நாடுகளுக்கு இடையிலான போர் புவிசார் அரசியல் உத்திகளை அதிகம் கொண்டிருப்பதோடு உலகம் ஒழுங்கு மாற்றத்திற்கான அடிப்படைகளை புவிசார் அரசியல் கோட்பாடு இன்றும் தோற்றுவிக்கும் திறனில் உள்ளது. ஈரான் எதிர் அமெரிக்க போரும் உக்ரையின் எதிர் ரஸ்சியப் போரும் சமதளத்தில் இரு ஏகாதிபத்தியங்கள் மீதான போராகவே உள்ளது. ஏகாதிபத்தியங்களுக்கிடையில் நிலவிய சமரசம் முடிபுக்கு வரும் போது உலகப் போர்கள் எழுச்சியடைவதாக விளாடிமிர் லெனின் குறிப்பிட்டுள்ளார். அதற்குள்ளேயே அமெரிக்க-ரஸ்சிய ஏகாதிபத்தியங்கள் தவிர்க்க முடியாது போரை எதிர்கொள்கின்றன. அமெரிக்கா ஈரானிய போரின் ஈரானின் புவிசார் அரசியல் மையம் கொண்டிருக்கின்றது. இப்போர் முடிபுக்குக் கொண்டுவர முடியாது இஸ்ரேலிய தரப்பின் நலன்களால் இழுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் இப்போர் உலகளாவிய அழிவுகளின் விளிம்பில் நின்று கொண்டு உலக ஒழுங்கு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தயாராகிறது. இக்கட்டுரையும் ரஸ்சிய-உக்கரையின் போரின் பிந்திய போக்கினை அது ஏற்படுத்திய விளைவுகளையும் தேடுவதாக அமையவுள்ளது.
சமகாலத்தில் உக்ரையின் ரஸ்சிய ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளன. இரு நாடுகளும் பாரிய அழிப்புகளை எதிர்கொண்டுள்ளன. உக்ரையினின் நிலப்பரப்பு மக்கள் குடிப்பெயர்வு மற்றும் மக்கள் கொல்லப்படுவது போன்ற அம்சங்கள் பாரிய அளவில் நிகழ்ந்து வருகிறது. பதிலாக ரஸ்சியாவின் தலைநகரத்தை நோக்கி உக்ரையினின் தாக்குதல்கள் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தாதுவிட்டாலும் ரஸ்சியாவின் கடல்படை கப்பல்கள் வர்த்தக நடவடிக்கைகள் போர்க் கப்பல்கள் என்பனவற்றை அழிப்பதன் மூலம் ரஸ்சியாவின் பாரிய பொருளாதார வாய்ப்புகளை சரிவடையச் செய்யும் உத்தியோடு உக்ரையின் தரப்பு செயல்படுகிறது. இதனை ஆழமாக புரிந்து கொள்வது அவசியமானது.
முதலாவது உக்ரையின் மீதான ரஸ்யாவின் தாக்குதல்களிலிருந்து தப்பிக் கொள்வதற்கு உக்ரையின் மக்கள் பாரிய இடப்பெயர்வை எதிர்கொண்டுள்ளனர். ஏறக்குறைய உக்ரையினின் சனத்தொகையில் கணிசமான பங்கினர் நாட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இது கொல்லப்பட்டவர்களை விட பல மடங்கு அதிகம் என்று கணிப்பிடப்படுகிறது. தாய்; நாட்டில் வளங்கள் அழிக்கப்படுவதும் உட்கட்டமைப்புகள் நெருக்கடிக்குள்ளாவதும் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய முடியாத தாக்குதல்களும் உக்ரையின் மக்களை வெளியேற்றத்தை தோற்றுவித்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் போரின் காரணமாக உலகளவில் கிட்டத்தட்ட 10 மில்லியன் உக்ரையினியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில், ஏறத்தாழ 3.7 முதல் 3.9 மில்லியன் பேர் உக்ரைனுக்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர். சர்வதேச எல்லைகளைக் கடந்து ஏறத்தாழ 5.9 மில்லியன் அகதிகள் வெளியேற திட்டமிட்டுள்ளனர். வெளியேறியவர்கள் மேற்கு ஐரோப்பாவிலுள்ள நாடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் உக்ரையின் இராணுவ ரீதியில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளது. மக்களின் வெளியேற்றம் போரின் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி வருகிறது இதனால் உள்நாட்டு கட்டமைப்புகளை மீளமைக்க முடியாது ஐரோப்பிய நாடுகளின் ஆயுதங்களை அடிப்படையாகக் கொண்டு போரை உக்ரையின்; மேற்கொண்டு வருகிறது.
இரண்டாவது உக்ரையின் போர் நீடிப்பு ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு எதிராக தீவிர எதிர்ப்பு போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றது. ஏற்கனவே உக்ரையின் பாதுகாப்பு அமைச்சர் மைக்லோ பெரடோவை(Mykhailo Fedorov) பதவி நீக்கியதில் தொடங்கிய போராட்டம் ஆட்சி மாற்றத்திற்கான அறைகூவலாக மாற்றிவருகிறது. போரை நீடிப்பது ஜெலன்ஸ்கி தமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கான உத்தி என்றே உக்ரேனிய மக்கள் கருதுகின்றனர். பெரும்பாலான உக்ரையினிய மக்கள் போரற்ற சமாதானமான சூழலை எதிர்கொள்ள விரும்புகின்றனர். அத்தகைய சூழலுக்கான தடையாக ஜெலன்ஸ்கியின்; மேற்குலக சார்பு ஆட்சி காரணம் என்பதையும் புரிந்து கொள்ளுகின்றனர். இதனால் உள்நாட்டில் பாரிய குழப்பங்களும் நெருக்கடிகளும் ஆட்சிக்கு எதிராக ஏற்பட்டிருக்கின்றன. இதனை கட்டுப்படுத்துகின்ற விதத்தில் போரை வெற்றி கொள்ளச் செய்வதில் ஜெலன்ஸ்கி முனைப்பு காட்டி வருகின்றார். ஆனால் அந்த போரை வெல்வது கடினமானது என இராணுவ ஆய்வாரள்கள் கணிப்பீடு செய்கின்றனர். .போரின் மூலம் ரஸ்சியாவை வெல்வது கடினமானது என்ற விவாதம் காணப்படுகிறது. வரலாற்றில் ரஸ்சியாவின் அமைவிடம் அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால் தற்போதைய ஆட்சியாளர் விளாடிமிர் புட்டினுக்கு பின்னர் ரஸ்சியாவின் நிலை பற்றி மேற்குலக ஊடகங்கள் விவாதிக்க தொடங்கியுள்ளன. ஆனாலும் புட்டின் தனக்கு பின்னரான ஆட்சியாளர்களை ஏற்கனவே அடையாளம் காட்டுவதில் கவனம் கொண்டுள்ளார். இதனால் உக்ரைன்-ரஸ்சியப் போர் ஐரோப்பாவுக்கு நீடித்த நோயாக மாறுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. போரை ஐரோப்பியர்களும் அது சார்ந்த ஏகாதிபத்திய சக்திகளுமே வழி நடத்துகின்றனர். இதனால் இப்போர் ஐரோப்பாவுக்கும் அதன் பொருளாதாரத்துக்கும், இராணுவ தொழில்நுட்பத்துக்கும் பாரிய சவாலானதென்றாக மாறியுள்ளது. ஐரோப்பிய யூனியன் நேட்டோ அமைப்புகளை நோக்கி போர் நகர்வதன் விளைவுகளை எதிர்கொள்வது என்பது கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளை எதிர் கொள்வதற்கு ஒப்பானதாக உள்ளது. எனவே இது ஒரு ஆபத்தான போராகவே தெரிகின்றது.
மூன்றாவது ரஸ்சியாவைப் பொறுத்தவரை அதன் உள்நாட்டு பொருளாதாரம் பலமானதாக காணப்படுகிறது. அதன் நட்பு நாடுகள் வலுவான பொருளாதர ஒத்துழைப்பை வழங்குகின்றன. இந்தியாவுடனும் சீனாவுடனும் கொண்டிருக்கின்ற வர்த்தக ரீதியான நெருக்கம் வடகொரியாவுடன் கொண்டிருக்கும் இராணுவ ரீதியான உறவு அதனை பாதுகாத்து வருகிறது. இதனால் ரஸ்சியாவை அதன் உள்நாட்டு பொருளாதார கட்டமைப்பையும் பிராந்திய மட்டத்திலான பொருளாதார ஒத்துழைப்புகளையும் வெற்றி கொள்வது நெருக்கடியாக உள்ளது. ஈரான் அமெரிக்கா போர் ரஸ்சியாவின் எண்ணை வர்த்தகத்தை பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கு எதிரான தடைகளை மேற்குலகம் முதன்மைப்படுத்திய போதும் முழுமையான சாத்தியப்பாட்டை அடையவில்லை என்றே தெரிகின்றது. ஆனாலும் மொஸ்கோ மீதான உக்ரையினுடைய தாக்குதல்கள் புட்டின் மீதான விமர்சனங்களை அதிகப்படுத்தி இருக்கிறது. மறுபக்கத்தில் உள்நாட்டில் எழுச்சி பெறும் எதிர்ப்புகளுக்கு பின்னால் மேற்கைரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்புகளும் காரணம் எனக்கருதுகிறன்ற நிலை ரஸ்சிய மக்களிடம் காணப்படுகிறது. இதவே எழுச்சி பெற்றுவரும் தாக்குதல்கள் சாத்தியமற்றதாக்குகின்ற விதத்தில் இராணுவ அடக்குமுறைகளை ரஸ்சியா பின்பற்றி வருவதற்கு காரணமாகியுள்ளது. போரற்ற சமாதானத்துக்கான எந்த முனைப்பையும் தற்போதைய ஆட்சியில் உள்ள புட்டின் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக மேற்குலக ஊடகங்கள் விவாதிக்கின்றன. மேற்குலக ஊடகங்கள் அனைத்தும் மேற்குலகின் நலன்களை மட்டுமே கொண்டிருப்பதுடன் ஊடக மரபையும் அதன் தர்மத்தையும் நிராகரிக்கும் மனோநிலையோடு மேற்குலக ஊடக பரப்புரை அமைந்திருக்கின்றது. ரஸ்சியா மீது திட்டமிட்டு போரை தொடர்ச்சியாக நிகழ்த்தும் மேற்கைரோப்பா ஈரான்-அமெரிக்க போரை நியாயப்படுத்தவோ நிராகரிக்கவோ முடியாமல் செயல்படுகிறது. இத்தாலிய தவிர ஏனைய நாடுகள் ஈரான் மீதான தாக்குதலை மௌனம் கடந்து செல்வதன் மூலம் அங்கீகரிப்பதாகவே தெரிகிறது. இதனால் ஏற்பட்டிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடிகள் சார்ந்த சூழலை கவனம் கொள்ளாது போரை ஊக்குவிப்பதில் கவனம் கொள்வதாகவே தெரிகிறது. ஈரான் மீதான விமர்சனங்களை முன்வைக்கும் அதே நேரம் அமெரிக்கா மீதான விமர்சனங்களை மட்டுப்படுத்திய உச்சரிக்க முயற்சிக்கின்றனர்.
நான்காவது ரஸ்சிய உக்ரைனின் போரின் பாதிப்புகள் ஈரான்-அமெரிக்கப் போரில் விளைவுகளை தரக்கூடியது. ஈரான் மீதான அமெரிக்கா போர் மறுவளமாக உக்ரைன் ரஸ்சியப் போரின் பாதிப்பதாக நோக்கப்படுகிறது. இரண்டின் பாதிப்புகளும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்துக்கே அதீதமான விளைவுகளைத்தருவதாக தெரிகின்றது. அதன் எதார்த்தம் ஒன்றில் ஒன்று தங்கி இருக்கின்ற சூழலில் இப்போர் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் உக்ரையினுடைய நெருக்கடி மறுபக்கம் அமெரிக்க நெருக்கடி என்று மேற்குலகமே அதிகமான இழப்புகளை சந்தித்து வருகிறது. ஈரான் ரஸ்சியாவில் மட்டுமின்றி தனது சுய தொழில்நுட்பத்திலும் சீனாவின் ஆயுத தளபாட மற்றும் தகவல் தொழில்நுட்பத்திலும் தங்கி இருப்பதோடு மேற்குலக நாடுகளையோ அல்லது வேறு ஏதாவது ஒரு நாட்டையோ தங்கியிருக்காத நிலை காணப்படுகிறது. ஆனால் உக்ரையின் முழுமையாக அமெரிக்காவிடமும் மேற்குலக நாடுகளிடமுமே அதிகமாகத் தங்கியுள்ளது.
எனவே ரஸ்சிய உக்ரையின் போரின் அபாயம் அமெரிக்கா ஈரானிய போரின் அபாயமும் மேற்குலகத்தின் ஏகாதிபத்தியங்களுக்கான நெருக்கடியாக தெரிகின்றது. புடினுக்கு பின்னான ரஸ்சியாவை கட்டமைப்பது மேற்குலகம் மீண்டும் தவறான உத்திகளை பிரயோகப்படுத்த முயலுவதாகவே புரிந்து கொள்ளப்பட முடியும். ரஸ்சியாவின் இருப்பென்பது புவிசார் அரசியல் இருப்பாகவே தெரிகிறது. ஏற்கனவே ரஸ்சியாவின் பலத்தை மேற்குலக நாடுகள் பரிசோதித்து தோல்விகண்ட நிலையில் மீளவும் அதனையே பரிசீலிக்க முயலுகின்றனர். போர் மேற்குலகத்தின் அல்லது ஏகாதிபத்தியத்தின் பரிமாணமாக விளங்குவதனால் உலகளாவிய ரீதியான நெருக்கடிக்கான சூழலை உருவாக்கலாம் என்ற அச்சத்தைதந்திருக்கின்றன. இது உலகளாவிய இராணுவ ரீதியான நெருக்கடியையும் ஏற்படுத்தக் கூடியதாக மாற வாய்ப்புள்ளது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினகரன்)
