ஈழத்தமிழரின் அரசியல் செம்மணி அதிகம் முதன்மைப்படுத்தி செயல்பட வேண்டிய காலப்பகுதியாக உள்ளது. செம்மணி சார்ந்து எழுந்துள்ள அச்சுறுத்தலை முடிபுக்குக் கொண்டுவர வேண்டுமாயின் ஜனநாயக முறைப்படியிலான போராட்டங்கள் அவசியமானவை. நம்பிக்கையூட்டும் விதத்தில் அனியாயமாகக் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நியாயமான தீர்வு ஒன்றை வழங்குவதற்கு போராட்டங்கள் தேவையானவையாக உள்ளன. இலங்கை தரப்போ சர்வதேச தரப்போ பிராந்திய சக்தியோ செம்மணிக்கு தீர்வு வழங்க முன்வராத நிலையில் தாயக செயலணியினரும் ஏனைய வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களும் மத அமைப்புக்களும் 18.08.2026 அன்று ஒன்றுசேர்ந்து நீதிக்கான அழைப்பு -2 என்ற போராட்டம் ஒன்றை நிகழ்த்தியிருந்தனர். செம்மணி படுகொலை தொடர்பில் நீதி கோரி போராட முயன்றுள்ளனர். ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைகளை முன்னைய ஆட்சியாளர்களும் தற்போதைய ஆட்சியாளர்களும் கூட்டாகவே மேற்கொண்டுவிட்டு நியாயம் கற்பிக்க முயல்கின்றனர். அத்தகைய துயரத்தை போராட்டமாக மாற்றி அதன் வலியில் இருந்து ஈழத்தமிழருக்கான அரசியலை சாத்தியப்படுத்த முடியாத அரசியல்வாதிகளின் முன் மேற்படி சிவில் அமைப்புகள் காத்திரமான ஒரு பங்கை ஆற்றியிருக்கின்றனர்.
வடக்கு கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களின் சிவில் அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டஇப் போராட்டம் சிங்கள சகோதரர்களை ஒன்றிணைந்திருந்தமை முக்கியமான விடயமாக அமைந்திருந்தது. குறிப்பாக இப் போராட்டத்தில் பங்கெடுத்த சிங்கள சகோதரர்கள்; உரையாற்றுகின்ற போதும் அவர்கள் தெரிவித்த விடயங்கள் ஈழத்தமிழருடைய அரசியலை பற்றிய எண்ணத்தை தெளிவாகவே புரிந்து கொள்ளுகின்ற மனோநிலையை வெளிப்படுத்தியிருந்தது. அது மட்டுமின்றி ஈழத்தமிழர் மீதான படுகொலை அனைத்தையும் இனப்படுகொலை என வர்ணித்த அருட்தந்தையர் ஜீவந்த பீரிஸ் கலந்து கொண்டமை தனித்துவமான ஓரம்சமாக காணப்பட்டது. சிங்கள் சகோதரர்களது பங்களிப்பு ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகவும் நோக்கப்படுகிறது. இத்தகைய போராட்டங்களே ஈழத்தமிழரின் அரசியல் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும். எதிர்காலத்திலும் சிங்கள சகோதரர்களின் நட்புச் சக்திகளை ஒன்றிணைத்து தொடர்ச்சியான போராட்டங்கள் அவசியம் என்பதை உணர்த்துகிறது. ஆட்சியாளர்கள் தமது நலன்களுக்கு உட்பட்ட விதத்தில் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதும் படுகொலைக்கான நியாயத்தை கற்பிப்பதும் நீதியற்ற செய்முறை ஒன்றை காட்சிப்படுத்துகின்றது. இச்சூழல் ஈழத்தமிழர் மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது. அவற்றை அமைதியாகவும் மௌனமாகவும் கடந்து செல்ல முயல்வது படுகொலை செய்யப்பட்ட மக்களின் துயரத்தை மட்டுமல்ல எஞ்சியிருக்கும் ஈழத்தமிழரின் துயரத்தையும் சேர்த்ததாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டியுள்ளது. ஈழத் தமிழர்கள் அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி மீண்டும் ஜனநாயக முறைப்படி தமது போராட்டங்களை முன்னெடுக்கவும் அவற்றை புலமைத்தளத்தில் கையாளவும் முன் வருவது ஆரோக்கியமான அரசியல் இருப்பை நோக்கி செயல்பட வழி வகுக்கும். ஈழத்தமிழ் அரசியல் வாதிகளின் பலவீனமான அணுகுமுறைகளாலும் சுயநலம் மிக்க கட்சி சார் அரசியலினாலும் போராட்டங்களை இல்லாமல் செய்துள்ளனர். மாறாக தமது நலனுக்கு உட்பட்ட அரசியலை சிறீலங்கா சுதந்திரக் கட்சி போன்றோ பொதுஜன பெரமுன போன்றோ ஜே.வி.பி. போன்றோ தமிழரசியல் கட்சிகளும் வாக்குகளை வேட்டையாடுபவர்களாக மட்டுமே காணப்படுவார்கள். மக்கள் முன் வாக்குகளை பெறுவதற்கு குவிகின்றவர்களாக தமிழரசியல் கட்சிகள் செயல்படுகின்றனர். மக்களோடு சேர்ந்து போராட வேண்டிய மக்களின் தேவைகளை அவர்களின் துயரங்களை அவர்களோடு இணைந்து பங்கெடுக்க வேண்டிய பொறுப்புடைய அரசியல் கட்சிகள் செம்மணி விவகாரத்தை கண்டு கொள்ளாதவர்களாக மாறி உள்ளமை அவர்களது அரசியலை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
செம்மணிக்காக முன்னெடுக்கப்பட்ட நான்கு நாள் போராட்ட செய்முறை ஆரோக்கியமான வடிவத்தைதந்துள்ளது. பெரிய அளவில் மக்கள் எழுச்சி பெறாத போதும் கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவரும் இன சகோதரத்துவத்தோடும் நம்பிக்கை ஊட்டும் விதத்தில் செயல்பட்டமை ஈழத்தமிழர் மீதான அழுத்தங்களின் விடுபடுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதோ போராட்ட செய்முறைகள் நிகழ்த்தப்படுவது ஈழத்து தமிழரின் அரசியல் உரிமைக்கானதாகும். போராட்டத்தை மேற்கொண்டவர்கள் நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் (ருNர்சுஊ) சமர்ப்பிப்பதற்காக ஐ.நா. பிரதிநிதிகளிடம் ஒரு கோரிக்கை மனுவை கையளித்தனர்.
ஆனால் செம்மணி நோக்கிய போராட்ட தரப்பினர் வெளியிட்ட அறிக்கையில் உள்ளடக்கம் செம்மணியைக் கடந்ததாக அமைந்திருந்தது என்ற விமர்சனம் தவிர்க்க முடியாததாகவே அமைந்திருந்தது. செம்மணியை முன்னிறுத்தி நடத்திய போராட்டத்தின் முழுமையும் செம்மணி சார்ந்ததாக அமைந்திருத்தல் வேண்டும். அதுவே ஆரோக்கியமானதாக அமைந்திருக்கும். ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்ற சூழலில் போராட்ட வழிமுறையும் போராட்டத்திற்கு இடப்படும் கோசங்களும் தனித்துவமானவையாக அமைதல் வேண்டும். அவை ஒவ்வொன்றும் குறித்த இலக்கை அடையக் கூடியவையாக இருத்தல் வேண்டும். செம்மணிக்கான நீதியே ஈழத்தமிழர் முன்னுள்ள அடிப்படை போராட்ட வியூகமாகும். அதனை நோக்கி மக்களின் திரட்சியும் ஒன்றிணைவும் அவசியமானதாகும். இவை ஒன்றும் போராட்டத்தில் குறைபாடுகள் என்று கருதுவதை விட எதிர்காலத்தில் அதனை சரி செய்வதற்கான வழிமுறைகளை தேடுவது ஆரோக்கியமானது. எல்லாவற்றையும் கடந்து இவ்வகை போராட்டம் ஒன்றை முன்னெடுத்த தரப்புக்கள் வரலாற்றில் முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள். சர்வதேசமோ தென்னிலங்கையோ பிராந்தி அரசோ ஈழத்தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் தராது என்பது தெளிவான புரிதலாக உள்ளது. அதற்காக தீர்வு ஒருபோதும் சாத்தியப்படாது என்பது அல்ல. மாறாக தீர்வுகளை நோக்கி ஈழத் தமிழர்கள் திரட்சி பெற வேண்டும். ஐக்கியம் அடைய வேண்டும். ஜனநாயக வழிமுறை ஊடாக போராட வேண்டும். அதுவே ஈழத்தமிழருக்கான அரசியல் இருப்பை ஏற்படும்.
எனவே செம்மணியை முன்னிறுத்திய போராட்டம் ஈழத்தமிழர் அரசியலை மாற்றம் செய்யக் கூடியது. உலக வரலாற்றில் வியட்நாம் போரின் போது அமெரிக்கப் படையினரால் ஆயுதமற்ற அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகவும் மோசமான படுகொலையாக 1968 ஆம் ஆண்டு மார்ச் 16 திகதி நடந்த மை லாய் படுகொலை மறக்க முடியாத வடுவாகும். அமெரிக்க இராணுவ வீரர்கள் சோன் மை கிராமத்தில் 347 முதல் 504 வரையிலான வியட்நாமிய கிராமவாசிகளைக் கொன்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள். இந்தப் படுகொலையே இறுதியில் அமெரிக்க-வியட்நாம் போரின் துயரமாகவும் அமெரிக்க வரலாற்றின் மறைக்க முடியாத விடயமாகவும் அமைந்தது. உலக வரலாற்றுப் பாடங்களிலிருந்து செம்மணியை போராட்ட களமாக மாற்றுவதே ஈழத்தமிழரது அரசியலின் அடிப்படையாகும்.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:யாழ் .தினக்குரல்)
