இலங்கை-சீன உறவு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. இலங்கையுடன் சீனா கொண்டிருக்கும் உறவுக்கான அடிப்படை தந்திரோபாயம் மிக்கது என்பது பிராந்திய சர்வதேச அரசியலை புரிந்து கொள்வோர்கள் முன்வைக்கும் விவாதமாகும். இலங்கையின் ஆட்சியிலுள்ள ஜே.வி.பி. சீன சார்பு கட்சியாகவே ஆரம்ப காலத்தில் அடையாளப்படுத்தப்பட்டது. அதனுடைய தொடர்ச்சியை இலங்கையும் ஜே.வி.பி.யும் முதன்மைப்படுத்தி வருகிறன. இக்கட்டுரையும் 11.08.2026 அன்று இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவராக பதவியை பொறுப்பேற்றுள்ள வெய் ஹீவாக்சியாங் (Wei Huaxiang) இன் முக்கியத்துவம் பற்றியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெய் ஹீவாக்சியாங் சீனக் கம்யூனிஸக் கட்சியின் உறுப்பினராகவும் Shandong மாகாணத்தின் Dongying நகரக் கட்சி அமைப்பின் சட்ட – அரசியல் குழுவில் அதிகாரியாகவும் பின்னர் துணை அதிகாரியாகவும் பணியாற்றியவர். அரசறிவியல் கற்கையை சிறப்பு தேர்ச்சியைக் கொண்டதோடு அரசியல் பொருளாதாரத்தில் கலாநிதிப் பட்டத்தை பூர்த்தி செய்ததுடன் பொருளாதார நிர்வாகத்தில் தேர்ச்சியுடையவராக விளங்கியவர். சீனாவின் உள்நாட்டு நிர்வாகம், வர்த்தகம், சந்தை ஒழுங்குமுறை மற்றும் பொருளாதாரத் துறைகளில் அதிக தேர்ச்சி பெற்றவராக விளங்குகியவர் வெய். இவரது பதவி நிலையை அவதானிக்கும் போது நீண்ட அனுபவத்தை கொண்டுள்ளதென்பதை உணர்த்துகிறது. குறிப்பாக 2004–2005 களில் China International Electronic Commerce Centre- இன் மனிதவளப் பிரிவின் பொருளாதார நிபுணராக பணியாற்றியுள்ளார். 2005–2008 வரை சீனாவின் சந்தைப் பொருளாதார ஒழுங்குமுறையைச் சீரமைக்கும் தேசிய அலுவலகத்திலும், 2008–2011 இல் சீன வர்த்தக அமைச்சகத்தின் Market Order Department- இல் துணை இயக்குநர் மற்றும் இயக்குநர் நிலைப் பொறுப்புகளை வகித்துள்ளார். 2011–2013 வரை Shandong மாகாண வர்த்தகத் துறையின் துணைத் தலைவராக பணிபுரிந்துள்ளார். 2013–2016 வரையும் Shandong மாகாணத்தின் Linyi நகரின் துணை மேயராக பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். 2016–2019 காலப்பகுதியில் Shandong மாகாண அரசின் துணைச் செயலாளராகவும், மாகாண அரசு அலுவலகத்தின் கட்சி அமைப்பில் உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். அக்காலப்பகுதியில் Shandong மாகாண அரசின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டவர். 2019–2022வரை Shandong Agricultural Development Credit Guarantee நிறுவனத்தின் துணைப் பொதுமுகாமையாளர் மற்றும் பொதுமுகாமையாளர் பதவிகளையும் பின்னர் Shandong பிராந்தியத்தின் கட்சிச் செயலாளர் மற்றும் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தவர். வெய் இன் தூதரக அனுபவம் வியட்நாமில் உள்ள சீன தூதரகத்தின் ஹோ சி மின் நகர தூதர் ஜெனரல் பதவியாகும். அவர் 2022 மே முதல் 2025 மே வரை அப்பதவியை வகித்திருந்தார். அக்காலப்பகுதியில் சீனா–வியட்நாம் வர்த்தகம், முதலீடு, விவசாயப் பொருட்கள், சுற்றுலாத்துறை, மருத்துவம், கலாசாரம், சீன நிறுவனங்களின் வணிகச் செயல்பாடுகள் ஆகியவற்றில் பெரியளவில் கட்டிவளர்தவர் என்ற பெயரைக் கொண்டவர். வெய் இன் பதவிநிலை முக்கியத்துவம் இலங்கையில் எத்தகையது என்பதை ஆழமாகப் புரிந்து கொள்வது அவசியமானது.
முதலாவது புதிய சீனத் தூதுவரின் கடந்த கால அனுபவங்களையும் தகமைகளையும் அளவீடு செய்கின்ற போது பொருளாதார நிபுணத்துவம் வாய்ந்த தூதுவராக அடையாளப்படுத்துவது பொருத்தமானதாக தெரிகிறது. குறிப்பாக மெய் ஒரு பொருளாதார இராஜதந்திரியாக முதன்மைப்படுத்துவது சர்வதேச ஊடகங்கள் அதிக கவனம் கொண்டிருக்கின்றன. இலங்கை தீவின் அமைவிடம் என்பது தனித்துவமான வாய்ப்புகளையும் முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கின்றது. அதன் அடிப்படையிலேயே சீனா இலங்கையை பொருளாதார மையமாக மாற்றுவதற்கான திட்டமிடலை கடந்த காலங்களில் நிலைநிறுத்தியுள்ளது. கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி என்பன பொருளாதார ரீதியில் அதிக முக்கியத்துவத்தை வெங்கின் காலத்தில் சாத்தியப்படுத்தும்; என்பதை எதிர்பார்க்க முடியும். இலங்கையை ஒரு வர்த்தக நகரமாக மாற்றுவதும் அதன் மூலம் இலங்கையை உலக நாடுகளோடு இணைத்துக் கொள்வதும் அதன் வாயிலாக பொருளாதார வாய்ப்புகளை உத்தரவாதப்படுத்த சீனா முயலும் என்பது தவிர்க்க முடியாத செய்தியாகும். இக்காலப்பகுதியில் இலங்கை உள்நாட்டு பொருளாதாரத்தையும் உள்நாட்டு பொருளாதாரத்தோடு சீனாவின் நெருக்கமான பொருளாதார உறவையும் சாத்தியப்படுத்துகின்ற வாய்ப்பினை அதிகமாக கொண்டிருக்கும். குறிப்பாக சீனாவினுடைய பொருளாதார நடவடிக்கைகள் பொருளாதார வலையங்கள் உள்நாட்டு வர்த்தகத்திற்கான செய்முறைகள் என பல அம்சங்களில் சீன நிறுவனங்களின் செல்வாக்கு இலங்கை தீவில் அதிகமாக வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. தென் மாகாணத்தின் பொருளாதார வாய்ப்புகளை சீனக் கம்பனிகள் அதிகம் ஆதிக்கம் செய்வதோடு ஏனைய பிராந்தியங்களை நோக்கிய விஸ்தரிப்புக்கான தீவிரம் காணப்படும். தற்போதே கொழும்பு நகரத்தை மையப்படுத்தி அதிகமான வர்த்தக நிலையங்களில் உரிமையாளராகவும், வர்த்தகர்களாகவும் சீனர்கள் முதன்மை பெற்று வருகின்றனர். உணவு விடுதிகள் உல்லாச விடுதிகள் போன்றவற்றை அதிகம் சீன வர்த்தகர்களே நடாத்தி வருகின்றமை தெரிகின்றது. வெய்ன் காலத்தில் சீன வர்த்தக நிறுவனங்களின் பெருக்கம் வடக்கு கிழக்கு நோக்கியும் விஸ்தரிக்க வாய்ப்புள்ளது.
இரண்டாவது சீனாவின் இலங்கை நோக்கிய பொருளாதார விஸ்திரிப்பானது இலங்கையில் இருந்து பெறப்படுகின்ற பொருளாதார இலாபத்துக்கானது என்று முழுமையாக விவாதித்து விட முடியாது. மாறாக இலங்கையின் நகரங்களை வர்த்தக மையங்களாக மாற்றுவதன் மூலம் உலகளாவிய ரீதியான வர்த்தகத்தின் இலாபங்களை சீனர்கள் கொண்டு செல்வதற்கான வாய்ப்பை இலங்கை தீவு கொடுத்திருக்கின்றது என்பதே யதார்தமானதாகும். இது ஒரு வகையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியையும் சீனா இலங்கையின் ஊடாக பெறுகின்ற வர்த்தக் இலாபங்களையும் அடைவதையும் ஓர் அணுகுமுறையாகவே காணப்படுகிறது. மெயின் பொருளாதார நிபுணத்துவம் அதற்கு அனுசரணை வழங்கும் என்பதைக் கடந்து அவர் ஒரு அரசியல் பொருளாதாரத்தின் தேர்ச்சி பெற்றவராகவும் இலங்கையை அரசியல் பொருளாதாரம் ரீதியில் கட்டமைப்பதில் கரிசனை செய்யக்கூடிய ஒருவர் என்பதையும் அவரது அனுபவங்களும் தகமைகளும் உறுதிப்படுத்துகின்றன.
மூன்றாவது தென்னிலங்கை ஆட்சியாளர்கள்;; இந்தியாவின் நெருக்கீடுகளை எதிர்கொள்வதற்கு சீனாவின் பக்கம் கொள்கை வகுப்புகளை செய்திருந்த போதும் இரண்டு நாடுகளையும் சம தூரத்தில் வைத்திருக்கும் கயிற்றில்நடக்கும் சமநிலை தந்திரேபாயத்தை (Tightrope Balancing strategy) பின்பற்றி வருகின்றனர் என்ற மதிப்பீடு காணப்படுகிறது. இந்தியாவின் முதலீடுகளையும் வர்த்தகத்தையும் உதவிகளையும் ஏற்றுக் கொள்ளுகின்ற அதே சந்தர்ப்பத்தில் சீனாவினதும் ஒத்துழைப்புக்களை அங்கீகரிப்பது தென் இலங்கை ஆட்சியாளர்கள் கரிசனை கொண்டவர்களாக காணப்படுகின்றனர். அதனையே தென்னிலங்கையில் புலமையாளர்களும் சர்வதேச மட்டத்தில் இருக்கும் அறிஞர்களும் அளவீடு செய்ய முனைகின்றனர். ஆனால் ஆழமான ஒரு விடயத்தை அத்தகைய ஆய்வாளர்களும் தென்னிலங்கை ஆட்சியாளர்களும் கண்டுகொள்ள தவறுகின்றமை காணப்படுகிறது. அதாவது இந்தியாவை எதிர்கொள்வதற்கு சீனாவிடம் சரணடைந்தவர்கள் சீனாவின் எல்லையற்ற தலையீடுகளினால் அதிக நெருக்கீடுகளை எதிர்காலத்தில் எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை கண்டுகொள்ள தவறுபவர்களாக விளங்குகின்றனர். இலங்கைக்கு இந்தியாவுக்குமான உறவு போன்றதே சீன இலங்கை உறவு என்று குறிப்பிட்டு விட முடியாது. சீனர்கள் இலங்கையோடு கொண்டிருக்கின்ற நெருக்கமும் முக்கியத்துவமும் இந்துசமுத்திரம் சார்ந்தும் தென்னாசிய பிராந்தியம் சார்ந்தும் சர்வதேச அரசியல் சார்ந்தும் முக்கியத்துவம் பெற்றது என்பதை கணக்கில் கொள்ள இலங்கை புலமையாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் தவறுகின்றனர். இந்தியாவையும் சீனாவையும் கையாளுவது என்பது சமநிலையான தந்திரோபாயம் என்பதற்கு அப்பால் ஆபத்தான தந்திரோபாயம் (Dangerous Strategy) என மதிப்பீடு செய்தல் வேண்டும். இந்தியர்களைப் போன்று சீனர்கள் அணுகுமுறை இல்லை என்பதை கண்டு கொள்வதற்கான காலப்பகுதியிலேயே தென்னிலங்கையின் அரசியல் பொருளாதாரம் சூழல் காணப்படுகிறது. தென்னிலங்கையின் பொருளாதார மையங்களை ஒரு காலப் பகுதியில் இந்தியர்களும் அதனை அடுத்து இலங்கைத் தமிழர்களும் பின்னர் முஸ்லிம்களும் தற்போது சீனர்களும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான தகவலாகவே காணப்படுகிறது. சீனர்கள் இயல்பாகவே தீவிர உழைப்பை செலுத்துவார்கள். முதலீட்டாளர்களாகவும் தீவிர சுரண்டல் கொள்கை கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். எனவே இதனை சமநிலையான தந்திரோபாயம் என்று அழைப்பதை விட ஆபத்தான தந்திரபாயமென்ற சூழலை நோக்கி இது நகர்கிறது என்பதை புரிந்து கொள்வது அவசியமானது.
எனவே சீனாவின் புதிய தூதுவரது காலப்பகுதி இலங்கையை அரசியல் பொருளாதாரம் எல்லைக்குள் நகர்த்திச் செல்வதற்கான வாய்ப்பினை அதிகம் பிரதிபலிப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையை பொருளாதார ரீதியில் சந்தை கட்டமைப்பு பட்டி மற்றும் பாதை முன் முயற்சிக்கான (BRI) தீவிரமான அணுகுமுறையை கொண்டிருக்கின்ற சூழலை அடைய வாய்ப்பு உள்ளதாகவே மதிப்படப்படுகிறது. இதன் விளைவுகள் தொடபில் இந்திய தரப்பும் சீன தரப்பும் சமதூரத்தில் இருப்பது போன்று காணப்பட்டாலும் அது ஓர் அபாயகரமான தந்திரோபாயமானது என்பதை உணருகின்ற சூழல் வேகமானதாக அமைய வாய்ப்புக்கள் தெரிகிறது. இவை எல்லாவற்றையும் இந்திய தரப்பினர் பார்த்துக் கொள்வார்கள் என்ற அறிவியலோடு கடந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் இலங்கைத் தமிழர் பக்க அனுபவமாக உள்ளது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினக்குரல்)
