June 21, 2026
அரசியல் கட்டுரைகள்

அமெரிக்க-ஈரானிய போர் நிறுத்த புரிந்துணர்வும் போருக்கான தயார்படுத்தலும்?

அமெரிக்க-ஈரனியன் போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கை எட்டப்பட்டதால் தற்காலிகமாக ஓய்வடைந்துள்ளது. இப்போர் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்ம் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷஷ்கியன் (Masoud Pezeshkian  ) இருவரும் ஒப்பமிட்டதன் விளைவாக கைச்சாத்தான உடன்படிக்கை முழுமையான போர் நிறுத்தத்தை சாத்தியப்படுத்துமா என்ற கேள்வியை அதிகம் முதன்மைப்படுத்தி உள்ளது. உடன்படிக்கை அதிகாரப்பூர்வ கையெழுத்திடல் ஜெனீவா நகரில் நடைபெறும் எனத் திட்டமிட்டாலும் முன்கூட்டியே இரு தலைவர்களும் மின்னணு முறையில் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர். உலகம் நாடுகள் இப்போர் நிறுத்த உடன்படிக்கையை வரவேற்றாலும்; எச்சரிக்கை கலந்த நகர்வாகவே தெரிகின்றது. இக்கட்டுரையும் ஈரான் அமெரிக்காவுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் உள்ளடக்கங்களையும் அதன் உண்மை பக்கங்களையும் தேட முயலுகிறது.

முதலில் உடன்படிக்கையின் உள்ளடக்கத்தை அவதானிப்பது அவசியமானது.

ஓன்று,அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஈரான் மற்றும் தற்போதைய போரில் அவற்றின் கூட்டாளிகள் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பமிடுவதன் மூலம் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவிக்கின்றன. இனிமேல் ஒருவருக்கொருவர் எதிராக எந்தவொரு போரையோ அல்லது இராணுவ நடவடிக்கையையோ தொடங்க மாட்டோம் என்றும் ஒருவருக்கொருவர் எதிராக அச்சுறுத்தல் விடுப்பதிலிருந்தோ அல்லது பலத்தைப் பயன்படுத்துவதிலிருந்தோ விலகி இருப்போம் என்றும் லெபனானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை உறுதி செய்வோம் என்றும் உறுதியளிக்கின்றன. இறுதி உடன்படிக்கை இந்த நிரந்தர நிலையை உறுதிப்படுத்தும்.

இரண்டு, அமெரிக்கா-ஈரான் ஆகிய நாடுகள் பரஸ்பர இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பளிப்பதனால் இரு நாடுகளும் இன்னோர் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில்; தலையிடாமல் இருப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துதல்.

மூன்று, அமெரிக்கா-ஈரான் ஆகிய நாடுகள் அதிகபட்சம் 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை மூலம் எட்டுவதற்கும், தேவையெனில் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் அந்தக் காலவரம்பை நீட்டிப்பதற்கும் உறுதியளிக்கின்றன.

நான்கு, அமெரிக்கா ஈரானுக்கு எதிராக மேற்கொண்டுள்ள கடற்படை முற்றுகையை படிப்படியாக நீக்கி 30 நாட்களுக்குள் முழுமையாக நீக்குவதற்கும்; இறுதி உடன்படிக்கைக்குப்; பின்னர் தமது படைகளை ஈரானின் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து விலக்குவதற்கும் உறுதியளிக்கிறது.

ஐந்து, ஈரான் பாரசீக வளைகுடா–ஓமான் கடல் வழியாக வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான மற்றும் கட்டணமற்ற போக்குவரத்தை 60 நாட்களுக்கு ஏற்படுத்துவதற்கும் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு தடைகள் நீக்கப்பட்டு 30 நாட்களுக்குள் வழமையான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கும் உறுதியளிக்கிறது. ஹோர்மூஸ் நீரிணையின் எதிர்கால நிர்வாகம் மற்றும் கடல்சார் சேவைகள் குறித்து ஓமான் மற்றும் பிற வளைகுடா நாடுகளுடன் சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப ஈரான் உரையாடல் நடத்தும் என்றும் குறிப்பிடுகிறது.

ஆறு, அமெரிக்கா தமது பிராந்திய கூட்டாளிகளுடன் இணைந்து ஈரானின் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக குறைந்தது 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான திட்டத்தை உருவாக்க ஒப்புக்கொள்கிறது. இத்திட்டத்தின் செயலாக்க முறை இறுதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 60 நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும்.

ஏழு, வரையப்படவுள்ள இறுதி உடன்படிக்கையின் கீழ் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள அனைத்து வகையான பொருளாதாரத் தடைகளையும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் உடபட சர்வதேச அணுசக்தி முகமை தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் ஒரு தலைப்பட்சமான அமெரிக்கத் தடைகள் போன்றவற்றை தீர்மானிக்கப்படும் காலக்கெடுவில் நீக்க ஒப்புக்கொள்கிறது. இரு தரப்பும் இந்தத் தடைகள் நீக்கப்படுவது முக்கியமான அம்சம் என்பதை ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தைகளில் இவற்றை முன்னுரிமை கொண்டு உடன்பாட்டை எட்ட முயற்சிப்பதாக உறுதியளிக்கின்றன.

எட்டு, ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவோ அல்லது மேம்படுத்தவோ மாட்டோம் என்று மீண்டும் உறுதிப்படுத்துகிறது. செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை எவ்வாறு கையாள வேண்டும் என்பதில் இரு நாடுகளும் இணைந்து பொறிமுறையை உருவாக்க வேண்டும். இது சர்வதேச அணுசக்தி அமைப்பு கண்காணிப்பில் ஈரானிலேயே யுரேனியத்தின் பாதுகாப்பும் அதன் அளவின் தன்மையில் குறைந்த நிலைக்கு மாற்றப்படும். அதாவது down blending என்பது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ((HEU பொதுவாக 90சதவீத U-235) இயற்கை அல்லது குறைக்கப்பட்ட யுரேனியத்துடன் ஐசோடோபிக் முறையில் நீர்த்துப்போகச் செய்வதாகும். இந்த செயல்முறை பிளவுபடக்கூடிய செறிவை 20சதவீததிற்க்கும் குறைப்பதாகும். இதனால், அது அணுவாயுதத்தை தயாரிப்பதற்கு முடியாத நிலையை உருவாக்குவதாகும். அதே நேரத்தில் வணிக அணு உலைகளுக்கான எரிபொருள் பாதுகாப்பாக மாற்றப்படுகிறது.

ஒன்பது, இறுதி உடன்படிக்கை எட்டப்படும் வரை அமெரிக்கா மற்றும் ஈரான் தற்போதைய நிலைமை தொடர வேண்டும் என ஒப்புக்கொள்கின்றன. இதன் பிரகாரம் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தின் தற்போதைய செயல்பாட்டு நிலையை மாற்றமின்றி பராமரிக்கும்; அதேவேளை அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகள் விதிப்பதையும் பிராந்தியத்தில் கூடுதல் இராணுவப் படைகளை நிலைநிறுத்துவதையும் தவிர்க்கும் என உறுதியளிக்கிறது.

பத்து, உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டவுடன் அமெரிக்கா ஈரானின்; கச்சா எண்ணெய், பெற்றோலியப் பொருட்கள் மற்றும் அவற்றின் துணைப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தேவையான சட்ட அனுமதிகளை வழங்கி வங்கி காப்பீடு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துச் சேவைகளுக்கும் தற்காலிக விலக்குகளை வழங்கும் என உறுதியளிக்கிறது.

பதினென்று, அமெரிக்கா இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டவுடன் அமெரிக்காவினால் முடக்கப்பட்ட ஈரானின் வெளிநாட்டு பணத்தை பயன்படுத்தக் கூடியதாக மாற்றும் என்று உறுதியளிக்கிறது. இந்த பணத்தை எவ்வாறு விடுவிக்க வேண்டும் என்பதை இரு நாடுகளும் சேர்ந்து தீர்மானிப்பார்கள். அந்த பணம் ஈரானின் மத்திய வங்கி குறிப்பிடும் நபர்களுக்கு அல்லது தேவைகளுக்கு பயன்படுத்தப்படலாம். இதற்காக தேவையான அனைத்து அனுமதிகளையும் அமெரிக்கா வழங்கும்.

பன்னிரெண்டு, புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் இறுதி உடன்படிக்கை நடைமுறைப்படுத்தல் மற்றும் இணக்கத்தன்மையை கண்காணிக்க ஒரு நிர்வாக (Executive) கண்காணிப்பு முறைமை உருவாக்கப்படும் என்பதை குறிப்பிடுகிறது.

பதின்மூன்று, உடன்படிக்கை கையெழுத்தானதும் முதலில் சில முக்கிய விதிகள் (பிரிவு 1, 4, 5, 10, 11) செயல்படுத்தப்பட வேண்டும். அவை நடைமுறைக்கு வந்ததும், அமெரிக்கா மற்றும் ஈரான் மீதமுள்ள அம்சங்களைப் பற்றி இறுதி உடன்படிக்கைகான பேச்சுவார்த்தைகளை தொடங்குவார்கள்.

பதின்னான்கு, இறுதி ஒப்பந்தமானது, கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் (UNSC)) தீர்மானத்தால் அங்கீகரிக்கப்படும். இதன் அடிப்படையில் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களை அவதானித்தல் வேண்டும். அவ்வுடன்படிக்கையின் விளைவுகளை அவதானிப்பது பொருத்தமானது.

முதலாவது போர் நிறுத்த உடன்படிக்கை எட்டியுள்ள இரு நாட்டு நிர்வாகமும் அதிக விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்ட போதிலும் ஈரான் இப்போரில் வெற்றிகளை அடைந்துள்ளதாகவே மதிப்பிடப்படுகிறது. அமெரிக்காவின் அரசியல் இராணுவ, பொருளாதார ரீதியான இலக்கு எதனையும் புரிந்துணர் உடன்படிக்கைக்குள் நுழையும் போது அடையப்படவில்லை என்பது அடிப்படையான விமர்சனமாகும். அமெரிக்காவிலும் உலகளாவிய ரீதியிலும் அமெரிக்க ஜனாதிபதி ஈரானிடம் சரணடைந்து விட்டார் என்று மதிப்பிடப்படுகிறது. போரிலிருந்து அமெரிக்கா வெற்றிகரமாக பின்வாங்கி இருக்கிறதா என்பதை அதிகம் உணர்த்துகிறது. வியட்நாமின் பின்வாங்களுக்கும் ஈரானின் பின் வாங்கலுக்கும் ஒரு சமநிலையான போக்கொன்று அமெரிக்கா ஆட்சியாளர்கள் எதிர்கொண்டிருப்பதாகவே தெரிகிறது. அது மட்டுமல்ல உடன்படிக்கைகளும் உத்தரவாதங்களும் எப்போதும் மீறப்படலாம் என்பதும் அடுத்து வர இருக்கும் போருக்கான தயாரிப்பை செய்வதற்கான உத்தியாக கூட இது நோக்கப்படுகிறது. இப்போர் ஓய்வு காலத்தை தமது இராணுவ ரீதியான மேல்நிலைக்கும் போரை நிகழ்த்துவதற்குகான தயாரிப்புக் காலம் என்பதாகவே மதிப்பிடப்படுகிறது.

இரண்டாவது இப்போரின் உடன்படிக்கை தொடர்பில் இஸ்ரேல் கொண்டுள்ள குழப்பம் உடன்பாட்டில் லெபலான் குறிப்பிடப்பட்டாலும் உடன்படிக்கை இஸ்ரேலை கட்டுப்படுத்தது எனவும் தாக்குதல் தொடரும் எனவும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். யூதர்கள் அமெரிக்க ஈரானியா உடன்பாடு இஸ்ரேலியர்களுக்கு பாரிய தோல்வி என்றும் அவமானமென்றம் அரசியல் ரீதியில் இது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது எனவும் பதிவுகளை செய்துள்ளனர். இதனால் இப்போர் தொடங்குவதற்கான முனைப்புடனே அமெரிக்கர்கள் உடன்படிக்கைக்கு சென்று இருப்பதாக தெரிகிறது. அதாவது போரின் தொடக்கத்தை நிகழ்த்துவதற்கு இஸ்ரேல் பக்கம் அமெரிக்கா எப்போதும் இருக்கக் கூடியது என்பது தெரிகிறது. 60 நாள் காலப்பகுதிக்குள் ஈரான் மீது தாக்குதலை இஸ்ரேல்; நடத்தாமல் விடுவதென்பது இஸ்ரேலின் கையிலே உள்ளது. அக்காலம் ஈரானுக்கு அதிர்ச்சியான காலப்பகுதியாகவே அமைய இருக்கின்றது. அமெரிக்கா போரின் ஓய்வுக்கு சென்றாலும் இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு ஈரானை பலவீனப்படுத்துவதில் கரிசனை கொள்ளும் நிலை ஒன்றை உணர்த்துகிறது.

எனவே ஈரான் அமெரிக்கா போர் ஓய்வுக்குள் உடன்பட்டிருந்தாலும் அந்த ஓய்வு காலம் போருக்கான தயார்படுத்தல் காலமாகவே விளங்கும். இரு தரப்பும் இப்போரை மீள தொடக்குவதற்கான முனைப்புடனே உடன்பாட்டை எட்டியுள்ளனர். அமெரிக்காவின் தனிமைப்படுத்தலும் ஹர்மூஸ் நீர்ணையின் போக்குவரத்தும் அதனால் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியும் ஓய்வு காலத்துக்கான அவசியத்தை உணர்த்தியது. அமெரிக்க இராணுவ உத்திகளில் காணப்பட்ட பலவீனங்களை சரி செய்வதற்கும் புலனாய்வு தகவல்களை முதன்மைப்படுத்துவதற்கும் ஓய்வு காலம் அவசியமானதாக காணப்படுகிறது. அமெரிக்க ஒத்துழைப்பினால் ஈரானின் பொருளாதாரம் மாற்றத்திற்கு வாய்புள்ளதா என்ற சந்தேகம் வலிமையானது. உடன்பாடு என்பது போருக்கான தயார்படுத்தல் காலமாகவே தெரிகின்றது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)