புகளுக்கு இடையிலான மோதல் தீவிரமடைகிறது. இவை அனைத்தும் ஜே.வி.பி.யின் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் காத்திரமான பங்களிப்பை வழங்குகிறது. ஜே.வி.பி. அரசாங்கத்தின் திறனற்ற நிர்வாக நடைமுறைகளாலும் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமையாலும் அதன் ஆதரவு வீழ்ச்சி அடையத் தொடங்கிய போது எதிர்க்கட்சிகளது ஆதரவாளர் மற்றும் கட்சியினர் மீதான கைதுகள் முதன்மைப்படுத்தப்பட்டன. அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தந்திருக்கும் படிப்பினைகளை அரசியலாக்குவதில் ஜே.வி.பி. அரசாங்கம் வெற்றிகரமான பக்கங்களை நிரப்பிக் கொண்டு செல்கிறது. இக்கட்டுரையும் தென்னிலங்கை அரசியலில் நிகழும் மாற்றங்களையும் புலனாய்வு அரசியலையும் தேட முயலுகிறது.
புலனாய்வுத்துறை சேவைகள் என்பது தேசியப் பாதுகாப்பு, இராணுவ நடவடிக்கைகள், பொதுப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் வகையில் தகவல்களைச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்குப் பொறுப்பான சிறப்பு வாய்ந்த அரசாங்கத்தின் பிரிவாகும். இது வெளியிலிருந்தும்; உள்நாட்டிலிருந்தும் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுத்து மக்களைப் பாதுகாக்க மனித ஆதாரங்கள் சமிக்ஞை இடைமறிப்பு மற்றும் தரவுப் பகுப்பாய்வு போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றதைக் குறிப்பதாகும். இலங்கையில், புலனாய்வு நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன. அரச புலனாய்வு சேவை (SIS) முதன்மை சிவில் புலனாய்வு முகமையாகும். இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் புலனாய்வுத் தகவல்களைச் சேகரிக்கும் பணியைக் கையாள்கிறது. மேலும், இலங்கை காவல்துறை, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் உள்ள சிறப்புப் பிரிவுகள் இதற்கு ஆதரவளிக்கின்றன. குறிப்பாக அரச புலனாய்வு சேவை, இலங்கை பொலிஸ் விசேடப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவு என்பன காணப்படுகின்றன. இதில் இலங்கை இராணுவம் இராணுவப் புலனாய்வுத் துறை, இலங்கை இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவு, இலங்கை சமிக்ஞைப் படைப்பிரிவு என்பனவற்றுடன் இலங்கை கடற்படை கடற்படைப் புலனாய்வுத் துறை, இலங்கை விமானப்படை வான் புலனாய்வுத் துறை, இலங்கை மத்திய வங்கி நிதிப் புலனாய்வுப் பிரிவு என்பனவற்றைக் கொண்டு இயங்குகிறது. இதனை இலங்கையில் நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி நோக்குவது அவசியமானது.
முதலாவது உயித்த ஞாயிறுத் தாக்குதலுக்கு காரணமான அரசாங்கம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அத்தகைய தாக்குதலின் விளைவுகள் தேடப்படுகிறது. புலனாய்வு தகவல்களின் படியும் அறிவுப்பூர்வமான உரையாடல்களிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னால் இருந்து தரப்புகள் தெளிவாகவே அடையாளம் காணப்பட்டது. ஜே.வி.பி. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களுக்கு பின்னரே அது தொடர்பில் கவனம் கொள்ள தொடங்கியது. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சல்லே இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் தலைவரும், இராணுவப் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனருமாவார். 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளில் மையமான சர்ச்சைக்குரிய நபராக விளங்குகிறார். கைது செய்யப்பட்ட பின்னரே அதிகமான உண்மைகளும் அடிப்படைகளும் தெரிய வருவதாக அரசாங்க தரப்பு குறிப்பிடுகிறது. ஆனால் அரசு தரப்பில் பார்வைக்குள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஒரு தரப்பால் நிகழ்த்தப்பட்டது என்ற தெளிவு தெரிந்த விடயமாகவே உள்ளது. ஆனாலும் அத்தகைய தாக்குதலின் பிரதான திட்டமிடலாக சுரேஷ்சல்லே இனம்காணப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணைக்க உட்படுத்தப்படுவது காலதாமதமான நடவடிக்கையே. ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுப்பதற்கும் சல்லே இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் சந்திப்புகளை நடத்தினார் என்றும் சனல்-4 ஆவணப்படம் கூறியிருந்தது. இதனை அடுத்தே மௌலானாவின் குற்றச்சாட்டுகள் சர்வதேச கவனத்தைப் பெற்றன. இதில் அடிப்படையான ஒரு விடயம் இலங்கை தீவிர அரசியல் புலனாய்வுத்துறையினரால் வடிவமைக்கப்படுகின்ற விதமே முக்கியமானது. வடக்கு கிழக்கு மீதான போரிலும் தமது ஆட்சியை கைப்பற்றுவதற்கான நகர்வுகளிலும் அரசியல்வாதிகள் புலனாய்வு தரப்புகளை பயன்படுத்தி தமது ஆட்சி அதிகாரத்திற்கான நலன்களை நிறைவு செய்து கொண்டனர். இலங்கைத் தீவின் புலனாய்வுத் துறை இன உணர்வினால் கட்டியெழுப்பப்பட்டதென்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இலங்கை தமிழருக்கு எதிரான நீண்ட இனப்படுகொலையிலும் தாக்குதல்களையும் பள்ளிவாசல்கள் ஆலயங்கள் தேவாலயங்கள் மீதான தாக்குதல்களையும் ஒரே மாதிரியான தரப்புகளால் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படுகிறது. புலனாய்வுத் துறையின் இருப்பும் தொழில்பாடும் தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே இருந்தது. தனித்து மகா சங்கங்களும் பௌத்த பிக்குகளும் மட்டும் இலங்கைத்தீவின் அரசியல் பங்காளர்கள் அல்ல. மாறாக அத்தகைய உணர்களால் கட்டியெழுப்பப்பட்ட புலனாய்வுத் துறையும் பங்காளர்களாக காணப்படுகின்றனர். இதுவே இலங்கைத் தீவின் புலனாய்வு அரசியலில் அடிப்படையாகும்.
இரண்டாவது இலங்கை தீவின் அரசியலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கிறிஸ்தவர்கள் மீதான இஸ்லாமியர்களின் தாக்குதலாக ஆரம்பத்தில் சித்தரிக்கப்பட்டது. ஆனால் உண்மையிலேயே அரசியல் ரீதியில் நோக்குகின்ற போது கிறிஸ்தவ தமிழர்கள் மீது இஸ்லாமிய-பௌத்த அரசியல் தலைமைகள் நிகழ்த்திய தாக்குதலாகவே காணப்படுகிறது. அதில் கொல்லப்பட்டவர்களில் தமிழ் கிறிஸ்தவர்களே பெரும்பான்மையினராக காணப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட தேவாலயங்கள் தமிழ் கிறிஸ்தவர்களின் வழிபாட்டு இடங்களாகவே இருந்துள்ளன. அது மட்டுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சொகுசு விடுதிகளை அவ்வகையான இலக்கை அதிகம் பிரதிபலித்திருந்தது. இங்கே தெளிவான ஒரு அரசியல் வடிவம் முன்னிறுத்தப்பட்டது. கடந்த 70 வருட இன அரசியல் வரலாறு இலங்கையின் தீவினது இருப்பை இன மத கூறுகளாலேயே வகைப்படுத்தியுள்ளது என்பதாகும். இது இன-மத எண்ணங்களோடு அரசாங்கங்கள் ஆட்சி முறைகளை வடிவமைத்துக் கொண்டதன் விளைவாகும். லங்காபுவத் முதல் சுரே~; சல்லே வரை அத்தகைய உணர்வுகளால் கட்டப்பட்டதே புலனாய்வுத் துறைகளாகும்.
மூன்றாவது புலனாய்வுத் துறைகளில் பிரதான பணிகள் இனங்களையும் மத நிறுவனங்களையும் மோத விடுவதற்கான உத்தி மையங்களாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உலக வரலாற்றில் புலனாய்வுகள் தேசங்களை பாதுகாப்பதற்கான உத்திகளை வகுக்கின்ற போது இலங்கையில் புலனாய்வுத்துறை இன-மத பிரிவுகளுக்கிடையே மோதல்களையும் பகைமைகளையும் உருவாக்குவது முனைப்பு காட்டி வருவது. முழுமையான இலங்கத்தீவின் அரசியலை மத இன உணர்வுகளுக்கு உள்ளால் பேணுவது என்ற நிலையை கொண்டிருக்கிறது. இதன் விளைவுகளை இலங்கை தீவில் அரசியலில் இருப்பை தோல்வி அடையச் செய்ததற்கான அடிப்படை காரணம் கடந்த காலத்தில் நிகழ்த்தப்படுகின்ற புலனாய்வு நகர்வுகளை புதிதாக ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கம் பின்பற்றுவதும் அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதும் வழமையான ஒன்றாகவே காணப்படுகிறது. ஆனால் நடைமுறை அர்த்தத்தில் எத்தகைய மாற்றங்களையும் புலனாய்வுத்துறை மீது ஏற்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. காரணம் தனிப்பட்ட நலங்களுக்கும் இருப்புகளுக்கும் உட்பட்ட விதத்தில் இலங்கை தீவின் அரசியலுக்கு ஆதரவான புலனாய்வு நிறுவனங்களை அரசாங்கங்கள் கட்டி எழுப்புகின்றன. அதன் விளைவுகள் தேச கட்டுமானத்திற்காக அன்றி தனிப்பட்ட நபர்களின் கட்டுமானத்துக்காகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதுவே இன்றைய நெருக்கடிக்கான அடிப்படை காரணமாகும்.
நான்காவது பயங்கரவாத தடை சட்டம் 1979 முதல் இலங்கை தமிழருக்கு எதிரான சட்டமாகவே காணப்பட்டது. 2009 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் தான் இலங்கை தீவுக்கான சட்டமாக மாற்றப்பட்டது. அதன் விளைவுகளை புலனாய்வுத்துறையின் அதிகாரிகளே எதிர்கொள்ளுகின்ற நெருக்கடி ஒன்றை சட்டம் முன் வைத்திருக்கின்றது. சட்டத்தின் வியாக்கியானங்கள் எதுவாக இருந்தாலும் சட்டத்தின் பிரயோகம் என்பது அனைத்து பயங்கரவாத செயலுக்கும் எதிரானது என்ற அடிப்படையில் நோக்கப்படுகிறது. இலங்கையில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு கட்டமைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பயங்கரவாதமாக மாறியுள்ளது. முதல் தடவையாக பயங்கரவாத தடைச்சட்டத்தில் ஆட்சியாளர்கள் கைது செய்யப்படுவதும் சித்திரவதை செய்யப்படுவதும் அரசியலாக மாற்றம் அடைந்திருக்கிறது. அதனைக் கூட எவ்வாறு சாத்தியப்படுத்த முடியும் என்பது கேள்விக்குரியது. குறிப்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் சால்லே மீது நிகழ்த்தும் சித்திரவதை என்பன இலங்கை தீவின் அரசியலுக்கு ஒன்றும் புதியதல்ல. ஆட்சியாளர்கள் தமது ஆட்சியை உறுதிப்படுத்திக் கொள்ளதற்கு பின்பற்றுகின்ற அணுகுமுறையினை இடதுசாரி ஆட்சியாளர்களும் பின்பற்றுகின்றனர். இதன் விளைவு இலங்கைத்தீவின் அரசியலை மீண்டும் ஒரு தடவை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்ற வாய்ப்பை நோக்கி நகர்வதற்கான சூழலை ஏற்படுத்தக்கூடியது. தமிழர்கள் கொல்லப்பட்டதற்காக சிங்கள மக்கள் ஒரு போதும் துயரப்பட்டதாக வரலாறு கிடையாது.
எனவே இலங்கைத்தீவின் அரசியல் நிகழும் அதிருப்திகள் பொருளாதார அடிப்படையில் காணப்படும் ஈடாட்டங்கள் என்பன ஒன்றிணைந்து பாரிய நெருக்கடி ஒன்றை இலங்கையில் தோற்றுவிப்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கின்றது. இலங்கை தீவு அல்லது தென்னிலங்கை ஆட்சியாளர்கள் பழைய கட்டமைப்புகளில் இருந்து கொண்டு புதிய மாற்றங்களை சாத்தியப்படுத்த முடியாது. முன்னைய புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் சுரேஷ் சாலலே கைது செய்யப்பட்டு விசாரணைக் உட்படுத்தப்படுவது என்பது முன்னைய புலனாய்வுத்துறையின் கட்டமைப்பின் கீழ் என்பது மறக்க முடியாது. அதனை கவனத்தில் கொள்ள தவறுகின்ற ஆட்சியும் ஆட்சியாளர்களும் பழைய மரபுக்குள்ளே புதியவற்றைத் தேட முயலுகின்றனர். இது சாத்தியமற்ற விளைவுகளை தரக்கூடியது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினக்குரல்)
