செம்மணியின் அகழ்வுப்பணி இனப்படுகொலையின் சாட்சியமாக விளங்குகிறது. தொடர்ச்சியாக செம்மணியில் நிகழும் அகழ்வுகளின் பிரகாரம் கண்டெடுக்கப்படும் என்புக்கூடுகள் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதையின் உச்சபட்சமான வடிவங்களை காணமுடிகிறது. அதனை உறுதிப்படுத்தப்படும் தகவல்கள் வெளியானதை கண்டு கொள்ள முடிகிறது. 2025 ஆம் ஆண்டு நிகழ்ந்த அகழ்வாய்வுகளின் தொடர்ச்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போது அதிர்ச்சிகரமான பதிவுகள் வெளிவந்துள்ளது. இது பற்றிய செய்திகள் தினம் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் வெளிப்படுத்தப்படுகிறது. இக்கட்டுரையும் செம்மணியின் அகழ்வுகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நடவடிக்கைகளோடு ஒப்பிடும் போது ஜே.வி.பி.அரசாங்கத்தின் ஆட்சியில் காணப்படும் இனவாத உணர்வு எதுவென்பதை கோடிட்டு காட்டும் முயலுகிறது.
செம்மணி அகழ்வுகளில் கண்டெடுக்கப்பட்ட என்புகூடுகள் அதிர்ச்சி தரும் பதிவுகளே தினம்தோறும் வெளிப்படுத்துகிறது. சித்திரவதை செய்த ஆயுதங்களுடன் கண்டெடுக்கப்பட்ட என்புக் கூடும் சிறு குழந்தைகளின் புட்டிப்பால் போத்தல்களும் பாடசாலை புத்தகப் பைகளும் சொல்லும் செய்திகள் அதீத துயரத்தைக் காட்டுகின்றது. ஈழத்தமிழரின் மீதான இனப் படுகொலையின் வடிவத்தை ஒரு பக்கம் அடையாளப்படுத்தினாலும் அது நிகழ்த்தப்பட்ட முறைமையில் சித்திரவதைகளும் மனித உணர்வுக்கு அப்பாலான கொடுமைகளும் இன்னொரு பக்க செய்தியை அம்பலப்படுத்துகிறது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் நேரடியாக பங்கெடுக்காத அல்லது அது பற்றி எதுவுமே தெரியாத பால்குடிக் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டமை உலக வரலாற்றில் நியாயாதிக்கத்தின் பக்கங்களை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. ஆலயங்களும் கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. ஈழத்தமிழரின் ஒரு பக்கம் முகநூல்களில் தமது வாழ்வின் சுவாரசியங்களை கொண்டாடி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அசிங்கம் அசிங்கமாக உரையாடி தம் காலத்தையும் ஈழத்தமிழரின் வாழ்வியலையும் அழித்துக் கொண்டிருக்கிறனர். ஆனால் ஆயுதங்கள் அற்ற போருக்கு எந்த எத்தனத்தையும் செய்யாத பச்சிளம் குழந்தைகள் பெண்கள் தாய்மார்கள் வகைத்தொகை இன்றி செம்மணியில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதனை ஒவ்வொரு நாளும் அகழ்ந்து எடுக்கப்படும் ஒவ்வொரு என்பு கூடுகளும் உணர்த்துகிறன. இது எதனையும் கண்டு கொள்ளாது அரசியல் விவாதங்களும் நடந்து கொண்டே இருக்கின்றது. அவை நடத்தப்பட வேண்டும் என்பது எதார்த்தமானது. ஆனால் ஈழத்தமிழர் மீது நடந்த ஒரு பாரிய இனப்படுகொலைக்கான நேரடி சாட்சிகளை அடையாளம் காட்டுகின்ற சூழலில் எல்லா மக்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் அனைத்து புத்திஜீவிகளும் ஊடகங்களும் ஒன்றிணைந்து அந்த விடயம் சார்ந்து அகிம்சை ரீதியில் போராட்டத்தை நடத்த வேண்டிய காலம் என்பது முக்கியமானது. அதனை கடந்து செல்வது என்பது இந்த இனம் தன்னுடைய முன்னோர்களையும் தமது பாரம்பரியத்தையும் தன் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலையையும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவே தெரிகிறது. இது அடுத்து வரும் காலத்தில் இந்த இனம் தன்னுடைய இருப்பை முழுமையாகவே அழித்துக் கொள்வதற்கான அடிப்படையாகவே தெரிகிறது.
ஈழத்தமிழர்கள் இதுவரை ஆட்சி செய்தவர்களை விட தற்போது ஆட்சியில் இருக்கும் ஜே.வி.பி.யினரை எல்லையற்ற விதத்தில் நேசிப்பவர்களாகவும் ஆதரவு உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். அது ஈழத்தமிழர்களாகிய ஒவ்வொரு பிரஜைகளதும் உரிமையாகும். அவர்கள் ஒரு கட்சியை நேசிப்பது கட்சிக்கு வாக்களிப்பது கட்சியின் கொள்கைகளுக்கு பின்னால் பயணிப்பது அவர்களுக்கே உரித்தான உரிமையாகும். அதை யாரும் கேள்வி கேட்பது அவர்களது சுதந்திரத்தையும் உரிமையையும் மீறுவதாக அமையும். ஆனால் இந்த ஆட்சியாளர்கள் எப்படியானவர்கள் என்பதை ஈழதமிழர்கள் புரிந்து கொள்ளுதல் அவசியம். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நிகழ்த்தியவர்களை கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்து தகவல்களை பெறுவதற்கும் உண்மைகளை கண்டறிவதற்கும் பெரும் பிரியத்தனத்தை ஜே.வி.பி. அரசாங்கம் மேற்கொள்கிறது. அது ஜே.வி.பி.இனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மேற்கொள்கிறது என்பது நியாயமானது. அது செய்ய வெண்டிய விடமுமாகும். ஆனால் ஈழத்தமிழர் கூறுவது தங்கள் மீது திணிக்கப்பட்ட போரினாலும் தங்களுடைய இருப்பின் மீது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலையாலும் ஏற்பட்ட இழப்புகளையும் பாதிப்புகளையும் அதற்கு உரித்தான குற்றம் இழைத்தவர்களை தண்டிக்க வேண்டும் என்பதாகும். ஈழத்தமிழர்கள் 1958 ஆம் ஆண்டிலிருந்து கொல்லப்பட்டிருக்கிறார்கள், பகிரங்கமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள், என்ற தகவல்கள் எல்லாம் உலகத்தின் கண் முன்னும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் கடந்து செம்மணியில் எடுக்கப்படும் ஒவ்வொரு என்புக் கூடுகளும் அதிக செய்திகளை துயரங்களை வலிகளை முதன்மைப்படுத்துகிறது. அவர்களுக்கும் ஈழவிடுதலை போராட்டத்திற்கும் ஆயுதங்களுக்கும் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் செய்வதற்கும் எத்தகைய ஆதாரமும் இன்றி அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். உயிர்த்த ஞாயிறு படுகொலை போன்றே செம்மணியிலும் இராணுவத்தினர் மற்றும் அதற்கு அனுமதி கொடுத்த ஆட்சியாளர்கள் அதற்கான கட்டளைகளை பிறப்பித்தவர்கள் கண்முன்னே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அக்காலத்தில் அத்தகைய நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருந்த உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் இன்றும் கண்முன்னே காணப்படுகின்றனர். பலர் நாட்டில் உயர் பதவிகளிலும் அதிகாரத்திலும் தூதுவர்களாகவும் அரசாங்கங்களால் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் வெளிப்படையாகவே குற்றங்களை புரிந்து இருக்கிறார்கள் என்பது தெளிவாக அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் அவர்கள் எவருக்கும் எதிராகவும் நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கவும் ஜே.வி.பி. அரசாங்கம் தயாராக இல்லை. இது ஈழத்தமிழர்களுக்கு நன்கு புரிய வேண்டிய அரசியலாகும்.
ஈழத்தமிழர்கள் இந்த அரசாங்கம் மீது நம்பி வாக்களித்தது மட்டுமின்றி இந்த அரசாங்கத்திற்கு பின்னால் பயணம் செய்பவர்களாக இருக்கின்றார்கள். மரணத்தை அடைந்தவர்கள் அவர்களின் வாழ்வியலை முடித்துக் கொண்டார்கள். ஆனால் அந்த மரணத்தைக் கொடுத்தவர்கள் அந்த மரணத்தின் மீதும் தமது உறவுகள் மீதும் இழந்தவர்கள் மீதும் தினம் தினம் அதற்காகவே போராடிக் கொண்டும் அதற்காகவே மடிந்துகொள்ளுகின்ற துயரத்தையும் இந்த மண் வெற்றிடமாக விட்டுச்செல்கிறது. வெற்றிடத்தில் நிரப்ப வேண்டிய பொறுப்பு புலமைத்தளத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அதன் புத்திஜீவிகளுக்கும் சமூக நலன் விரும்பிகளுக்கும்; அரசியல் கட்சிகளுக்கும் அரசாங்கத்தோடு சேர்ந்து பயணிக்க விரும்புவோர்களுக்கும் உரிய பணியாகும். அவர்கள் இந்த பணியை மேற்கொள்ள தவறுகின்ற பட்சத்தில் அடுத்து வரும் காலங்கள் அவர்களுடைய சந்ததியும் இதே துயரத்தை அனுபவிக்க வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகும். இதற்கான கேள்விகளை எழுப்ப தவறுகின்ற சூழலில் எதனையும் எதிர் கொள்கின்ற மக்களாகவும் எதனையும் அனுபவிக்க வேண்டிய நிலையும் தவர்க்க முடியாததாகும். உயிர்த்த ஞாயிறுத் தாக்குமதலுக்கு ஒரு நியாயத்தையும் செம்மணிக்கு ஒரு நியாயத்தையும் காட்டும் அரசாங்கத்தை கண்முன்னே கண்டு கொள்ள முடிகிறது. எப்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 270 மேற்பட்ட அப்பாவிகளைப் கொல்லப்பட்டது போனன்றே செம்மணியிலும் இதுவரை 387 அப்பாவி மக்களது என்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு கொடுத்த முக்கியத்துவமும் உண்மையைக் கண்டறியும் முயற்சியும் செம்மணிக்கும் வேண்டும் என்பதே தமிழ் மக்களது கோரிக்கையாக அமைய வேண்டும்.
எனவே ஈழத்தமிழர்கள் அடையாளம் காணவேண்டிய அல்லது கண்டுகொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விடயத்தை கடந்து செல்ல முயல்கிறார். போர் நிகழ்வு போது வன்னிப் பெருநிலப்பரப்பு தவிர்ந்த பிரதேசங்கள் எப்படி மௌனம் காத்தனவோ அவ்வாறே தற்போதும் மௌனம் காக்கும் நிலை காணப்படுகிறது. அன்றைய காலப்பகுதியில் இராணுவ கெடுபிடிகளும் வன்முறைகளும் அதீதமாக இருந்த மட்டுமன்றி அந்தக் காலப்பகுதியில் அரசியல்வாதிகள் ஓடி ஒழித்து இருந்தனர். ஆனால் இன்றைய காலம் அதற்கான வாய்ப்பு இல்லாத காலம். தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஏதோ ஒரு அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்கும் அல்லது கவனம் கொள்ளும் ஒரு ஆட்சி முறை இருக்கின்றது. இந்தியாவிலும் உலகத்திலும் ஊடகத் திறன் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்த காலப்பகுதியில் அகிம்சை ரீதியில் போராடுவதற்கான சூழல் காணப்படுகிறது. அகிம்சை ரீதியில் போராட்டத்தை நிகழ்த்த வேண்டிய தேவைப்படான சூழல் எழுந்திருக்கிறது. இதனை பயன்படுத்த தவறுகின்ற ஈழத்தமிழர்கள் தமது எதிர்காலம் பற்றி சிந்திக்காமல் இருப்பதாகவே தெரிகின்றது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: யாழ்.தினக்குரல்)
