இலங்கைத்தீவின் அரசியல் இனப்பிரச்சனையினால் தோற்றுவிக்கப்பட்டது மட்டுமன்றி கட்டமைக்கப்பட்டதும் கூட. அதற்கான வரலாறு நிலையானது. சித்தாந்தங்களை கடந்தது. சமானியர்களை ஏமாற்றும் அரசியலாகப் பயணிக்கிறது. இலங்கைதீவின் வரலாற்றைத் தேடும் ஒவ்வொருவரும் அடையாளம் காண தவறும் பகுதி இனப்பிரச்சனைக்கான அடிப்படையாகும். அத்தகைய அடிப்படை சார்ந்து அண்மைய நாட்களில் ஜே.வி.பி. அரசாங்கம் நிகழ்த்திய புலமையர் மகாநாட்டில் உச்சரிக்கப்பட்ட வரலாற்றின் போலி தன்மையை புரிந்து கொள்வதற்கு இக்கட்டுரை முயலுகின்றது.
இனப்பிரச்சனை என்பது அடிப்படையில் பல தேசிய இனங்கள் வாழும் நாட்டில் ஒரு தேசிய இனத்தை மட்டும் உள்ளடக்கிய தேசிய இன அரசாக எழுச்சி அடைகின்ற போது ஏனைய தேசிய இனங்கள் ஒடுக்கப்படுவதைக் குறிப்பதாகும். இதுவே உலகளாவிய புலமைத்தளத்தில் இனப்பிரச்சனை எனப் புரிந்து கொள்ளப்படுகிறது. பல்தேசிய இன அரசிலுள்ள தேசிய இனங்கள் தந்தமது தனித்துவங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும் பாதுகாக்கவும் முயலுகின்ற போது அல்லது தேசியவாதத்தை பிரயோகப்படுத்துகின்ற போது எழுகின்ற முரண்பாடு தேசிய இனப்பிரச்சனையாக இன்னோர் தளத்தில் புரிந்து கொள்ளப்படலாம். பல் தேசிய இன அரசில் தேசிய இனங்களுக்கு இடையிலே தமது தனித்துவங்களை பேணிப் பாதுகாக்க முயலுகின்ற போது இனங்களுக்கு இடையே எழும்; பிரச்சனையை தேசிய பிரச்சனை என்றும் விபரணப்படுத்த முடியும். ஓரினத்தின் சமூகம் அரசியல் பொருளாதாரம் வாழ்வு அபிவிருத்தி ஆகிய அனைத்தையும் குறித்து நிற்குமோர் அம்சமாக தேசியவாதம் விளங்குகிறது. தேசியவாதத்தை அதன் நவீன வரலாற்றை புரிந்து கொள்ளாமல் தேசிய இனப்பிரச்சனையை புரிந்து கொள்வது கடினமாகும். அதனடிப்படையில் பல் தேசிய இனங்களைக் கொண்ட ஓர் அரசின் கீழ் சகல இனங்களையும் தழுவிய தேசியவாதத்தை பல்லினதேசியவாதம் என்றும் பிரதேச தேசியவாத என்றும் அரச மத்திய தேசியவாத என்றும் அழைப்பதுண்டு. பல இனங்களுக்கு பொதுமையான ஒரு தேசியவாதத்தை கொண்டுள்ள அதேவேளை ஒவ்வொரு தேசிய இனமும் தமக்கென உரிய தனித்துவமான தேசிய பண்புகளை பேண எடுக்கும் முயற்சி அந்த நாட்டில் உபதேசிய வாதம் என்று அழைக்கப்படுகிறது. இப்பல்லினங்களுக்கு இடையிலே பிரச்சினைகள் ஏற்படும் போது ஒன்றை மற்றொன்று விழுங்க முற்படும் செயல் எதுவே அதுவே தேசிய இனப்பிரச்சினையாக பரிமாணமெடுக்கிறது.
இதன் அடிப்படைக்குள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் தோற்றம் சிங்கள-பௌத்த ஐதீகம் ஒன்றை மையமாகக் கொண்டு எழுந்ததாகும். அதனையே தம்மதீபக் கோட்பாடு என சுருக்கமாக புரிந்து கொள்ள முடியும். பௌத்த தர்மத்தைப் பேணி பாதுகாக்க என புத்தபிரானால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு இலங்கை என்பதும் இக்கோட்பாட்டின் ஐதீகம் மகா வம்சத்தில் முன்வைக்கப்பட்டது. புத்தபகவான் பரிநிர்வாண நிலையை அடைந்து கொண்டிருந்த விசாக பௌர்ணமி தினத்தில் விஜயனும் அவனது குழுவினரும் இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்தனர். இலங்கையில்; காலடி எடுத்து வைத்த விஜயனும் அவனது வழி தோனறல்களுமே பௌத்தத்தை பாதுகாக்க போகின்றனர் என்று பரிநிர்வாணம் அடைந்து கொண்டிருந்த புத்தபிரான் கூறியதாக மகாவம்சம் என்ற நூலில் மகாநாமா தேரர் குறிப்பிட்டுள்ளார். விஜயன் இலங்கையில் அரசமைத்து ஆட்சி செலுத்தினான் என்றும் அதனைத் தொடர்ந்து சிங்கள-பௌத்த அரசமைப்பு உருவானது என்றும் மகாவம்சம் வர்ணிக்கின்றது. மகாவம்சத்தின் ஐதீகத்தின் பிரகாரம் இலங்கை பௌத்த மதத்தின் பொருட்டு புத்தபகவானால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு என்றும் விஜயனே இலங்கையில் முதல் மனிதர் என்றும் விஜயனும் அவனது வழித்தோன்றல்களுமே பௌத்தத்திற்கு என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்றும் விஜயனுடனே இலங்கையின் அரசு என்பது உருவானது என்றும் தம்மதீபக் கோட்பாடு உரைத்து நிற்கிறது. அதாவது இனம் மதம் மொழி நாடு அரசு ஆகிய ஐந்தும் தம்பதீபக் கோட்பாட்டின் பிரகாரம் சிங்கள-பௌத்த பெரும்பான்மையினது என்று இக்கோட்பாடு குறித்துரைக்கிறது. தம்மதீபகோட்பாட்டின்படி இலங்கை தீவானது ஓர் இனம் ஒரு மதம் ஒரு மொழி ஓரரசு என்பதற்கு மட்டுமே உரியதென்று ஆகிவிட்டது. இது பல மத பல மொழி அரசு என்ற தன்மையை நிராகரிக்கின்றது. ஆதலினால் தோன்றியதே தமிழ்- சிங்கள-முஸ்லிம் என்ற முரண்பாடு. பல்லினத்தன்மைக்கு தம்மதீப ஐதீகத்தின் பிரகாரம் இடமில்லாது போகவே இனங்களுக்கு இடையே பிரச்சினைகள் தோன்றி அமைதியற்ற தீவாக இலங்கை மாறியது. தம்மதீபக் கோட்பாடு சிங்கள மக்களை இலங்கை தீவின் மூதாதையர்கள் ஆக்கியது. அதன் பிரகாரம் சிங்கள மக்களே இந்த மண்ணின் மூத்தகுடிகள் என்றும் ஏனையவர்கள் வந்தோறு குடிகள் என்றும் அந்நியர்கள் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர். தமிழர்கள் படையெடுப்பாளர்களாகவே மகாவம்சம் வர்ணித்தது. இலங்கைக்கு முதல் வந்தவர்கள் அல்லது குடியேறியவர்கள் தமிழர்களா சிங்களவர்களா முஸ்லிம்களா என்ற வாதபிரதிவாதங்கள் அரசியல் வரலாற்றை தீர்மானிப்பதாக மாறி உள்ளது.
தேசியவாதம் என்பது நவீன சிந்தனையின் ஒரு வரலாற்று படிமம். அதன் போக்கு பிரபஞ்சத்தின் மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி பெறக்கூடியது. உலகம் பொதுவாகவே நவீன தன்மைகளும் உட்பட்டு வளர்ச்சி பெறுகின்றது. அத்தகைய வளர்ச்சி போக்கிலே ஒரு கட்டத்தை சோசியலிஸ்ட்டுகள் முன்னிறுத்தி இருந்தனர். அவர்களின் வழித்தோன்றலான ஜே.வி.பி. இனர் விவாதிக்கும் புலமைசார் மாநாடுகளில் இனப்பிரச்சினையின் தோற்றத்தை சுதந்திர இலங்கையோடு பிணைத்து பார்க்கின்ற வரலாற்று அறிவு போலியானது. பொய்யானது. உலக வரலாற்றில் அமெரிக்க கண்டத்தில் குடியேறிய ஐரோப்பியர்கள் மூன்று நூற்றாண்டுகளில் (1492-17176) அமெரிக்கா தமக்கு சொந்தம் என்று பிரகடனம் செய்து கொண்டார்கள். அத்தகைய வரலாற்றை முன் கொண்டு உலகம் முழுவதும் செயல்படுகிற போது இலங்கை தீவில் மட்டும் தமிழர்களா சிங்களவர்களா மூத்தகுடிகள் என மோதிக் கொள்கின்ற பண்பாட்டு சிதைவு மனித சமூகத்தின் நாகரீகத்தின் அவமானச் சின்னமாக கடந்த 75 வருடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தரப்பினர் அதை மேலும் பிழையான கற்ப்பிதங்களுக்கு ஊடாக வளர்ச்சி பெற செய்தனர். அதன் விளைவு இலங்கையில் அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டிருப்பின் சிதைவுக்கு அடிப்படை காரணமாகியது. அதனையே மீண்டும் ஜே.வி.பி.புலமையாளர்களும் மேற்கொள்ளப் போகின்றார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கை தீவின் இனப்பிரச்சினைக்கான வரலாற்றை தேடுவதற்கு ஜே.வி.பி. இன் புலமையாளர்கள் முயலுகின்ற போது வரலாற்றில் உண்மையான பக்கங்களை திரிபு படுத்தவும் அதன் போலிகளை நியாயப்படுத்தவும் முயலக்கூடாது. அதற்கான வரலாற்றை முன்மொழிந்தவர்களில் சிங்கள புத்திஜீவிகளும் தமிழ் புத்திஜீவிகளும் பிரதான பங்கெடுப்பாளர்களாக காணப்படுகின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுதுறையின் மூத்த பேராசிரியர்கள் இலங்கையின் இனப்பிரச்சசினை தொடர்பில் ஆழமான பதிவுகளை முன் வைத்துள்ளனர். பேராசிரியர்களான இந்திரபாலா, ரகுபதி, சிற்றம்பலம், புஸ்பரடனம், கிறிஸ்னராசா, அரசரட்ணம், மற்றும் திருநாவுக்கரசு, கலாநிதி முருகர் குணசிங்கம் ஆகியோர் காணப்படுகின்றனர். அவ்வாறே அரசியல் வரலாற்றை முன்னிறுத்திய பேராசிரியர்களான வில்சன், சிவராசா முதன்மையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிங்களப் பேராசிரியர்களில் மிகப் பிரதான இனப்ப்பிரச்சினைக்கான வரலாற்றை தெளிவாக அடையாளப்படுத்தியவர்களில் கலாநிதி அதிகாரம் கலாநிதி தாசி வித்தாச்சி, குமாரி ஜெயவர்த்தனா, போன்றவர்கள் மட்டுமன்றி மானிடவியல் தளத்திலிருந்து கணநாத் ஒபயசேகரா போன்றவர்கள் முதன்மையானவர்கள். இத்தகைய வரலாற்றின் பக்கங்களை புலமையாளர்கள் ஆதாரமாகக் கொண்டு கருத்துக்களையும் விவாதங்களையும் முன்வைப்பது அடிப்படையானதாக உள்ளது. அதனை நோக்கி ஜே.வி.பி.யின் புலமையாளர் மகாநாடு அமைய வேண்டும். புலமையாளர்கள் உண்மைகளையும் எதார்த்தங்களையும் தத்துவத்தரீதியில் முதன்மைப்படுத்துபவர்களாக விளங்குகின்ற போது இலங்கையின் அரசியல் பொருளாதாரம் சமூக பண்பாட்டு வரலாறு வடிவமைக்கப்படும். அது தவறும் பட்சத்தில் அதனுடைய திசை கடந்த 75 ஆண்டுகள் போன்று இன்னும் ஒரு நூற்றாண்டை கடந்து செல்லும்.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினக்குரல்)
