இலங்கைத் தீவின் அரசியல் ஆட்சியாளர்களின் நலன்களுக்கு உட்பட்ட அரசியல் சட்டங்களின் வரைபுகளையும் திருத்தங்களையும் கொண்டதாக விளங்குகிறது. ஆனால் அரசியல் கோட்பாடுகளும் விதிகளும் மக்களுக்கான ஆட்சி என்ற ஜனநாயகத்தை மையப்படுத்தி போதிக்கின்றது. மக்களுடைய நலனுக்காகவே அரசாங்கம் எற்றும் மக்களை பாதுகாப்பதும் பேணுவதும் பராமரிப்பதும் அரசாங்கத்தின் பணி என்றும் ஜனநாயகம் மேலும் விவரிக்கின்றது. இலங்கை தீவில் ஆட்சியாளர்களின் விருப்புக்களுக்கு உட்பட்டு சட்டங்கள் தோற்றுவதும் பின்னர் திருத்தப்படுவதும் வழமையான சட்டவாட்சியாக உள்ளது. அது பொதுமக்களை பாதிக்கின்றது என்று முன்மொழியப்படும் எத்தகைய உரையாடலையும் எந்த ஆட்சியாளர்களும் ஏற்றுக் கொள்வதில்லை என்பதை அரசை பாதுகாக்கும் பயங்கரவாத தடைச் சட்ட மூலம்(Protection of the State from Terrorism Bill-PSTB ) உணர்துகிறது. 2026 செப்டம்பர் 22ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தகமானியின் பிரகாரம் பாராளுமன்றத்தில் (அக்டோபர்-06 முதல்) விவாதிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு முன்மொழியட்டுள்ள புதிய சட்ட மூலம் பற்றிய சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் உள்நாட்டில் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சிவில் அமைப்பினர் ஆகியோர் அதன் மீது அதீத விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். அத்தகைய விமர்சனங்களை கடந்து சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பை அதிகம் அரசாங்கம் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. அதனையே தென் இலங்கையின் அரசியல் சார்ந்த செயல்பாட்டாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் வெளிப்படுத்துகின்றனர். 1979 ஆம் ஆண்டு தற்காலிகமாக முன்வைக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் மூலம் 1982 ஆம் ஆண்டு 10ஆம் இலக்க திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் மூன்று ஆண்டுகள் மட்டுமே அமுலில் இருக்க வேண்டும் என்ற காலவரம்பை நீக்கியதன் மூலம் 2026 ஆம் ஆண்டு வரை நிலைத்திருந்தது. அத்தகைய சட்ட மூலத்தின் உள்ளடக்கத்தில் உள்ள குறைபாடுகளை பலவீனங்களை சரி செய்வதற்காக ஜே.வி.பி. அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களால் முன்மொழிக்கப்பட்டு காணப்பட்ட அரசை பாதுகாக்கும் சட்டம் மூலம் மீள அமுலாக்கத்திற்கு கொண்டுவர தயாராகிறது. 1979 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் நிலவிய ஆயுதப் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் சமகாலத்தில் அதிக நெருக்கடிகளை எதிர் கொண்டு இருக்கின்றது என்ற அடிப்படையில் புதிய சட்டத்தை அமுல்படுத்த ஜே.வி.பி. அரசாங்கம் திட்டமிடுகின்றது. குறிப்பாக மரணம், கடுமையான காயம், பணயக்கைதிகளைப் பிடித்தல், அதற்கான உள்கட்டமைப்புகள், இணையவழி குற்றங்கள், சுற்றுச்சூழல் சேதத்தை விளைவிக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கு குற்றங்களாக கண்டறிந்து ஆயுள் தண்டனை அல்லது 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வரை விதிக்கப்படலாம். தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு உதவுதல் அல்லது பயிற்சி அளித்தல் ஆகியவற்றுக்கு 15 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படலாம். தேசிய பாதுகாப்பு உத்தரவாதப்படுத்துதல் பழைய சட்டத்துக்கு பதிலான புதிய கட்டமைப்புகளை உருவாக்குதல், பொலீசார் மட்டுமன்றி ஆயுதப் படையினர், கடலோர காவல்படையினர் ஆகியோருக்கு 1979 ஆம் ஆண்டு கைது செய்வதற்கான அதிகாரத்தை போன்று புதிய சட்டத்தில் பொதுமக்கள் மீது ஆயுதப் படைகளுக்கு சோதனை, கைது மற்றும் காவலில் வைக்கும் அதிகாரங்களை வழங்குகிறது அவ்வாறு 1979 ஆம் ஆண்டு நீண்ட காலத்தில் தடுப்பு காவலுக்கு வழிவகுத்திருந்த அம்சங்கள் மேலும் உறுதிப்படுத்தப்படுவதோடு குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் நீடிப்பதற்கான வாய்ப்புகளை கொடுத்திருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதன் அடிப்படையில் சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International) அதேபோன்று மனித உரிமை கண்காணிப்பாக்கம் ((Human Rights Watch) வெளியிட்ட அறிக்கைகளின் பிரகாரம் பயங்கரவாதம் என்பதற்கான வரையறை ஆபத்து மிக்கதாக இருக்கிறது என்றும் அமைதியான போராட்டங்கள் அரசியல் எதிர்ப்பு செயல்கள் தவறாக பொருள் கொள்ளப்பட வாய்ப்புள்ளது என்றும் பொலீசாருடன் ஆயுதப்படையினரும் கடலோர காவல் படையினரும் கைது செய்வதற்கான அதிகாரத்தை ஒப்படைத்திருக்கின்றது என்றும் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் தடுப்பு காவலில் உத்தரவுகளை கண்காணிக்கும் அமைப்பின் சுயாதீனம் குறித்து கேள்விகளையும் வழக்கு தொடர்வதை நீண்ட காலம் ஒத்திவைக்க அல்லது இடைநிறுத்த அனுமதிக்கப்படும் சில ஏற்பாடுகளையும் இது கொண்டிருப்பதாக அவ்வகை அமைப்புக்கள் குற்றச்சாட்டக்களை முன்வைத்து புதிய சட்டத்தை மீளப் பெறுமாறு கூறியுள்ளன.
சந்தேகநபரை விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை தடுத்து வைத்திருக்க சட்டம் இடமளிக்கிறது. சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சாட்சியமாகப் பயன்படுத்த முடியும், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான ஊடக அறிக்கையிடலுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்பிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரித்துள்ளது. நீதிமன்ற அனுமதியின்றி பொலிஸார் சோதனைகளை மேற்கொள்ளவும், தொலைபேசி அழைப்புப் பதிவுகள், சந்தாதாரர்களின் அடையாளங்கள் மற்றும் சாதனங்களின் இருப்பிடத் தகவல்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் சட்டமூலம் அனுமதிப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஒருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவொன்றுடன் தொடர்புடையவரா என்பதைத் தீர்மானிக்கும் சந்தர்ப்பத்தில் அவரது ஆடை, அடையாளம், கைச் சைகைகள், மொழி, கொடி, தொடர்புகள் மற்றும் அவர் சென்ற இடங்கள் போன்றவற்றையும் கருத்தில் கொள்ள நீதிமன்றங்களுக்கு சட்டமூலம் அனுசரணை வழங்குகிறது. இத்தகைய ஏற்பாடுகள் பாரபட்சமான கண்காணிப்புக்கும், நியாயமான விசாரணைக்கான உரிமை பாதிக்கப்படுவதற்கும் வழிவகுக்க வாய்ப்புள்ளது. உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தரத்துக்கு மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் வழங்கப்படும் ஒப்புதல் வாக்கு மூலங்களைச் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளும் ஏற்பாடு சுயாதீனம் சார்ந்து விமர்சிக்கப்பட்டுள்ளது. சித்திரவதை அல்லது ஏனைய துன்புறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை நிரூபிக்கும் பொறுப்பையும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தக்கூடிய வகையில் சட்டமூலம் அமைந்துள்ளது. பொலிஸாருக்குத் தேவையான தகவல்களை வழங்கத் தவறும் நபர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 20 மில்லியன் அபராதம் விதிக்க சட்டமூலம் சிபார்சு செய்துள்ளது. நீதித்துறை மேற்பார்வையின்றித் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் பதிவுகளைப் பெற்றுக்கொள்ளும் அதிகாரங்கள், ஊடகவியலாளர்களின் தகவல் மூலங்கள், சட்டத்தரணிகளின் தொடர்புகள் மற்றும் சட்டபூர்வமான போராட்டங்களை ஏற்பாடு செய்பவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளது.
அரசாங்கம் முன்மொழிந்துள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மிக மோசமான பல அம்சங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதுடன், அவற்றைப் பரந்த அளவிலான குற்றங்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விரிவுபடுத்துகிறது என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிருதி சிங் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஏன் அரசாங்கம் இத்தகைய சட்டமூலத்தை கொண்டுவர முயலுகிறது என்ற கேள்வி இயல்பானது அதனை தெளிவாக நோக்குவது அவசியமாகும்.
முதலாவது ஜே.வி.பி. அரசாங்கத்தை பொறுத்தவரையில் அது ஒரு நிரந்தரமான ஆட்சியை இலங்கையில் உருவாக்குவதற்கு திட்டமிடுகிறது என்பது அதன் நடைமுறைகளில் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது. பிராந்திய சர்வதேச சக்திகளை திருப்திப்படுத்திக் கொண்டு உள்நாட்டில் பலமான நிரந்தரமான ஆட்சியை ஏற்படுத்துவதற்கு முயலுகின்றது. அதை ஏற்ற வகையிலே அது சட்ட ரீதியான அணுகுமுறைகளை உத்தரவாதப்படுத்த முயலுகின்றது. அடிப்படையில் சட்டமூலம் ஆபத்தானது என்பது ஆட்சியாளர்களுக்கும் பெரும்பாலும் சிங்கள மக்களுக்கும் நன்கு தெரிந்த விடயமாகவே காணப்படுகிறது. அதன் அடிப்படையில் தென்னிலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டமூலமாகவே 1979 ஆண்டு பயங்கரவாததச் சட்டத்தை கருதியது போன்று புதிய சட்டத்தை கருத முடியுமா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. 1979 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு நிலை இன்று இல்லாது விட்டாலும் எதிர்காலத்தில் சாத்தியமாகுமா என்ற சந்தேகம் ஆட்சியாளர்களுக்கு உள்ளது போல் தெரிகிறது. இதனையும் கடந்து இச்சட்டம் மூலம் இலங்கை தீவு முழுவதையும் மாற்றத்துக்கு உள்ளாக்க கூடியது என்ற புரிதலை ஏற்படுத்தி உள்ளது. பொது மக்களும் மனித உரிமை அமைப்புகளும் சட்டவாதிகளும் இச்ச சட்டமூலத்தை நிராகரிக்கின்ற நிலை அதீதமாக காணப்படுகிறது. ஆனால் நடைமுறையில் ஜே.வி.பி. அரசாங்கம் எதனையும் கருத்தில் கொள்ள மறுப்பது போன்றே அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.
இரண்டாவது இலங்கையை சீன மாதிரிக்குட்பட்ட ஆட்சி முறைமை ஒன்றை கொண்டு வருவதற்கு ஏற்கனவே பல உரையாடல்கள் சீன கம்;யூனிஸக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்கும் இடையில் நிகழ்ந்திருப்பதாக விவாதங்களும் உண்டு. மனித உரிமைகளை முற்றாகவே நிராகரித்துவிட்டு அரசின் இறைமைக்குள் உட்பட்ட ஆட்சி முறைமை ஒன்றை மேற்கொள்வதற்கு ஜே.பி.பி. திட்டமிடுவது போன்று விளங்குகிறது. இலங்கைத் தீவின் போக்கினை அவதானிக்கின்ற போது சீனாவின் மாதிரிக்கு உட்பட்டு மதம் மொழி மனித உரிமை சுதந்திரம் தேசியம் என்பன முடிவுக்கு வரும் என்பதற்கான அடிப்படையை தொடக்கும் விதத்தில் இச்சட்டம் மூலத்தின் உள்ளாந்த பிரிவுகள் உறுதிப்படுத்துகின்றன. அதனை சர்வதேச மன்னிப்பு சபையும் சுட்டிக்காட்டி உள்ளது. ஊடக சுதந்திரம் ஊடகவியலாளர்கள் சுதந்திரம் கருத்தியல் சுதந்திரம் கூட்டம் கூடுவதற்கான சுதந்திரம் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் என்ற பல சுதந்திரம் பற்றிய நியதிகள் அனைத்தும் இச்சட்டம் மூலத்தின் பலவீனப்படுத்துவதாகவே தெரிய வருகிறது. இதன் மூலம் இலங்கை தீவில் ஒரு கட்சி ஆட்சி முறையையும் ஒரே வகையான கொள்கையையும் அமுல்படுத்த சட்டம் மூலம் வாய்ப்பை கொடுக்கப் போகின்றதா என்ற சந்தேகம் எழுந்திருகின்றது.
மூன்றாவது பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கும் அதன் வாய்ப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகின்ற நிலையை தடுக்கின்ற விதத்தில் அரசியல் கோரிக்கைகளும் போராட்டங்களும் காணப்படுவதாகவே புதிய அரசாங்கம் கருதுகின்றது. சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்ற நியதிகளை வரையறுக்க முயலும் ஜே.வி.பி. அரசாங்கம் வெளிப்படையாக அதனை அமுல்படுத்துவதற்கு திட்டமிடுகின்றது. எல்லா சந்தர்ப்பங்களிலும் அரசியல் ரீதியான போராட்டங்கள் தனி மனிதனுடைய இறையாண்மை பற்றியதாகவும் அதற்கான வாய்ப்புகள் காணாமல் போவதற்கான பரிந்துரைகள் புதிய அரசியல் யாப்பின் வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் தனி மனிதர்களின் தன்னாதிக்க வெளிப்பாடுகளை கட்டுப்படுத்துவதோடு நீதிமன்றம் பொலீசார் ஆயுதப் பிரிவினர் கடலோர பிரிவினர் மீதான அதிகாரம் அதீதமானதாக உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவின் அரசியல் கலாசாரத்தில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் முதல் பாதுகாப்புக் கட்டமைப்புகள் வரை இனப்பாகுபாட்டையும் இன உணர்வையும் அதிகம் கொண்டுள்ளது. அதனால் இச் சட்டமூலம் ஏற்படுத்தப் போகும் விளைவு ஆபத்தானதாக விளங்க வாய்ப்புள்ளது.
எனவே புதிய சட்டமூலத்தின் உள்ளடக்கங்களையும் அவை பின்பற்றப்பட போகின்ற மாதிரி களையும் கவனத்தில் கொள்ளுகின்ற போது இலங்கை தீவின் அரசியல் மீண்டும் ஒரு புதிய திசைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கான வாய்ப்பை தோற்றுவித்திருக்கின்றது. சட்டத்தின் காவலர்கள் அனைத்தும் தீர்மானங்களையும் எடுக்கும் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரும்பியோ விரும்பாமலோ அதன் கீழ் கட்டுப்பட வேண்டிய நிப்பந்தம் இலங்கையில் இருக்கும் அனைத்து தரப்புகளுக்கும் உரியதாக மாற உள்ளது. அரசாங்கம் கூறுவது போல் தேசிய பாதுகாப்பையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடைபெறும் பயங்கரவாத செயல்களால் இலங்கை தீவு தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை சர்வதேச பயங்கரவாதத்திற்காக இலங்கை பிரதேசம் பயன்படுத்தப்படுவதையும் பழைய சட்டத்தின் குறைபாடுகளை சரி செய்து புதிய கட்டமைப்பை உருவாக்குவது என்ற வாதங்களை கடந்து எதிர் திசையில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவே தெரிகிறது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினக்குரல்)
