இலங்கைதீவின் அரசியல் தந்திரங்களாலும் உபாயங்களாலும் இராஜதந்திரத்தாலும் கட்டிப் பாதுகாக்கப்படுகிறது. இடதுசாரி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிற்பாடு உலக நாடுகளோடு பின்பற்றும் கொள்கைகள் அதன் அரசியல் பொருளாதாரம் இராணுவ இருப்பை பாதுகாப்பதாகவே விளங்குகிறது. ஒரு பக்கம் போர் நிறைவு பெற்று 17 வருடங்களை கடந்த பின்னரும் இலங்கை இராணுவம் வலுப்படுத்தப்படுகிறது. மறுபக்கத்தில் இனவாத ஆட்சிமுறை முடிவுக்கு வந்துள்ளதாக பிரச்சாரம் அரங்கேற்றப்படுகிறது. எல்லையற்ற விதத்தில் இடதுசாரி அரசாங்கம் பற்றி உள்நாட்டில் ஒரு வடிவத்தை உருவாக்கிக் கொண்டு அமெரிக்காவுடன் மிக நெருக்கமான உறவினை ஜே.வி.பி. கட்டியெழுப்புகிறது. இவ்வகை முரண்பாடான அரசாங்கத்தின் இயல்புகளையும் அதன் அடிப்படைகளையும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இக்கட்டுரை இலங்கை ஆட்சியாளர்கள் ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்காவுடன் நெருக்கமடைவதும் அதற்கு பின்னால் மறைந்துள்ள அரசியலை தேட முயலுகிறது.
அமெரிக்க இலங்கை உறவுக்கான அடிப்படை அம்சங்களை அண்மைய சம்பவங்களுடன் விளங்கிக் கொள்ளுதல் பொருத்தப்பாடாகும்.
பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை தனது அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி போல் கபூருடனான (Paul Kapur) சந்திப்பின் 22.06.2026 ஜனாதிபதி செயலகத்தில் தெரிவித்தார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான 77 ஆண்டுகால இருதரப்பு உறவு நினைவு கொள்ளப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு, சுற்றுலா மற்றும் இருதரப்பு மக்கள்-மக்கள் தொடர்புகள் போன்ற துறைகளின் ஊடாக சிறந்த பன்முக ஒத்துழைப்பாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர், தொடர்ச்சியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக குறிப்பிட்டார். ஈரான்-அமெரிக்காவுக்கிடையே நிலவும் சூழ்நிலை சாதகமான திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது கவனத்தில் கொள்ளப்பட்டது. ஜூன் 19ஆம் திகதி எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் பிராந்தியத்தை நிலையான அமைதியை நோக்கி இட்டுச் செல்லும் என இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்தனர். இதே நேரம் அமெரிக்கா வழங்கிய TH-57 –Bill-206 உலங்குவானூர்திகளை உத்தியோக பூர்வமாக இலங்கை ஜனாததிபதி அமெரிக்க பசுபிக் விமானப்படைத் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் (Kevin Schneider)மற்றும் போல்கபூர் ஆகியோர் இலங்கை விமானப்படைக்கு உத்தியோக பூர்வமாகக் கையளித்தனர்.இது பற்றிய ஆழமான உண்மைகள் தேடப்பட வேண்டும்.
முதலாவது இலங்கை தீவானது பிராந்திய பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்காவுடன் உரையாடுவது என்பதன் உள்ளார்ந்த அர்த்தம் அதிக குழப்பத்தை தருகிறது. பிராந்திய அரசான இந்தியாவுடன் இலங்கை அதிக நெருக்கமான உறவை கொண்டிருக்கிறது. பிராந்திய மட்டத்தில் இந்தியா அயல் நாடுகளுக்கு முன்னுரிமை என்ற வெளியுறவுக் கொள்கையை கட்டமைத்து வைத்துள்ளது. ஆனால் இலங்கை ஜனாதிபதி பிராந்திய பாதுகாப்புத் தொடர்கள் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக முன்மொழிகின்றார். அது ஈரான் சார்ந்த இலங்கையின் கொள்கை தொடர்பில் காணப்படும் போக்கை கூட சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்க வாய்ப்பு உண்டு. ஈரானின் அண்மையில் அமெரிக்கா தொடர்பிலும் விவகாரத்தில் இடதுசாரி அரசாங்கம் கொண்டிருந்த கொள்கை மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது ஈரான் விவகாரத்துடன் மட்டுமானதாக என்ற கேள்வியும் அடிப்படையானது. ஏனெனில் பிராந்திய பாதுகாப்பில் இலங்கையினுடைய அமைவிடம் தென்னாசியாவுக்குள் இருப்பதாலும் பிராந்தியங்களை கடந்து இலங்கை தனது அரசியலில் எத்தகைய ஈடுபாடும் கொள்ளவில்லை என்பதும் வெளிப்படையானது. அப்படியாயின் பிராந்தியம் பொறுத்த கொள்கை என்பது இலங்கை இந்தியாவுடனா அல்லது அமெரிக்காவுடனா என்ற கேள்வி தவிர்க்க முடியாது.நிச்சயமாக இலங்கை இந்தியாவுடன் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது
இரண்டாவது இந்திய தொடர்புடைய பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் அல்லது இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி சார்ந்ததா என்பது அவசியமானது. இப்பகுதியில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டது போல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் தரைவழித் தொடர்பை அதிகம் முதன்மைப்படுத்த தற்போதைய இலங்கைக்கான இந்திய தூதவர் முனைப்பு காட்டி இருந்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது. அது சார்ந்து ஒரு அணுகுமுறையை இலங்கை ஆட்சியாளர்கள் தீவிரப்படுத்த ஆரம்பித்திருக்கின்றார்கள். அதில் அமெரிக்காவுடனான உறவை பலப்படுத்துவதன் மூலம் இந்திய இலங்கை உறவில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை தவிர்க்க முடியும் என்பதாகும். அதாவது இந்தியா பொறுத்து இலங்கை ஏற்றுக்கொள்ள முடியாத உத்திகளை சரியான முறையில் கையாளுவதற்கு அமெரிக்கா பொருத்தமானது என்பதை இடதுசாரி கொள்கைகளைக் கடந்து ஆட்சியாளர்கள் கட்டமைத்து வருகின்றனர். இலங்கை தீவில் எவ்வகையான ஆட்சி காணப்பட்டாலும் அதன் இயல்பு இலங்கை தீவின் இருப்புச் சார்ந்ததாகவே அமையும். அதுவே அமெரிக்காவுடனான உறவை இலங்கை உருவாக்க திட்டமிடுகிறது. இந்தியா பொறுத்து தரைவழிக்கான பாலம் அமைப்பது இலங்கையால் ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும்.
மூன்றாவது இலங்கை இந்தியா ஒத்துழைப்பு எல்லைக்குட்பட்டது என்பதை கடந்த கால அனுபவங்கள் குறிப்பிடுகின்றன. வெளிப்படையாக பார்த்தால் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு இலங்கையின் நலன் பொறுத்தும் அவசியமானது. ஆனால் இந்தியாவில் நலன் பொறுத்து அல்ல என்பது முன்கூட்டியே தெரிந்த விடயம். இலங்கை ஆட்சியாளர் தமது நீண்டகால நலனை நிராகரிக்கும் எத்தகைய செய்முறைக்குள்ளும் சென்றது கிடையாது. வரலாறு முழுவதும் அத்தகைய அனுபவத்தை இலங்கை ஆட்சியாளர்கள் கொண்டிருந்தனர். குறிப்பாக பிரித்தானியர் காலத்தில் இலங்கையை இந்தியாவுடன் இணைப்பது பற்றி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியத் தேசிய காங்கிரஸ்க்கு 1940 யூலை 20 ஆம் திகதி கடிதம் எழுதியதாகவும் நேரு இலங்கையை இந்தியாவுடன் இணைப்பதில் அதிக கவனம் கொண்டு இருந்தார் என்பதும் வரலாற்றில் பதிவாகும். அப்போதும் பிரித்தானியர்களே இலங்கையை தனித்துவாமான அரசாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அதிக கவனம் கொண்டனர். இணைப்பதனால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளை அன்றைய காலத்தில் பிரித்தானிய கொள்கை வகுப்பாளர்கள் இலங்கைக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர்(இது தொடர்பில் Michael Roberts (1977): Documents of the Ceylon National Congress And Nationalist Politics in Ceylon 1929-1950 என்ற நூலில் கடிதங்களைக் காணலாம்) இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை மூலம் இலங்கையை இணைக்கும் முயற்சித்ததை அவரது படுகொலை முடிபுக்குக்கு கொண்டுவந்தது. அதேபோன்று தற்போதைய இந்திய ஆட்சியாளர்கள் தரைவழிப்பாதை ஒன்றின் மூலம் இலங்கையை இந்தியாவுடன் இணைப்பதற்கு முனைப்பு காட்டி வருகின்றனர். இவை அனைத்தும் கவனத்தில் கொண்டே இடதுசாரி ஆட்சியாளர்கள் பெரும் ஏகாதிபத்தியத்தியத்தின் எல்லைக்குள் சரணடைந்துள்ளார்கள் என்று தெரிகின்றது. இச் சரணடைவு இலங்கை தீவையும் இலங்கை ஆட்சியாளரின் ஆட்சியையும் உத்தரவாதப்படுத்துவதற்கான முனைப்பாகவே தெரிகின்றது. இது இலங்கைத் தமிழருடைய அரசியலில் புரிந்து கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயமாகவே அமைந்திருக்கின்றது. இலங்கைத் தமிழர்க்கு இந்தியாவுடனான தரைவழிப் பாதை அமைப்பது பாரிய அரசியல் ரீதியான இலாபங்களை தரக்கூடியது. பொருளாதார ரீதியில் கூட்டுத் தன்மையும் ஒத்துழைப்பும் வலுவடைகின்ற போது வடக்கின் வளர்ச்சி பலமானதாக இருக்கும் என்று தென்னிலங்கை புலமையாளர்கள் விவாதிக்க தொடங்கி இருக்கின்றனர். ஆனாலும் இலங்கைதீவை இந்தியாவிடமிருந்து பாதுகாத்து வைத்திருப்பதில் இலங்கை ஆட்சியாளர்களுக்கு இருக்கும் அதே நோக்கம் அமெரிக்கர்களுக்கும் உண்டு.
நான்காவது இலங்கை தீவில் அமெரிக்கர்கள் ஓர் இராணுவத் தளம் அமைப்பது பற்றிய கரிசனை அதிகம் காணப்படுவதாக தெரிகின்றது. மேற்காசியாவில் அமெரிக்கர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி ஈரான் அமெரிக்க முரண்பாட்டின் உச்ச வெளிப்பாடுகள் இலங்கை தீவில் இராணுவ தளம் ஒன்றை அமைப்பது ஏகாதிபத்திய நலன்களை நிறைவு செய்வதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தீவின் இராணுவ தளம் மேற்காசியப் பிராந்தியத்துடனான பாதிப்பை சமன் செய்ய உதவும் என்பதும் இந்து சமுத்திரத்தின் மையப் பகுதியில் ஒரு ஆரோக்கியமான இருப்பை அமெரிக்கா கட்டமைக்கும் என்பதும் ஒரு பக்கமான விவாதமாகும். மறுபக்கத்தில் சீனாவுக்கு எதிரான வலுவான இருப்பை அமெரிக்கா இலங்கைக்குள் உத்தரவாதப்படுத்த உதவுவதாக அமையும். அதற்கான அடிப்படையில் அமெரிக்க நலன் இந்துசமுத்திரத்தில் பாதுகாக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியா இலங்கை தரைவழி பதை துண்டிப்பைச் செய்வதில் அமெரிக்க சீனர்கள் ஒன்றிணைந்தாலும் சீன இராணுவ இருப்பை அல்லது ஹம்பாந்தோட்டையின் சீன செல்வாக்கை நெருக்கடிக்கு உள்ளாக்குவதில் இந்தியா அமெரிக்க தரப்புக்கு ஓர் இலாபகரமானதாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு மூன்று வல்லரசுகளுக்கும் தமக்குள் இலாபங்களையும் வாய்ப்புக்களையும் தேட முயலுகிற போது மோதலும் பகைமையும் சமரசம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்தியர்கள் எதை கருதுகிறார்களோ அதை கடந்து சீன அமெரிக்கா பிரசன்னம் என்பது இந்தியாவின் இருப்பையும் இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் செல்வாக்கையும் முழுமையாக காணாமல் செய்யும்.ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து இலங்கை ஆட்சியாளர் தமது நலனை பாதுகாத்துக் கொள்வார்கள்.
எனவே அமெரிக்கா இலங்கை நெருக்கம் இந்தியாவுடன் இலங்கையின் தரைவழி பாதை துண்டிப்பையும் சீனா இலங்கை மீதான ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் வழி வகுக்கக் கூடிய ஒன்றாகவே விளங்குகிறது. அதாவது சீனாவும் இந்தியாவும் இலங்கைதீவின் செல்வாக்கை படிப்படியாக இழக்கும் அதே நேரம் அமெரிக்கா பிராந்தியத்தில் செல்வாக்கு மிக்க சக்தியாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இலங்கையின் இடதுசாரி ஆட்சியாளர்கள் அரசாங்கத்தின் இருப்பை தக்க வைப்பதன் மூலம் இலங்கைத் தீவை பாதுகாக்க முயலுகின்றனர். இடதுசாரி வலதுசாரி என்ற எந்த வியாக்கியானமுமின்றி இலங்கையினுடைய ஆட்சி நிலைத்திருப்பதற்கு சீனா இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவும் அவசியமானது என்பதை ஜே.வி.பி. உணர்ந்திருக்கின்றது. இலங்கையின் ஜனாதிபதி அமெரிக்க பிரதிநிதிகளுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது ஜே.வி.பி.இன் பொதுச் செயலாளர் ரிவின்டி சில்வா சீன தூதுவருடன் உரையாடிக் கொண்டிருக்கின்ற காட்சி இலங்கையினுடைய அரசியலின் வடிவத்தையும் அதன் ஆழமான புரிதலையும் தந்திருக்கின்றது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.
(நன்றி: தினக்குரல்)
