ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான ஐக்கிய அமெரிக்காவில் அரசியலில் உலக ஒழுங்கை குழப்பத்துக்கு உள்ளாக்கியது போல் உள்நாட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியியுள்ளார். இரு கட்சி அரசியல் பாரம்பரியத்தைக் கொண்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அதனை கடந்த வரலாறு முழுவதும் ஐக்கிய அமெரிக்கா பேணி வந்தது என்பதை கண்டு கொள்ள முடிகிறது. நடந்து முடிந்த இடைக்கால தேர்தல் மூலம் டொனால்ட் ட்ரம்ப்ன் ஆட்சி காலத்தில் குடியரசுக் கட்சி பாரிய நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. அத்தகைய குழப்பம் குடியரசு கட்சிக்குள் மட்டுமல்லாது அமெரிக்காவுக்குள்ளேயேயும் ஏற்படுத்தியுள்ளது. இரு கட்சிகளும் மாறிமாறி ஆட்சி செய்தாலும் அதிகாரச் சமநிலையோடு அமெரிக்க ஆட்சி அமைந்திருந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற இடைக்காலத் தேர்தல் தலைக்கீழாhன சூழலை ஏற்படுத்தி உள்ளது. இக் கட்டுரை ஐக்கிய அமெரிக்காவின் குடியரசு கட்சி வீழ்ச்சியடைந்தமைக்கான காரணங்களையும் அதன் விளைவுகளையும் தேட முயலுகிறது.
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பிரகாரம் செனட்சபையும் ஏறக்குறைய பிரதிநிதிகள் சபையும் ஜனநாயக கட்சியும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. செனற்றில் 54 ஆசனங்களையும் பிரதிநிதிகள் சபையில் 253 ஆசனங்களை ஜனநாயகக் கட்சி தனதாக்கியுள்ளது. 1823 இல் நிறுவப்பட்ட ஜனநாயகக் கட்சி 1850 களிலிருந்து பிரதான போட்டியாளராக குடியரசுக் கட்சியை எதிர் கொண்டு வருகிறது. குடியரசுக் கட்சியின் வீழ்ச்சிக்கு பின்னால் இருக்கும் காரணங்கள் ஆழமாக அவதானிக்க வேண்டியள்ளது.
முதலாவது குடியரசு கட்சியின் தலைமையை முதன்மைப்படுத்தும் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்ன் உள்நாட்டு கொள்கைகள் பிரதான காரணங்களாக விளங்குகின்றது. வேலையின்மை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட தோல்வி, இறக்குமதி வரிகள் (Tariffs) காரணமாக விலைகள் அதிகரித்தல், நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கைச் செலவு அதிகரித்தல் போன்ற பொருளாதார நெருக்கடியின் பலன்கள் மட்டுமன்றி பொருளாதார வாய்ப்புக்கள் சமமாகப் பகிரப்படாமை. போன்ற பல காரணிகள் பலவீனமானதாக அடையாளம் காணப்படுகிறது. இத்தகைய அணுகுமுறைகள் அதிக குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது தரமான விவசாய நிலத்தை அதிகமாக கொண்டிருக்கும் நாடு, கைத்தொழில்வள நாடு மற்றும் ஏற்றுமதியில் முதல் நிலை நாடு என்ற அடிப்படையில் பாரிய பொருளாதாரம் வாய்ப்புக்களை கொண்டிருந்த அமெரிக்கா பாரிய நெருக்கடிக்குள் அகப்பட்டுள்ளது. இதற்கு ட்ரம்ப் மற்றும் அமெரிக்க ஆட்சியாளரே காரணமாக இருந்தனர் என்பது இத்தேர்தலில் முடிவுகளால் அவதானிக்கப்படுகிறது. மக்களுடைய அபிப்பிராயங்களும் எண்ணங்களும் ஆட்சியாளர்கள் எந்தவித கவனத்தையும் கொள்ளாது பிராந்திய சர்வதேச அரசியலில் ஆதிக்கம் பெறுவதற்காக போராடியது என்ற குறறச்சாட்டு ட்ரம்ப் மீது ஏற்பட்டுள்ளது. இதுவே உள்நாட்டில் பலத்த எதிர்ப்புக்கான அடிப்படை காரணமாக கொள்ளப்படுகிறது.
இரண்டாவது உலகத்தின் அபிப்பிராயத்திற்கு முரண்பட்டே ஈரான் மீதான போரை அமெரிக்க ஜனாதிபதி பிரகடனப்படுத்தும் போது எதிர்ப்புகள் அதீதமாக இருந்தன. ஈரான் மீதான போர் அமெரிக்காவில் உள்நாட்டு பொருளாதாரத்தில் பாரிய சுமையை நடுத்தர வருமானமுடைய மக்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. அத்தகைய போரின் விளைவுகளை அமெரிக்க மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் ட்ரம்ப்ன் கொள்கைகள் காரணமாக அமைந்தன. ஈரான் மீதான யுத்தம் அமெரிக்கப் பொருளாதாரத்தின் இழப்பீகளுக்கு வழி வகுத்திருந்தது. ஒரு பக்கம் போருக்கான செலவு மறுபக்கத்தில் அதனால் ஏற்பட்ட உள்நாட்டுப் பொருட்களுக்கான நிரம்பல் குறைபாடு விலையேற்றத்தை உருவாக்கியது. அமெரிக்கர்களைப் பொறுத்தவரையில் ஈரான் மீதான போரை முற்றாகவே நிராகரிப்பதோடு இஸ்ரேலின் நலனுக்காகவும் இப்போர் நிகழ்த்தப்படுவதாக பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். இது தேர்தலில் தோல்விக்கான இன்னொரு பிரதான காரணியாக கொள்ளப்படுகின்றது.
மூன்றாவது ட்ரம்ப்ன் வரி கொள்கையும் உலகளாவிய ரீதியில் வர்த்தக சந்தை மார்க்கங்களை முற்றாகவே குழப்பியுள்ளது. வெளிப்படையாகவே உலக நாடுகள் மீது விதித்த பாரிய வரி கொள்கை உள்நாட்டின் உற்பத்தியை சமதளத்தில் விருத்தி செய்ய முடியாத நிலையைத் உருவாக்கியது. அதனால் ஏற்பட்ட பற்றாக்குறை உள்நாட்டில் நெருக்கடிக்கு வித்திட்டது. இது தேர்தலின் தோல்விக்கான இன்னொரு காரணமாக கொள்ளப்படுகின்றது. தேர்தலை வெற்றி கொள்வதற்குரிய நியதிகளை தகர்க்க விதத்தில் வரி கொள்கை பிரதான காரணியாகும்.
நான்காவது ட்ரம்ப்ன் வெளியுறவுக் கொள்கையில் பாரிய முரண்பாட்டை தோற்றுவித்தது. ஐரோப்பாவுடன் ஏற்படுத்தியது குறிப்பாக கீறின்ஸ்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட நகர்வுகள் ஐரோப்பாவுடனான உறவை முழுமையாக பாதித்தது. நேட்டோவுடனான (NATO)விரிசல் போக்கு ஐரோப்பாவை அதிர்ச்சியடைய வைத்தது. ரஸ்சியாவுடன் ட்ரம்ப் பின்பற்றும் கொள்கைகள் மோசமான முரண்பாட்டை பிரதிபலிப்பதாக உள்ளது. அமெரிக்க மக்களால் நிராகரிக்கப்பட்ட ரஸ்சியாவை எதிரில் நாடாகவும் நட்பு நாடாகவும் கையாளுகின்ற போது எந்த வித இராஜதந்திர அணுகுமுறையுமின்றி ட்ரம்ப் செயல்பட்டமை அவதானிக்க் கூடியதாக உள்ளது. இது குடியரசு கட்சியின் தோல்விக்கான காரணமாக கொள்ளப்படுகின்றது. கடந்த கால ஆட்சியாளர்கள் ரஸ்சியாவை எதிர்கொண்ட விதத்தையும் ஐரோப்பாவை கையாண்ட விதத்தையும் முற்றாகவே ட்ரம்ப் முரண்பட்டதளத்தில் மாற்றியிருந்தார்.
ஐந்தாவது அமெரிக்கப் பொருளாதார உலக பொருளாதாரத்திலேயே தங்கியுள்ளது என்பது தெரிந்த விடயம். அதற்கான பொருளாதார அணுகுமுறைகளை அமெரிக்கா தந்திரோபாய ரீதியாகவே கையாண்டு வந்தது. அத்தகைய தந்திரோபாய அணுகுமுறைகளை முற்றாகவே தகர்த்துவிட்டு குடியரசு கட்சி செயல்பட்டமையே தோல்விக்கான காரணமாக தெரிகிறது. இது உலகளாவிய வாய்ப்புகளை அமெரிக்காவுக்கு இல்லாமல் செய்தது. குறிப்பாக வர்த்தகம் சந்தை என்பன தென்பூகோள நாடுகள் எங்கும் ட்ரம்ப்ன் அணுகுமுறையால் முடிவுக்கு வந்தது. அவ்வாறே அமெரிக்கா டொலர் தொடர்பில் எழுந்த போட்டியும் மோதலும் அதன் பரிவர்த்தனையை முழுமையாகவே சீர்குலைத்தது. டொனால்ட் ட்ரம்ப்ன் அணுகுமுறையினால் அமெரிக்கப் பொருளாதாரத்தின் சர்வதேச வாய்ப்புகள் முழுமையாகவே முடிவுக்கு வந்துள்ளமை தேர்தலில் குடியரசு கட்சியின் தோல்விக்கான காரணமாக கொள்ளப்படுகிறது.
முடிவாக குடியரசு கட்சியினுடைய தோல்வி ஜனநாயக கட்சியினுடைய வெற்றியை உறுதிப்படுத்தியது என்பதை விட அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியினுடைய வேட்பாளரின் வெற்றியை உறுதிப்படுத்தி இருக்கின்றது என்பதை காண முடிகின்றது. ஆளும் கட்சி ஒன்று இத்தகைய தோல்வியை எதிர்கொண்டிருப்பது என்பது அமெரிக்க வரலாற்றில் இது ஒரு சந்தர்ப்பமாக கொள்ளப்படுகிறது. இத்தகைய சந்தர்ப்பங்களை குடியரசு கட்சியும் ஜனநாயக கட்சியும் கடந்த காலங்களில் அதிகமாக கொண்டிருக்கவில்லை. ஆனால் சமகாலத்தில் அதுக்கான சூழலை உள்நாட்டிலும் பிராந்தியதளத்திலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்படுவதற்கு டொனால்ட் ட்ரம்ப்ன் கொள்கைகளே காரணமாக இருக்கின்றது. இதன் அடிப்படையை உள்நாட்டில் ஏற்பட்ட குழப்பங்களையும் பிராந்திய சர்வதேச தளத்திலிருந்து அணுகப்பட கூடியதாகவே உள்ளது. அத்தகைய அரசியலமைப்பின் பிரயோகத்தையும் மக்களையும் பொருளாதார கட்டமைப்பையும் அமெரிக்கா கொண்டிருப்பதே குடியரசுக் கட்சியின் தோல்விக்கு காரணமாக தெரிகிறது. ஐக்கிய அமெரிக்கா உள்நாட்டுக் கட்டமைப்பில் பல்லினத் தன்மைக்கான வாய்ப்புக்களை அதிகம் உருவாக்கி வருகிறது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினகரன்)
