August 18, 2026
அரசியல் கட்டுரைகள்

இஸ்ரேலின் சதிக்கோட்பாடுகளும் அமெரிக்க-ஈரான் போர்ப் பொருளாதார நெருக்கடியும்?

ஈரான் மீதான அமெரிக்கப் போர் இஸ்ரேலின் சதியினால் தீவிரம் பெறுகிறது என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக அண்மைய நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதியின் துருக்கிய விஜயத்தின் போது நிகழ்ந்ததாக ஈரானின் படுகொலை முயற்சிக்கு பின்னால் இஸ்ரேலின் புலனாய்வுத் துறையின் சதி நடவடிக்கை என தெரியவந்துள்ளது. இதனை அமெரிக்கப் புலனாய்வுத்துறை உறுதிப்படுத்தப்படுகிறது. அவ்வாறே அமெரிக்காவில் டொனால்ட் டரம்ப்க்கு எதிராக நிகழ்ந்த படுகொலை முயற்சிகளுக்குப் பின்னாலும் இஸ்ரேலிய சதி முயற்சி இருந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனை முதன்மைப்படுத்தி சர்வதேச ஊடகங்கள் செ;தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா இந்த போரை கைவிடுமாக இருந்தால் இஸ்ரேல் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் என்ற அடிப்படையிலேயே அத்தகைய சதிகோட்பாடுகளை உருவாக்கி அதன் மூலம் போரை நிலை நிறுத்தி இஸ்ரேலின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள இஸ்ரேலிய புலனாய்வுத்துறை முயன்றுள்ளதாக தெரியவருகிறது. இக்கட்டுரையும் மேற்காசிய பிராந்தியத்தின் நிகழும் போரானது போர் பொருளாதாரத்தின் பரிமாணமாக மாறியுள்ளதென்பதை தேட முயலுகிறது.

ஈரான் அமெரிக்க போர் நீரிணைகளை மையப்படுத்தி தீவிர நெருக்கடிக்குள் உள்ளாகி வருகின்றது. ஏற்கனவே ஹார்மூஸ் நீரிணை, செங்கடல் போன்ற நீர் நிலைகளை நோக்கியதாக நிகழ்ந்துவருகிறது. இது தற்பொழுது பாப் எல்-மண்டெப் நீரிணையும் (Bab-el-Mandeb Strait) மற்றும் ஏடன் வளைகுடா(Gulf of Aden) நீர் நிலைகளை நோக்கி விரிவடைய தொடங்கி இருக்கின்றது. இதன் விளைவுகள் ஒட்டுமொத்தமான உலகப் பொருளாதாரத்தில் அச்சுறுத்தலாக மாறி இருப்பதோடு போரின் முக்கியத்துவம் தீவிரமடைய வழி வகுத்துள்ளது. ஹார்மூஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரானும் அதை அமெரிக்கா தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியும் கூறிவரும் நிலையில் அதன் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இதனை ஆழமாக நோக்குவது அவசியமானது.

முதலாவது தங்கள் அனுமதியின்றி எந்தக் கப்பலும் கடந்து செல்ல முடியாது என்று கூறியுள்ள ஈரான் இராணுவம், ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வதாகக் கூறப்படும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. முன்னதாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் ஒரு அங்கமான பசிஜ் துணை இராணுவப் படையின் ((Basij paramilitary force)) தளபதி ஹொசைன் தாயிப் (Hossein Taeb) ஹார்மூஸ் நீர்வழிப்பாதை ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறினார். உளவுத்துறைத் தோல்விகள் காரணமாக ஈரான் போர் குறித்து அமெரிக்கா தவறான கணிப்புகளைச் செய்ததாகவும், ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அதைவிடப் பெரிய தவறான கணிப்பை செய்யும் அபாயம் இருப்பதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறுகிறார். ஹார்மூஸ் நீரிணை தொடர்ச்சியாக ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அமெரிக்கா கொண்டிருக்கின்ற பிழையான புலனாய்வு தகவல் இதற்கான அடிப்படை என்பதை தெரியப்படுத்தியோடு அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் முன்னைய அறிக்கைகள் பற்றிய உரையாடலையும் ஈரான் வெளிப்படுத்தியுள்ளது. இதே நேரம் அமெரிக்க ஜனாதிபதி ஈரானிடம் ஹார்மூஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு திறந்து விடுமாறும் பதிலாக அணு ஆயுத உடன்பாடு சார்ந்தும் போர் சார்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது ஹார்மூஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை அமெரிக்க ஜனாதிபதி உறுதிப்படுத்துகின்ற விதத்தில் செய்திகள் வெளியாகிறது. ஈரானின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் போரைத் தீவிரப்படுத்தும் அந்நாட்டின் உச்ச தலைவரின் வியூகம், சந்தேகத்திற்கு இடமின்றி உலகளாவிய அதிகார சமநிலையைக் குலைத்துவிடும் என்று ஈரானியத் தலைவரின் ஆலோசகரும் முன்னாள் பதில் ஜனாதிபதியுமான முகமது மொக்பர் (Mohammad Mokhber ) கூறுகிறார். பாரசீக வளைகுடாவில் தமது நட்பு நாடுகளைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் நிரூபிக்கப்பட்ட இயலாமையின் காரணமாக அமெரிக்காவின் இராணுவ உத்தரவாதங்களைச் சாராமல், ஹார்முஸ் பொருளாதார-பாதுகாப்பு பொறிமுறையைச் செயல்படுத்துவதில் தான் ஒரு புதிய பிராந்திய ஒழுங்கிற்கான மிகவும் நீடித்த பாதை உள்ளது என்று மொக்பர் வலையமைப்பில் பதிவிட்டிருந்தார். ஹார்முஸ் நீரிணையின் மீது அமெரிக்கா முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என்ற ட்ரம்பின் கூற்றுக்கு மாறாக அந்த நீர்வழியின் எதிர்கால மேலாண்மை குறித்து ஓமானுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரும் ஈரான் அந்த நீரிiணியின் மீது தமது செல்வாக்கைத் தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது. அமெரிக்காவுக்கு எதிராக இராணுவப் போரை மட்டுல்ல பொருளாதாரப் போரையும் நடத்துவதாக ஈரான் கருதுவதால் ஹார்முஸ் நீரிணையை மூடியே வைத்திருக்க ஈரான் உறுதியாக உள்ளது என்று தெஹ்ரானில்; பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பத்திரிகையாளருமான முஸ்தபா கோஸ்செஸ்ம் (Mustafa Koshcheshm) கூறுகிறார். அமெரிக்காவைத் தோற்கடிக்க வேண்டுமானால் அது சமச்சீரற்ற போராக இருக்க வேண்டும் என்பதை ஈரான் அறிந்திருக்கிறது. இந்தப் பொருளாதாரப் போரில், ஹார்முஸ் நீரிணையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்

இரண்டாவது மேற்காசியப் பிராந்தியத்தில் வர்த்தக நடவடிக்கைக்கும் பெற்றோலிய பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதிக்கும் வாய்ப்பான பாப்-எல்-மண்டெப் நீரிணையும் புதிய முக்கியப் போர்முனையாக உருவெடுத்துவருகிறது. பாப் எல்-மண்டெப் யேமனுக்கும் ஆப்பிரிக்காவின் ஜிபூட்டி–எரித்திரியா கடற்கரைக்கும் இடையில் அமைந்துள்ள குறுகிய கடல்வழியாகும். .இது செங்கடலை ஏடன் வளைகுடாவுடனும் அங்கிருந்து அராபியக்கடல் ஊடாக இந்துசமுத்திரத்தின் மேற்குப்பகுதியுடன் இணைக்கும் முக்கிய கடல்வழிப் பாதையாகும். செங்கடலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சுயஸ் கால்வாயுடன் இணைவதால் ஆசியா–ஐரோப்பா இடையிலான கடல்வழி வர்த்தகத்திற்கு மிக முக்கியமான மையமாக உள்ளது. அத்தகைய நீரிணை மீது ஹீவுத்திக் கிளர்;சிக் குழுவின் கட்டுப்பாட்டை முதன்மைப்படுத்தி இருப்பதோடு அதன் வழி செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தியது. 11.08.2026 அன்று எகிப்துக்குச் சொந்தமான Tihamah என்ற எண்ணைக் கப்பல் மீது ஹீவுத்திகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக யேமன் அதிகாரிகள் தெரிவித்தனர். இது மேற்காசியா தொடர்விலான இரண்டாவது மிகப் பிரதானமான வர்த்தக தொடர்பை ஈரான் மறைமுகமாக ஆதிக்கம் செய்வதாகவே தெரிகிறது.

மூன்றாவது பாப்-எல்-மண்டெப் நீரிணை சீனாவின் செல்வாக்கு மிக்க ஜிபூட்டி தீவை அண்டிய பகுதியில் அமைந்திருக்கிறது. சீனவின் கடல் படை ஜிபூட்டி தீவில் காணப்படுவது ஈரானுக்கு இன்னோர் வாய்ப்பானதாக கணிக்கப்படுகிறது. இந்த போரில் மேற்கு ஆசியா உடனான வர்த்தக போக்குவரத்து மூன்றாவது முக்கியமான மையமாக ஏடன் வளைகுடா காணப்படுகிறது. ஏடன் வளைகுடாவுக்கு சீனா தனது 49 வது கடற்படைப்பிரிவை 2026 ஆகஸ்ட் நடுப்பகுதியில் (destroyer Kunming, the frigate Yueyang, and the supply ship Luomahu ) நிறுத்தியுள்ளது. இது மேற்குலக நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆதரவு பெற்ற வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தொடர்பை இழக்கின்ற ஒரு நிலையை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது. இவற்றை மையப்படுத்திய ஈரானும் ஈரானின் ஆதரவு சக்திகளும் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாரிய பொருளாதார நெருக்கடியையும் சக்திவள நெருக்கடியையும் உலகத்திற்கு ஏற்படுத்த கூடியதாக உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல், லெபனான் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருதல், காசாவில் அமைதியைக் கொண்டுவருதல் மற்றும் கடல்வழி முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுக்கு அமெரிக்காவை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான ஈரானின் மிக முக்கியமான பேரம்பேசும் ஆயுதம் ஹார்மூஸ் உட்பட்ட நீரிணைகளாக உள்ளன. இதனால் அமெரிக்கா தோல்வியை ஒப்புக்கொண்டு இப்பகுதியை விட்டு வெளியேறும் என்றும் ஈரான் நம்புகிறது.

நான்காவது மேற்கு ஆசியா போரில் ஈரான் அமெரிக்காவுக்கு எதிராக நிகழ்த்தும் பொருளாதாரப் போர் என்று ஈரானிய புலமையாளர்கள் விவாதித்து வருகின்றனர். அமெரிக்காவை பொருளாதார ரீதியாக முடக்குவதன் மூலம் அதன் வல்லரசு வலுவை பலவீனப்படுத்த முடியும் என்ற எண்ணத்தோடு ஈரான் செயல்படுவது தெரிகிறது. அமெரிக்கா எதிர்நோக்கி இருக்கும் போர் பொருளாதாரப் போராகும். ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் மூலம் முடக்க எடுத்த முயற்சிகள் தற்போது அமெரிக்காவையே நெருக்கடிக்குள் தள்ளியள்ளது. இதற்கு பின்னால் இஸ்ரேலின் சதிக்கோட்பாடுகள் காரணமாகவே தெரிகிறது. சதிக் கோட்பாடுகளின் அடிப்படையில் இஸ்ரேல்-அமெரிக்க உறவு விரிசல் அடைகின்ற ஒரு பக்கம் அமைய மறுபக்கம் அமெரிக்கா உட்பட உலகளாவிய பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் கொண்டு செல்லப்படுவதும் அமெரிக்க வல்லரசு ஆதிக்கம் முடிபுக்கு வருவதற்கான நிலையை தோற்றுவித்துள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி நீடிப்பதும் இஸ்ரேல்-அமெரிக்க மீதான உலக நாடுகளின் அணுகுமுறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கான அடிப்படையாக தெரிகின்றது. ஈரானைப் பொறுத்தவரையில் அமெரிக்காவோடு பேரம் பேசலை அதிகரிக்கும் விதத்தில் ஹார்மூஸ்ஸை நேரடியாக முன்னுறுத்திக் கொண்டு ஈரானிய போர்ப் பொருளாதார முடக்கம் நிகழ்கிறது. அமெரிக்கா ஈரான் மீது விதித்த பொருளாதார தடைகளுக்கு மாற்றாக அமெரிக்காவின் பொருளாதார இருப்பு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு இருக்கின்றது என்பதே இதன் புரிதலாகும்.

எனவே இராணுவ ரீதியான போரில் அமெரிக்கா மட்டுமல்ல இஸ்ரேலும் சதி கோட்பாடுகளால் நிலைகுலைந்து வருகின்றன. அமெரிக்கா போரிலிருந்து வெளிவர முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது பொருளாதார ரீதியில் பாரிய இழப்புகளை போரில் ஈடுபடும் நாடுகளுக்கு மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவுகள் மேற்காசிய அரசியலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு சூழலை மாற்றி இருக்கின்றது. அது மேற்காசியாவுடன் மட்டுப்பட்டதாக அமையாது உலகளாவியதானதாக உள்ளது என்பதே மதிப்பீடாக உள்ளது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி:தினகரன்)