November 2, 2026
அரசியல் கட்டுரைகள்

பிறேசில் ஜனாதிபதித் தேர்தலில் லூலாவின் வெற்றியும் அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கு எதிர்கொள்ளும் சவாலும்?

உலக அரசியல் ஒழுங்கு அமெரிக்காவின் தலைமையில் இருந்து விலகுவதாக அமெரிக்கர்கள் கருதுகின்றனர். அதற்கான காரணங்களில் வலிமையானது ஒன்றாக தென் அமெரிக்கா நாடுகளில் ஏற்பட்டு வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிரான தேர்தல் முடிபுகள்; தெளிவாக உணர்த்துகின்றன. தென் அமெரிக்காவுக்குள் அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாடு தீவிரமடைகிறது. பிறேசிலின் ஜனாதிபதித் தேர்தலில் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவின் (Luiz Inácio Lula da Silva) 51.79 சதவீத வாக்குகளால் அடைந்த (25.10.2026) வெற்றியானது அமெரிக்காவுக்கு பலமான தாக்குதலாக அமைந்திருந்தது. நான்காவது தடவையாக இடதுசாரி வேட்பாளராக விளங்கிய லூலாவை மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை வரலாற்று பதிவாகும். அமெரிக்காவின் மொன்றோ((Monroe Doctrine) கோட்பாட்டின் அடிப்படை தகர்த்திருக்கும் சூழல் ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது. இது வழமையான விடயமாக இருந்தாலும் உலகளாவிய ரீதியில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளின் மத்தியில் லூலாhவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக் கட்டுரையும் பிறேசிலில் ஏற்பட்டிருக்கும் இடதுசாரிகளில் அரசியலுக்குப் பின்னால் இருக்கும் விளைவுகளை தேட முயலுகிறது.

81 (1945-2026..)வயதான லூலா 2003, 2010, 2023 ஆகிய ஆண்டுகளுக்கு பின்னர் 2026 இல் மீண்டும் பிறேசில் ஜனாதிபதி பதவியில் அமர்ந்துள்ளார். பொய்யான ஊழல்குற்றச்சாட்டுக்கு உட்பட்டு 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர். 1960 களில் உருக்கு வேலைத் தொழிலாளியாகத் அறியப்பட்ட லூலா 10 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட லூலாவின் படையணி அவரது பலமாக அமைப்பாக உள்ளது. சமூகவலைத்தளங்களை அதிகம் பிரச்சாரத்திற்கு உட்படுத்திய லூலா சாதாரண மனிதனாக மக்களிடையே எழுச்சியைத் தூண்டியவர். அமேசன் காடுகள் அழியாமல் காப்பாற்றியதன் மூலம் உலகின் இயற்கை காற்றுச்சீரமைப்பு (Planetary Air-Conditioning System) அமைப்பைப் பாதுகாத்தவர் என்ற பெயரைக் கொண்டவர். அவரது தேர்தல் வெற்றிக்கு அப்பால் உள்ள விளைவுகளை விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது பிறேசில் உலக வரைபடத்தில் தனித்துவமான தேசமாக விளங்குகிறது. அது பிரிக்ஸ் அமைப்பின் பங்குதாரராக காணப்படுவதுடன் உலகளாவிய பொருளாதாரத்தை வர்த்தகரீதியான அணுகுமுறையையும் சித்தாந்த அடிப்படையில் இடதுசாரி கொள்கைகளுக்கு பின்னால் இயங்கும் ஒரு நாடாகவும் சுதேச பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வழிவகுக்கும் நாடாகவும் காணப்படுகிறது. ஊழலற்ற ஆட்சி முறையை அதிகம் முதன்மைப்படுத்திக் கொண்ட வேட்பாளர் மக்களின் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முயன்றுள்ளதன் விளைவுகளையும் தேர்தலில் கண்டு கொள்ள முடிந்தது. தேர்தலில் முதலாம் சுற்றுக்கும் இரண்டாவது சுற்றுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் லூலா சாதாரண மக்களின் வரி இழப்புத் தன்மையை தடுத்துவது சலுகைகள் சார்ந்தும் அதிக விட்டுக் கொடுப்புகளை வெளிப்படுத்தியது அவரது வெற்றியை உறுதிப்படுத்தியது என தெரியவருகிறது. 2026 ஆம் ஆண்டு நிலவரப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.65 டிரில்லியன் டொலராக உள்ளது. இது உலகளவில் தரத்தில் 10வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டாவது தென்பூகோள நாடுகளுக்கு இடையிலே ஏற்பட்ட வரும் வலிமையான கூட்டொன்று பிரிக்ஸ் அமைப்பின் தலைமையில் வர்த்தகத்தின் பலமான பொருளாதாரத்தின் அடித்தளத்தைக் கொண்டுள்ளது. அதன் அங்கமான பிறேசில் அத்தகைய பொருளாதாரத்தின் கட்டமைப்பினால் மேற்குலகத்திற்கு நெருக்கடி மிக்க தருணத்தை ஏற்படுத்தியது. அதனால் பிறேசில் இடதுசாரி கட்சியின் ஆட்சி நீடிப்பு அமெரிக்காவும் மேற்குலகமும் அதிக நெருக்கடிக்குள் தள்ளியள்ளது. இது அனைத்து பிரிக்ஸ் நாடுகள் மீதும் அமெரிக்கா மேற்கொள்ளும் உத்தியாக உள்ளது. இந்தியா சீனா ரஸ்சியா பிறேசில் தென் ஆபிரிக்கா என்ற வலுவான அணியை தகர்ப்பத்தில் சாத்தியமற்றதாக்கியுள்ளது. இது தென்பூகோள நாடுகளதும் இருப்புக்கான உத்தரவாதப்படுத்தப்பட்ட நகர்வாகவே தெரிகிறது.

மூன்றாவது பிறேசிலும் இருப்பானது தென் அமெரிக்கா நாடுகளின் இடதுசாரிகளின் இருப்பின் வலுவான பங்களிப்பாகவே பார்க்கப்பட்டது. கியூபா புரட்சிக்கு பின்னர் ஏற்பட்ட பெடல்காஸ்ரோவின் எழுச்சி ஒரு முக்கிய மாற்றத்தை அமெரிக்காவுக்கு எதிராக வெளிப்படுத்தியிருந்தது. அமெரிக்காவின் மென்றோ கோட்பாடு சமகாலத்தில் டொன்ரோ கோட்பாடாக மாற்றப்பட்ட போதும் அதனால் பிறேசிலின் மக்களின் அரசியல் இருப்பை தகர்க்க முடியவில்லை. டொன்ரோ (Donroe Doctrine) கோட்பாடு (மொன்ரோ கோட்பாட்டிற்கான டிரம்ப் துணைக்கோட்பாடு என்றும் குறிப்பிடப்படுகிறது) என்பது அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கீழ் உள்ள அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக் கட்டமைப்பாகும். இது மேற்கு அரைக்கோளம் முழுவதும் அமெரிக்காவின் மேலாதிக்கம் கட்டுப்பாடு மற்றும் புவிசார் பொருளாதார நிபந்தனைகளை மீண்டும் நிலைநிறுத்துகிற முயற்சியாகும். ஐரோப்பியர்களோ அந்நிய சக்திகளும் சோஸலிஸமும் அமெரிக்க கண்டத்துக்குள் பிரவேசிப்பதை முற்றாகவே நிராகரிக்கும் மொன்றோ கோட்பாட்டை ட்ரம்ப் துணைக் கோட்பாடாக முன்வைத்த போதும் அதனால் பிறேசில் போன்ற நாடுகளை தகர்க்க முடியவில்லை. இன்னொரு வகையில் கூறுவதானால் மொன்ரோ கோட்பாடு சமகாலத்தில் டொன்ரோ கோட்பாடாக விரிவடைந்து இருக்கின்ற நிலையின் ஏற்பட்டுள்ள நெருக்கடி உலக ஒழுங்கையும் அமெரிக்காவின் தலைமையிலான உலக ஒழுங்கையும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. அப்படியாயின் அமெரிக்க கண்டம் சார்ந்த பிராந்திய ரீதியான கொள்கையே அமெரிக்காவை உலகளாவிய வல்லரசு என்ற வலுவை நிறுத்திருந்தது. அது சரிவடைய அமெரிக்கா தலைமையிலான உலகம் சரிவடையத் தொடங்கியுள்ளது.

நான்காவது தென்பூகோள நாடுகள் மத்தியில் லூலாவின் வெற்றி இடதுசாரிக் கட்சிகளிடம் நம்பிக்கை ஏற்படுத்தியது மட்டுமல்ல இடதுசாரிகளின் சித்தாந்தம் பற்றிய உரையாடலை தீவிரப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தியது. வெளிப்படையாக பார்த்தால் இடதுசாரிகளின் தோல்விகளும் நெருக்கடிகளும் உலகை ஏகாதிபத்தியத்தின் கைகளுக்கு கொண்டு செல்ல வழி வகுத்திருந்தது. அதனால் 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிலவிய சூழலை உலக ஒழுங்கில் மாற்றுவதற்கான வாய்ப்புகளை இடதுசாரிகள் ஏற்படுத்த முயல்வதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் பிறேசில் ஆட்சியாளர்களைப் போன்று இடதுசாரிகள் உலகளாவிய ரீதியிலான செயல்படவில்லை என்பதும் மக்கள் மீதான அடக்கு முறையும் அடிமைத் தனமான ஆட்சிகளும் இடதுசாரிகளின் நெருக்கடிக்கு காரணம் என்பதை பிறேசில் நிகழ்ந்த தேர்தல் உறுதிப்படுத்தி இருக்கின்றது. லூலா விட்டு செல்கின்ற யுகம் என்பது இடதுசாரிகளுக்கான யுகமாக மாற்றப்படுகிற போது மட்டுமே இத்தகைய வெற்றிக்கு தெளிவான வரலாறு ஒன்று இருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறன்றி நான்காவது தடவையாக மக்கள் ஆதரவை வழங்கினார்கள் என்பதற்காக சர்வாதிகாரப் போக்கினை முதன்மைப்படுத்துவார்கள் எனின் இடதுசாரி கொள்கைகளுக்கு விடப்படும் சவாலாக மாறும். இது பிறேசில் போன்ற நாடுகளில் மட்டுமின்றி உலக ஒழுங்கிலும் மாற்றத்தை நிலை நிறுத்திவிடும். அது மிக மோசமான விளைவை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தக்கூடியது.

எனவே பிறேசிலில் லூலா அடைந்த வெற்றி உலக ஒழுங்கை கட்டமைக்க முயலும் தென்பூகோள நாடுகளின் வாய்ப்பான காலமாகவே தெரிகின்றது. பிறேசில் அமெரிக்காவிடம் சரணடைந்திருக்குமாயின் பிறிக்ஸ் தோல்வி சாத்தியமாய் இருக்கும். பிரிக்ஸ் தோற்கடிக்கப்படுமாயின் தென்பூகோள நாடுகளின் எழுச்சியும் வர்த்தகமும் பொருளாதாரமும் அரசியல் இருப்பும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும். ஆனால் அத்தகைய சூழல் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. இது மீண்டும் அமெரிக்காவை ஒரு நான்கு வருடத்திற்கு காத்திருக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த காலப் பகுதியையும் பிறேசிலின் இடதுசாரிகள் தக்கவைப்பார்களா என்பதில் இவற்றின் தனித்துவம் தங்கியிருக்கிறது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி:தினகரன்)