September 27, 2026
அரசியல் கட்டுரைகள்

ஈரானிய ஜனாதிபதியின் ஐ.நா. உரை வெளிப்படுத்தும் இராஜதந்திர முக்கியத்துவம்?

சமகால உலக அரசியலில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர் முக்கியமான ஒன்றாக மாறி இருக்கின்றது. ஐ.நா.வின் பொதுச்சபையில் நாடுகளின் தலைவர்களின் உரைகள் அதிக முக்கியத்துவத்தை வலிமைப்படுத்தியுள்ளன. அமெரிக்க தலைநகரான நியோக்கில் நிகழும் பொதுச் சபைக்கான அரங்கில் ஈரான்-அமெரிக்க விவகாரமே கருப்பொருளாக அமைந்தது. அத்தகைய உரைகளில் அமெரிக்க ஜனாதிபதியும் ஈரானிய ஜனாதிபதியின் உரைகள் மட்டுமின்றி இஸ்ரேல் பிரதமரின் உரையின் போது உலகத் தலைவர்களின் நடத்தை அதிக கவனத்தைப் பெற்றது. பொதுச் சபையின் கூட்டத் தொடர் மேற்காசியப் போரை மையப்படுத்தியே அமைந்திருந்தது. இக் கட்டுரையயும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெ~ஸ்கியான் (Masoud Pezeshkian) உரையின் (23.09.2026) முக்கியத்துவத்தையும் அதன் விளைவுகளையும் தேடுவதாக உள்ளது.

முதலாவது ஈரரனிய ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதியின் உரைக்கு பதிலளிக்கும் முகமாக சில கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். ஈரானை பயங்கரவாத நாடு என பட்டியலிட அமெரிக்கா எடுத்த முயற்சியை ஈரானிய ஜனாதிபதி முறையடித்ததோடு அமெரிக்க-இஸ்ரேலின் பயங்கரவாதத்தினால் ஈரான் இழந்த தலைவர்களையும் குழந்தைகளையும் சிறுவர்களையும் பெண்களையும் முதியவர்களையும் காட்சிப்படுத்தி இராஜதந்திர செய்முறை ஒன்றை வெளிப்படுத்திருந்தார். அவர் ஐ.நா.சபையில் உரையாற்றும் போது நாங்கள் பலவீனத்தின் காரணமாக அல்ல மாறாக எங்களது சொந்த ஆற்றல் மற்றும் உறுதியின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையிலும் இந்தப் பிராந்தியத்தில் யாரும் தனியாகப் பாதுகாப்பைப் பெற முடியாது என்ற ஆழமான புரிதலின் அடிப்படையிலும் ஒத்துழைத்து இணைந்து செயல்பட உலகை அழைக்கிறோம் என்றார். முக்கியக் கடல்வழியைப் பயன்படுத்தி எங்கள் நாட்டின் மீதான போரை விரிவுபடுத்த அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளை ஈரான் எதிர்க்கும் என்று கூறினார்.

இரண்டாவது ஈரான் ஜனாதிபதியின் உரையில் ஈரான் ஒரு போதும் எந்த சக்தியிடமும் மண்டியிடாது என்றும் இறைமை பொருந்திய நாடு என்பதை உறுதிப்படுத்துவதாகவும் வெளிப்படுத்தியிருந்தார். அவர் மேலும் குறிப்பிடும் போது பொதுமக்கள் மற்றும் முக்கியமான உட்கட்டமைப்புகள் தாக்கப்பட்டதாகவும் பாடசாலைகள் மருத்துவமனைகள் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடுகளுக்கிடையிலான உறவுகள் சமத்துவம், நீதி மற்றும் ஐ.நா. சாசனத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என வலியுறுத்தினார். .ஈரான் போரை எதிர்கொண்ட விதமும் ஈரானை தக்க வைத்திருக்கும் மாதிரி அத்தகைய இறையாண்மையின் வலிமையை அடையாளப்படுத்துவதோடு அமெரிக்க மண்ணில் நின்று கொண்டு அமெரிக்க ஆட்சியாளர்கள் மற்றும் இஸ்ரேலியர் ஆட்சியாளர்களதும் மோசமான ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கண்டித்து இருந்தமை கவனத்திற்குரியது.

மூன்றாவது ஈரானிய ஜனாதிபதி மிகப் பிரதானமாக ஈரானிய மக்களின் நெருக்கடியையும் பொருளாதார ரீதியான சவால்களையும் அடையாளப்படுத்தினார். எங்கள் அப்பாவி மக்கள் மீதும் எங்கள் நாட்டின் மீதும் திணிக்கப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்களுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் இலக்காகியுள்ளனர். நாங்கள் மிகுந்த பலத்துடன் எங்களைத் தற்காத்துக் கொண்டோம். அமெரிக்காவும் இஸ்ரேலும் எங்களைத் தாக்கின. ஈரானியர்கள் பயங்கரவாதிகள் அல்ல. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றார். மேலும் குறிப்பிடும் போது அணு ஆயுதம் பற்றிய ஈரானின் நிலைப்பாட்டை மீண்டும் தெளிவாக உறுதிப்படுத்தியிருந்தார். ஈரான் அணு ஆயுத நாடாக அல்லது அணுவாயுதத்தை உருவாக்கும் நாடாக ஒரு போதும் விரும்பவில்லை என்பதையும் ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சி அமைதியான நோக்கங்களுக்கானது எனவும் அவர் வலியுறுத்தினார். வெளிப்புற இராணுவ அழுத்தத்தின் கீழ் தனது அணுசக்தித் திட்டத்தில் கட்டுப்பாடுகளை ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டையும் தெரிவித்தார். அது மட்டுமல்ல ஈரானின் போர் என்பது தற்காப்புக்கான போரே அன்றி இன்னொரு நாட்டை ஆக்கிரமிப்பதற்கான போர் அல்ல என்பதை மிகத்தெளிவாகவே முதன்மைப்படுத்தி இருந்தார்.

நான்காவது ஈரான் காஸா மற்றும் பாலஸ்தீனியர்கள் பொறுத்தும் வெளிப்படுத்திய தகவல்கள் மிக முக்கியமானவகையாக கண்டுகொள்ள முடிந்தது. ஒட்டுமொத்தமான அழிவுகளையும் காஸா மீது நிகழ்த்திவிட்டு ஒரு பெரும் இனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு அதனை பயங்கரவாதம் என்று முடித்துக்கொள்வதில் உள்ள நியாயப்பாட்டை கேள்விக்குற்படுத்தியதோடு பாலஸ்தீனத்திற்கான விடுதலையின் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார். காஸாவில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையானது சர்வதேச சமூகம் ஈரானிடம் கடைப்பிடிக்கும் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறினார். பிராந்தியப் பாதுகாப்பிற்கான தீர்வு, அமெரிக்கா போன்ற வெளியாட்களுடன் அல்லாமல் பிராந்தியத்திற்குள்ளேயே உடன்பாடு காண்பதில் தான் உள்ளது என்று அவர் மீண்டும் மீண்டும் வாதிட்டார். ஈரான் தனது அண்டை நாடுகளைப் பாதுகாப்புப் போட்டியாளர்களாகக் கருதவில்லை, மாறாகப் பாதுகாப்பில் பங்காளிகளாகவே கருதுகிறது.. இன்றைய உலகில் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாதவர்கள் மிதிக்கப்படுவார்கள், என்றும் அவர் மேலும் கூறினார்.

ஐந்தாவது ஈரான் தனது புவிசார் அரசியலின் ஒரு அங்கமாக அடையாளப்படுத்தும் ஹார்மூஸ் நீரிணை தொடர்பில் எழுந்திருக்கும் சர்ச்சைகளையும் குழப்பங்களுக்கு பொதுச் சபையில் தெளிவான விளக்கத்தை முன் வைத்திருக்கின்றது. ஹார்மூஸ் என்பது ஈரானின் புவிபரப்பு என்பதையும் புவிசார் அரசியலில் அங்கம் என்பதையும் அடையாளப்படுத்தியதோடு அதன் முக்கியத்துவத்தை பிற நாடுகளுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்பதையும் குறிப்பிட்டிருந்தார் பெ~ஸ்கியான். நீர்வழியைப் பயன்படுத்தி எங்கள் மீது தங்கள் ஆக்கிரமிப்புகளைத் திணித்து எங்களுக்குப் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தி எங்கள் சொந்த நீர்வழிகளுக்கான போக்குவரத்தை தடுக்கவும் முடியாது என்று அவர் கூறினார். மேற்காசிய போர் முடிவைக் கொண்டு வருவதற்கான உரையாடலுக்கும் இராஜதந்திர நகர்வுகளுக்கும் ஈரான் எப்போதும் தயாராக இருப்பதாகவும் வெளிப்படுத்தியிருந்தார்.

எனவே ஈரான் பொறுத்து உலகம் பார்த்த பார்வை என்பதை பொதுச்சபையில் ஈரானிய ஜனாதிபதியின் உரை மாற்றியுள்ளது. அது ஒரு இராஜதந்திர ரீதியிலான முக்கியத்துவம் பெற்றதாக தெரிகிறது. ஈரானிய தூதுக்குழுவின் அணுகுமுறையை தனித்துவமானதாக நோக்கப்படுகிற போது உலக அரங்கில் அமெரிக்கா நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. உலக நாடுகளுக்கு ஈரானிய எழுச்சி என்பது அல்லது நிலைத்திருப்பு என்பது சிறந்த அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அமெரிக்க அச்சுறுத்தலுக்குள்ளாகும் நாடுகள் ஈரானின் அனுபவத்தை பகிர்ந்து கொள்வது அவசியமானது. ஒரு பக்கம் இராணுவ வலிமை இன்னொரு பக்கம் இராஜதந்திர வல்லமையும் ஈரானிய இருப்பை உத்தரவாதப்படுத்தியது. ஈரான் ஒரு வலுவான பதிலை அமெரிக்கா ஆட்சிக்கும் இஸ்ரேலுக்கும் கொடுத்திருக்கின்றது. இது பற்றி துனிசியாவிற்கான முன்னாள் அமெரிக்க இராஜதந்திரி மற்றும் தூதரான ஜோயி ஹ_ட் (Joey R.Hood)ஈரானிய ஜனாதிபதியின் உரையானது ஈரானின் வழக்கமான அதிகாரப்பூர்வ சொல்லாடல்களைப் பெரிதும் சார்ந்திருந்ததாகவும், சமரசம் தேடுவதற்கான ஒரு நழுவிய வாய்ப்பைக் குறிப்பதாக உள்ளதெனக் கூறினார்.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

( நன்றி:தினகரன்)