ஈழத்தமிழர்களே அரசியல் சொல்லக்கூடிய விதத்தில் எதனையும் கொண்டிருப்பதாக கூறமுடியாதுள்ளது. மாறாக அது அதிக கேள்விக்கு உட்படும் விதத்தில் காணப்படுகிறது. அகிம்சை போராட்டத்தையும் ஆயுதப்போராட்டத்தையும் நீண்ட காலமாக நிகழ்த்திக் காட்டிய ஒரு தேசிய இனம் மௌனத்தால் காலங்களை கடந்து செல்கிறது. அத்தகைய மௌனத்துக்கு பின்னால் இருக்கும் அரசியல் முரண்பாடுகளும் பகைமைகளும் போட்டிகளும் பிரதான காரணங்களாக விளங்குகிறது. அவை அனைத்தும் எதிரிக்கு சேவை செய்வதாகவே அமைந்து விடுகிறது.
ஈழத்தமிழரின் அரசியல் வங்குரோத்து நிலைக்கு காரணமாக ஈழத்தமிழர்களே காணப்படுகின்றனர். அவர்களது அரசியலை அதிகம் முதன்மைப்படுத்திய அரசியல் கட்சிகள் காலாவதியான கொள்கைகளால் அத்தகைய பலவீனத்தை அடைகின்ற நிலையை வெளிப்படையாக கண்டு கொள்ள முடிகிறது. ஈழத்தமிழரின் அரசியல் போக்கினை நிர்ணயிக்கும் விதத்தில் ஆயுதப்போராட்டத்தின் நகர்வு அமைந்திருந்தது. ஆனால் 2009க்கு பின்னான அரசியல் கட்சிகளும் சிவில் தரப்புகளும் அதனை சரிவர கட்டமைக்க தவறியதன் விளைவே இன்றைய அரசியல் வறுமைக்கு காரணமாகும். உள்நாட்டிலும் பிராந்தியத்திலும் முழு உலகத்திலும் கிடைத்த வாய்ப்புகளை ஈழத்தமிழரின் அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் பலவீனப்படுத்தினர். இதுவே இன்றைய கால அரசியலின் நகர்வுகளை வெளிப்படுத்த முடியாத நிலைக்குள் தள்ளிவிட்ட விடயமாகும்.
கட்சிகளுக்குள் நிகழும் போட்டிகளும் மோதல்களும் அதனை பலவீனம் அடையச் செய்திருக்கிறது. சமகாலத்தில் ஒரு சில கட்சிகளைத் தவிர பாரம்பரியமான கட்சிகள் எத்தகைய போராட்டத்தையும் தீவிரமாகவும் இலக்கு அடையும் விதத்திலும் செயல்பட்டதாக எத்தகைய பதிவுகளும் இல்லை. மாறாக அறிக்கை விடும் கலாச்சாரத்தோடு தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவது ஒரு தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக போராடுவது மட்டுமே அரசியல் நடத்தையாகக் கொண்டுள்ளன. கட்சிகளின் அரசியல் முடிவுகளை தமக்குள்ளே இருக்கும் தனிப்பட்ட முரண்பாடுகளை நீதிமன்றம் வரை கொண்டு சென்று கட்சிகளை இயங்க முடியாது தடுத்து நிறுத்தி மக்களுக்கும் கட்சிக்குமான உறவை தகர்ப்பது போன்றனவே பிரதான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. இது கொள்கை சார்ந்த அடிப்படையிலானது அல்ல மாறாக தனிப்பட்ட நலன் சார்ந்த மோதலின் அடிப்படையாகவே உள்ளது. இதனால் அக்கட்சி மீதான ஆதரவும் ஒத்துழைப்பும் மக்களிடமிருந்து இல்லாமல் போகிறது. அடுத்துவரும் தேர்தல்களில் மக்கள் இத்தகைய கட்சிகளை முழுமையாக நிராகரிக்கும் நிலை தவிர்க்க முடியாததாக மாறுவதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாகவே உள்ளது.
இன்னொரு தளத்தில் உள்;hராட்சி அமைப்புகளின் புதிய தலைமுறையின் வருகையும் பழைய தலைமுறை மரபுகளோடு நகர முயல்கின்றனர். குறிப்பாக மாநகர சபை நகர சபைகள் பிரதேசசபைகள் முழுமையாகவே கட்சியின் நலன் சார்ந்து மோதல்களை பிரதிபலிக்கின்றன. அதன் விளைவுகள் முழுமையாகவே உள்ளூராட்சி இலக்கை சாத்தியப்படுத்த முடியாமல் தோற்கடித்து விடுகிறது. அவ்வாறு தோற்கடிக்கின்ற வாய்ப்பு எதிர்த்தரப்புக்கு அதாவது எதிரிகளுக்கு வாய்ப்பான களமாக மாற்றப்படும் நிலையே காணப்படுகிறது. உள்ளூராட்சி அமைப்புகள் அடிமட்ட மக்களிடம் ஜனநாயகத்தை பயிற்றுவிப்பையும் உள்ளூர் வளங்களை பயன்படுத்துவதையும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதையும் அந்தந்த எல்லைக்கு உட்படுத்தப்பட்ட பிரதேசங்கள் பாதுகாத்தும் பேணிப்பராமரித்தும் சேவை செய்வதையும் இலக்காகக் கொண்டது. அது கொள்கை அரசியல் பேசும் களமாக பார்ப்பதை விட வளங்களை ஒன்றிணைத்து பிரதேசத்தின் அரசியல் கலாச்சாரத்தின் அடிப்படைகளை கட்டமைத்துவிடுவதாகும். இங்கு கொள்கை என்பது உள்;ர் வளங்களை ஒன்றுதிரட்டி அந்த பிரதேச மக்களுக்கு வளம்சேர்ப்பதாகும். ஆனால் அவை ஒவ்வொன்றும் மோதலில் மையங்களாக மாறி முரண்பாட்டுக்குள் சமூகங்களை ஈடுபடுத்துகின்ற நிலையை தோற்றுவித்திருக்கிறது.
தமிழ்த்தேசியம் என்பது புரிந்து கொள்ளப்பட முடியாத விடயமாக உச்சரிக்கப்படும் துயரம் ஈழத்தமிழர்களின் ஒரு சாராரிடம் வளர்ந்துள்ளது. தேசியம் என்பது ஆத்மாக்களின் கூட்டு என்பதை கோட்பாட்டுதளத்தில் உரையாடும் அறிஞர்கள் வரையறுக்கின்றனர். ஆனால் ஈழத்தமிழரிடம் தேசியம் என்பது பலவீனமானதாக எதிரிகளால் நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டமிடப்பட்டு பிரச்சாரப்படுத்தப்படுகிறதாக மாறியுள்ளது. அதற்குப் பின்னால் பயணிக்கும் மக்கள் கூட்டம் புலமையாளர் கூட்டம் மாணவர் கூட்டம் அதிகரித்து உள்ளது. அதற்கான அடிப்படை ஆத்மாக்களின் கூட்டை உணர முடியாத ஒரு சமூகத்தின் இருப்பாக தேசியம் பார்க்கப்படுகிறது என்பது இங்குள்ள குறைபாடாகும். மொழியினாலும் பண்பாட்டாலும் பொருளாதார காரணிகளாலும் ஜனநாயக மரபுகளாலும் ஒன்றிணைக்கப்பட்டிருக்கக் கூடிய ஒன்று தான் தேசியம் என்பதை புரிந்து கொள்வதில் அனேக ஈழத்தமிழர்கள் தெளிவற்றவர்களாக உள்ளனர். இதற்கு கடந்த காலம் முழுவதும் விட்டுச்சென்ற பலவீனமான பக்கங்களே காரணமாகிறது.
அபிவிருத்தி இன்றி தேசியத்தை நிலைநிறுத்த முடியாது. தேசியத்தின் இருப்பிலே அபிவிருத்தியும் வாழ்வியல் முறையும் உருவாக்கப்பட வேண்டும். கொள்கைகள் கோட்பாடுகள் எவையும் மக்களுக்கான உணவை தந்துவிடாது. மாறாக அத்தகைய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மக்களுக்கு உணவு வழங்கும் தொழில் வழங்கும் அறிவியலை வழங்கும் அம்சங்களாக உருமாற்றப்பட வேண்டும். அதாவது கொள்கைகளை நடைமுறைக்கு ஏற்ற வகையில் வளைக்க வேண்டும். ஈழத்தமிழர்களிடம் இன்றுள்ள அரசியல் வறுமை அரசியலையும் அபிவிருத்திகளையும் ஒன்றிணைப்பதில் கரிசனை அற்றவர்களாக விளங்குகின்றதன் விளைவாகும். இதுவே ஈழத்தமிழர்களுடைய அரசியல் கட்சிகளுக்கும் தென்னிலங்கையின் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலே இருக்கும் இடைவெளியாகும். தென்னிலங்கையின்; ஆளும் தரப்புகள் ஒவ்வொரு கால பகுதியில் மிகத் தெளிவான பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து மக்கள் நலன்களை பேணுவதில் முனைப்பு காட்டுகிறன. ஈழத்தமிழரிடம் காணப்படும் மிகப் பிரதான ஆளும் கட்டமைப்பு உள்ளூராட்சிமன்றங்களும் மாகாணசபைகளுமாகும். இது இண்டையும் முன்னிறுத்திக் கொண்டு ஆரோக்கியமான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முடியாத வறுமைக்குள் ஈழத்தமிழ் அரசியல் கட்சிகள் அகப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களின் அரசியலும் அபிவிருத்தியும் ஒன்றிணைக்கப்படாத ஒரு துயரங்களை தென்னிலங்கை கட்சிகள் நிரப்பிக் கொள்கின்றன. அதனாலேயே தென் இலங்கைக் கட்சிகளுக்குப் பின்னால் சமூக ஆர்வலர்களும் மாணவர்களும் பின்தொடர வேண்டிய தேவைப்பாடு தவிர்க்க முடியாது எழுகிறது. அவர்களில் உயிர்வாழ்வை நிர்ணயிப்பதில் தென்னிலங்கை கட்சிகளின் அபிவிருத்தி திட்டங்களும் கொள்கைகளும் கோட்பாடுகளும் காரணமாக அமைந்துவிடுகின்றன. ஈழத்தமிழர்கள் மகாணசபையைப் போட்டுடைத்தது போல் உள்;ராட்சி அமைப்புக்களையும் தோற்கடித்துவருகின்றனர்.
எனவே தற்போது 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய தேசியத்தை மீளமைப்பதை விட 21 ஆம் நூற்றாண்டுக்கான தேசியத்தை நோக்கி நகரப்பட வேண்டும். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தகவல் தொடர்பாடலும் மனித சமூகத்தின் தேசிய அடையாளத்தில் பிரதான அங்கமாக மாறிவிட்டது. அபிவிருத்தியும் பொருளாதார செளிப்பும் தேசியத்தை கொண்டு செல்வதற்கான பிரதான கூறு என்பதை ஈழத்தமிழ் அரசியலில் முதன்மைப்படுத்த வேண்டும். முன்னய சிந்தனைகளில் இருந்து விடுபட்டு எதார்த்தபூர்வமான சூழமைவுக்கு ஏற்ற வகையில் திட்டமிடல்களும் உரையாடல்களும் மேலெழுகிறபோது மட்டுமே தமிழரின் அரசியல் நிலையை மேற்கொண்டு செல்ல முடியும். அதற்கான தெரிவுகளும் கட்சி உருவாக்கங்களும் கட்சி மீளமைப்புகளும் அவசியமானதாக விளங்குகிறன.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:யாழ்.தினக்குரல்)
